கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான மாணவர்கள், இளைஞர்களின் எழுச்சி ஒட்டுமொத்த தமிழகத்தையே புரட்டிப் போட்டுள்ளது. பெண்கள், குழந்தைகளுடன் குடும்பம், குடும்பமாக போராட்டத்தில் கலந்து கொண்டார்கள். ஆளும் வர்க்கத்திற்கு எதிராக அழுத்தி வைக்கப்பட்டிருந்த உணர்வுகளுக்கு வடிகாலாக இந்தப் போராட்டத்தை பயன்படுத்திக் கொண்டார்கள். அதனால்தான், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான முழக்கங்களோடு நின்றுவிடாமல், மோடி, பாஜக, எச்.ராஜா, பீட்டா, சு.சாமி, சசிகலா, ஓபிஎஸ் என எல்லோரையும் வறுத்தெடுத்தார்கள்.

சட்டப்பேரவையில் சட்டம் நிறைவேறினால், 'வெற்றி' என்று கலைந்துவிடும் மனநிலையில்தான் மாணவர்கள், இளைஞர்கள் இருந்தனர். ஆனால், 'போராட்டத்தை மாணவர்களின் வெற்றியாக முடித்துவிடக் கூடாது, அடுத்த முறை போராட்டத்திற்கு வர அவர்கள் அஞ்ச வேண்டும்' என்ற நோக்கம் இருந்ததாலேயே, மாநில அரசு போராடியவர்களின்மீது வரம்பு மீறிய வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டது. காக்கி உடுப்புக்குள் இருப்பது மனிதர்கள் அல்ல, பயிற்றுவிக்கப்பட்ட ரவுடிகள் என்பது மீண்டும் ஒரு முறை நிரூபணம் ஆனது. மனித சமூகமே வெட்கித் தலைகுனியும்படியான ஒரு தாக்குதலை, தங்களைத் தேர்ந்தெடுத்த மக்கள் மீதே தமிழக ஆட்சியாளர்கள் ஏவினார்கள்.

இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுக்கு எந்த அரசியல் கட்சியின் பின்புலமும் இல்லாமல் இருக்கலாம். ஆனால், இந்தப் போராட்டத்தில் அரசியல் இல்லாமல் இல்லை. வன்முறைத் தாக்குதலால் ஒரே நாளில் இவ்வளவு பெரிய மக்கள் திரள் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வரத் தெரிந்த தமிழக அரசு, ஏன் இத்தனை நாட்கள் இந்தப் போராட்டத்தை அனுமதித்தது என்பதில்தான் அரசியல் இருக்கிறது. காவல் துறையினரும், போராட்டக்காரர்களும் கட்டிப் பிடிக்காத குறையாக உறவாடியதன் பின்னே ஆளும் கட்சியின் அரசியல் இருக்கிறது. முக்குலத்தோரின் சாதிப் பெருமிதமான ஜல்லிக்கட்டு விளையாட்டை அனுமதிப்பது என்பது வாக்கு வங்கி அரசியலுக்கு மிகவும் அவசியமானது. முக்குலத்தோர் கட்சியாக தென் தமிழகத்தில் அறியப்படும் அதிமுக ஆட்சியில் இருக்கும்போது, அதிலும் குறிப்பாக அதே சமூகத்தில் இருந்து ஒருவர் முதல்வராகவும், இன்னொருவர் பொதுச் செயலாளராகவும் இருக்கும்போது, இந்தப் போராட்டம் பிரமாண்டமானதாக மாறியதில் எந்தவொரு ஆச்சரியமும் இல்லை. ஆதிக்க சாதிக்குத் தேவையான ஒன்றை நிறைவேற்றிக் கொடுக்க, மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில், இந்தப் போராட்டம் ஊடகங்கள் மூலமும், காவல் துறை மூலமும் ஆளும் கட்சியால் வளர்க்கப்பட்டது. நோக்கம் நிறைவேறியதும், காவல் துறையும், ஊடகங்களும் தங்களது இயல்பு நிலைக்குத் திரும்பின. போராடியவர்கள் தாக்கப்பட்டார்கள்.

நாட்டு மாடுகளைக் காக்கவே அவதரித்தவர்கள் போல் பேசியவர்கள், நாட்டு மக்கள் அடிபடும்போது நவ துவாரங்களையும் மூடிக் கொண்டார்கள். வீரம், வீரம் என்று கொக்கரித்தவர்கள் வீரத்தை அக்குளில் வைத்துக் கொண்டு, ஜல்லிக்கட்டு நடத்துவதில் மும்முரமாக இருக்கிறார்கள். இவர்களால் உசுப்பேற்றப்பட்டு வீதிக்கு வந்தவர்கள், இவர்களாலேயே காட்டிக் கொடுக்கப்பட்டு அடிபட்டிருக்கிறார்கள்.

இது மெரினா புரட்சியா?

