அரசகுமாரிக்குக் கல்யாணம் ஆகணும். அவங்களைக் கல்யாணம் பண்ணிக்க அழகான இளவரசருங்க பலபேரு ஆசைப்பட்டாங்க. ஆனா முடியல. என்னை கல்யாணம் பண்ணிக்க விரும்புறவங்க அழகா இருந்தா மட்டும் போதாது, புத்திசாலியாகவும் இருக்கணும்ன்னு அரசகுமாரி முடிவெடுத்துருந்தாங்க. வர்ற மாப்பிள்ளைகளோட புத்திசாலித்தனத்தத் தெரிஞ்சுக்க ஒரு சோதனைத் திட்டத்தயும் வகுத்துருந்தாங்க. “நான் நடத்தப் போற சோதனையில யார் வெற்றியடையறாங்களோ அவங்களைத் தான் கல்யாணம் செஞ்சுக்குவே''ன்னு அவங்க முடிவா சொல்லிட்டாங்க.

“எப்படி நீ சோதனை செய்வே?''ன்னு அவங்க அப்பாவான அரசர் கேட்டாரு.

“எனக்கு நாலு பழங்க வேணும். அந்தப் பழங்கள யாரு கொண்டு வந்து தர்றாங்களோ அவங்கள நான் கல்யாணம் செஞ்சுப்பே''ன்னு அரசகுமாரி சொன்னாங்க.

ஒரு நாள் அரச சபை கூடுச்சு. தனக்கான கணவனைத் தேர்ந்தெடுக்க அரசகுமாரி அந்தக் கூட்டத்தை கூட்டியிருந்தாங்க. பல தேசத்துல இருந்து இளவரசருங்க வந்திருந்தாங்க. அரசரும் அரசியும் அந்த நாட்டோட மந்திரியும் வேறுபல பெரிய மனுஷங்களும் சபையில கூடியிருந்தாங்க. அரசர் தன்னோட மகளைப் பார்த்து. “உனக்கு எந்த வகையான பழங்க வேணும்னு சொல்லு. இங்க வந்திருக்கிற அரசகுமாரருங்க இன்னும் ஒரு வாரத்துல அந்தப் பழங்களைக் கொண்டு வந்து குடுக்கணும். முதல்ல கொண்டு வந்து தர்றவங்கள நீ கல்யாணம் பண்ணிக்கலாம்''னு சொன்னாரு.

“எனக்கு வேண்டியது நாலு பழங்க மட்டும் தான்: ஒண்ணு, பழமானாலும் காயாவே இருக்கும். ரெண்டாவது, காய்க்காய்ச்சாலும் பழம் பழுத்தாலும் அதுல பூ இருக்கும். மூணாவது, பூப்பூத்தா அழகா இருக்கும், அது, காயாகிப் பழமா பழுத்தா அத யாரும் விரும்ப மாட்டாங்க. நாலாவது பழத்தத் திங்கும் போது கொட்டைத் தட்டுப்படவே செய்யாது. ஆனா, கொட்டை அப்படியே பழத்துல இருக்கும். இந்த நாலு பழங்கள யாரு முதல்ல கொண்டு வந்தாலும், அவங்க யாராயிருந்தாலும், அவங்களத்தான் கட்டிக்குவேன்''ன்னு அரசகுமாரி சொல்லி முடிச்சாங்க. சபையில இருந்த சில பேரு, “இந்தப் பொண்ணு பைத்தியக்காரத்தனமா உளறிக்கிட்டு இருக்குது. இது சொல்லுறதக் கேட்டு அரசனும் இந்த சபையக் கூட்டி நம்மளயும் அந்த உளறøலக் கேட்க சொல்லுறானே''ன்னு பேசிக்கிட்டாங்க.

வந்திருந்த அரசக்குமாரருங்கள்ல சில பேரு அரசகுமாரியோட கேள்விகளைக் கேட்டு பயந்துட்டாங்க. “இந்தப் பொண்ணு கேட்கிற பழங்கள நாம தேடி அலையவும் வேணாம். இது மாதிரியான அறிவாளிப் பொண்ணு நமக்கு வேணவும் வேணாம்''ன்னு தங்களோட நாட்டப் பார்த்து போயிட்டாங்க.

ஒரு வாரம் கழிஞ்சது. மறுபடியும் சபை கூடுச்சு. இந்த முறை பெருங்கூட்டம் கூடியிருந்துச்சு. அரசகுமாரி கேட்ட பழங்கள யாரு கொண்டு வரப்போறாங்கங்கறதப் பார்க்கத்தான் அவ்வளவு கூட்டம். அரசரும் மந்திரியும் சபையில வந்து உட்கார்ந்தாங்க. முதல் கூட்டத்துக்கு வந்திருந்த பல அரசகுமாரருங்க இந்தக் கூட்டத்துக்கு வரல. கொஞ்சம் பேருதான் வந்திருந்தாங்க. அவங்களும் வேடிக்கை பார்க்க வந்தவங்கதான். யாரும் பழங்களக் கொண்டு வரலை.

சபையில அரசர் எழுந்து நின்னு “அரசகுமாரி கேட்ட பழங்களை யாராவது கொண்டு வந்திருக்கீங்களா?''ன்னு கேட்டாரு.

