சரண்குமார் லிம்பாலே (48) : மகாராட்டிர மாநிலத்தின் தலித் எழுத்தாளர்களில் முன்னோடியாகத் திகழ்பவர். "தலித் சிறுத்தைகள்' (Dalit panthers of india) இயக்கத்தின் கலை இலக்கியப் போராளி. கடந்த 25 ஆண்டுகளாக மகாராட்டிர மாநில தலித் இயக்கங்களின் செயல்பாடுகளையும், தலித் இலக்கியங்களின் எழுச்சியையும் விமர்சனப் பார்வையுடன் எழுதி வருபவர். இதுவரை 25க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். இவருடைய சுயசரிதைகள், மராத்திய வாசகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றவை. 1984இல் வெளியான "அக்கர் மாஷி' (அரை சாதிக்காரன்) என்கிற சுயசரிதை, வேதனைகள் நிறைந்த அவரது இளமைக்கால வாழ்க்கையின் தலித் அடையாள அனுபவங்களை விவரிக்கின்றது. அப்பா தலித் அல்லாதவராகவும் அம்மா தலித்தாகவும் இருக்கும்போது, அவர்களுக்குப் பிறந்த தான் மட்டும் எப்படி சாதியற்றவனாக வாழ்ந்து காட்ட முடியும் என்பதை, தலித் சமூகத்துக்குச் சவாலாக வைக்கின்ற ஒரு நாவல். அதேபோன்று அவருடைய "உபால்யா' சுயசரிதை மராட்டிய தலித் இயக்கங்களின் எழுச்சியையும், அதன் வேகத்தையும், திசை மாற்றத்தையும் தலித் பார்வையில் விமர்சனமாக முன் வைக்கின்றது.

Charankumar Limbaley மார்க்சியம், பெண்ணியம், அம்பேத்கரியம் ஆகியவற்றில் மிக ஆழமான சமூகப் பகுப்பாய்வை முன் நிறுத்துகின்ற சமகால விமர்சகர்களில் குறிப்பிட்டுச் சொல்லும்படியானவர்களில் ஒருவராக விளங்கும் சரண்குமார் லிம்பாலே எழுதிய "தலித் சாகித்யச்சே சவுந்தர்ய சாஸ்திரா' (தலித் இலக்கியங்களின் அழகியல் நோக்கு) என்ற நூல், மகாராட்டிர தலித் இலக்கிய இயக்கப் போக்கை அசை போட வைத்துள்ளது. தலித் இலக்கியங்களின் அழகியல் மீதும், தலித் இயக்கங்களின் செயல்பாடுகள் மீதும் அம்பேத்கரின் சிந்தனைகளும், மார்க்சிய சிந்தனைகளும் எங்கு ஒன்று சேர்கின்றன, எங்கு முரண்படுகின்றன என்பதை மிக விரிவாக விவரிக்கின்ற நூல். இதே காலகட்டத்தில், மகாராட்டிராவில் அம்பேத்கரிய, புதிய பவுத்த, தலித்திய, மார்க்சிய, பார்ப்பனர் அல்லாத குழுக்களின் இலக்கிய மோதலும், தலித் அடையாளம் தலித் எழுச்சியை மெல்ல கூறுபோட்டு வருவதை இவரின் எழுத்துகள் வெளிப்படுத்தியுள்ளன. அந்த சமயத்தில் அதாவது மார்ச் 2002இல் கனடாவில் உள்ள யார்க் பல்கலைக் கழகத்தின் பேராசியர் அலோக் கர்ஜி அவருடன் செய்த நேர்காணல், மராட்டிய இதழ்களில் பரவலாக வெளிவந்தன. அதன் ஒரு பகுதியை இங்கே சமகால தமிழகச் சூழலின் தலித் இலக்கிய இயக்கச் செயல்பாடுகளின் உரசலுக்குப் பொருத்தப்பாடாக வெளியிடுகின்றோம். "தலித் இலக்கியம் : விடுதலையின் திசைகள்' என்ற தலைப்பில் "புத்தா வெளியீட்டகம்' வெளியிட இருக்கும் நூலில், இப்பேட்டியின் முழு பகுதியைக் காணலாம். இந்நூலை அன்பு செல்வம் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார்.

