Salarapatti meeting

மேற்கு மாவட்டங்களில் தீண்டாமைக் கொடுமையை சந்தித்து வந்த தலித் மக்கள், அண்மைக் காலமாக இக்கொடுமைகளுக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்து போராடத் தொடங்கியுள்ளனர். அத்தகைய கிளர்ச்சிகளில் ஒன்று தான் சாலரப்பட்டியில் தலித்துகள் தீண்டாமைக்கெதிராகத் தொடங்கியிருக்கும் போராட்டம். சாலரப்பட்டி, கோவை மாவட்டம் உடுமலை வட்டத்திற்குட்பட்ட கிராமம். இங்கு நூறு அருந்ததியர் குடும்பங்களும், நானூறு வன்னியர் குடும்பங்களும் உள்ளனர். மேற்கு மாவட்டங்களில் உள்ள எல்லா கிராமங்களைப் போலவே இங்கும் இரட்டைக் குவளை, கோயிலில் நுழைய அனுமதி மறுப்பு, அரசு சமூகக் கூடத்தில் அனுமதி மறுப்பு என அனை த்து வகை தீண்டாமைக் கொடுமைகளும் நடைமுறையில் உள்ளன.

உடுமலை வட்டத்திற்குட்பட்ட அனைத்து கிராமங்களிலும் இரட்டைக் குவளை நடைமுறையில் உள்ள கடைகளின் பட்டியல் தயாரிக்கப்பட்டு, ஆதித்தமிழர் பேரவையினரால் காவல் துறையிடம் புகாராகக் கொடுக்கப்பட்டது. சட்டத்திற்குட்பட்டும், சமத்துவ நோக்குடனும், ஒற்றைக் குவளை முறையுடனும் கடையைத் திறந்த வன்னியர் சாதியைச் சார்ந்த கருணாநிதி என்பவரின் தேநீர்க் கடை வன்னியர்களாலேயே அடித்து நொறுக்கப்பட்டது. இதனால் ஏற்பட்ட பதற்றம் காரணமாக உடுமலை வட்டாட்சியர் முன்னிலையில் கூட்டப்பட்ட அமைதிக் கூட்டத்தில் தீண்டாமைக் கொடுமைகளை தலித் மக்கள் பட்டியலிட்டுப் புகாராக அளித்தனர்.

அமைதிக் கூட்டம் முடிந்த அன்றே வன்னியர் சாதியினர் ஊர் கூட்டம் கூட்டி தலித்துகளுக்கு, பால், தண்ணீர், மளிகை மற்றும் வேலை தர மறுத்து சமூகப் புறக்கணிப்பை கடைப்பிடித்தனர். சமூகப் புறக்கணிப்பை விலக்கக் கோரியும் தீண்டாமைக் கொடுமைகளுக்கு முடிவு கட்ட கோரியும், ஆதித்தமிழர் பேரவை உடுமலை மத்திய பேருந்து நிலையம் முன்பு 18.2.2008 அன்று சாலை மறியலில் ஈடுபட்டது. உடுமலை வட்டாட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் தலைமையில் மறுநாளே அமைதிக் கூட்டம் நடத்தப்பட்டு, அனைத்துப் பிரச்சனைகளுக்கும் தீர்வு காணப்படும் என்று உறுதி அளித்ததின் பேரில் தலித் மக்கள் சாலரப்பட்டிக்கு திரும்பினர்.

அன்று 4.30 மணியளவில் தங்கவேல் மற்றும் தருமன் ஆகியோரை வன்னியர்கள் சூழ்ந்துக் கொண்டு தாக்கினர். அவர்களை தலித்துகள் காப்பாற்றினர். ஆனாலும், அதற்குப் பிறகு நூற்றுக்கணக்கான வன்னியர்கள் தலித் குடிசைகளுக்கு தீ வைத்து, ஓடுகளை கற்களால் சேதப்படுத்தினர். அய்ந்து வயது விக்னேஷ் முதல் 80 வயது மூதாட்டி வேலம்மாள் வரை கடும் தாக்குதலுக்கு ஆட்பட்டனர். பாதிக்கப்பட்ட அனைவரும் உடுமலை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