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டத்தை ‘மெரினா புரட்சி’ என்றும், ‘தமிழர் வசந்தம்’ என்றும் தோழர்கள் சிலர் கூறுகிறார்கள். எனக்கு அதில் சிறிதும் உடன்பாடு இல்லை. புரட்சி என்றால், அதற்கு ஓர் உன்னதமான நோக்கம் இருக்க வேண்டும், வசந்தம் என்றால் அந்த மக்கள் சமூகத்திற்குப் பெரும் பயன் விளைந்திருக்க வேண்டும். இந்தப் போராட்டத்தில் அப்படி ஒரு நோக்கமும் இல்லை, பெரும் பயனும் இல்லை. மாறாக, எண்ணற்ற உயிரிழப்புகளையே இந்தப் போராட்டம் வரும் காலத்தில் தமிழகத்திற்குக் கொண்டு வரவிருக்கிறது. அதற்கு முன்னறிவிப்பாக, இந்த ஆண்டே இதுவரை நான்கு தமிழர்களை இந்தப் ‘பண்பாட்டு’ விளையாட்டு காவு வாங்கியுள்ளது.

jallikattu bull attack police

(மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்படும் ஆயுதப்படை காவலர் ஜெய்சங்கர்)

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகே ராப்பூசலில் ஜனவரி 22, 2017 அன்று நடைபெற்ற ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் லட்சுமணப்பட்டியைச் சேர்ந்த மோகன், ஒடுக்கூரைச் சேர்ந்த ராஜா ஆகியோர் இறந்தனர். காயமடைந்தவர்களில் ஜல்லிக்கட்டை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த அன்னவாசல் அருகேயுள்ள களத்துப்பட்டியைச் சேர்ந்த பன்னீர்செல்வம் மகன் கருப்பையாவும்(30) ஒருவர். மாடு முட்டியதில் கழுத்துப் பகுதியில் பலத்த காயமடைந்த நிலையில் இலுப்பூர் அரசு மருத்துவமனையிலும், பின்னர், திருச்சி அரசு மருத்துவமனையிலும் கருப்பையா அனுமதிக்கப்பட்டார். எனினும், சிகிச்சை பலனின்றி ஜனவரி 23, 2017 அன்று அவர் உயிரிழந்தார். (தமிழ் இந்து நாளிதழ், ஜனவரி 24, 2017).

விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே உள்ள கான்சாபுரத்தில் நேற்று நடைபெற்ற ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் காளை மாடு முட்டியதில் ஆயுதப்படை காவலர் ஒருவர் பலியானார். மேலும் 4 பேர் காயமடைந்தனர். (தமிழ் இந்து நாளிதழ், ஜனவரி 24, 2017)

இதில் ஒடுக்கூரைச் சேர்ந்த ராஜாவிற்குத் திருமணமாகி, இரண்டு மகன்கள் உள்ளனர். கான்சாபுரத்தில் உயிரிழந்த ஆயுதப்படைக் காவலர் ஜெய்சங்கருக்கு வயது 26 தான். இவருக்கும் திருமணமாகி, இரண்டு குழந்தைகள் உள்ளனர். மற்ற இருவரின் குடும்ப விவரங்கள் தெரியவில்லை.

முக்கிய இடங்களில் ஜல்லிக்கட்டு இனிமேல்தான் நடைபெறவிருக்கிறது என்னும் நிலையில், உயிரிழந்தோர் மற்றும் காயம் அடைந்தோரின் எண்ணிக்கை இன்னும் அதிகமாக வாய்ப்பிருக்கிறது.

2008 மற்றும் 2014 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலங்களில் நடந்த ஜல்லிக்கட்டுகளில் மொத்தம் 43 பேர் உயிர் இழந்ததாகவும், 5263 பேர் காயமடைந்ததாகவும் விலங்குகள் நல வாரியத்தின் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. காயமடைந்தோரில் 2959 பேர் படுகாயமடைந்தவர்கள் என்றும் தெரிவிக்கிறது. (The Hindu, Jan 14, 2017)

தென்மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மட்டுமே நடந்து கொண்டிருந்த இந்த விளையாட்டு, தற்போது ஒட்டுமொத்த தமிழர்களின் ‘பண்பாட்டு அடையாளமாக’ மாற்றப்பட்ட சூழலில், இனி அனைத்து மாவட்டங்களிலும் இந்த விளையாட்டை நடத்த முயல்வார்கள். அப்போது உயிரிழப்போர், படுகாயம் அடைவோரின் எண்ணிக்கை பல மடங்கு அதிகமாகும்.

யோசித்துப் பாருங்கள்... எத்தனை பெண்கள், கணவனை இழந்து தவிக்கப் போகிறார்கள்? குழந்தைகளின் பசியாற்ற எத்தனை பெண்கள் கூலி வேலைக்குப் போக வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படப் போகிறார்கள்? எத்தனை குழந்தைகள் தகப்பனை இழந்து, உயர்கல்வி பயிலும் வாய்ப்பை நழுவவிடப் போகிறார்கள்? படுகாயமடைந்த ஆண்களின் மருத்துவச் செலவுக்காக எத்தனை குடும்பங்களின் வாழ்வாதாரங்கள் அழியப் போகின்றன? நிரந்தரமாகவே வேலைக்குச் செல்ல முடியாத அளவிற்குப் படுகாயமடைந்த ஆண்கள் எத்தனை பேர் நடைப்பிணமாகத் திரியப் போகிறார்கள்? இதுதான் இந்த ‘வீர’ விளையாட்டு, தமிழ்நாட்டில் ஏற்படுத்தப் போகும் 'வசந்தம்'. இதைத்தான் 'புரட்சி' என அழைக்கப் போகிறோமா?

