Drainage

மீள முடியா துயர் மிகுந்த வாழ்க்கை துப்புரவுப் பணியாளர்களுக்கு எப்போதும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. ஊதிய உயர்வும் நவீன வாழ்வும் மேல்தட்டினருக்கு வசப்பட்ட ஒன்றாக விரிந்து கொண்டிருக்கையில், துப்புரவுத் தொழிலாளருக்கு இன்றும் ஒரு மாதக்கூலி ஆயிரத்தைத் தாண்டவில்லை. கழிவுகளோடு மட்டுமே கழியும் பொழுதுகள் எப்போது முடிவுக்கு வருமென்ற ஏக்கம் கூட துப்புரவுப் பணியாளர்களுக்கு இல்லை. காரணம் அதுவொன்றுதான் அவர்களின் வாழ்வாதாரம். ஆனால் அதை அனுபவிக்கக்கூட துப்புரவுப் பணியாளர்களுக்குதான் எத்தனைத் தடைகள்?

சென்னை மாநகராட்சியில் துப்புரவுத் தொழிலாளர்களாகப் பணிபுரியும் 2025 தற்காலிகப் பணியாளர்களை, சூலை மாதம் பணி நிரந்தரம் செய்தது தமிழக அரசு. மகிழ்ச்சியான செய்திதான். ஆனால் 2ஆவது மண்டலத்தில் உள்ள பணியாளர்கள் அனைவரையும் வேறு இடத்திற்கு மாற்றி ஆணையிட்டுள்ளனர். ‘இங்கு பணியாற்றவே ஆட்கள் குறைவாக உள்ள போது, இங்கிருந்து பணியாளர்களை எப்படி மாற்றம் செய்யலாம்' என்று கவுன்சிலர்கள் மேயரிடமும், ஆணையரிடமும் கேள்வி எழுப்பியதால் தொழிலாளர்கள் தற்காலிகமாக அங்கேயே பணிபுரிய அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் அவர்கள் இங்கிருந்து விடுவிக்கப்படாமலும் அங்கு சென்று பணியில் சேர முடியாமலும் அலைக்கழிக்கப்பட்டு வருகின்றனர். இது குறித்து விசாரிக்க பணியாளர்களை சந்தித்த போது, தங்கள் பிரச்சனைகளை கொட்டித் தீர்த்தனர்.

எவ்வளவு தொலைவில் வீடு இருந்தாலும் காலை 6 மணிக்கே வேலைக்கு வந்துவிட வேண்டும். ஒரு நிமிடம் தாமதமாக வந்தால் கூட வீட்டிற்கு அனுப்பிவிடுகின்றனர் ஆய்வாளர்கள். தூய்மைப் பணிகளில் எந்த விதத்திலும் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளாத கவுன்சிலர்களுக்கு, ஆறு மாதத்திற்கு ஒரு முறை முழு உடல் பரிசோதனையை செய்கிறது மாநகராட்சி. ஆனால் நாள்தோறும் குப்பை அள்ளி, பாதாள சாக்கடையில் மூழ்கும் தூய்மைப் பணியாளர்களுக்கு, மாதத்திற்கு ஒரு முறை கூட மருத்துவம் கிடையாது, பாதுகாப்பு உபகரணங்களும் கிடையாது. அவர்கள் நவீன உலகின் கொத்தடிமைகளாகவே நடத்தப்படுகின்றனர்.

