இக்காலத்துப் பெண்கள் எப்படி வாழவேண்டும் என்று வழிகாட்டவே எப்படி வாழக்கூடாது என்று எடுத்துக்காட்டவே.

kannaki 350கண்ணகி என்றவுடன் ‘கற்புக்கரசி’, ‘பத்தினி’ என்ற எண்ணம், மரியாதை மக்கள் மனதிலே ஏற்படுகிறது. காரணம், கண்ணகியைப்பற்றி ஓர் உயர்வான எண்ணம் மக்கள் மத்தியில் வெகுகாலமாகப் பரப்பப்பட்டுவருகிறது.

இளங்கோவடிகளின் சிலப்பதிகாரம் அழியாத இடத்தைக் கண்ணகிக்கு வகுத்துக் கொடுத்துள்ளது. அவள் வாழ்ந்த வாழ்க்கை சரியானதா? அவள் வாழ்வைப் பின்பற்றி வாழ்வது சரியா? “கண்ணகியைப்போல் வாழ்” என்கிறார்களே அது சரியா? கண்ணகியின் வாழ்வு, காலத்தின் கட்டுப்பாடாக இருக்கலாம். ஆனால், இன்றைக்கு அது சரியான வாழ்வு என்று கொள்ளக்கூடாது. அதைப்பின்பற்றவும் கூடாது.

கண்ணகியின் வாழ்வு ஆண் ஆதிக்கச் சமுதாயத்தின் விளைவு.  ஆண்கள் எப்படி வேண்டுமானாலும் வாழலாம், எத்தனை பெண்களுடன் வேண்டுமானாலும் வாழலாம், எத்தனை பேரை வேண்டுமானாலும் மணக்கலாம் என்றிருந்த காலம்.

ஆணின் சுகமே பெண்ணின் பாக்கியம் என்று அறிவுறுத்தப்பட்ட காலம். ஆணின் மகிழ்விற்காக பெண் எந்தத் தியாகத்தையும் செய்யவேண்டும் என்று எதிர்பார்க்கப்பட்டநிலை.

5 வயதிலும் 10 வயதிலும் ஆணுக்கும் பெண்ணுக்கும் திருமணம் செய்து வைக்கப்பட்ட காலம். கண்ணகி, கோவலன் திருமணங்கூட அப்படித்தான் நடந்ததாம். அன்று 5 வயது சிறுமிக்கும் 10 வயது சிறுவனுக்கும் திருமணம் செய்துவைக்கப்பட்டபின், சிறுவன் நோயிலோ, விபத்திலோ இறந்து போனான் என்றால், அந்த 5 வயது சிறுமி தாலியறுத்துவிடவேண்டும்.

5 வயதிலே அவள் விதவையாகிவிட வேண்டும் என்ற காலம் தான் கண்ணகி வாழ்ந்த காலம். இன்றைக்கு இப்படிப்பட்ட பழக்கத்தை ஏற்றுக்கொள்ள முடியுமா? போற்றிப் புகழ முடியுமா? முடியாது! அப்படித்தான் கண்ணகியின் வாழ்வையும் இன்றைக்கு ஏற்றுக்கொள்ள, ஏற்று வாழ இயலாது! கண்ணகி வாழ்ந்தது வாழ்க்கையல்ல. அது ஒரு பெண்மைப்பலி! அன்றைக்கு ஆணாதிக்கச் சமுதாயத்தில் பலியானவர்களுள் கண்ணகியும் ஒருத்தி. இந்தப் பிரச்சனை அரண்மனைவரை சென்றதால் அது பெரிதாயிற்று, காவியமாயிற்று.

இப்படி ஆணின் ஆதிக்கத்திற்குப் பலியாகி, அடங்கி, ஆமையாய், ஊமையாய் வாழ்வதுதான் பத்தினித் தன்மையென்று பறை சாற்றப்பட்டது. பெண்களை வார்த்தையால் பெருமைப்படுத்தி, அவர்களின் வாழ்வையும் உரிமையையும் பறித்தது ஆண் ஆதிக்கச் சமுதாயம்.

பெண்ணை அடிமைகொள்ள ஆண்கள் கையாண்ட புகழ்போதைக்கு மயங்காமல், பெண்கள் விழிப்பாக இருக்கவேண்டும். பொறுக்க முடியாத அளவிற்குக் கணவனின் செயல்கள் நடக்குமாயின் விலகி வந்து வாழ்ந்துகாட்ட வேண்டும்.

கண்ணகியின் வாழ்வு ஆணாதிக்கச் சமுதாயத்தின் அலங்கோலம். அதற்காக, அவளைப்போலவே இன்றைக்கும் வாழவேண்டும் என்று அறிவுறுத்துவது அறிவீனம்!

கண்மூடித்தனமாக எந்தவொன்றையும் பாராட்டவும், கடைபிடிக்கவும் செய்வதே இன்றைக்குப் பலருக்கும் வழக்கமாகி வருகிறது. பகவத்கீதையை படிக்காதவன் அதை புனிதநூல் என்பதும், வேதத்ததை உயர்த்திப் புகழ்வதும் போலத்தான் கண்ணகி வாழ்வு உயர் வாழ்வு என்று உரைப்பது.

எந்தவொன்றையும் குறைகூறும் முன்பும், புகழும் முன்பும், ஏற்கும் முன்பும் அதை நன்றாக ஆராய்ந்து  பார்க்க வேண்டும்.

இதுவே அறிவுடைமை. துணிவுடைமை. சரியான வழியிலே சமுதாயத்தை வழி நடத்த வேண்டும். மரபு மயக்கங்களில் மதியிழக்கக்கூடாது.

Pin It