சரண்குமார் லிம்பாலே, தற்பொழுது நாசிக்கில் உள்ள யஷ்வந்த்ராவ் சவான் திறந்தவெளிப் பல்கலைக் கழகத்தின் மண்டல இயக்குநராகப் பணிபுரிந்து வருகிறார்.

உங்களுடைய "உபால்யா' நாவல் பற்றிச் சொல்லுங்கள். இந்தத் தலைப்பு ஒரு குரங்கு வர்க்கத்தோடு தொடர்புடையதாகக் கேள்விப்பட்டேன். இந்தப் பெயர் எங்கிருந்து வந்தது?

1956க்குப் பிறகு, அதாவது பாபாசாகேப் அம்பேத்கரின் மறைவுக்குப் பிறகு, தலித் சமூகத்துக்கென்று சொல்லும்படியான ஒரு தலைவர் கிடைக்கவில்லை. அவருடைய மறைவுக்குப் பிறகு மிகப் பெரிய வெற்றிடம் உருவானதால் தலித் சமூகத்துக்கும், தலித் இயக்கத்துக்கும் ஒரு மகத்தான தலைவர் தேவைப்பட்டார். பாபாசாகேப்பின் போராளிகள் ஒன்று கூடி, ஒரு குழு தலைமையை உருவாக்க வேண்டும் என முடிவு செய்தார்கள். இந்திய குடியரசுக் கட்சியை தலித்துகளின் அரசியல் பாசறையாக்க நினைத்தார்கள். அம்பேத்கருடைய கனவும் அதுதான். ஆனால், தலைமைத்துவ மோதலில் ஏற்பட்ட உட்பூசலால் குழு தலைமை தோல்வியடைந்தது. பிறகு இக்கட்சி பல பிவுகளாக உடைந்தது. ஒரு பகுதியினர் காங்கிரசுடன் இணைந்தனர். மற்றவர்கள் இந்திய குடியரசுக் கட்சியிலேயே இருந்து விட்டார்கள். சமூகத்தில் உள்ள அநீதிகளைக் களைவதற்காகப் போராடாமல், தலைவர்கள் தங்கள் சுய விருப்பங்களுக்கு ஆட்படுவதை மக்கள் உணர்ந்தார்கள். பாபாசாகேப் அம்பேத்கரின் கனவு நிறைவேறாமல் கிடப்பில் கிடந்தது.

இந்தக் காலகட்டத்தில்தான் ஒரு புதிய, இளையதலைமுறையினர் ஒன்று கூடி "தலித் சிறுத்தைகள்' எனும் அமைப்பை உருவாக்கினார்கள். 1956இல் அம்பேத்கர் மறையும்போது படித்துக் கொண்டிருந்த இந்த இளைய தலைமுறையினர், 1960இல் தங்கள் படிப்பை படித்தார்கள். பாபாசாகேப்பின் மறைவுக்குப் பிறகு தலித் மக்களை வழிநடத்த ஒரு சரியான தலைமை இல்லை என்பதை உணர்ந்தார்கள். சாதி தீண்டாமைப் பிரச்சனைகளை எதிர்த்துப் போராடவும், தலித் சமூகத்துக்குச் சிறந்த வழிகாட்டவும் ஒப்படைப்பான ஓர் அமைப்பை உருவாக்குகின்ற பொறுப்பை அவர்களே மனவந்து எடுத்துக் கொண்டார்கள். அமெரிக்காவில் வீறுகொண்டு எழுந்த "கருஞ்சிறுத்தைகள்' என்கிற அமைப்பைப் பற்றிப் படித்து, கேள்விப்பட்டு, அதைப் போன்றே ஒரு புரட்சிகரமான, போராட்டக் களத்தை நோக்கிய "தலித் சிறுத்தைகள்' எனும் அமைப்பை 1972 சூலை 9இல் ஏற்படுத்தினார்கள். அதன் பின்னர் மிகப் பெரிய இயக்கமாக வளர்ந்ததை முன்னின்று நடத்தினார்கள். நான் எடுத்துக் கொண்ட "உபால்யா' என்கிற நாவல் இந்த இயக்கத்தைப் பற்றியது.

