Ambedkarஅமைச்சரவையின் ஓர் உறுப்பினராக இருப்பதிலிருந்து நான் விலகிவிட்டேன் என்பதை, அதிகாரப் பூர்வமாக இல்லை என்றாலும் அதிகாரப்பூர்வமற்ற முறையில் அவை நிச்சயமாக அறியும் என்பதை நான் உறுதியாக நம்புகிறேன். செப்டம்பர் 27, வியாழன் அன்று பிரதமரிடம் எனது பதவி விலகல் கடிதத்தை அளித்தேன். உடனடியாக என்னை விடுவிக்குமாறு அவரைக் கேட்டுக் கொண்டேன். அடுத்த நாளே என் வேண்டுகோளை பிரதமர் ஏற்றுக்கொண்டார். 28 வெள்ளிக் கிழமைக்குப் பின்னர் நான் அமைச்சராகத் தொடர்ந்தேன் என்றால், நாடாளுமன்றக் கூட்டத் தொடர் முடியும்வரை பதவியில் இருக்குமாறு பிரதமர் என்னை கேட்டுக் கொண்டதே அதற்குக்காரணம். அரசியல் சட்ட நெறிமுறைக்கு இணங்கவே நான் இந்த வேண்டுகோளை ஏற்றேன்...

இரண்டாவதாக, அறிக்கை எதுவும் வெளியிடாமல் பதவியிலிருந்து அமைச்சர் ஒருவர் விலகுகிறார் என்றால், தமது பதவிப் பொறுப்பிலோ, தனிப்பட்ட முறையிலோ அவர் தவறு ஏதோ செய்திருக்கிறார் என்று மக்கள் சந்தேகிக்கக்கூடும். எனவே பதவி விலகலுக்கான காரணத்தை, விளக்க அறிக்கை மூலம் வெளியிடுவதே பாதுகாப்பான வழி என்று நான் கருதுகிறேன்.

மூன்றாவதாக, நமது செய்தித்தாள்கள் சிலரை ஆதரிப்பது, சிலரை எதிர்ப்பது என பாரபட்சமான போக்கையே காலங்காலமாக கடைப்பிடித்து வருகின்றன. அவற்றின் தீர்ப்புகள் ஒருபோதும் தகுதிகளை அடிப்படையாகக் கொண்டிருப்பதில்லை. எங்கெல்லாம் வாய்ப்புகள் கிடைக்கின்றனவோ, அங்கெல்லாம் அவை தமது கைவரிசையைக் காட்டுகின்றன. தமது ஆதரவாளர்கள் பதவி விலகும்போது அது குறித்த நல்ல தகவல்களையும், தமக்குப் பிடிக்காதவர்கள் பதவி விலகும்போது அது குறித்த மோசமான தகவல்களையும் அவை வெளியிடுகின்றன. எனது விஷயத்தில் கூட இத்தகைய ஒரு விஷமம் நடந்துள்ளதாகவே நான் கருதுகிறேன். இக்காரணங்களால் தான் பதவியிலிருந்து விலகுவதற்கு முன்பு ஓர் அறிக்கையை வெளியிட நான் முடிவு செய்தேன்.

தமது அமைச்சரவையில் சட்ட அமைச்சரின் பொறுப்பை ஏற்றுக்கொள்ளுமாறு பிரதமர் என்னைக் கேட்டுக் கொண்டு 4 ஆண்டுகள், 1 மாதம், 26 நாட்கள் ஆகின்றன. இது எனக்கு மிகப்sபெரிய வியப்பை அளித்தது. நான் எதிர் பாசறையில் இருந்தேன். 1946 ஆகஸ்டில் இடைக்கால அரசாங்கம் உருவாக்கப்பட்டபோது, தோழமை கொள்வதற்கு நான் தகுதியற்றவன் என்று ஏற்கனவே கண்டனம் செய்யப்பட்டேன். பிரதமரின் போக்கில் இந்த மாற்றம் ஏற்பட என்ன நடந்தது என்பதைக் கண்டறிய, நான் ஆழ்ந்த ஆராய்ச்சியில் இறங்கினேன். எனக்கு சில அய்யப்பாடுகள் இருந்தன.

