14.10.2016 அன்று கோயமுத்தூர் தொண்டாமுத்தூரில் கனரா வங்கி ஊழியர்கள் வங்கியில் தங்களுக்குள் முதல்வரின் உடல்நிலை குறித்து பேசி வந்ததாகவும், அதனை வாடிக்கையாளரான அ.தி.மு.க. உறுப்பினர் கேட்டு போலிசில் புகார் கொடுத்ததாகவும், அதன் அடிப்படையில் வதந்தி பரப்புதல், மிரட்டுதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு தாக்கல் செய்து, காவல்துறை சிறைபடுத்தியுள்ளதை அறிய முடிகின்றது. காவல்துறையின் இந்த நடவடிக்கை அடிப்படை சனநாயக உரிமைகளை நசுக்கும் செயலாக உள்ளது.

jayalalitha after electionஇரண்டு நண்பர்கள் தமிழக முதல்வர் குறித்து உரையாடுவதே குற்றச்செயலாக ஆகிவிட்டது. தமிழக முதல்வர் ஒரு மாநிலத்தின் முதல் குடிமகனானவர், தலையானவர். அவர் குறிப்பிட்ட ஆளும் கட்சிக்கு மட்டும் சொந்தமானவரல்ல. எல்லோருக்கும் பொதுவானவர். அவர் நோய் வாய்ப்பட்டுள்ளபோது, அவரின் உடல் நிலை குறித்த ஆதங்கங்களும், அக்கறையும், கரிசனமும் மக்கள் எல்லோருக்கும் இருக்க வேண்டும்.

அரசு தரப்பிலிருந்தும், மருத்துவமனையிலிருந்தும் வெளிப்படையான செய்திகள் வராத போது, மக்கள் முதல்வரின் உடல் நலம் பற்றி , தங்களின் சக நண்பர்களிடம், உறவுகளிடம் பேசிக்கொள்ளும் பேச்சுக்களை குற்றச் செயல் போல பார்ப்பது முற்றிலும் சனநாயகத் தன்மையற்றது. இது நமது அரசியலைப்புச் சட்டம் வழங்கிய அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது. மேலும் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 505 ல் கூட நல்ல எண்ணத்தின் அடிப்படையில் பேசப்படும் கருத்தை அவதூறாகக் கருதக்கூடாது என விதி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்தக் கைது தமிழகத்தில் முதல்வரின் உடல் நலம் குறித்து கருத்து அளவில் கூட சாமானியன் யோசிப்பது ஆபத்தானது என்ற அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.

இது, கடந்த 2012ஆம் ஆண்டு மகாராஷ்டிர மாநிலத்தில் பால் தாக்கரே இறந்தபோது நடைபெற்ற முழு அடைப்பை பேஸ்புக்கில் விமர்சனம் செய்த சகின் தாதா என்ற பெண்ணும், அந்தப் பதிவை like செய்த ரேனு சீனிவாசன் என்ற பெண்ணும் கைது செய்யப்பட்டதற்கு இணையானது. ( உச்சநீதிமன்றம் இந்த வழக்கில்தான் 66 (a) of the Information Technology Act 2000 சட்டப்பிரிவை சனநாயக விரோதமானது என நீக்கியது). சனநாயக சமூகம் இந்த அடக்குமுறையை தவறு என சுட்டிக்காட்ட தயங்கக் கூடாது.

உச்ச நீதிமன்றத்தில் கடந்த 2014 ஆம் ஆண்டு 'தேர்தல் ஆணையம் வெறுப்புப் பேச்சை தடை செய்ய வேண்டும்' என என்.எல்.சர்மா என்ற வழக்குரைஞர் தாக்கல் செய்த வழக்கில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி லோத்த அந்த பொது நல மனுவை தள்ளுபடி செய்து விட்டு , நமது வளர்ச்சியடைந்த சனநாயக சமூகம். 128 கோடி மக்கள் தொகை கொண்ட சமூகத்தில் ஒவ்வொருவருக்கும் ஒரு கருத்தும் பார்வையும் உண்டு. அது அவர்கள் தனி மனித சுதந்தரம். ஒருவரின் கருத்துக்காக அடிப்படை உரிமையை பறிக்க எவருக்கும் அதிகாரமில்லை என்றார். ("We cannot curtail fundamental rights of people. It is a precious rights guaranteed by Constitution," a bench headed by Justice RM Lodha said, adding "we are a mature democracy and it is for the public to decide. We are 1280 million people and there would be 1280 million views. One is free not accept the view of others". Also the court said that it is a matter of perception, and a statement objectionable to a person might not be normal to other person)

உச்சநீதிமன்றத்தின் கருத்தும், அடிப்படை உரிமைக் கோட்பாடுகளும் தமிழக காவல்துறைக்கு எட்டவில்லை என்பது நமது துயரம். காவல்துறை முதல்வரின் உடல்நிலை குறித்து கருத்து சொன்னதால் கைது செய்யப்பட்டவர்கள் மீதான வழக்குகளை இரத்து செய்ய வேண்டும். தனி மனித சுதந்திரத்தை அச்சுறுத்தல்கள், கைது போன்ற வடிவங்களால் பறிக்கக் கூடாது.

- ச.பாலமுருகன், பி.யு.சி.எல்

Pin It