பாபாசாகேப்பின் மறைவுக்குப் பிறகு தோன்றிய தலித் இயக்கங்களின் வரலாற்றை இந்த நாவல் அசை போடுகின்றது. இந்த நாவல் ஒரு தலித் இளைஞரைப் பற்றியது. படிப்பை முடித்த அந்த இளைஞன், தன்னைத் தானே செழுமைப்படுத்திக் கொண்டு இயக்கப் போராட்டங்களில் களம் இறங்குகிறான். சமூகத்தின் ஒடுக்கப்பட்ட மக்கள் பிரச்சனைக்காகத் தீவிரமாகப் போராடும் ஒரு போராளியாக மாறுகிறான். ஆனால், மக்களுக்காகப் போராடும் இப்போராளியைப் பாரம்பரிய அமைப்புகள் விலை கொடுத்து வாங்க முயல்கின்றன. முடியவில்லை என்றால் பொய் வழக்குகளைப் போட்டு சிறையில் தள்ள முயல்கின்றன. அதுவும் முடியாதபோது பொய்யான மோதலை இட்டுக்கட்டிக் கொல்லவும் சதி செய்கின்றன.

மராத்வடா பல்கலைக் கழகத்திற்கு அம்பேத்கர் பெயர் சூட்ட வேண்டும் என இளைய தலித் சிறுத்தைகள் போராட்டங்களை முன்னெடுத்தார்கள். ஏனென்றால், தலித் கல்விக்காக முதன் முதலில் மராத்வடா பகுதியில்தான் பாபாசாகேப் அம்பேத்கர் மிலின்ட் கல்லூரியைத் தொடங்கினார். மராத்வடா பகுதியில் தலித் கல்விக்காக புதிய பாதையைக் காண்பித்தவர் பாபாசாகேப். எனவே, பல்கலைக் கழகம் அம்பேத்கர் பெயரில்தான் இருக்க வேண்டும் என்கிற கோரிக்கையை முன்வைத்துப் பெரிய போராட்ட இயக்கத்தைக் கட்டமைத்தார்கள். ஒரு கட்டத்தில் போராட்டம் வலுப்பெற்றது. இப்போராட்டத்தில் தங்களை ஈடுபடுத்திக் கொண்ட போராளிகள், மிகப் பெரிய போராட்டத் தலைவர்கள் ஆனார்கள். இதைக் கண்டு பல அரசியல் இயக்கங்கள் அவர்களைத் தங்கள் பக்கம் அழைத்தன. மய்ய நீரோட்ட அரசியலில் கூட்டணி வகிக்கும்படி கேட்டுக் கொண்டார்கள். மக்களுக்காகத் தீவிரமாகப் போராடிய பல தலைவர்கள் தொடர்ந்து அரசியலுக்கு ஈடுபடுத்தப்பட்டார்கள்.

இவர்கள் காங்கிரசுக்குள் சென்றவர்களா அல்லது...