பணி நிரந்தரம் செய்யப்பட்டவர்களின் நிலை இது என்றால், 25 ஆண்டுகளாக தினக்கூலிகளாகவே இருக்கும் 1000க்கும் மேற்பட்டோரின் நிலை இன்னமும் கொடுமையாக உள்ளது. மாநகராட்சியின் சுகாதாரத் துறையில் 59 தூய்மைப் பணியாளர்கள் வேலைக்கு உத்தரவாதமின்றி தவித்து வருகின்றனர். கல்வித் துறையில் பகுதி நேர தூய்மைப் பணியாளர்கள் என்ற பெயரில் 900 பேர் பணிபுரிகின்றனர். பெயருக்குத்தான் பகுதி நேரப் பணியாளர்கள். ஆனால் காலை 7 மணியில் இருந்து நண்பகல் 2 மணி வரை வேலை செய்ய வேண்டும். இவர்களின் மாத சம்பளம் எவ்வளவு தெரியுமா? வெறும் 335 ரூபாய் மட்டும்தான். தூய்மைப்பணிகளில் ஈடுபட்டிருக்கும் 90 சதவிகிதத்திற்கும் மேற்பட்டோர் தலித்துகள் தான்.

மிகக் குறைந்த அளவிலேயே இடைநிலைச் சாதியினர் உள்ளனர். இவர்கள் பெயருக்கு மாநகராட்சி ஊழியர்களாக இருந்து கொண்டு சம்பளத்தை பெற்றுக் கொள்வார்கள். தெருவிற்கு வந்து துடைப்பத்தை எடுத்து பெருக்கமாட்டார்கள், குப்பை அள்ள மாட்டார்கள். அதற்கு பதிலாக அவர்களின் சாதிப் பெருமையை கட்டிக் காக்க ஆய்வாளருக்கு மாதம் 1500 ரூபாய் (முறைப்பணம்) கொடுத்து விடுவார்கள். ஒருவர் ஒரு கிலோ மீட்டர் வரை பெருக்கி குப்பை அள்ள வேண்டும் என்று நிர்வாகம் கட்டுப்பாடு விதித்துள்ளது. இவ்வளவு வேலைகளை ஒருவர் செய்யும் போது அவருக்கு உடல் நலக் கோளாறு ஏற்படுகிறது. அதனால் விடுப்பு எடுக்கும் நிலை உருவாகி, வருமான இழப்பு ஏற்பட்டு மேலும் சிக்கலுக்கு ஆளாக்கப்படுகின்றனர்.

சாலையைப் பெருக்கி தூய்மைப்படுத்தும் பணியாளர்களின் நிலை இதுவென்றால், கழிவு நீர் அகற்று வாரியத்தின் கீழ் உள்ள சாக்கடையில் அடைப்பு எடுக்கும் பணியாளர்களின் நிலை இதனினும் இழிவாக உள்ளது. “காலைல 5.30 மணிக்கு எழுந்து குளிச்சிட்டு என் 22 நாள் கொழந்தய கொஞ்சிட்டுப் போன எங்கப்பா திரும்பி பொணமா தான் வந்தாரு” என்கிறார், சாக்கடையில் அடைப்பு எடுக்க இறங்கி மூச்சுத் திணறி செத்துப்போன பிரபுவின் மகள் ஜோதி.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகில் உள்ள கடலாடி கிராமத்தில் இருந்து சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு பிழைப்புத் தேடி சென்னை வந்தவர் பிரபு. சாதி பலமும், பண பலமும் இல்லாத அவருக்கு சாக்கடை மூழ்கும் தொழிலே வாழ்வு கொடுத்தது. ஒரு நாள் வழக்கம் போல சாக்கடை அடைப்பு எடுக்கும் வேலைக்குச் சென்றார். அம்பத்தூர் எஸ்டேட் பகுதியில் ஏற்பட்ட அடைப்பை நீக்க சாக்கடைக்குள் இறங்கினார். சாக்கடையின் வாய் சிறியதாக இருந்ததால் வாயு நெடி தாக்கி மூச்சுத் திணறல் ஏற்பட்டு சாக்கடைக்குள்ளேயே துடித்தார். இதனை பார்த்துப் பதறிப்போன அவரின் 19 வயது மகன் சாக்கடைக்குள் குதித்தார். இந்த சமூகம் தூய்மையாக வாழ வேண்டும் என்பதற்காக உழைத்த இவர்கள் இருவரும் சாக்கடையில் உயிர் துறந்தனர்.