உடுமலை அரசு மருத்துவமனையில் பாதிக்கப்பட்டவர்களைச் சந்திக்க வந்த ஆதித்தமிழர் பேரவை தலைவர் அதியமான், விடுதலைச் சிறுத்தைகள் முன்னணித் தலைவர் சுசி கலையரசன் ஆகியோருக்கு 19.2.2008 அன்று சாலரப்பட்டி செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. எனவே, இரு அமைப்பைச் சார்ந்த நூற்றுக்கணக்கான மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். 170 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களில் அதியமான், சுசி கலையரசன் உள்ளிட்ட 8 பேரை மட்டும் காவல் துறை வாகனத்தில் சாலரப்பட்டி கிராமத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு தலைவர்கள் சென்ற பிறகு தான் பல்வேறு அதிர்ச்சித் தகவல்கள் தெரியவந்தன.

குறிப்பாக, வன்கொடுமை நடைபெற்ற நேரத்தில் காவல் துறை பாதுகாப்பிற்கு இருந்தும், இதை கண்டும் காணாமல் ஒதுங்கிக் கொண்டதோடு, தங்களிடமிருந்து ஆயுதங்களையே வன்னியர்களுக்கு கொடுத்து உதவியுள்ளனர். மேலும், அங்கிருக்கக்கூடிய பள்ளியில் நுழைந்த வன்னியர்கள் ‘சக்கிலியப்பசங்களை வெளியே அனுப்பு’ என்று கூச்சல் போட்டுள்ளனர். அங்கிருந்த ஆசிரியர்களும் மாணவர்களுக்குப் பாதுகாப்பு கொடுக்காமல் வெளியே அனுப்பிவிட்டனர். அடிபட்டவர்களை மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்வதற்குக்கூட வன்னியர்கள் அனுமதிக்கவில்லை.

சாலரப்பட்டி வன்கொடுமையைக் கண்டித்து 5.3.2008 அன்று கண்டன ஆர்ப்பாட்டம், உடுமலைப்பேட்டையில் அதியமான் தலைமையில் சாதி ஒழிப்பு கூட்டியக்கத்தின் சார்பில் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற கு. ராமகிருஷ்ணன் பேசும்போது, ‘சாதி ஒழிப்புக் கூட்டியக்கம்’ நம்பியூரிலே தொடங்கியது. இன்றைக்குப் பேரெழுச்சியோடு சாலரப்பட்டி தலித் மக்களுக்காக ஆர்ப்பாட்டத்தை நடத்துகின்றது என்றார்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், “நாம் அரசாங்கத்திடம் மண்டியிட்டுக் கெஞ்சுகிற நிலையில் இருந்து நம்முடைய அணுகுமுறைகளை மாற்றியாக வேண்டும். காவல் துறை அதிகாரியிடம் மனு கொடுத்து பாதுகாப்புக் கொடு என்று கெஞ்சுகிற இந்த நிலையில் இருந்து நாம் மீள வேண்டும். இதுதான் இன்றைக்கு இளைய தலைமுறையினர் சிந்திக்க வேண்டிய ஒரு கட்டம். ஆகவே, நாம் எங்களைத் தாக்கி விட்டார்கள், காயப்படுத்திவிட்டார்கள், எங்கள் குடிசைகளை தீ வைத்து விட்டார்கள் என்று பாதிப்படைந்த பிறகு முறையிடுவது என்கிற நிலையில் இருந்து மாறி, பாதிப்படைந்த பிறகு தற்காப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வது என்கிற நிலையில் இருந்து மாறி, எங்களைத் தாக்கவே முடியாது என்கிற நிலைக்கு நம்மை நாம் தயார்படுத்திக் கொள்ள வேண்டும். நமக்கு அத்தகைய துணிவை இத்தகைய ஆர்ப்பாட்டங்களும் பேரணிகளும் தரும்'' என்றார்.

Pin It