ஒருபோதும் என்னுடைய நண்பர்களாக இல்லாதிருந்தவர்களுடன் சேர்ந்து நான் எப்படிச் செயலாற்ற முடியும் என்பது எனக்குத் தெரியவில்லை. மேலும் எனக்கு முன்பு இந்திய அரசாங்கத்தின் சட்ட அமைச்சர்களாக இருந்தவர்கள் வெளிப்படுத்திய சட்ட அறிவையும் நுண்புலத்தையும் சட்ட அமைச்சர் என்ற முறையில் என்னால் தொடர்ந்து நிலைநாட்ட முடியுமா? என்ற அய்யமும் என்னுள் எழுந்தது. நமது தேசத்தைக் கட்டமைப்பதற்கானப் பணியில் என்னுடைய ஒத்துழைப்பு கோரப்படும்போது மறுக்கக்கூடாது என்ற அடிப்படையில்தான் பிரதமரின் அழைப்பை ஏற்றுக்கொண்டேன். எனது சந்தேகங்களை எல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டேன்.

எனது சகாக்களுடன் எனக்கிருந்த தொடர்பைத் துண்டித்துக் கொள்ள என்னை நிர்பந்தித்த விஷயங்களைப் பற்றி இப்போது கூறுகிறேன். பல்வேறு காரணங்களால் பதவி விலக வேண்டும் என்ற உந்துதல் நீண்ட காலமாகவே என்னுள் வளர்ந்து வந்தது. முதலாவதாக என்னைப் பதவி விலகும்படிபடி தூண்டிய தனிப்பட்ட என் சொந்தக் காரணங்களைக் கூறுகிறேன். வைசிராயின் நிர்வாகக் குழுவில் ஓர் உறுப்பினராக நான் இருந்ததன் காரணமாக, சட்ட அமைச்சகம் என்பது நிர்வாக ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்ததல்ல என்பதை நான் அறிவேன். இந்திய அரசாங்கத்தின் கொள்கையை உருவாக்குவதற்கான எந்த வாய்ப்பையும் அது வழங்கவில்லை. அதை ஒரு காலியான சோப்புப் பெட்டி என்றும், அது மூத்த வழக்கறிஞர்கள் விளையாடுவதற்கு மட்டுமே உகந்தது என்றும் நாங்கள் கூறுவதுண்டு.

பிரதமர் எனக்கு இந்த வாய்ப்பை வழங்க முன்வந்தபோது, நான் அனுபவமிக்க ஒரு வழக்கறிஞராக இருந்ததோடு, எந்த நிர்வாகத்துறையையும் நடத்தும் திறமையையும் பெற்றிருந்தேன். பழைய வைசிராயின் நிர்வாகக் குழுவில் தொழிலாளர் நலத்துறை மற்றும் மத்திய பொதுப்பணித்துறை ஆகிய இரண்டு அமைச்சர் பதவிகளையும் வகித்து வந்திருக்கிறேன். அப்போது பெருமளவில் திட்டமிட்டு பணிகளைச் செய்து வந்திருக்கிறேன், எனவே ஏதேனும் நிர்வாகத் துறையை எனக்கு வழங்குங்கள் என்று அவரிடம் கூறினேன். இதை ஏற்றுக்கொண்ட பிரதமர் சட்டத்துறையுடன் தாம் உருவாக்கவிருக்கும் திட்டமிடுதல் துறையையும் எனக்குக் கொடுப்பதாகக் கூறினார். ஆனால் கெடு வாய்ப்பாக திட்டமிடும் துறை மிகப் பிந்தைய நாளில்தான் உருவாக்கப்பட்டது. அப்போதும் அத்துறை எனக்குத் தரப்படவில்லை.

பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் ஆங்கில நூல் தொகுப்பு: 14(2), பக்கம்: 1317
Pin It