உங்க பூர்வீகம், குடும்பம் பற்றி சொல்லுங்கள்...

எனக்கு 71 வயசாகிறது. நான் 52 வருசமா நாதஸ்வரம் வாசிக்கிறேன். எனக்கு சொந்த ஊரு சிவகாசி பக்கத்துல இருக்குற கல்லமநாயக்கன்பட்டி. எங்கப்பா பேரு ஆண்டி, அம்மா பேரு வள்ளி. எங்கப்பா மாட்டு வியாபாரம் செய்வார். செருப்பும் தைப்பார். அம்மா காட்டுவேலை. என்கூட பிறந்தவங்க ஒன்பது பேரு. நான் நாதஸ்வரம் கத்துக்கிறதுக்கு எங்க அப்பா, அம்மா ரொம்ப உறுதுணையா இருந்தாங்க. எனக்கு எட்டுப் பிள்ளைங்க. இப்ப நான் மட்டுமில்லாம என் மகன், என் மகபுள்ள பேரன் ரெண்டு பேரும் நாதஸ்வரம் வாசிக்கிறாங்க. இன்னொரு மகபுள்ள பேரன் தவில் வாசிக்கிறாங்க. என் மூத்த மகன் ஜக்கையன் கிராமியப் பாடகர். இன்னைக்கும் தொடர்ந்து கேசட்டுல பாடிட்டிருக்கிறார். ஒட்டுமொத்தமா நாங்க கலைக்குடும்பமா மாறிகிட்டிருக்கோம்.

நீங்க நாதஸ்வரம் கற்றுக் கொண்டதற்கான காரணம் மற்றும் கலை மீதான தங்களின் ஆர்வம் பற்றி சொல்லுங்கள்.

நான் மூணாம் வகுப்பு வரைதான் படிச்சேன். அப்புறம் எங்க ஊரு நாயக்கரு வீட்டுலதான் மாடு மேய்ச்சுகிட்டு, சாணி அள்ளிட்டு இருந்தேன். அப்ப எனக்கு அரை ரூவா சம்பளம். எங்க ஊருல யாரும் வெள்ளையும், சொள்ளையுமா போகக் கூடாது. போனா சம்சாரிக சும்மாவிட மாட்டாங்க. எங்கப்பாவ சம்சாரிக ஆண்டிபகடைன்னுதான் கூப்பிடுவாங்க. எங்களுக்குன்னு எந்த மாரியாதையும் கிடையாது. நான் இளவட்டம் ஆகுற வரைக்கும் சட்டை இல்லாமத்தான் வேலைக்குப் போவேன். அப்படித்தான் போகணும். சுத்துபட்டி கிராமத்துல, எங்க மேளம் வாசிச்சாலும் ராத்திரி நேரத்த அங்கேயே செலவழிச்சிருவேன். இப்படி தொடர்ந்து பார்க்கும்போது, எல்லா கலைஞர்களும் பட்டுவேட்டி, பட்டுச் சட்டை, வாட்ச், மோதிரமுன்னு ரொம்ப நீட்டா இருந்தாங்க. அப்பதான் யோசிச்சேன், மனுசன் பொறந்தா மானத்தோட, சுயமரியாதையோட வாழனுமின்னு. சுயமரியாதை இல்லன்னா, மனுசனா வாழ்றதுல அர்த்தமே இல்ல. நான் மாடு மேய்ச்சு எனக்கு எந்த மரியாதையும் வரல. அதனால் மாடு மேய்க்கிற வேலையை விட்டுட்டு நாதஸ்வரம் வாசிக்க ஆரம்பிச்சேன். இந்த நாதஸ்வரக் கலை எனக்கு மதிப்பு, மரியாதையை தருமின்னு நம்பினேன். அது நடந்துச்சு. இப்ப நான் பட்டு வேட்டி, பட்டு சட்ட இல்லாம வெளியில போறதில்ல.

இந்த நாதஸ்வரக் கலையை யாருகிட்ட கத்துக்கிட்டீங்க?