இல்லை, இல்லை. தலித் கட்சியாகிய இந்திய குடியரசுக் கட்சியைச் சார்ந்தவர்கள். அவர்களுக்குத் தலைவராக இருந்த ராம்தாஸ் அத்வாலேவுக்கு அமைச்சர் பதவி கொடுத்தார்கள். நானும், அத்வாலேவும் ஒன்றாக இயக்க வாழ்வில் நுழைந்தோம்; போராட்டங்களில் ஈடுபட்டோம். அவர் அமைச்சர் ஆன பிறகும் அவருடன் சேர்ந்து உழைத்தேன். அதனடிப்படையில் எப்படி இந்த இயக்கம் உருவானது என்பதிலிருந்து, எங்கே போய் முடிந்தது என்பது வரை நான் நன்கறிவேன். இந்தக் கசப்பான அனுபவத்திற்குப் பிறகுதான் "உபால்யா' நாவலை எழுதினேன். இந்த நாவல் 1956க்கும் 1996க்கும் இடையே நடந்த நாற்பதாண்டு கால சமூக அரசியல் நகழ்வுகளின் வரலாற்றைக் கொண்ட ஒரு நாவல். எனினும், "உபால்யா' என்கிற சொல் குரங்கைப் பற்றியது. இது ஒரு வகையான குரங்கு. இந்த வகைக் குரங்கில் ஆண் குரங்கு, பெண் குரங்கைச் சுரண்டி, ஏமாற்றி வாழ்ந்து வருகின்றது. பெண் குரங்குக்கு ஓர் ஆண் குரங்கு பிறந்தால் பெரிய ஆண் குரங்கு அதைக் கொன்று விடும். எங்கே நம்முடைய இடத்தை அது பிடித்து விடுமோ என்கிற பயத்தில் புதிதாகப் பிறக்கின்ற ஆண் குரங்குகளை அது அனுமதிப்பதில்லை. இன்றைக்கு நாம் பார்க்கின்ற அரசியல் அமைப்பும் "உபால்யா'வைப் போன்றதுதான். ஒவ்வொரு தலைவரும் தான் பிடித்த நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு, அதை யாருக்கும் விட்டுக் கொடுக்காமல், வேறு தலைவர்கள் வருவதை அனுமதிப்பதில்லை. தன்னைப் புகழ்பவர்களைக் கொண்டு, தனக்கென்று ஒரு கூட்டத்தை வைத்துக் கொள்கிறார்கள். பிற தலைவர்களை ஏற்பதில்லை. புதிய தலைமுறையில் இருந்து யாராவது ஒரு இளைஞன் தலைவராக முயன்றால், உடனே அவனை ஊழலில் ஈடுபடுத்தி அழித்து விடுகின்றார்கள். இந்த அனுபவம் எனக்குள் ஒரு பாதிப்பை ஏற்படுத்தியது. எனவேதான் இந்தப் பெயரை என் நாவலுக்குத் தலைப்பாக்கினேன்.

"உபால்யா' நாவலின் ஒரு பகுதியை நான் வாசித்தேன். புரட்சிகர இயக்கத்தில் எழுத்தாளர்களின் பங்கு என்னவாக இருக்க வேண்டும் என்று விரிவாக எழுதப்பட்டுள்ளது. இதில் உள்ள பிரச்சனைக்கு நீங்கள் அதிக கவனம் செலுத்துவதாகத் தோன்றுகின்றது?

உண்மையிலேயே எழுத்தாளர்கள் மிக முக்கிய பங்கு வகிக்கிறார்கள். ஒவ்வொரு புரட்சிக்குப் பின்னும் எழுத்தாளர்களின் கொள்கைகள் மூலாம்பரமாக அமைந்திருக்கின்றன. பிரெஞ்சுப் புரட்சியாக இருந்தாலும் சரி, ரஷ்யப் புரட்சியாக இருந்தாலும் சரி ஏன் இந்திய சுதந்திரப் போராட்டத்தின் பின்புலத்தில்கூட, இயக்கம் புரட்சியை நோக்கி வீறு கொள்ள இலக்கியமே முன்னின்று வழி நடத்தி இருக்கின்றது. பாபாசாகேப் அம்பேத்கர் நம்மிடையே போராடினார்; நிறைய எழுதினார். மகாத்மா புலேவும் அப்படித்தான். ஆக, நம்முடைய எழுத்தாளர் கூட்டம், போராளிக் கூட்டம் வெவ்வேறானவர்கள் அல்ல. ஒரே மனிதர்தான் போராளியாகவும், கலைஞராகவும், கவிஞராகவும் எழுந்து நிற்கிறார். எளிய, பாமர மக்கள் இவர்களுடன் அணி வகுத்து நிற்கின்றனர். புலே, அம்பேத்கர் ஆகியோரின் சிந்தனைகளில் இருந்தும், கொள்கைகளில் இருந்தும் ஓர் இயக்கம் தடம் மாறிப் போகாமல் செய்ய வைப்பதே ஒரு எழுத்தாளன் கடமை. இந்த உணர்வை இலக்கியத்தின் வழியாக மக்களுக்கு எடுத்துச் செல்வதும் எழுத்தாளன் பணியாக இருக்கின்றது.