தொழிலாளிகள் இறந்து போனால் அவர்களுக்கான நிவாரணமோ, ஓய்வூதியமோ இவர்களுக்கு கிடைப்பதில்லை. கழிவு நீர் அகற்று வாரியம் இந்த வேலைகளை ஒப்பந்தத்திற்கு விட்டுவிட்டது. இன்றும் நாம் சாலைகளில் உள்ள சாக்கடையில் மூழ்கி கழிவுகளை அகற்றுபவரை நாள்தோறும் காண முடியும். மக்கள் தொகை குறைவாக இருந்தபோது தெருக்களில் 6 அங்குல குழாய்களும், பெரிய சாலைகளில் 9 மற்றும் 12 அங்குல குழாய்களும் புதைக்கப்பட்டன. இன்று மக்கள் தொகை அதிகரித்துள்ளது. இதனால் அடிக்கடி அடைப்புகள் ஏற்படுகின்றன.

வளர்ந்து வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப மாற்றம் செய்ய வேண்டும் என்று அரசு சிந்திப்பதில்லை. கழிவுகளை உந்தி அனுப்பும் பம்பிங் நிலையங்களை அரசு தனியாருக்கு கொடுத்துவிட்டது. அரசு இதனை நடத்திய போது 24 மணி நேரமும் எந்திரங்கள் இயக்கப்பட்டு வந்தன. இதனால் அடைப்புகள் குறைவாக ஏற்பட்டது. தனியாரிடம் கொடுத்த பிறகு அவர்கள் செலவு அதிகம் ஆகும் என்று கூறி எந்திரங்களை முழுமையாக இயக்குவதுமில்லை, பராமரிப்பதும் இல்லை.

இதனால் அடிக்கடி அடைப்புகள் ஏற்பட்டு பொது மக்கள் பாதிக்கப்படுவதோடு, துப்புரவுப் பணியாளர்கள் சாக்கடைக்குள் இறங்கும் அவலமும் ஏற்படுகிறது. தனியார் செய்யும் இந்த ஊழலை எல்லாம் கண்டு கொள்ளாத அரசு, மக்களிடமிருந்து வரியை மட்டும் சரியாக வாங்கிவிடுகிறது.

ஒப்பந்தக்காரர்கள் சாக்கடையில் மூழ்குபவரை மனிதர்களாகவே கருதுவதில்லை. அவர்களை மிரட்டி வேலை வாங்குவதோடு, அவர்களுக்கான பாதுகாப்பு உபகரணங்கள் எதையும் வழங்குவதுமில்லை. மூழ்கும் வேலைக்கு ஆட்களை அரசு தேர்வு செய்யும் போது, 35 வினாடிகள் ஒருவர் சாக்கடையில் மூழ்கி இருந்து அவருக்கு எதுவும் ஆகவில்லை என்றால் தான் தேர்ந்தெடுக்கப்படுவார். ஆனால் ஒப்பந்தக்காரர்கள் அவ்வாறு எதையும் செய்வதில்லை. யார் மிகக் குறைவான ஊதியத்திற்கு வேலைக்கு வருகிறார்களோ, அவர்களைப் பணியில் அமர்த்திக் கொண்டு சுரண்டுகின்றனர்.

அதுமட்டுமல்ல, சாக்கடையை திறந்த உடன் சிறிது நேரம் வாயு வெளியேற அவகாசம் கொடுக்க வேண்டும்; அதன் பிறகு தான் அதில் இறங்க வேண்டும். ஒப்பந்ததாரர்கள் ஒரு கிலோ மீட்டருக்கு இவ்வளவு என்று பணம் சம்பாதிக்கும் ஆசையில் திறந்த உடனேயே இறங்கச் சொல்லி வற்புறுத்துகின்றனர். வாயு வெளியேறும் முன்பு உள்ளே இறங்குவதால் பலரின் உயிர் பறிபோகிறது.

