mathivannan
தலித் இன்டலெக்சுவல் கலெக்டிவ் மற்றும் மும்பையைச் சேர்ந்த ‘விகாஸ் அத்யாயன் கேந்திரா’' ஆகிய அமைப்புகள் சென்னையில் பிப்ரவரி 8,9,10 ஆகிய மூன்று நாட்கள் தலித் எழுத்தாளர்கள் மாநாடு மற்றும் ஓவியக் கண்காட்சியை நடத்தியது. தமிழக தலித் இயக்கத்தின் அறிவுச் சூழலில் நிகழ்ந்து கொண்டிருக்கும் விவாதங்களில் சில அங்கும் பிரதிபலித்தன. அதைப் பதிவு செய்வது பொருத்தமானதும் அவசியமானதுமாகும்.

இக்கருத்தரங்கில் கேரளத்திலிருந்து வீரன்குட்டி, சகி மற்றும் ரேணுகுமார் ஆகியோரும், ஆந்திரத்திலிருந்து கத்தி பத்மராவ், தீப்தி, லீலாகுமாரி, ஜாஜீலா, கவுரி ஆகியோரும், கர்நாடகத்திலிருந்து அனுமந்தையா, சோமசேகர் ஆகியோரும், தமிழகத்திலிருந்து பாமா, அழகிய பெரியவன், அரங்க மல்லிகா, பத்மினி, தமிழச்சி, சுகிர்தராணி, கே.ஏ. குணசேகரன், இமையம், பெருமாள் முருகன், காசி மாரியப்பன், எழில். இளங்கோவன், சந்ரு, காதம்பரி, அரிகிருஷ்ணன், தனிக்கொடி, காமராஜ், ஸ்டாலின் ராஜாங்கம், ஆதவன் தீட்சண்யா ஆகியோரும் பங்கேற்றனர்.

வெளிமாநிலங்களிலிருந்து வந்து கலந்து கொண்டவர்களைப் பொறுத்தமட்டில், அவர்களிடமிருந்து விவாதமென்று எதுவும் வெளிப்படவில்லை. தலித் ஒற்றுமை மற்றும் அந்நோக்கிலான கருத்துரைகள் ஆகியவற்றையே அவர்களிடமிருந்து பெற முடிந்தது. இவை தவிர அவரவர் படைப்புகள் குறித்த விளக்கமும் தன்னிலை விளக்கமும் அவர்களிடமிருந்து வெளிப்பட்டன.

தமிழக எழுத்தாளர்களிடமிருந்து பல்வேறு விதமான நிலைகளிலும், சிந்தனைப் போக்கிலிருந்தும் படைப்பாளிகளும், எழுத்தாளர்களும் கலந்து கொண்டதால், அவர்களிடையே விவாதங்களும், கருத்து மோதல்களும் நிகழ்ந்தன. இவை ஒரு ஜனநாயக ரீதியிலான உரையாடல் என்ற வடிவத்திலேயே நிகழ்ந்ததால், பார்வையாளர்களின் எரிச்சலுக்கு உள்ளாகவில்லை என்பது ஆறுதலான செய்தி. அந்த வகையில் இக்கருத்தரங்கம் ஆக்கப்பூர்வமானதாக இருந்தது. முதல் நாள் மாலை தமிழச்சி தலைமையிலான அமர்வில் ஸ்டாலின் ராஜாங்கம் வாசித்த கட்டுரையிலிருந்து சில விவாதங்கள் எழும்பின.

alagiyaperiyavan
ஸ்டாலின் ராஜாங்கம் தனது கட்டுரையில் சுதந்திரப் போராட்ட காலமாகிய 1900த்தை ஒட்டிய ஆண்டுகளிலேயே தமிழில் தலித் விமர்சனம் என்ற வடிவில் தலித் இலக்கியப் போக்கு உருவாகி விட்டது என்று குறிப்பிட்டார். அதை ஆதவன் தீட்சண்யா விமர்சனத்துக்கு உள்ளாக்கினார். அயோத்திதாசர் முன்வைத்த விமர்சனப் பூர்வமான வரலாற்றை அப்படியே ஏற்றுக் கொள்ள முடியாது. தனது விருப்பத்துக்குகந்த வகையில் வரலாற்றைப் புனைந்து பார்க்கும் தன்மை அதில் இருக்கிறது. அவ்வாறே அருந்ததியர்களைக் குறித்த அவரது பார்வையிலும் கோளாறு இருக்கிறது. அது ஏற்கத் தகுந்ததல்ல என்பன போன்ற கருத்துகளை ஆதவனும், வளர்மதியும் முன் வைத்தனர்.