எங்க அம்மா களம்பெடச்சு வச்ச சோளம், கம்பு, கேப்பைகளைக் கொண்டுபோய் கடையில வித்து, சாத்தூர் பக்கம் நடுவப்பட்டியில 12 ரூபாய்க்கு நாதஸ்வரம் வாங்கினேன். கரிவலம் வந்த நல்லூர் பக்கத்துல உள்ள இடையன்குளம் ராமையாண்டி, மிகப்பெரிய நாதஸ்வரக் கலைஞர். அவருதான் எனக்கு குரு. அவருகிட்டதான் நான் முறையோடு சங்கீதம் கத்துக்கிற ஆரம்பிச்சேன். பதினெட்டு வயசுல நான் நாதஸ்வரம் வாசிக்கும்போது, எந்த ராகம் வாசிச்சாலும் அத உடனே அச்சு பிரளாம வாசிப்பேன். அதனால் சீக்கிரமா இந்த கலையில முன்னேறுவதற்கு வாய்ப்பாக இருந்தது. அடுத்து ஒரு பதினஞ்சு வருஷமா நாதஸ்வர வித்வான் கே. வேலாயுதபுரம் சம்பாரி அவர்களோட வாசிச்சேன். சம்பாரியும், நானும் வாசிக்கும்போது, அது ரெட்டை நாயனம் மாதிரி இருக்காது. ஒரு நாயனம் வாசிக்கிற இசைதான் வெளிவரும். கொஞ்ச வயசுல மிகப்பெரிய நாதஸ்வர வித்வானோட வாசித்தது பெருமையான விசயம்.

எந்தெந்த நிகழ்வுகளில் நாதஸ்வரம் வாசிப்பீங்க?

கல்யாணம், இறப்பு, சடங்கு, திருவிழா போன்ற நிகழ்வு களில் வாசிப்பேன். திருவிழாவுக்குப் போனா, அங்க நாட்ட கீர்த்தனை வாசிக்கிறது; அதுக்கப்புறம் மற்ற பாடல்கள் வாசிக்கிறது. அதே மாதிரி சடங்கு நிகழ்வுல இந்தோலா ராகம், கல்யாணி ராகம், மோகன ராகம் வாசிக்கிறது. இறப்பு நிகழ்வுக்குப் போனா, முகாரி ராகம் அப்புறம் மற்ற பாடல்கள் இப்படி ஒவ்வொரு நிகழ்வுக்கும் தனித்தனி ராகங்கள், கீர்த்தனைகள் உண்டு. இப்ப இதையெல்லாம் தாண்டி மேடை நிகழ்ச்சியில வாசிக்கத் தொடங்கிட்டேன். தலித் கலைவிழா, அருந்ததியர் கலை விழான்னு மேடையேறிக்கிட்டிருக்கேன்.

வானொலி மற்றும் தொலைக்காட்சியில் வாசித்திருக்கிறீர்களா?

ஆமாம். திருநெல்வேலி, திருச்சி, மதுரை வானொலி நிலையத்துல தெம்மாங்கு, காவடி சிந்து, கும்மிபாட்டு, ஆரவள்ளி, சூரவள்ளி, வில்லுப்பாட்டு பாடல்களை நிறைய வாசித்திருக்கேன். திருநெல்வேலி வானொலி நிலையத்துல 25 முறை வாசித்திருக்கிறேன். திருச்சி வானொலி நிலையத்துல ஒரு தடவை. மதுரை வானொலி நிலையத்துல மூணு தடவை. சன் டி.வியில ஒரு தடவை வாசித்திருக்கேன். அது மட்டுமில்லாமல் பதினைந்து வருஷத்துக்கு முன்னாடி கரிசல் மய்யம் வெளியிட்ட "அருந்ததியர் விடுதலை முழக்கம்' என்ற கேசட்ல வாசித்திருக்கேன்.

உங்க நாதஸ்வர திறமைக்கு கிடைத்த விருதுகள் என்ன?