ஜல்லிக்கட்டு காயங்களின் தன்மை

‘ஜல்லிக்கட்டில் மாடுபிடி வீரர்களும், பார்வையாளர்களும் காயம் அடைந்தார்கள்’ என்ற செய்தி, வாசிப்பதற்கு சிறியதாக இருக்கலாம். ஆனால், அதன் வலி பெரிது. அதை அனுபவித்தவர்கள் மட்டுமே உணர முடியும். சிறுவயதில் தாத்தா பால் கறக்கும்போது, உடன் நின்றிருக்கிறேன். பால் கறப்பதற்கு முன்பு, மாடு கொஞ்சம் நிலையில்லாமல் முன்னும் பின்னுமாக நகரும். ஒரு நிலைக்கு வந்த பின்பே, பால் சட்டியுடன் உட்காருவார்கள். அப்படி நிலையில்லாமல் நகர்ந்தபோது, ஒரு நாள் என் பாதத்தில் மிதித்துவிட்டது. உயிர் போகுமளவிற்கு வலி. பாதம் வீங்கி, இரண்டு நாட்கள் நடக்க முடியவில்லை. இத்தனைக்கும் அது எடை மிகுந்த ஜெர்ஸி பசு இல்லை… சாதாரண நாட்டுப் பசு. அதற்கே அந்த வலி.

jallikattu bull on man

பசுவிற்கே அந்த வலி என்றால், காளை மாட்டிற்கு…? அதுவும் ஜல்லிக்கட்டு காளை மாடு நல்ல புஷ்டியாக இருக்கும். அதன் எடை குறைந்தது 750 கிலோவிலிருந்து 800 கிலோ வரை இருக்கும். அது மெதுவாக நடந்து வராது. வெறியேற்றப்பட்டு, ஆக்ரோஷத்துடன் ஓடி வரும். 800 கிலோ எடையில், வேகமாக மிதித்தால் என்னாவது? நினைத்தாலே குலை நடுங்குகிறது. Youtube-ல் ஜல்லிக்கட்டு காணொளிகளைப் பாருங்கள்… எவ்வளவு பேர் மிதிபடுகிறார்கள், எவ்வளவு பேர் தூக்கி வீசப்படுகிறார்கள்? கூரிய கொம்புகளுடன், 800 கிலோ எடையுடன் ஓடிவரும் மாட்டின் முன்பு, நீங்களோ, உங்கள் பிள்ளைகளோ நிற்பதை ஒரு கணம் யோசித்துப் பாருங்கள்…

காயங்களின் வகைகள்

மாடுபிடி வீரர்களுக்கு உடலின் அனைத்துப் பகுதிகளிலும் காயம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

தலை: காளையைப் பிடிக்கும் முயற்சியில் கீழே விழுவதால், அல்லது தூக்கி எறியப்படுவதால் தலையில் அடிபடுதல்; முகத்தில் வெட்டுக் காயங்கள் ஏற்படுதல்.

கழுத்து: காளையின் கொம்பு குத்துவதன் விளைவாக மூச்சுக்குழாயில் துளை ஏற்படுதல். (இந்த ஆண்டு இரண்டு பேர் இந்தக் காயத்தினால் உயிர் இழந்திருக்கிறார்கள்)

தண்டுவடம்: கீழே விழுவதாலோ, காளையால் குத்தப்படுவதாலோ தண்டுவடம் சேதமடைதல்; முதுகின் கீழ்ப்புறத் தசை இறுக்கமுறுதல்.

நெஞ்சு: நெஞ்சில் அடிபடுவதால் நுரையீரல் சேதமடைதல்; விலாவெலும்பு முறிதல்; நுரையீரல் திரைப்பகுதியில் இரத்தம் கட்டுதல்.

அடிவயிறு: காளை முட்டுவதால் மாடுபிடி வீரரின் அடிவயிற்றில் பலத்த காயம் ஏற்படுவது கூடுதலாக நிகழ்கிறது (75 விழுக்காடு); குடல் துளைபட்டுச் சரிதல், கல்லீரல், மண்ணீரல், வயிற்றுப்பகுதி சேதமுறுதல்.

பிறப்புறுப்புப் பகுதி: ஆண் பிறப்புறுப்புப் பகுதியில் மாடுபிடி வீரர்களுக்கு சேதம் ஏற்படுவது வழக்கமாக நிகழ்கிறது. இதனால் சிலர் ஆண்மை இழப்பதும் உண்டு. மேலும் இடுப்பெலும்பு முறிவும் ஏற்படலாம்.

கால்கள்: தொடை எலும்பு மற்றும் கால் எலும்பு முறிவோ, கீறலோ ஏற்படக்கூடும்.

சாதாரணமாக, பிறப்புறுப்பில் சின்ன அடி பட்டாலே மரண வலி உண்டாகும். 800 கிலோ மாடு மிதித்தால் என்னவாகும்? நாட்டு மாடுகளைக் காப்பதற்காக, நமது சந்ததியையே உருவாக்க முடியாமல் போகும் நிலை வர வேண்டுமா?

கொலைக்கருவியாக உருவேற்றப்படும் மாடுகள்

ஜல்லிக்கட்டுக்குத் தடை விதிக்கப்பட்ட காலங்களில், ‘பிள்ளை மாதிரி மாடுகளை வளர்ப்பாங்க’ என்று ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் சொல்வதை அதிகம் கேட்க முடிந்தது. அவர்கள் சொல்லாத விஷயம், ‘அந்தப் பிள்ளைகள்’ அடுத்தவரைக் கொல்வதற்காகவே வளர்க்கப்படுகின்றன என்பது.