இரண்டாவது நாள் இமயத்தின் கட்டுரையை முன்வைத்து விவாதங்கள் எழும்பின. கல்வி, வேலைவாய்ப்பு போன்றவற்றில் இடஒதுக்கீடு இருப்பது போன்று இலக்கியத்திலும் இடஒதுக்கீடா தலித் இலக்கியம் என்ற கேள்வியை இமயம் எழுப்பினார். பூமணி, சிவகாமி ஆகியோரின் நாவல்கள் முதலில் நாவல்கள் என்றே ஏற்றுக் கொள்ளப்பட்டன. இப்போது அவை தலித் நாவல்கள் என்று சொல்லப்படுகின்றன என்று அவர் கூறினார். இதனை ஆதவன் தீட்சண்யா கேள்விக்குள்ளாக்கினார். இலக்கியம் இலக்கியமாகத்தான் பார்க்கப்படுமே ஒழிய, எவ்வளவு பேரை ஒரு படைப்பு சென்றடைகிறதோ அதை வைத்துத் தான் படைப்பின் வெற்றி நிர்ணயிக்கப்படுமே ஒழிய, அப்படைப்பாளியின் சாதி இவற்றை நிர்ணயிக்காது என்று உணர்ச்சிவசப்பட்டார்.

இதை நான் மறுத்தேன். சாதி சார்ந்து தான் இலக்கியங்கள் மதிக்கப்படுகின்றன. ஒரு காலத்தில் பார்ப்பனர்களின் இலக்கியங்கள் தான் மதிக்கப்பட்டன. எல்லா தலித் சாதிகளிலிருந்தும் எழுத்தாளர்கள் எழுதியிருந்தாலும், அதில் ஒரு பிரிவைச் சேர்ந்த எழுத்தாளர்கள் எழுதியவை மட்டுமே ஆங்கிலத்திலும் பிறமொழிகளிலும் மொழிபெயர்க்கப்படுகின்றன என்று சொன்னேன்.

மூன்றாவது நாளில் அரங்க மல்லிகா தலைமையில் நடந்த அமர்விலும் பொறி பறந்தது. ஓவியர் சந்ரு கருத்தரங்கின் மேடையில் ‘தீம்’ ஓவியமாய் வைக்கப்பட்டிருந்ததை திட்டித் தீர்த்தார். அவருக்குப் பிறகு பேச வந்த எழில். இளங்கோவன், அருந்ததியர்கள் 17ஆம் நூற்றாண்டில் தமிழ் நாட்டில் வந்து குடியேறியவர்கள் என்பதை மறுத்து, 15ஆம் நூற்றாண்டுச் செப்பேடு பேரூரில் கிடைத்ததில் அருந்ததியர் குறித்த பதிவு இருப்பதையும், முதலாம் குலோத்துங்கன் காலமான 9ஆம் நூற்றாண்டில் நடந்த வலங்கை இடங்கைப் போராட்டங்கள் குறித்த பிரம்ம தேய சதுர்வேதி மங்கலம் கல்வெட்டில் அருந்ததியர் குறித்த பதிவு இருப்பதையும், ‘அருந்ததியர் வரலாறும் பண்பாடும்’ என்ற நூலில் இது குறித்து தாம் விரிவாகப் பேசியிருப்பதாகக் குறிப்பிட்டார்.

மேலும், தலித் ஒற்றுமை குறித்துப் பேசுகிறார்கள். தலித் ஒற்றுமையை குலைக்கும் நோக்கத்திலேயே தனது ‘காலச்சுவடு’ கட்டுரையில் அருந்ததியப் பெண்களைக் கொச்சைப்படுத்தி ரவிக்குமார் எழுதுகிறார். அந்த வகையில் தலித் ஒற்றுமை குலைந்ததற்கு அவரைப் போன்றவர்கள் தான் பொறுப்பு என்றும் அவர் குறிப்பிட்டார். அவரை அடுத்துப் பேசிய நான், தமிழ் நாட்டில் தலித் படைப்பாளிகள் மத்தியில் ஒரு பெரிய வரவேற்பைப் பெற்றவர்களாக இருந்தாலும் பொது இலக்கியத் தளத்தில் ஒரு புறக்கணிப்புதான் எனக்குக் கிடைத்திருக்கிறது. இதற்கு தலித் எழுத்தாளர்களிடையே உள்ள சுயசாதிப் பாசமும், அதன் அடிப்படையிலான நடவடிக்கைகளும் குறிப்பிட்ட அளவு காரணமாக இருக்கிறது என்று பேசினேன்.