மக்களிடையே இலக்கியத்தை எடுத்துச் செல்வதுதான் ஓர் எழுத்தாளன் பணி என்கிறீர்கள். அப்படியானால் எழுதுவதின் நோக்கம் என்ன? நீங்கள் சொல்கிற கருத்து எழுதுவதை பாதிக்கும் அல்லவா? பிறகு நீங்கள் கூறும் மக்கள் யார்? தலித் மக்கள் மட்டுமா அல்லது அவர்களையும் கடந்ததா?

இல்லை. தலித் இயக்கம் தலித் மக்களுக்காக மட்டுமல்ல. ஏனெனில், தலித் பிரச்சனைகள் சாதியோடு தொடர்புடையவை. சாதி ஒழியும்வரை நமது பிரச்சனைகள் தீராது. 1960லிருந்து தலித்துகள் இயக்கமாக மாறினார்கள் அல்லது தலித்துகள் போராடிக் கொண்டிருக்கிறார்கள் என்பதற்காகப் பிரச்சனைகள் தீர்ந்து விடாது. இந்தக் கேள்விகளுக்கெல்லாம் வர்ணாசிரமவாதிகளிடத்தில்தான் பதில் உள்ளது. இந்தப் பிரச்சனைகளை ஆயுதங்களைக் கொண்டு தீர்க்க முடியாது. எங்களுக்கு வன்முறையில் நம்பிக்கை இல்லை. நாங்கள் வன்முறையை ஒருபோதும் ஆதரிக்க மாட்டோம். இதுவரை அறப்போராட்ட வழிமுறைகளையே கடைப்பிடித்து வருகின்றோம். எங்களுடைய போர் கருத்துப் போர். இந்தப் போரின் மூலம் தலித் இலக்கியமானது, வர்ணாசிரம சமுதாயத்தையே மாற்ற முயன்று வருகிறது. ஒவ்வொரு தனிப்பட்ட வர்ணாசிரமவாதியின் மனதிலும் மனமாற்றம் கொண்டுவரப் போராடுகின்றது. தலித் இலக்கியத்துக்கு இரண்டு பரிமாணங்கள் உண்டு.

ஒன்று, தலித்துகள் தங்களுடைய கடந்த கால வரலாற்றில் அடிமைப்படுத்தப்பட்டார்கள் என்பதை உணரச் செய்து, அவர்களும் மனிதர்கள்தான் என எடுத்துக்காட்டி, அவர்களுடைய மனித உரிமைகளுக்காகப் போராட வேண்டியது அவர்களின் கடமை என்று உணர்த்த வேண்டும். மற்றொன்று, வர்ணாசிரம சமூகத்தின் இதயத்தைத் தொட்டு அவர்களின் மனதை மாற்ற முயன்று, தலித்துகளின் உரிமைகளைப் பண்புடன் எடுத்துக் கூறி, தலித்துகளும் மனிதர்கள்தான் என்பதை உணரச் செய்து, காலம் காலமாக அவர்கள் அடக்கி, ஒடுக்கி வைக்கப்பட்டார்கள் என்பதை விளக்கி, தலித்துகளின் நடப்பு நிலையை வர்ணாசிரமத்தார் புரிந்து ஏற்க வைத்து, அவர்கள் மாற வேண்டும் என உணர்த்த வேண்டும்.