jallikattu bull attack 634

மாடுகள் தயார் செய்யப்படும்விதம் குறித்து அய்யனார்குளம் போஸ் என்பவர், “கன்று பிறக்கும்போதே கூறு தெரிந்துவிடும். பெரும்பாலும் அவங்கவங்க வளர்க்கிற மாடு ஈன்ற காளைகள்தான் ஜல்லிக்கட்டு காளையாக வளர்க்கணும். அப்பத்தான் நல்லா முட்டுறமாதிரி பழக்க முடியும். தெற்கத்தி காளைகளை விட செம்மண் பூமியான மதுரை மண்ணில் பிறந்த காளைதான் நல்லா பாயும். காளை சின்ன வயசா இருக்கும்போதே முட்டுறதுக்குப் பழக்கணும். சாக்குப் பையில வைக்கோலை திணிச்சி, ஒரு ஆளைப் போல பொம்மை தயாரிச்சி, அதுமேல சிவப்பு சாயத்தை ஊத்திவிட்டுக் காளை முன்னாடி வைக்கணும். சீறிக்கிட்டு காளை முட்ட ஆரம்பிக்கும்'' என்று நிறைய டிப்ஸ்கள் கொடுத்த போஸ், ''மாட்டுக்காரனுக்கு சாவு அந்த மாட்டாலதான்னு சொல்வாங்க. இப்படி செத்தவங்க நெறைய பேர்’' என்று அதன் ஆபத்தையும் நாசூக்காகச் சொன்னார். (ஜுனியர் விகடன் - ஜனவரி 15, 2006)

***

“உண்டு உறங்க இருந்தா சோம்பிப் போயிரும்னு இவுகளச் சும்மா இருக்கவுடாம சீண்டிக்கிட்டே இருப்போம். பெருவெட்டுப் பழங்கள மொதல்ல உருட்டிவுட்டு கொம்பால குறிவெச்சுக் குத்தப் பழக்குவோம். அப்புடியே சாத்துக்குடி, கொய்யா, எலுமிச்ச, நெல்லினு கொம்புல குத்தியெடுக்குற வரை பழக்குவோம்.”

...

“நல்ல சாதிக் காளைய இப்பிடிப் பாய்ச்ச காட்டுற வேகம் கொறையாம வளக்குறது பெரிய வேலை. எதுனா ஒரு பசு மாட்டப் பாத்துருச்சுனா பின்னாடியே போய்ச் சாய ஆரம்பிச்சுரும். அப்பிடிக் கூடிருச்சுனா அம்புட்டுதான்... வீரியம் கொறைஞ்சு போகும். அப்புறம் பாயுற வேகம் மட்டுப்பட்டு, மந்தையில கவனம் போயி, பால் மாடுக மேல நாட்டம் போயிரும். அதுனால கண்ணுல வெளைக்கெண்ணைய வுட்டுக் கங்காணிப்போம். இதுவரைக்கும் எங்காளை ராமு எதோடவும் கூடல. அந்த வேகம், வெறிதான் இப்பிடி வெளிப்படுது.” – ராஜேந்திரன், ஜல்லிக்கட்டு மாடு வளர்ப்பவர். (ஆனந்த விகடன், 15.01.2006)

ஜல்லிக்கட்டு மூலமாக நாட்டு மாடுகளைக் காக்க வேண்டும் என்று வாதிடுபவர்கள், ராஜேந்திரன் கூறுவதைக் கவனிக்க வேண்டும். ஜல்லிக்கட்டு காளைகளை, பசு மாட்டுடன் சேரவே அனுமதிக்காதபோது, எப்படி நாட்டுமாடுகள் இனவிருத்தி ஆகும்? இன்றைக்கு ஓரிருவர் விதிவிலக்காக பசுவுடன் சேரவிடலாம். பெரும்பாலும் சேரவிட மாட்டார்கள் என்பதுதான் கள நிலவரமாக இருக்கிறது.

இவர்கள் இருவரும் கூறியதுபோல், மனிதர்களைக் குத்திக் கிழிப்பதற்கு பயிற்சி கொடுக்கப்பட்ட காளைகள், களத்தில் இறக்கிவிடப்படும்போது, மேலும் வெறியேற்றப்படுகிறது. அதன் வாலைக் கடிப்பது, சாராயம் கொடுப்பது, கண்களில் மிளகாய்ப் பொடி தூவுவது அல்லது எலுமிச்சைப் பழத்தைப் பிழிவது என்று அதன் கோபத்தை பல மடங்கு அதிகரிக்கிறார்கள். விலங்கு நல ஆர்வலர்களும், பீட்டா அமைப்பினரும் (https://www.youtube.com/watch?v=coZvTRHt2m4) உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த காணொளிப் பதிவுகளில் இதைப் பார்க்க முடியும். விலங்கு நல ஆர்வலர்களின் மேற்பார்வையில் நடத்த வேண்டும் என்ற கட்டுப்பாடு இருந்த காலத்திலேயே இந்த அளவிற்கு வெறியூட்டல் இருந்தது என்றால், இப்போதைய நிலையை யோசித்துப் பாருங்கள்… இன்றைக்கு தமிழகமே ஜல்லிக்கட்டுக்காக கொந்தளித்து இருக்கிறது. விலங்கு நல ஆர்வலர்கள் தைரியமாக ஜல்லிக்கட்டு நடைபெறும் இடங்களுக்குச் செல்லும் நிலைமை இல்லை. அரசு விதித்த கட்டுப்பாடுகள், ஹெல்மெட் சட்டம் போல் கொஞ்சம் கொஞ்சமாகக் காணாமல் போகும். அப்போது மாடுகளுக்கு வெறியேற்றப்படுவது முன்புபோல் தொடரும்; உயிரிழப்புகளும், படுகாயங்களும் அதிகரிக்கும்.

