"மநுஸ்மிருதி மற்றும் அதைப்போன்ற பிற நூல்களில், மிகவும் கீழ்த்தரமாகக் காணப்படும் கருத்துகள், மிக மோசமான வகையில் மனித உரிமைகளை மீறுவதாக இருக்கின்றன. எனவே, இம்மாநாடு மிக அழுத்தந்திருத்தமாக இதைக் கண்டிப்பதுடன் - அதன் ஒரு வெளிப்பாடாக, மநுஸ்மிருதியை எரிப்பது எனவும் ஒருமனதாகத் தீர்மானிக்கிறது.''

- 25.12.1927 அன்று மகத் மாநாட்டில், டாக்டர் அம்பேத்கர் முன்மொழிந்த தீர்மானம்

புரட்சியாளர் அம்பேத்கர் மநுஸ்மிருதியை எரித்த (25.12.1927) 80ஆவது ஆண்டு தொடங்கியுள்ளது. இந்து பயங்கரவாதத்திற்கு எதிராக அவர் மூட்டிய தீ, நாடெங்கும் பற்றி எரிய வேண்டிய தேவையை, எவரும் எளிதாகப் புறந்தள்ளிவிட இயலாது. சமத்துவத்திற்கானப் போராட்டத்தின் தொடக்கப் புள்ளியே மநுஸ்மிருதி எரிப்பு. ‘மநுஸ்மிருதிகள் வழக்கொழிந்து விட்டன; இதை எரிப்பதன் மூலம் அம்பேத்கர் ஏன் அதற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்?' என்று அன்றே கேட்கப்பட்டது. இன்றும் இதுபோன்று கேள்வி எழுப்புகின்றவர்களுக்கும் சேர்த்து அம்பேத்கர் தெளிவாக பதிலளித்துள்ளார் :
"இந்துக்கள் மநுஸ்மிருதியைப் பின்பற்றுவதால்தான், தாழ்த்தப்பட்ட மக்கள் மீது அவர்கள் வன்கொடுமைகளை இழைக்கின்றனர். அது, வழக்கொழிந்துவிட்ட ஒரு நூல் என்பது உண்மை எனில், அதை யாராவது எரித்தால், அதற்கு இந்துக்கள் ஏன் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்? இதை எரிப்பதால் என்ன கிடைக்கும் என்று கேட்கிறார்கள். காந்தி, அயல்நாட்டுத் துணிகளை எரித்ததால் என்ன கிடைத்தது? நியுயார்க்கில் மிஸ் மேயோ எழுதிய ‘அன்னை இந்தியா' என்ற நூலை எரித்ததால் என்ன சாதித்தார்கள்? அரசியல் சீர்திருத்தத்தை வலியுறுத்திய சைமன் குழுவைப் புறக்கணித்ததால், என்ன சாதிக்கப்பட்டது? இவற்றையெல்லாம் எதிர்ப்பதற்கு என்ன காரணமோ, மநுஸ்மிருதியை எரிப்பதற்கும் அதுதான் காரணம்.''

இந்தியாவை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் இந்துத்துவ வெறியைத் தூண்டும் ‘புனித ஆற்றலை' - மநுஸ்மிருதியும், பகவத் கீதையும், இந்து சாஸ்திரங்களும் தன்னகத்தே கொண்டிருக்கின்றன. இந்து வன்முறைகளுக்கு அவைதான் ஊற்றுக்கண். ஆனால், கீழ்த்தரமான இந்நூல்களை விமர்சித்தால், அதை விமர்சிப்பவர்களைத்தான் அரசு கைது செய்கிறது. ‘தமிழ் நாடு முஸ்லிம் மக்கள் கட்சி'யின் தலைவர் எஸ்.எம். பாஷா, மகாபாரதத்தை விமர்சித்து ஆங்கிலத்தில் எழுதியுள்ள நூலைத் தடை செய்ததோடு மட்டுமின்றி, அவரைக் கைது செய்துமிருக்கிறது (‘தினத்தந்தி' 30.12.06). ஆனால், ஆர்.எஸ்.எஸ். தலைவர் கே.எஸ். சுதர்சனம், "சாதிப் பண்பாட்டைப் பாதுகாக்க வேண்டும்'' என்று பிரகடனப்படுத்தியதன் ஒரு பகுதியாக - ‘அகண்ட இந்து செயல்திட்டம்' ஒன்றை சுப்பிரமணிய சுவாமி வலியுறுத்தி, மதமாற்றத் தடைச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் சுதந்திரமாக சொல்ல முடிகிறது (‘தி இந்து' 3.1.07).