இது இன்னொரு கேள்வியை எழுப்புகிறதே! அதாவது, ஒரே இலக்கியப் படைப்பு இந்த இரண்டு குறிக்கோள்களையும் அடையப் போதுமானதா?

ஆமாம், போதும். இந்தியாவில் பல மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்ட "அக்கர் மாஷி' என்கிற என்னுடைய தன் வரலாற்று நாவலை, இந்தியா முழுவதிலும் உள்ள தலித் வாசகர்கள் படித்துவிட்டுப் புகழ்ந்து எழுதினார்கள். “நாங்கள் வாழும் இழிவான வாழ்நிலையை எங்கள் கண் முன் கொண்டு வந்து நிறுத்தி விட்டீர்கள். ஆம், நம்டைய விடுதலையை நோக்கிப் போராடுவதற்காக நாம் ஒருங்கிணைய வேண்டும் என்பதை உணர்த்தி விட்டீர்கள்'' என்று எழுதினார்கள். அதே சமயம் வர்ணாசிரம வாசகர்கள்கூட, இந்த நாவலைப் படித்து விட்டுத் தங்கள் கருத்துகளை எழுதினார்கள். “லிம்பாலேஜி எங்கள் முன்னோர்கள் உங்கள் தலித் சமூகத்தின் மீது இவ்வளவு கொடுமைகள் இழைத்ததற்காக நாங்கள் வெட்கித் தலை குனிகின்றோம். இது மிகவும் அவமானத்திற்குரிய செயல் என்பதை உண்மையாக உணர்கிறோம்'' என்று எழுதினார்கள். வர்ணாசிரம வாசகர்களிடம் இப்படியான எண்ணங்களும் உணர்வுகளும் ஏற்படுவது வரவேற்கக் கூடிய நல்ல செய்தி. இது, வர்ணாசிரம வாசகர்களிடம் ஒரு குற்ற உணர்வை ஏற்படுத்துகின்றது. அதுமட்டுமல்ல, இனி தலித்துகள் மீது அநீதியான, அத்துமீறலான கொடுமைகள் ஏவப்படக் கூடாது என்கிற உள்ளுணர்வையும் தூண்டுகிறது. ஆக, ஒரே இலக்கியப் படைப்பு இரண்டு விதமான தாக்கங்களை நிச்சயம் ஏற்படுத்த முடியும்.

உங்களுடைய படைப்பின் குறிக்கோள் இதுதான் என்றால், அது எவ்வாறு நீங்கள் எழுதுவதை பாதிக்கின்றது? எடுத்துக்காட்டாக, "உபால்யா'வில் ஓர் இயக்கம் வளர்ந்ததைப் பார்க்கிறீர்கள். அந்த இயக்கத்துக்கு என்ன நேர்ந்தது, எங்கே போய் முடிந்தது என்பதையும் கவனிக்கின்றீர்கள். இன்றைய நடுத்தர வர்க்கப் படைப்புகள் ஒரு குடும்பத்தையோ அல்லது தனி மனிதரைப் பற்றியோ பேசுகிறது. அதில் உறவு, காதல், தனி மனித உளவியல் சிக்கல், துன்ப முடிவு இவைகளும் இருக்கின்றன. அப்படி இருக்கும்போது உங்களுடைய எழுத்தின் கருப்பொருள் என்ன? எந்தவிதமான இலக்கியத்தை நீங்கள் படைக்கின்றீகள்?