பீட்டா சொல்வதையோ, விலங்குகள் நல ஆர்வலர்கள் சொல்வதையோ நம்ப முடியாது என்கிறீர்களா? ஜல்லிக்கட்டில் தனது மகனை இழந்த நாகராஜன் சொல்வதைக் கேளுங்கள்…

“ஜல்லிக்கட்டுன்ற பேருல அங்க மாடுகளுக்கு கஞ்சாவையும், சாராயத்தையும் குடுக்குறாங்க. கண்ணு மண்ணு தெரியாம ஓடணும்ன்றதுக்காக மாட்டுக்குக் கண்ணுல எலுமிச்சம்பழத்தைப் பிழிஞ்சு விடுறாங்க. இம்புட்டும் பத்தாதுனு கிட்டிவாசல் மேல உக்காந்துகிட்டு தார்குச்சியால குத்தி அந்த மாடுகள வெறி பிடிக்க வைக்கிறாங்க.”(ஜூனியர் விகடன், ஜனவரி 1, 2007)

பார்வையாளர் வரிசையில் இருந்த மாரிமுத்து (நாகராஜனின் மகன்) மாடு முட்டி இறக்கவே, அவரது தந்தை ஜல்லிக்கட்டிற்குத் தடை கோரி முதன்முறையாக மதுரை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்கிறார். பின்னர் தான் விலங்குகள் நல ஆர்வலர்களும், பீட்டாவும் ஜல்லிக்கட்டு வழக்கில் சேர்ந்து கொள்கிறார்கள். ஜல்லிக்கட்டை ஆதரிப்பதற்காக ‘பன்னாட்டு சதி’ என்று அமெரிக்கா வரை இழுப்பவர்கள், நாகராஜனைப் போல் தங்களது பிள்ளைகளையும், கணவர்களையும் இழந்து நிற்பவர்களைத் தேடிப் போவதில்லை.

மாடு வளர்ப்பவர்களின் வன்முறை

மாடுபிடி வீரர்களைக் குத்திக் கிழித்தாலும் பரவாயில்லை, மாடு பிடிபடக்கூடாது என்பதே மாடு வளர்ப்பவர்களின் நோக்கம். அத்தகைய மாடுகளை வைத்திருப்பதுதான் அவர்களுக்கும் பெருமை.

இராஜேந்திரன் சொல்வதைக் கேளுங்கள்:

“ஊமச்சி கொளத்துல ஒருக்கா சல்லிக்கட்டு. வத்திராயிருப்பு லெட்சுமணன்னு பெரிய மாடுபிடி மன்னன். நாப்பது வருஷமா இதேதான் பொழப்பு அவனுக்கு. எப்பேர்ப்பட்ட பெருமாடா இருந்தாலும் அதோட திமில்ல அட்டை மாதிரி ஒட்டிக்கிட்டு, அஞ்சு நொடியாவது தாக்காட்டிருவான். ‘ஒங் காளைய அடக்குறேன் பாரு’னு சவால்விட்டு, குபீர்னு பாஞ்சான். மின்னலு கெணக்கா அவம் பக்கம் திரும்பி தொடையில ஒரே எத்து! ஒடம்பக் குத்தித் தொளைச்சு, மறுபக்கம் வெளியே வந்துருச்சு கொம்பு. அப்புடியே அவனை ஒரு ஒதறு ஒதறி, மூஞ்சி முழுக்க ரத்தத்தோட நிமிந்து பாத்தாக பாரு ஒரு பார்வை... அவனவன் அள்ளை தெறிச்சு எடுத்தான் ஓட்டம்!

அதைப் போல, அலங்காநல்லூர்ல ஸ்ரீதர்னு ஒரு பய. விருமாண்டி படத்துலகூட கமலுக்கு டூப்பா நடிச்சவன். திமிறி வர்ற காளையோட நீக்குப் போக்குத் தெரிஞ்சு, திமில உடும்புப் புடியா புடிக்கிறவன். அவங் கை வெரலு திமிலப் புடிக்குறதுக்குள்ள, அவன ஒரு நெம்பு நெம்பி ஆகாசத்துல வீசி எறிஞ்சுட்டு அடுத்த ஆளப் பாக்கப் போயிட்டாக இவுக. உசுருக்குப் பங்கம் இல்லாம ஊரு போய்ச் சேந்தான் சத்தியம் பண்ணவன்!” (ஆனந்த விகடன் 15.01.2006)

jallikattu 360

மாடுபிடி வீரர்கள் குத்துப்பட்டு விழுவது இவர்களுக்கு எவ்வளவு சந்தோஷம். பெருமை பாருங்கள்… இதைவிடக் கொடுமை, மாட்டோடு சேர்ந்து இவர்களும் கத்தியால் குத்துவது.

முன்னாள் மாடுபிடி வீரரும் தற்போது ஜல்லிக்கட்டுக் காளை வளர்ப்பவருமான தேவசேரி செல்வம் சொல்லும்போது, “மாடு பிடிக்கிறப்ப அதால முட்டிக் காயப்படுறதைவிட, மாடு பிடிபடக்கூடாதுனு தடுக்க, வாடிவாசலிலும் கூட்டத்திலும் கத்தி வைச்சு குத்துவாங்க மாட்டுக்காரங்க. அதுமாதிரி காயம்தான் எனக்கு அதிகம். இப்படி குத்துறவங்க மேல போலீஸில் புகார் செய்ய முடியாது. ஏன்னா, ஜல்லிக்கட்டுல எப்படி காயம் பட்டாலும், மாடு முட்டுனதாத்தான் சட்டப்படி எடுத்துக்குவாங்க. இதெல்லாம் பிரிட்டீஷ்காரன் காலத்தில் போட்ட ரூல்ஸ். இன்னிக்கும் இதை மாத்தலை.