மருத்துவ வசதிகளை ஒப்பந்ததாரர்கள் முழுமையாக செய்வதில்லை. தொழிலாளர்களுக்கு தொடர் உடல் பரிசோதனையும் இல்லை. மூழ்கி இறந்து போனவர்கள் அத்தனை பேருமே 19 வயதில் இருந்து 35 வயதிற்கு உட்பட்டவர்களாகவே இருக்கின்றனர். உயிருக்கு ஆபத்தான வேலை செய்யும் இவர்களுக்கு, மருத்துவ செலவாக ஒப்பந்ததாரர் ஆண்டுக்கு வெறும் 100 ரூபாய் செலவிடுகிறார். அதாவது ஓரியண்டல் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் ஜனதா திட்டத்தில், ஒவ்வொரு தொழிலாளிக்கும் மருத்துவ இன்சூரன்ஸ் எடுக்க ஆண்டுக்கு 100 ரூபாய். இதனை ஒப்பந்ததாரர்கள் எடுத்துவிடுவார்கள். அத்தோடு அவர்களின் கடமை முடிந்தது. தொழிலாளி இறந்தால் ரூபாய் 1 லட்சமும், அடிபட்டால் ரூபாய் 25 ஆயிரமும் இதன் மூலம் கிடைக்கும். போனஸ் போன்ற கூடுதல் பயன்களைப் பெற முடியாது. இதனால் தொழிலாளிக்கு வாழ்வாதாரப் பாதுகாப்பு எதுவுமில்லை.

செய்த வேலைக்கு கூலியாவது ஒழுங்காக கொடுக்கப்படுகிறதா என்றால் அதுவுமில்லை. “பீ தண்ணியில இறங்கி காலைல 8 மணியில இருந்து சாயங்காலம் 7 மணி வரைக்கும் வேலை செய்றோம். கூலி கேட்டா வூட்டாண்ட வான்னு சொல்லுவாங்க. அங்க போயி அவுங்க வாசல்ல நிக்கணும். என்னான்னே கேக்க மாட்டாங்க. நாலஞ்சி முறை நடக்க உட்டு தான் தருவாங்க. அதையும் முழுசா குடுக்க மாட்டாங்க. வேல இருக்கு அப்புறம் வான்னு சொல்லுவாங்க. போனா இல்லன்னு சொல்லி திருப்பி அனுப்பிச்சிடுவாங்க. போய்ட்டு வந்த செலவு தான் மிச்சம்” என்கிறார் முருகன்.

தூய்மைப் பணியாளர்களின் நலனில் அக்கறையோடு தொடர்ந்து செயல்படும் இந்தியக் குடியரசு தொழிலாளர் சங்கத்தின் தலைவர் அன்புவேந்தன், “கையால் மலம் அள்ளுபவர்களுக்கு பொதுமக்களிடம் எந்த மரியாதையும் இல்லை. இந்த மக்களுக்கு துரோகம் மட்டுமே இழைக்கப்படுகிறது. தூய்மைப் பணியாளர்களுக்கு யாரும் வீடுகள் வாடகைக்கு கொடுப்பதில்லை. அரசு கட்டும் தொகுப்பு வீடுகளில் 25 சதவிகிதம் தூய்மைப் பணியாளர்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று விதியுள்ளது. ஆனால் அது இன்னும் செயல்படுத்தப்படாமலேயே உள்ளது.

தொழிலாளர்களுக்கு வேலை பளு அதிகமாக உள்ளதால், அவர்களை கலந்தாலோசித்த பின்னரே விதிமுறைகளை வகுக்க வேண்டும். தொழிலாளர்கள் மேலதிகாரிகளால் துன்புறுத்தப்பட்டால், அவர்கள் மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யலாம் என்று முன்பு விதி இருந்தது. ஆனால் இப்போது துன்புறுத்தப்பட்ட அதிகாரியின் ஒப்புதல் பெற்ற பிறகு தான் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட வேண்டும் என்று ஆதிக்க சாதிகளுக்கு ஆதரவாக விதியை மாற்றியுள்ளனர். இது எப்படி சாத்தியம்? இது மாற்றப்பட்டாக வேண்டும்” என்கிறார்.

