"மோதல்' என்கிற பெயரில் தமிழக அரசும் அதன் காவல் துறையும் நடத்திய படுகொலைகளை – அம்பலப்படுத்தியும்/ கண்டித்தும் பூங்குழலி எழுதிய, "நின்று கொல்லும் நீதிமன்றம்; அன்றே கொல்லும் அரசு' என்னும் கட்டுரை குறித்து எனது கருத்துகள் சிலவற்றை, வரலாறு தவறாகப் பதிவாகிவிடக் கூடாது என்கிற அக்கறையில் முன்வைக்க வேண்டியிருக்கிறது.

1. “எண்பதுகளின் தொடக்கத்தில் சென்னையில் ஓர் அரசியல் கூட்டத்தில் பங்கெடுக்க வந்த பாலன் எனும் இளைஞர், தமிழகக் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு, கடுமையான துன்புறுத்தலுக்குப் பிறகு சுட்டுக் கொல்லப்பட்டார்'' என்று கட்டுரை சொல்வது, உண்மையல்ல. தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகில் உள்ள சீரியம்பட்டி என்னும் கிராமத்தில் நடந்த புரட்சிகர பொதுக்கூட்டம் ஒன்றில் உரையாற்றிக் கொண்டிருந்த தோழர் பாலன், தேவாரம் தலைமையிலான துப்பாக்கி ஏந்திய காவல் படையால் சுற்றி வளைக்கப்படுகிறார். தோழர் பாலனிடமும் துப்பாக்கி இருந்ததால், அவர் தப்பித்திருக்க முடியும். ஆனால், பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்பட்டுவிடக் கூடாது என்னும் உயர்ந்த நோக்கத்தில், தப்பிக்கும் எண்ணத்தை அவர் கைவிடுகிறார்.

கைது செய்யப்பட்டு, காவல் துறை வாகனத்தில் சென்னைக்குக் கொண்டு வரும் வழியில், வாகனத்துக்குள்ளேயே பல்வேறு கொடுமையான சித்திரவதைகளுக்கு அவர் ஆட்படுகிறார். ஏறத்தாழ பாதி வழியிலேயே, தோழர் பாலன் அடித்தே கொல்லப்படுகிறார். இத்தகைய சட்டவிரோதச் செயலை திசை திருப்புவதற்காக, சென்னை அரசு மருத்துவமனையில் தோழர் பாலன் (பிணமாக) சேர்க்கப்படுகிறார். பிறகு, சிகிச்சைப் பலனின்றி இறந்துவிட்டதாக அறிவித்து, அவரது பெற்றோர்களுக்குக்கூட தெரியாமல் உடலை எரித்துவிட்டு, சாம்பலைக்கூட கொடுக்க மறுத்துவிடுகிறது காவல் துறை.

இதுதான், தமிழக நக்சல்பாரி இயக்க வரலாற்றில் மிகச்சிறந்த பங்களிப்பை ஆற்றிய தோழர் பாலனை தமிழகம் இழந்த வரலாறு.

2. “பழ. நெடுமாறன் தலைமையிலான உண்மை அறியும் குழுவின் அறிக்கைக்குப் பிறகு, அரசு தலையிட்டு, அக்கொலைகளுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தது'' என்னும் கட்டுரைக் குறிப்பு தவறானது. உண்மையில், உண்மை அறியும் குழுவின் அறிக்கைக்குப் பிறகும், தமிழகக் காவல் துறையின் அத்துமீறல்களும் படுகொலைகளும் சற்றும் குறையவில்லை. இதனைப் புரிந்து கொள்வதற்கு, 1980 செப்டம்பர் 12இல் நடந்த தோழர் பாலனின் கொலையைத் தொடர்ந்து, காவல் துறையினராலும் காவல் துறையின் ஆதரவு பெற்ற மக்கள் எதிரிகளாலும் உயிரிழந்தவர்களை அறிய வேண்டும்.

1980, செப்டம்பர் 18 இல் அதாவது, தோழர் பாலன் கொல்லப்பட்ட ஆறாவது நாளில் கொல்லப்பட்ட தோழர் குருவிக்கரை கனகராசு தொடங்கி, 1983 இல் கொல்லப்பட்ட தோழர்கள் சந்திரசேகர், சந்திரகுமார் ஆகியோர் முடிய ஏறத்தாழ 16க்கும் மேற்பட்ட நக்சல்பாரி இயக்கத்தினர், மூன்றே ஆண்டுகளில் கொல்லப்பட்டனர். அவர்களுள், தோழர் கண்ணாமணி, தருமபுரி மற்றும் கிருட்டிணகிரி மாவட்டங்களின் பெருவாரியான மக்களால் நன்கு அறியப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, பழ. நெடுமாறன் தலைமையிலான உண்மை அறியும் குழுவின் அறிக்கைக்குப் பின்னரும், தமிழக காவல் துறையின் வன்முறை வெறியாட்டம் நிறுத்தப்படவில்லை என்பதே வரலாறு.

3. “வீரப்பன் சுட்டுக் கொல்லப்பட்ட மறுநாளே...'' என்று குறிப்பிடுவதும் சரியல்ல.

தமிழ் நாடு, கர்நாடகா, ஆந்திரா, புதுச்சேரி ஆகிய நான்கு மாநிலங்களைச் சேர்ந்த மனித உரிமை ஆர்வலர்களால் கட்டமைக்கப்பட்ட உண்மை அறியும் குழு, வீரப்பன் உள்பட அவரது கூட்டாளிகள் மூவரும், அதிரடிப்படையின் ஆலோசனைப்படி, துரோகிகளால், உணவில் விஷம் வைத்துக் கொல்லப்பட்டதையும், வீரப்பன் குழுவினருடனான அதிரடிப்படையின் மோதல் ஒரு பொய்ப் பிரச்சாரம் என்பதையும், பல்வேறு உறுதியான ஆதாரங்களுடன் கண்டுபிடித்தது. அந்த அறிக்கையின் சுருக்கம், "தலித் முரசு'விலும் வெளிவந்தது.

இப்போது, கட்டுரையில், அதற்கு மாறான உண்மைக்குப் புறம்பான கருத்து இடம்பெற்றிருப்பது ஏற்கத்தக்கதல்ல. மேலும், வீரப்பன் மரணம் குறித்த உண்மை அறியும் குழுவில் பங்கேற்றவன் என்ற முறையில், அரசின் திட்டமிட்ட நாடகத்தையும், அதிரடிப்படையின் மனித உரிமை மீறலையும் தெளிவுபடுத்துவது எனது கடமையாகும். எனவே, வீரப்பன் சுட்டுக் கொல்லப்பட்டவர் என்பது உண்மையல்ல; கொன்று சுடப்பட்டவர் என்பதே உண்மையாகும்.

ருத்ரன், காவேரிப்பட்டினம்
Pin It