“இந்திய அரசியலைப் பற்றி ஆய்வு செய்து வரும் அறிஞர்கள் வேறு என்னதான் கூறினாலும், சாதி ரீதியான பிரதிநிதித்துவக் கோட்பாட்டை ஏற்றிருப்பதுதான் வரப்போகும் இந்திய அரசியல் சட்டத்தில் பொதிந்துள்ள மிகச் சிறந்த அம்சம் என்று நான் உறுதியாகத் தெரிவிக்க விரும்புகிறேன். சாதி ரீதியான பிரதிநிதித்துவம், நமது நீதித்துறையிலும் தேவை. ஒரு வழக்கில் வாதி மற்றும் பிரதிவாதி என இருவரும் பார்ப்பனர்களாக இருந்தால், பார்ப்பன நீதிபதி நடுநிலையுடன் செயல்படுகிறார். ஆனால், பார்ப்பனருக்கும், பார்ப்பனர் அல்லாதவருக்கும் இடையில் ஒரு வழக்கு வரும்போது, அந்த நீதிபதி பார்ப்பனர்களின் பிரதிநிதியாகவே செயல்படுகிறார். பார்ப்பன நீதிபதிகள், நமது நீதித்துறையை முறைகேடாகப் பயன்படுத்தி – நீதியின் மாண்பையே விபச்சாரம் செய்கின்றனர். இத்தகைய போக்கிற்கு என்னால் பல எடுத்துக்காட்டுகளைக் கூற முடியும்.''
- டாக்டர் அம்பேத்கர்

அண்மையில் பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீடு குறித்து வெளிவந்த உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் மூலம், நூறு கோடி மக்களின் பிரதிநிதித்துவத்தை, மூன்று சதவிகிதமே உள்ள மக்களின் பிரதிநிதிகள் மறுத்துள்ளனர். சாகு மகராஜ் தொடங்கிய இடஒதுக்கீடு தத்துவம் (1902) நூறு ஆண்டுகள் கடந்தும், செயல்வடிவம் பெற போராட வேண்டியுள்ளது. உயர் கல்வி நிறுவனங்களில் 60 ஆண்டுகளாக பிற்படுத்தப்பட்ட, தலித் மக்களுக்கு இடஒதுக்கீடு மறுக்கப்பட்டு வருகிறது. தலித் மக்களுக்கு மய்ய அரசுப் பணிகளிலும், உயர் கல்வி நிறுவனங்களிலும் இடஒதுக்கீடு உரிமை இருந்தும், அது சரிவர நடைமுறைப்படுத்தப்படவில்லை. இந்நிலையில், பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இடஒதுக்கீடு பற்றிய விவாதங்கள், தலித் மக்களிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளன.
"நம்மை ஒடுக்குகின்றவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கலாமா?' பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்று சட்ட ரீதியாக அடித்தளமிட்டவர் அம்பேத்கர்தான் என்பது, முதலில் இரு தரப்பிலும் புரிந்து கொள்ளப்பட வேண்டும். படிநிலைப்படுத்தப்பட்ட சாதி அமைப்பு உருவாகத் தொடங்கியது முதல், தலித்துகளுக்கு மேலிருக்கும் சாதிகள் – வன்முறையை அவர்கள் மீது ஏவும் வகையில் இவ்வமைப்பு கட்டப்பட்டுள்ளது. அம்பேத்கர் காலத்திலும் அதுதான் நடந்தது. தற்பொழுதும் அது தொடர்கிறது. சாதி அமைப்பை சீர்குலைக்காத வரை இது நிகழும். பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இடஒதுக்கீடு என்பதை தட்டையாக, "சாதிவெறியர்களுக்கு இடஒதுக்கீடா?' என்று மலினப்படுத்துவதும், பிற்படுத்தப்பட்ட பிரிவினரில் உள்ள அனைவரையும் சாதி வெறியர்களாக சித்தரிப்பதும் அறிவின்பாற்பட்டதல்ல.

"பிற்படுத்தப்பட்டோர், வசதி வாய்ப்புகளோடு உள்ளனரே?' தலித்துகளிலும் சிலர் வசதிகளோடு இருக்கின்றனர். அவர்களுக்கும் சேர்த்துதான் இடஒதுக்கீடு. இது, பொருளாதார ரீதியாக வழங்கப்படுவது அல்ல; சமூக மற்றும் கல்வி என்ற அடிப்படையில்தான் இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்பது அம்பேத்கருடைய வாதம். நீதித்துறை முன்னிறுத்தும் "கிரீமிலேயர்/ஏழைகள்' வாதத்தை நாமும் ஆதரிப்பவர்களாக மாறிவிடக் கூடாது. இந்த வாதம் முதலில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்குதான் பரிசோதனை அடிப்படையில் வைக்கப்பட்டது. அது தலித்துகளையும் பதம் பார்க்கவே செய்யும். எந்த ஒரு தத்துவத்தின் விளைபொருளையும் நுகரும் முதல் தலைமுறை, அந்த சமூகத்தின் மேல்தட்டினராகவே இருப்பதைத் தவிர்க்க முடியாது. இருப்பினும், இடஒதுக்கீட்டின் பயன் நாளடைவில் அடித்தட்டு வரை சென்று, பரவலாக்கப்பட வேண்டும் என்பதில் யாருக்கும் மாறுபட்ட கருத்து இருக்க முடியாது.

"இடஒதுக்கீடுக்கு தீண்டாமைதானே அளவுகோல்!' தலித்துகளுக்கு தீண்டாமை இருப்பதால்தான் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது என்று சொல்வது, இப்பிரச்சினையை மேலோட்டமாகப் புரிந்து கொள்வதாகும். ஜாதி – பெரும்பான்மை மக்களுக்கு கல்வியை மறுத்திருக்கிறது. அந்த வகையில் கல்வியும், அரசுப் பணிகளும் மறுக்கப்பட்ட பெரும்பான்மை மக்களுக்கு, பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும் என்று கோருவதுதான் அம்பேத்கருடைய செயல்திட்டம். பார்ப்பன ஆதிக்கத்தை, தலித்துகளின் 22.5 சதவிகித இடஒதுக்கீட்டின் மூலம் மட்டுமே தகர்த்துவிட முடியாது. பிற்படுத்தப்பட்ட மக்களின் 27 சதவிகித இடஒதுக்கீட்டையும் சேர்த்துதான், பார்ப்பன ஏகாதிபத்தியத்தைத் தகர்க்க முடியும். இடஒதுக்கீடு 50 சதவிகிதத்திற்கு மேல் இருக்கக் கூடாது என்பதில் நீதித்துறை எச்சரிக்கையாக இருப்பதும், ஆதிக்கத்தைத் தக்க வைப்பதற்கே! எனவே, 27 சதவிகிதத்திற்கு நாம் அளிக்கும் ஆதரவு, 22.5 சதவிகிதத்தைப் பாதுகாக்கவே உதவும்.

தலித் பிற்படுத்தப்பட்டோர் முரண்பாடு, உரிமைகளைப் பெற ஒன்றிணையும்போதுதான் தீர்க்கப்படும். சாதி அமைப்பால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட தலித்துகளின் தலைமையே இதை நேர் செய்யும். ஆம், சமூகத்தை மாற்றியமைக்க வேண்டிய (சாதி ஒழிப்புப் பணி) கடமை, வேறு எவரைக் காட்டிலும் தலித்துகளுக்கே கூடுதலாக இருக்கிறது.
Pin It