நான் ஒரு தலித் என்கிற முறையில் சொல்கிறேன். ஒரு தலித்திடம் உள்ள சுயமரியாதை உணர்வை சுடர்விட்டு எரிய வைக்க வேண்டும். சுயமரியாதை என்பதைத்தான் முதல் கருத்தாகவும் முன் வைக்க வேண்டும். அடுத்து, வர்ணாசிரம வாசகர்களிடம் தலித் உணர்வைத் தூண்ட வேண்டும். இந்த இரண்டு குறிக்கோளுக்கும் ஏற்ற கருப்பொருளை தலித் எழுத்தாளர்கள் எடுத்துக் கொள்ள வேண்டும். இதன் வழியாக தலித் உரிமைகள், தலித் இயக்கங்கள், இவற்றைப் பற்றிய வரலாறு, கதைகள், நாவல், கவிதைகள் மட்டும்தான் தலித் இலக்கியத்தின் அங்கமாக இருக்கும். துப்பறியும் கதைகள், மர்ம நாவல், கற்பனைக் கவிதைகள் தலித் எழுத்தாளர்களால் எழுதப்பட்டிருந்தால்கூட, அவை தலித் இலக்கியமாகாது. நான் பல்வேறு வகையான எழுத்துகளை, பல தளங்களில் எழுதியுள்ளேன். அவற்றை எல்லாம் மக்கள் தலித் இலக்கியமாக ஏற்றுக் கொண்டதில்லை. தலித் மக்களைப் பற்றி, தலித் இயக்கங்களால் தூண்டப்பட்டு, தலித் எழுத்தாளர்களால் பாபாசாகேப் அம்பேத்கர், புலே ஆகியோரின் சிந்தனையின் கீழ் எழுதப்படுவதுதான் தலித் இலக்கியமாகும்.

ஆக, ஓர் இலக்கியப் படைப்பு, தலித் இலக்கியமாக ஏற்கப்பட வேண்டுமானால், அது தலித்தால் எழுதப்பட்டிருந்தால் மட்டும் போதாது என நீங்கள் கூறுகிறீர்கள்?

ஓர் எழுத்தின் கருப்பொருள், அதில் அடங்கியுள்ள உள்ளுணர்வு ஆகியவை மிக முக்கியத்துவம் வாய்ந்தவை. தலித் கருப்பொருளைப் பற்றி கீழ்த்தரமாகவும், தரமற்றதாகவும் ஒரு தலித் எழுத்தாளர் எழுதினால்கூட, அதை தலித் இலக்கியம் எனக் கூற முடியாது. அதில் அம்பேத்கரின் சிந்தனைகள் இழையோடியிருக்க வேண்டும். அது சுயமரியாதை உணர்வை ஊட்ட வேண்டும். அதன் மொழி, உரிமை பேசும் மொழியாக இருக்க வேண்டும்.

நீங்கள் சொல்கிற இந்தக் கருத்தை மற்ற தலித் எழுத்தாளர்கள் ஏற்கிறார்களா? அல்லது இதைப் பற்றி ஏதாவது விவாதம் இருக்கிறதா?

இல்லை, இல்லை. ஒவ்வொரு தலித் எழுத்தாளரும் இதே பார்வையில் பாதிப்படைந்துள்ளனர். ஒவ்வொரு எழுத்தாளன் நூலின் முகப்பிலும், எழுத்திலும் “என் எழுத்து பாபாசாகேப் அவர்களின் சிந்தனையால் தூண்டப்பட்டது'' என ஒரு வரியாவது எழுதாமல் இலக்கியத்தை உருவாக்க மாட்டார்கள்.

சில நாளுக்கு முன்பு தரம் வீர் எழுதிய ஒரு கட்டுரையைப் படித்தேன். ஓராண்டுக்கு முன் படித்ததாக ஞாபகம். அதில் அவர், "நாம் பாபாசாகேப்பிடமிருந்து கற்றதற்கு ஒரு படி மேலே செல்ல வேண்டும்' என்கிறார். "பாபாசாகேப் நமக்கெல்லாம் வழிகாட்டியுள்ளார். உண்மைதான். ஆனால், நாம் அதிலே ஒட்டிக் கொண்டு நின்றால் முன்னேற முடியாது' என்கிறார். பார்ப்பனியத்தை நாம் எழுதுவது சரிதான். ஆனால் அதை நாம் பின்னுக்குத் தள்ளிவிட்டு முன்னேற வேண்டுமே!