அரசியல் தளத்தில் மய்ய ஆட்சி அதிகாரத்தைப் பறிகொடுத்த பா.ஜ.க. மற்றும் அதன் சங்பரிவாரங்கள், தற்பொழுது மீண்டும் ‘ராமன் கோயிலைக் கட்டுவோம்' என்று கிளம்பியிருக்கின்றன. உத்திரப் பிரதேச தேர்தலைக் கவனத்தில் கொண்டும், வாஜ்பாய் சொல்வது போல, ‘லக்னோ வழியாக புதுதில்லி செல்லவும்' அவை திட்டமிட்டுள்ளன. அதற்கான அடிப்படைவாதப் பணிகளில் அவை ஈடுபட்டுள்ளன. இந்நாட்டு மக்களிடையே இந்து உணர்வைத் தூண்டி ‘ஓட்டுப் பொறுக்கும் அரசியல்'தான் அது என்று சொல்லப்பட்டாலும், அது இந்து முஸ்லிம் கலவரத்திற்குதான் வித்தூன்றும். இக்கலவரங்கள் மூலம் ‘இந்து ஒற்றுமை' வலுப்பெறுவதால், அதை செயல்படுத்துகின்றனர். இந்த அகண்ட சதித்திட்டத்தின் ஒரு பகுதியே பெரியார் சிலை உடைப்பு!

பன்முகத் தன்மை வாய்ந்த இந்தியாவை ஒரே தேசியமாக சித்தரித்து, இந்து பண்பாட்டைத் திணிக்க முயல்கின்றனர். எனவே, அதற்கு எதிராக நாம் முன்னிறுத்தும் பண்பாடு, மிகவும் வலிமை வாய்ந்ததாக - சாதி, மத ஒழிப்புப் பண்பாடாக இருந்தாக வேண்டும். தமிழ்ப் பண்பாடு என்று பொதுவாகக் கூறுவது போதாமையாகும். இதற்கு, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் பார்வை சான்று பகர்வதாகவே இருக்கிறது: "... பார்ப்பன எதிர்ப்பை, இந்து மத எதிர்ப்பாக நாம் மாற்றக் கூடாது... மூடநம்பிக்கைகளை எதிர்க்க வேண்டும்; வர்ண சாதி ஆதிக்கத்தை எதிர்க்க வேண்டும். கடவுள் இல்லை என்பதைக் கருத்தியலாகப் பரப்ப வேண்டும். ஆனால், மதத்தோடும் கோயிலோடும் போர் புரிவது, எதிர்விளைவை உண்டாக்கும்'' (‘தமிழர் கண்ணோட்டம்' சனவரி 2007). பார்ப்பனர்களை எதிர்க்கலாம்; ஆனால், பார்ப்பனக் கடவுளர்களையும், அவர்களின் மதத்தையும், கோயிலையும் எதிர்க்க வேண்டாம் என்பது, கடைந்தெடுத்த முரண்பாடு இல்லையா?

பார்ப்பன ஆதிக்கம் - இந்து மதத்திலும், கோயில்களிலும், ‘புனித நூல்'களிலும்தான் மிக ஆழமாக வேர் கொண்டிருக்கிறது. அதனால்தான், ‘இத்தகைய வேதங்களையும், சாஸ்திரங்களையும், இந்து மதத்தையும் வெடி வைத்தே தகர்க்க வேண்டும்; வேறு எந்த செயலும் பயன் தராது' என்றார் அம்பேத்கர். எனவே, அம்பேத்கர் மற்றும் பெரியாரைப் பின்பற்றுவதன் மூலம்தான், நாம் இந்து பண்பாட்டுத் தேசியத்தை வேரறுக்க முடியும். இக்கருத்தியல்களை உள்ளடக்காத தமிழ்ப் பண்பாட்டை, இந்து பண்பாடு எளிதில் செறித்துவிடும்!
Pin It