பெரிய, பெரிய திருவிழாக்களில் வாசிக்கும்போது நிறைய வெள்ளி மடல்கள், பணமாலை இப்படின்னு பெருகிட்டே போச்சு. இப்பையும் அது உண்டு. பாளையங் கோட்டை நாட்டார் வழக்காற்றியல் ஆய்வு மய்யம் சார்பாக சிறந்த நாதஸ்வர கலைஞர் விருது வாங்கியிருக்கேன். திருவண்ணாமலை அருந்ததியர் கலை விழாவில் நாதஸ்வர வித்வான் சம்பாரி விருது வாங்கியிருக்கேன்.

நீங்க நாதஸ்வரம் வாசிக்கிற இடங்களில் உங்கள எப்படி நடத்துவாங்க?

முப்பது வருஷத்துக்கு முன்னால மற்ற ஊருல மேளத்துக்குப் போனா எங்கள நடத்துற விதம் வேறு மாதிரிதான். நிகழ்ச்சி முடிஞ்சி போன பிறகு எங்களுக்கு சாப்பாடு எல்லாம் வீட்டு வீட்டுக்குதான் எடுத்துக் கொடுப்பாங்க. ஆனா, சாப்பாடு வெளியில, தெருவுல வச்சிதான் சாப்புடனும். தாழ்வாரத்துல உட்கார்ந்து சாப்பிட்டுக்கிறோமுன்னு கேட்டா, நீங்க வாசிக்கிற வாசிப்புக்கு தெருவே போதுமின்னு கெட்ட வார்த்தையில பேசுவாங்க. காத்தடிச்சு, மண்ணு, தூசி விழுந்தாலும் சமாளிச்சுகிட்டே போயிடுவோம். மூணுநாள், நாலுநாள் நிகழ்ச்சி நடக்கும்போது நைட்டுல படுக்கும் இடம் நெல்லு பெடைக்கிற களம்தான். வேற எங்கயும் ஒதுங்க முடியாது. எதிர்த்து யாரையும் கேட்க முடியாது.

இப்ப மேளத்துக்குப் போனா, சாப்பாடு எல்லாம் முந்தி மாதிரி இல்லாம சத்துணவுக் கூட வரண்டாவுல வச்சுதான். அன்னைக்கு தெருவுல, இன்னைக்கு சத்துணவுக் கூடத்துல. ஒரே மாதிரி தீண்டாமை. தீண்டாமை மாறல, அதனுடைய வடிவம்தான் மாறிகிட்டே இருக்கு. எழவு வீடுகள்ள வாசிச்சா எப்படியும் தண்ணிய போட்டுட்டு, ஆத்தா, அம்மான்னு கெட்ட வார்த்தையில திட்டுவாங்க. தெம்மாங்கு வாசி, தெம்மாங்க நிறுத்தி வாசின்னு மேல வந்து விழுவாங்க. அந்த இடத்துல விலகிப் போக முடியாம சமாளிக்க வேண்டிய சூழ்நிலை இருந்தது. ஆனா, இப்ப எழவு வீடுகளுக்கு வாசிக்கப் போறதில்ல. எழவு வீடுகளுக்கு வாசிக்கப் போயி என் மாரியாதையை நான் இழக்க விரும்பவில்லை.

இத்தனை வருஷமாக வாசிக்கின்ற உங்களுக்கு அரசாங்கம் உரிய அங்கீகாரம் கொடுத்திருக்கா?