ஜல்லிக்கட்டுல ரொம்பவும் பேர் வாங்கின ஒரு மாட்டை ஒரு வீரன் அணைஞ்சுட்டான்னா, அவனுக்கு ஜல்லிக்கட்டு முடியறதுக்குள்ள மாடு முட்டாமலே குத்து நிச்சயமாவே உண்டு. மாடு வளர்க்கறவங்க, அந்த அளவுக்கு ஆவேசம் பொங்கக் கத்தியோடதான் நிப்பாங்க. அதுக்குப் பயந்துகிட்டும் சிலர் மாடுகளைப் பிடிக்காம ஒதுங்கி நிக்கறதும் உண்டு” என்று திகில் விஷயங்களாக அடுக்கினார். (ஜுனியர் விகடன் ஜனவரி 15, 2006)

இன்றைக்கு நீதிமன்றக் கட்டுப்பாடுகள் இருக்கும்போது, இது குறைந்திருக்கலாம். எல்லாக் கட்டுப்பாடுகளும் கொஞ்ச காலத்தில் காற்றில் பறக்க விடப்படுவது நம் நாட்டில் வழக்கமாதலால், வருங்காலத்தில் இத்தகைய வன்முறைகள் மீண்டும் தலை தூக்குவதற்கான வாய்ப்புகளே அதிகம்.

போட்டி நடத்துபவர்களின் வன்முறை

நிறைய பேர் சாக வேண்டும் என்று ஜல்லிக்கட்டு போட்டி நடத்துபவர்கள் விரும்புகிற கொடுமையைத் தெரியுமா?

மேட்டுப்பட்டி என்ற கிராமத்தைச் சேர்ந்த மாடுபிடி வீரர் மயில்வீரன் நம்மிடம், “ஜல்லிக்கட்டுல மாடு முட்டிடுச்சுனா, உடனே ஆஸ்பத்திரிக்குத் தூக்கிட்டுப் போகமாட்டாங்க. இதனால அரைகுறையா குத்துப்பட்டு கிடக்கிறவங்க பல பேர் உயிர், ஜல்லிகட்டு மந்தையிலயே போயிடும். ஏன் உயிரு போகட்டும்னு நினைக்குறாங்கனா, நிறையபேரு செத்தா அந்த ஊரு ஜல்லிக்கட்டுக்குப் பெருமை. அதோட குத்துன மாட்டுக்கும் மவுசு. ஜல்லிக்கட்டு நடக்கிற இடத்துல பேருக்குதான் ஆம்புலன்ஸ் நிப்பாட்டிருப்பாங்க. அதுல ஒரு மண்ணும் இருக்காது. சமயத்துல ஆஸ்பத்திரிக்குத் தூக்கிக்கிட்டுப் போனாலும் எங்களை வீரனா நெனைக்காம கேவலமா நினைச்சு, வைத்தியம் பாக்காம லேட் பண்ணுவாங்க. அதுமட்டுமில்லாம, அடிபட்டு, கொம்புக் குத்தி ரத்தக் காயத்தோட நிக்கற எங்கள கிண்டல் பண்ணி அவங்க பேசுறதக் கேக்குறப்ப, உயிரே போறது மாதிரி இருக்கும்!” - தான் வளர்க்கும் காளைக்குத் தீவனம் போட்டுக்கொண்டே சொன்னார் மயில்வீரன். (ஜுனியர் விகடன் - ஜனவரி 15, 2006)

இப்படி இந்த விளையாட்டின் ஒவ்வொரு அங்குலத்திலும் வன்முறை புரையோடிப் போயிருக்கிறது.

கிரிக்கெட் – ஜல்லிக்கட்டு ஒப்பீடு

ஜல்லிக்கட்டு எதிர்ப்பாளர்களை புத்திசாலித்தனமாக மடக்குவதாக நினைத்து, ‘கிரிக்கெட்டில் கூடத்தான் உயிரிழப்பு இருக்கிறது’ என்று சொல்கிறார்கள். 400 ஆண்டுகளாக விளையாடப்படும் கிரிக்கெட் விளையாட்டில், காயம் காரணமாக இதுவரை 6 பேர் வரை மட்டுமே இறந்துள்ளனர். ஆனால், ஜல்லிக்கட்டில் 6 ஆண்டுகளில் (2008 – 2014) மட்டும் மொத்தம் 43 பேர் இறந்துள்ளனர். இந்த ஆண்டு இதுவரை 4 பேர் இறந்துள்ளனர். பாதுகாப்பு ஏற்பாடுகளைப் பற்றி துளியும் கவலைப்பட்டிராத 2008 ஆம் ஆண்டுக்கு முந்தைய ஜல்லிக்கட்டு போட்டிகளில் ஏற்பட்ட உயிரிழப்புகளை தோராயமாகக் கணக்கிட்டுப் பாருங்கள்… மரங்களில் எல்லாம் மாடுபிடி வீரர்களின் குடல்கள் மாலைபோல் தொங்கிக் கொண்டிருக்கும் என வர்ணிக்கப்பட்ட கலித்தொகை காலத்தில் இருந்து பார்த்தோம் என்றால், குறைந்தது இருபதாயிரம் பேராவது இறந்திருப்பார்கள்; பத்து இலட்சம் பேராவது படுகாயம் அடைந்திருப்பார்கள்.

jallikattu victims

கிரிக்கெட்டில் ஒவ்வொரு உயிரிழப்பின்போதும், பாதுகாப்பு அம்சங்கள், விதிகள் மேம்படுத்தப்பட்டிருக்கின்றன. ஆனால், ஜல்லிக்கட்டில் மாடுகளுக்கான பாதுகாப்பு விதிகள்கூட அண்மையில்தான் உருவாக்கப்பட்டிருக்கின்றன. இந்த ஆண்டு தமிழக அரசு விதித்துள்ள கட்டுப்பாட்டு விதிகளில் கூட (https://goo.gl/O51Dt6) மாடுகளைப் பற்றிய அக்கறைதான் அதிகமாக இருக்கின்றதே ஒழிய, மாடுபிடி வீரர்களைப் பற்றிய அக்கறை மிக மிகக் குறைவாகவே இருக்கிறது.