இதற்கு எதிர்வினையாற்றிய சுகிர்தராணி, ரவிக்குமாருக்கு ஆதரவாக நின்று ‘எழில் இளங்கோவன் பொதுப்புத்தியிலிருந்து இத்தகைய குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார்’ என்றார் இது போன்ற கேள்விகளை சுகிர்தராணியைப் போன்றவர்கள் எழுப்புவது வருத்தத்திற்குரியது. இது குறித்து நானும் எழுதியிருக்கிறேன், எழில் இளங்கோவனும் எழுதியிருக்கிறார். எங்களுக்கு இதுவரை நேரடியாக ரவிக்குமார் பதில் அளிக்காத நிலையில், சுகிர்தராணியைப் போன்றவர்கள் இதை ஆதரிப்பது தவறானது என்றேன் நான்.

எனக்கு அடுத்துப் பேசிய அழகிய பெரியவன், தலித் இலக்கியத்தின் படைப்பாளிகளாக மட்டுமின்றி வாசகர்களாகவும் தலித்துகளே இருப்பதைக் குறிப்பிட்டு, பொது நீரோட்ட இலக்கியத்தளத்துக்கு தலித் படைப்புகள் செல்ல வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். அடுத்துப் பேசிய பேராசிரியர் அரங்க மல்லிகா, தன்னுடைய கவிதை நூல் வெளியீட்டு விழாவிற்கு தான் அழைத்த தலித் எழுத்தாளர்கள் வரவில்லை என்றும், தலித் எழுத்தாளர்களிடையே பள்ளர், பறையர், சக்கிலியர் என்ற குழு மனப்பான்மை இருக்கிறது என்றும் வருந்தினார்.

அதற்கு பதிலளித்துப் பேசிய அழகிய பெரியவன், சொந்தக் காரணங்களுக்காக வர இயலாமல் போன விஷயத்தை வீணாக உட்சாதி அரசியலாக்குவது தவறு. இன்றைக்கு தலித் எழுத்தாளர்கள் மற்றும் அறிவுஜீவிகள் எவற்றை அரசியல் ஆக்க வேண்டுமோ அவற்றை அரசியல் ஆக்காமல், எவற்றை நிராகரிக்க வேண்டுமோ, அவற்றை அரசியல் ஆக்கிக்கொண்டிருக்கிறார்கள். இது வெட்கக்கேடானது, கண்டிக்கத்தக்கது, வருத்தமளிக்கக்கூடியது என்று குறிப்பிட்டார். மேலும், அவர் தான் சார்ந்த உட்சாதியை முதன்மைப்படுத்தாதையும் எங்கேயும் எப்போதும் எந்தச் சூழ்நிலையிலும் தலித் எழுத்தாளன் என்ற பொதுத்தன்மையிலும், அதையும் கடந்து தமிழ்ப் படைப்பாளி என்ற பொதுவான களத்தில் தான் தன்னை அடையாளப்படுத்திக்கொள்ள விரும்புவதாகவும், அழுத்தந்திருத்தமாகக் கூறினார்.

மேலும், தானும் ‘தலித் முரசு’ம் தலித் ஒற்றுமைக்காக எழுதியும், பேசியும், களத்தில் நின்று போராடி வரும் சூழலில் சில தலித் அரசியல் கட்சித் தலைவர்கள் தொடர்ச்சியாக தங்கள் மீது நியாயமற்ற, மிக மோசமான குற்றச்சாட்டுகளை சுமத்தி வருவது வருந்தத்தக்கதாக இருக்கிறது என்றும் குறிப்பிட்டார். இதுவரையில், பிற மொழியினரும் பங்கு பெறும் ஒரு விரிவான தளத்தை உடைய இதுபோன்ற கருத்தரங்குகளை குறிப்பிட்ட சிலரே ஆக்கிரமித்து இருந்தனர். இம்முறை பல தரப்பினரையும் பிரதிநிதித்துவம் செய்யும் வகையில், அதைச் சாத்தியமாக்கிய ஒருங்கிணைப்பாளர்களான சி. லட்சுமணன் மற்றும் பி. ராமஜெயம் ஆகியோரைப் பாராட்ட வேண்டும்.
Pin It