நான் உசந்த சாதியா இருந்திருந்தா கொடுத்திருக்கும். நான்தான் தாழ்ந்த சாதியாச்சே! என்னை எப்படி கண்டுக்கிரும் இந்த கவர்மெண்ட். வளையபட்டி சுப்பிரமணியன் தவில் வாசிக்கிறாரு, கேரளா ஜெய்சங்கர் நாதஸ்வரம் வாசிக்கிறாரு, குன்னக்குடி வைத்தியநாதன் வயலின் வாசிக்கிறாரு. இவங்கெல்லாம் மேல் சாதிக்காரங்க. இவங்க வாசிக்கிறாங்கன்னா உடனே மேடை போட்டு, பட்டுப் போர்வை, கம்பளம் விரிச்சு என்னென்ன மரியாதை செய்யணுமோ, அந்த மரியாதைய கொடுக்குறாங்க. அதே மாதிரி நாங்க வாசிக்கப் போனா கிடைக்காது. தெருவுல நின்னுதான் வாசிக்கனுமுன்னு சொல்றாங்க. ஏன்னா நாங்க தாழ்த்தப்பட்டவங்க. இதக் கேட்டா, வளையபட்டி சுப்பிரமணியம் தவில் வாசிக்கிறாருண்ணா அது ராஜ மேளமாம்; குன்னக்குடி வைத்தியநாதன் வாசிக்கிறது மேல்நாட்டு இசைக்கருவியாம். நாங்க வாசிச்சா மட்டும் அதுக்கு பேரு நய்யாண்டி.

திறமை இருந்தும் தாழ்த்தப்பட்ட கலைஞர்களுக்கு அங்கீகாரம் இல்லை என்று சொல்கிறீர்களா?

அங்கீகாரம் திறமையை வச்சு மதிப்பிடுறது கிடையாது. சாதிய வச்சுதான்! கலை களுக்கும் சாதி உண்டு. கலைஞர்களுக்கும் தீண்டாமை உண்டு. அத நான் அய்ம்பது வருஷமா அனுபவிச்சிட்டு வர்றேன். ஏன்னா இந்த நாடு அப்படி. திறமைக்கு மட்டும் அங்கீகாரம் கிடைச்சிருந்தா, எத்தனையோ தாழ்த்தப்பட்ட இசை, ஆட்டக்கலை வித்வான்கள் கலைமாமணியா ஜொலிச்சிருப்பாங்க. ஏன் ஆகல? அதுக்கு காரணம் இந்த உசந்த சாதி அரசாங்கம். யாரை மேடையில ஏத்தனும், யாரை டி.வி.யில காட்டனும், யாரை ரேடியோவுல பாட வைக்கனுமின்னு முடிவு செய்யுறது, மேல் சாதி கலைஞர்கள் தான். அத மாத்த முடியாது. ஏன்னா அதிகாரம் அவங்ககிட்ட இருக்கு.

என்னதான் நாம் போட்டிப் போட்டு வாசித்தாலும் தெருவுதான் நம்ம மேடை. சாதி நம்மள விடாது. தமிழ் நாட்டுல தமிழ் வாத்தியங்களுக்கு மதிப்பு இல்லை. இங்கிலீஷ் வாத்தியங்களுக்குதான் மரியாதை உண்டு. இப்ப எனக்கு 71 வயசு. 18 வயசுல எப்படியெல்லாம் ஒதுக்கப்பட்டேனோ, அது இப்பவும் நடக்கு. எந்த மாற்றமும் இல்ல. திருச்சி வானொலி நிலையத்துல ஒரு முறை வாசிக்க அழைப்பு வந்தது. நான் என் நய்யாண்டி மேள செட்டோட போயிருந்தேன். அப்ப அதே ரேடியோ ஸ்டேசனுக்கு தேவர் சாதிய சேர்ந்த ஒரு கலைஞர் வந்திருந்தார். அவரு எப்பவும் என்னை மட்டம் தட்டிதான் பழக்கம். அதே மாதிரி அவருடைய அதிகாரத்த பயன்படுத்தி, அன்னைக்கு நிகழ்ச்சியே இல்லாம பண்ணிட்டாரு. என்னைய பொறுத்தவரைக் கும் சாதிதான் எல்லாத்துக்கும் காரணம். சாதிதான் எல்லாத்தையும் எடைபோடுது. இப்படி இருந்தா, நிச்சயம் கலைகள் நம்மை விட்டு தூரமா போறதுக்கு வாய்ப்பு இருக்கு. சமத்துவம் என்பது கலைகளிலும் இருக்கணும்.
நேர்காணல்: மா. பொன்னுச்சாமி
நேர்காணல்: மா. பொன்னுச்சாமி
Pin It