கிரிக்கெட் பயிற்சி என்றால் பெற்றோர் ஆர்வத்துடன் தங்களது பிள்ளைகளை சேர்த்து விடுவார்கள். ஆனால், இன்று தமிழர் பண்பாடு, தமிழர் விளையாட்டு என்று களத்திற்கு வந்தவர்கள் எத்தனை பேர் தங்களது பிள்ளைகளை ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு அனுப்புவார்கள்? அவர்களுக்கு மிக நன்றாகவே தெரியும், கிரிக்கெட்டுக்கும், ஜல்லிக்கட்டிற்கும் உள்ள வித்தியாசம்.

கிரிக்கெட்டில் மாநில அளவிலோ, தேசிய அளவிலோ தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்புகளில் முன்னுரிமை கிடைக்கிறது. அவர்களது வாழ்க்கை ‘செட்டில்’ ஆகிவிடுகிறது. ஆனால் ஜல்லிக்கட்டில் அப்படியா நடக்கிறது?

மாடுபிடி வீரர்களின் துணைவியர் படும் துயரம் 

மெரினா போராட்டத்தில் ‘காளையை அடக்குபவனையே திருமணம் செய்வேன்’ என்று ஒரு சிறுமி பதாகையுடன் நின்றிருந்தது பேஸ்புக்கில் பரவலாக பகிரப்பட்டது. ஜல்லிக்கட்டு விளையாட்டில் உள்ள வன்முறை பற்றி அந்த சிறுமிக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. பல ஆண்டுகளுக்கு முன்பு (வருடம் குறிப்பாக நினைவில் இல்லை), ஆனந்த விகடன் இதழில் மாடுபிடி வீரர்களின் துணைவியரைப் பேட்டி எடுத்து ஒரு சிறப்புக் கட்டுரை வெளியிட்டு இருந்தார்கள். அதில், மாடு பிடிப்பவர் என்பது முன்னரே தெரிந்திருந்தால் கல்யாணமே செய்திருக்க மாட்டேன் என்றும், ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் வரும்போது ஜல்லிகட்டை நினைத்தே தங்களது நிம்மதி போய்விடுகிறது என்றும், எப்படி கண்காணித்தாலும் இறுதியில் ஏமாற்றிவிட்டு மாடுபிடிக்கப் போய்விடுகிறார்கள் என்றும், அவர்கள் பத்திரமாகத் திரும்பி வரும்வரை நாங்கள் வீட்டில் பதைபதைப்புடன் காத்துக்கொண்டு இருப்போம் என்றும் பேட்டி கொடுத்திருந்தார்கள்.

அதுதான் உண்மை நிலை. மாடு பிடிக்கப் போகிறவர்கள் உயிருடன் வர வேண்டும், காயமில்லாமல் வர வேண்டும் என்பதே வீட்டில் உள்ள பெண்களுக்குப் பெருங்கவலையாக இருக்கும். ஜல்லிக்கட்டை பெரும்பாலான மாடுபிடி வீரர்களின் குடும்பங்கள் ஆதரிக்க மாட்டார்கள். இந்த உண்மை நிலை அறியாமல்தான், இன்றைய கல்லூரி மாணவிகள் ஜல்லிக்கட்டிற்காகப் போராடுகிறார்கள்.

பாதுகாப்பு அம்சங்களை மேம்படுத்த முடியுமா? 

‘பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகப்படுத்தக் கூறலாம், அதைவிடுத்து ஒட்டுமொத்தமாகத் தடை கேட்டால் எப்படி?’ என்று தோழர்கள் சிலர் கேட்கிறார்கள். அவர்கள் இரண்டு விஷயங்களைப் புரிந்து கொள்ள வேண்டும்.

1. உங்களுடன் விளையாடப் போவது ஐந்தறிவுள்ள ஒரு விலங்கு. உங்களது விதிகள் எதுவும் அதற்குத் தெரியாது; புரியாது. பழகாத மனிதர்களைக் கண்டால் அது மிரட்சியில் மிதிக்கவோ, முட்டவோதான் செய்யும்.

2. பார்வையாளர்களைத் தடுப்பு வேலிகள் அமைத்து பாதுகாத்து விடலாம். ஆனால், மாடுபிடி வீரர்களைக் காக்க வேண்டுமானால், கூர்மழுங்கிய கொம்புடைய மாடுகளையே களத்தில் இறக்க வேண்டும் அல்லது அதன் கொம்புகளை இரப்பரால் சுற்றிவிட வேண்டும். அதன் முரட்டுக் கால்களால் மிதிபடாமல் இருக்க, பொதிகழுதைகளுக்குக் கட்டுவதுபோல், பின்னங்கால்களை ஒரு கயிற்றாலும், முன்னங்கால்களை ஒரு கயிற்றாலும் கட்டிவிட வேண்டும்.