சபையில ஒரே அமைதி. பொதுமக்கள் ஆவலா எல்லா பக்கமும் திரும்பித் திரும்பி பார்த்தாங்க. சபையே மவுனமா இருந்துச்சு. திடீர்னு ஒருத்தரு எழுந்து பேச தொடங்கினாரு. ஆனா. அவர பாத்தா இளவரசர் மாதிரி தெரியல.

“அரசகுமாரி கேட்ட நாலு பழங்களையும் நான் கொண்டு வந்துருக்கே''ன்னு சொன்னாரு.

சபையே அவர அதிசயமாப் பார்த்துச்சு. அரசகுமாரியும் எழுந்தாங்க.

“பழமானாலும் காயாவே இருக்கிற பழம் எது?''ன்னு கேட்டாங்க.

உடனே அந்த இளைஞர் பழுத்து முத்திப்போன தேங்காய எடுத்துக் காட்டுனாரு. “இது நல்லா பழுத்து விழுந்தது. ஆனாலும் இதத் தேங்காய்ன்னு தானே சொல்லுவாங்க. தேம்பழம்ன்னு யாரும் சொல்றதில்ல. அதனால பழுத்தாலும் காயா இருக்கிறது இதுதான்''.

அரசகுமாரிக்கு முகம் மலர்ந்து போச்சு. மத்தவங்களும் சந்தோஷத்துல துள்ளிக் குதிச்சாங்க. அடுத்து என்ன வரப்போகுதோன்னு சபையில ஒரே பரபரப்பா இருந்துச்சு.

“பழம் பழுத்தாலும் பூ இருக்கும் பழம் எது?'' ன்னு அரசகுமாரி தன்னோட ரெண்டாவது கேள்வியை கேட்டாங்க.

உடனே அவர் ஒரு வாழைக்குலையத் தூக்கி எல்லாருக்கும் தெரியிற மாதிரி காட்டுனாரு. அந்தக் குலையோட நுனியில வாழைப்பூ தொங்கிக்கிட்டுருந்துச்சு “இதோ பாருங்க பழமும் இருக்குது. பூவும் இருக்குது.''

அரசகுமாரி ரொம்ப உற்சாகமாயிட்டங்க. “பூ மலர்ந்தா அழகா இருக்கும். ஆனா காயாகிப் பழுத்தா அத யாரும் விரும்ப மாட்டாங்கன்னு சொன்னேன். அந்தப் பழம் என்ன?'' அப்படின்னு கேட்டாங்க.

வந்தவரு ஒரு நெருஞ்சிச் செடியக் கொத்தோட எடுத்துக் காட்டுனாரு. அந்தச் செடியில இலையும் பூவும் முள்ளும் இருந்துச்சுங்க. “இதோ பாருங்க! இந்தப் பூ மஞ்சளா அழகா இருக்குது. ஆனா, இந்தப் பூ காயாகி, பழமானா இத யார் விரும்புவாங்க?''ன்னு சபையைப் பார்த்துக் கேட்டாரு. சபையே கைத்தட்டி அவரப் பாராட்டுச்சு.

நாலாவது சோதனை மட்டும் பாக்கியிருந்துச்சு. எல்லாரும் பெரிய எதிர்பார்ப்போட இருந்தாங்க.

“கொட்டையத் துப்ப வேண்டிய அவசியம் இல்லாம தின்னக் கூடிய பழம் எது?''ன்னு அரசகுமாரி கேட்டாங்க.

“இதோ இதுதான்'' ன்னு முந்திரி பழத்த அரசகுமாரிக்கு முன்னால நீட்டுனாரு. அந்தப் பழத்துக்கு முன்னால கொட்டை ஒட்டிக்கிட்டிருந்துச்சு. “இந்தப் பழத்தத் தனியா தின்னலாம். கொட்டைக்கு ஒண்ணுமே ஆகாது'' அப்படின்னு சொல்லி சிரிச்சாரு.

நாலு சோதனையிலும் ஜெயிச்ச அந்த இளைஞர் வேற யாருமில்ல. அந்த ஊருக்கே செருப்பு தச்சுப் போடுறவரோட மகன்தான்.

அரசருக்கு என்ன செய்யிறதுன்னு தெரியல. இளவரசர் ஒருவருக்குத்தான் தன் மகளை கல்யாணம் பண்ணிக் கொடுக்கணும்ன்னு விரும்புனாரு. ஆனா, இளவரசருங்களக் காட்டிலும் அந்த செருப்புத் தைக்கிற தொழிலாளியோட மகன் புத்திசாலியாக இருந்ததால, அவரால எதுவும் சொல்ல முடியல.

இளவரசிக்கோ மகிழ்ச்சி தாங்கல. போட்டியில ஜெயிச்சவர அழைச்சிக்கிட்டு வந்து தன் பக்கத்துல உட்கார வச்சாங்க. உடனே, பொதுமக்கள் எல்லாரும் ‘வாழ்க' என்று சொல்லி பாராட்டுனாங்க. தன் அறிவுக்குப் பொருத்தமான கணவன் கிடைச்சதுல அரசகுமாரிக்குப் பெருமையோ பெருமை!

நன்றி : ‘பிள்ளைத் தமிழ்'- தாரா பதிப்பகம்
Pin It