கையால் மலம் அள்ளுவதற்கு தடைச் சட்டம் உள்ளது. ஆனால்,தினமும் சாக்கடையில் தலை வரை மூழ்கி, வாயில் மலம் சென்றுவிடும் கொடுமைக்கு தடை விதிக்க சட்டம் உள்ளதா? ‘சபாய் கரம்சாரி அந்தோலன்' அமைப்பின் தேசிய அமைப்பாளர் பெசவாடா வில்சனிடம் இது குறித்து கேட்டோம். “உலர் கழிப்பறைகள் கட்டுவதற்கு மட்டுமே 1993ஆம் ஆண்டு சட்டம். எனவே அந்த விஷயத்திலேயே அதிக கவனம் குவிக்கப்படுகிறது. தூய்மைப் பணியாளர்களின் வாழ்நிலை மற்றும் பணிநிலை குறித்து ஆய்வு செய்ய ஒரு குழு அமைக்க வேண்டும் என்று குஜராத் உயர் நீதிமன்றம் அரசுக்கு உத்தரவிட்டது.

அதன்படி அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கையில் இந்தப் பணிக்கு மனிதர்களைப் பயன்படுத்தக்கூடாது என்று கூறியது. இதனை குஜராத் அரசும் ஏற்றுக் கொண்டது. இக்குழு அறிக்கையை உச்ச நீதிமன்றத்தின் மூலம் நாடு முழுக்க நடைமுறைப்படுத்த நாங்கள் முயற்சி மேற்கொண்டு வருகிறோம். கையால் மலம் அள்ளுவதே இழிவான செயல் எனில், மலத்திலே மூழ்கி எழுவதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்? இதனை ஒழிக்க சட்டமே தேவையில்லை. சக மனிதர்கள் இதனை உணர்ந்தாலே போதும். ஆனால் யாரும் உணராமல் இருப்பதுதான் பிரச்சனை.

எந்த காரணத்தைக் கொண்டும் சாக்கடைக்குள் மனிதர்கள் இறங்கக்கூடாது. புதிய நவீன கருவிகள் அடைப்பு எடுக்க வந்துவிட்டன. அதனை போதிய அளவு வாங்க வேண்டும். அரசின் ஒவ்வொரு துறைக்குள்ளும் ஆய்வு மற்றும் வளர்ச்சிக்கான ஒரு பிரிவு இருக்கும். இந்தப்பிரிவு துறையின் வளர்ச்சிக்கான புதிய கண்டுபிடிப்புகளையும், ஆய்வுகளையும் செய்யும். இதுபோன்ற ஓர் ஆய்வு மற்றும் வளர்ச்சிப் பிரிவு தூய்மைப் பணியாளர்கள் துறையில் இல்லை. அந்தத் தொழிலில் நவீன வளர்ச்சி ஏற்பட வேண்டும் என்றால், இந்தப் பிரிவை அரசு ஏற்படுத்த வேண்டும் என்று தேசிய திட்டக்குழுவிடம் சபாய் கரம்சாரி அந்தோலன் சார்பில் கோரிக்கை வைத்துள்ளோம்.

தொடக்க காலத்தில் ஓலைச் சுவடியில் எழுதினோம். பின்னர் பேனாவில் எழுதினோம். அறிவியல் கண்டுபிடிப்புகளுக்குப் பிறகு தட்டச்சு எந்திரத்தைப் பயன்படுத்தினோம். இப்போது இன்னும் நவீனமாக கணினி வந்துவிட்டது. ஆனால் சாக்கடை அள்ளுவதில் மட்டும் எந்த நவீன மாற்றமும் ஏற்படாமல் இருக்க என்ன காரணம்?” என்ற அவரின் கேள்வியைத் தான் நேர்மையற்ற அரசின் முன்பும் மக்கள் சமூகத்தின் முன்பும் நாம் வைக்க விரும்புகிறோம்.
Pin It