இந்த இரண்டு யோசனைகளையும் செயல்படுத்தினால் மட்டுமே, உயிரிழப்பையோ, படுகாயங்களையோ தவிர்க்க முடியும். ஆனால், ஒரு கொலைக் கருவியாக தனது மாட்டை வளர்க்கும் உரிமையாளரிடம் ‘இதுதான் விதி’ என்று சொல்லிப் பாருங்கள். அந்த ஆண்டே மாட்டை அடிமாடாக விற்று விடுவார். காரணம் அவர் ‘பிள்ளை போல’ மாட்டை வளர்ப்பதே, பாசத்தினால் அல்ல… பிடிபடாமல், மாடுபிடி வீரர்களைக் குத்தியோ, மிதித்தோ பரிசுகளை அள்ளி வர வேண்டும் என்பதற்காகத்தான்.

ஜனநாயகப்படுத்தலாமா?

‘இது காட்டுமிராண்டி கால விளையாட்டு. இதில் ஆணாதிக்க, ஆதிக்க சாதிக் கூறுகள்தான் இருக்கின்றன. இந்தக் காலத்தில் நமக்குத் தேவையில்லை’ என்று சொல்கிறோம். உடனே ‘தலித்துகள், பெண்கள், முஸ்லிம்கள் விளையாடும் வகையில் இதை ஜனநாயகப்படுத்த வேண்டும்’ என்று தோழர்கள் சிலர் கூறுகிறார்கள். ஜனநாயகப்படுத்தி விட்டால், இந்த விளையாட்டில் தொழிற்பட்டிருக்கும் வன்முறையோ, உயிரிழப்புகளோ குறைந்துவிடுமா? இன்று ஆதிக்க சாதியில் ஏற்படும் உயிரிழப்பு, நாளை தலித்துகளிடமும், முஸ்லிம்களிடமும் ஏற்படும். பெண்கள் விளையாட ஏற்பாடு செய்ய வேண்டும் என்பவர்கள், தயவு செய்து 800 கிலோ எடையுடனும், கூரிய கொம்புகளுடனும் இருக்கும் மாட்டின் முன்பு தங்கள் வீட்டுப் பெண்கள் நிராயுதபாணியாக நிற்பதைக் கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள்…

பாதுகாப்பு அம்சங்களை மேம்படுத்தவோ, ஜனநாயகப்படுத்தவோ தேவையற்ற விளையாட்டு இது. அடிப்படையிலேயே வன்முறையும், கொலை நோக்கும், பகுத்தறிவற்ற தன்மையும் கூடிய விளையாட்டுதான் ஜல்லிக்கட்டு. இதை முற்றிலும் நிராகரிப்பதே அறிவார்ந்த சமூகம் செய்ய வேண்டியது.

இதில் காட்டுமிராண்டித்தனமில்லையா?

அறிவினால் மனிதன் இந்த அகிலத்தை ஆண்டு கொண்டிருக்கும்போது, காட்டுமிராண்டிக் காலத்தில் விளையாடிய, இந்த நவீன காலத்திற்குக் கொஞ்சமும் பொருந்தாத ஒரு விளையாட்டை இப்போதும் விளையாடுவோம் என்று அடம் பிடித்தால், அதைக் காட்டுமிராண்டித்தனம் என்று நீதிமன்றம் சொல்லியதில் என்ன தவறு இருக்கிறது?

வன்முறையைத் தூண்டும் குத்துச்சண்டை போன்ற விளையாட்டுக்களைத் தடை செய்ய வேண்டும் என்று மேலைநாடுகளில் அறிவார்ந்த மனிதர்கள் வாதிடுகிறார்கள். ஆனால், நம் நாட்டிலோ, முழுக்க முழுக்க வன்முறையான ஒரு விளையாட்டை ‘வீரம்’ என்றும், ‘பண்பாடு’ என்றும், ‘நாட்டு மாடுகளைக் காப்பது’ என்றும் சற்றும் கவைக்குதவாத காரணங்களைக் கொண்டு மெத்தப் படித்த பேராசிரியர்கள், எழுத்தாளர்கள், இயக்கவாதிகள் அனைவரும் ஆதரிக்கிறார்கள்.

வரும் ஆண்டுகளில் ஜல்லிக்கட்டுகளின் எண்ணிக்கையும், அங்கு ஏற்படும் உயிர்ப்பலியும் அதிகரிக்கும். 'பண்பாடு, நாட்டு மாடுகளைக் காப்பதற்காக எத்தனை பேரை வேண்டுமானாலும் பலி கொடுக்கலாம்' என்று அப்போது விளக்கம் கொடுப்பார்களோ?

உலகின் மூத்த குடி தமிழ்க் குடி என்றால், மானுட விழுமியங்களைக் காப்பதிலும் நாம் மூத்த குடியாக இருக்க வேண்டும். பண்பாடு என்ற பெயரில் வீட்டுப் பெண்களை பதைபதைக்க வைப்பதிலும், நாட்டு மாடுகளைக் காக்க நாட்டு மக்களைப் பலி கொடுப்பதிலும் எந்தவொரு மானுட விழுமியமும் இல்லை. மாறாக, நாம் பண்படாதவர்கள் என்பதையே இந்த உலகிற்கு அழுத்தமாக மீண்டும், மீண்டும் பதிவு  செய்கிறோம்.

சான்றுகள்: விக்கிபீடியா, விகடன் குழும இதழ்கள், தி இந்து

- கீற்று நந்தன்