தரம் வீர் கூறுகின்ற கருத்துகள், நடுத்தர வர்க்கத்து தன்மையை காட்டுகின்ற ஒன்று. மகாராட்டிராவில் இந்த மாதிரி பலர் இதே கருத்தைக் கொண்டுள்ளார்கள். புலேவுக்கு ஒரு அம்பேத்கர் சீடராக இருந்தார். இருக்க முடிந்தது. ஆனால், பாபாசாகேப்புக்குப் பிறகு அவரைப்போல ஒரு சீடரையும் பார்க்க முடியவில்லையே. இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால், அம்பேத்கருக்குப் பிறகு அவருடைய இயக்கம் தொடர்ந்து இயங்கவில்லை. ஒரு தனி புரவலர் அல்லது காப்பாளர் மீதோ, தனி இறை அவதாரத்தின் மீதோ நம்பிக்கை கொள்வது தவறு. பாபாசாகேப் உண்டாக்கிய பாதை நம்மை முன்னேற்றப் பாதைக்கு கொண்டு செல்லாமல் இருந்திருக்கலாம். ஆனால், சூரிய வெளிச்சம் எவ்வளவு தூரம் பாய்ந்தாலும், எவ்வளவு தொலைவில் இருந்தாலும், வெளிச்சம் சூரியனைச் சார்ந்ததுதான். அதுபோல எத்தனை காலங்கள் கடந்து நின்றாலும் அந்தப் பாதை பாபாசாகேப் பாதையாகத்தான் இருக்கும். அதைக் கடந்துதான் செல்ல வேண்டும் என்பதில்லை. சிலருக்கு எப்போதுமே நொட்டணம் சொல்லி கண்டிக்கின்ற புத்தி உண்டு. தரம் வீர் அந்த வேலையைச் செய்யாமல் ஏன் மாற்று வழிக்குச் செல்லக் கூடாது.

அதாவது அவர் என்ன சொல்கிறார் என்றால், பார்ப்பனியத்தைப் பற்றி பேசுவதை தலித்துகள் நிறுத்திக் கொள்ள வேண்டும்; பார்ப்பனர்களைப் பற்றி அவர்கள் கவலைப்படாமல் தங்கள் நலனைப் பற்றி சிந்திக்கட்டும் என்கிறார்!

ஓர் இயக்கத்தில் எல்லாவிதப் பார்வையும் கொண்ட கருத்துகள் இருக்கின்றன. காரணம், மக்கள் பலவிதமாக சிந்திக்கிறார்கள். ஆனால், ஓர் இயக்கத்தை விட்டு விலகிச் செல்லும் கருத்தை இயக்கங்களின் பொதுக் கருத்தாக ஏற்க முடியாது. கற்பனையின் உச்சாணிக் கொம்பைப் பிடித்துக் கொண்டிருக்கின்றவர்கள்தான், இன்றைய உலகமயமாக்கலின் போக்கில், அம்பேத்கரின் சிந்தனைகள் நீர்த்துப் போய்விட்டதென்று கேள்விக்குட்படுத்துகின்றார்கள். அப்படிப் பார்த்தால் புத்தர், கிறிஸ்து, முகம்மது எல்லோருமே பழங்காலத்தைச் சார்ந்தவர்கள்தான். ஒரு காலகட்டத்தில் பிறந்து இவர்களும் இறக்க வேண்டியிருந்தது. அதற்காக அவர்களுடைய சிந்தனைகளும் செத்துவிட்டது என்று சொல்ல முடியுமா? அம்பேத்கரின் சிந்தனைகள் இன்றைய காலத்துக்கும் பொருந்தக் கூடியவை. சாதி, அமைப்பு ஒழியும் வரை, அவருடைய கருத்துகள் பயனுள்ளதாகவே இருக்கும். அவரின் கருத்து ஒரு தனி மனிதருடைய கருத்தாக இருந்திருந்தால், அது என்றைக்கோ மறைந்து போயிருக்கும். அம்பேத்கரின் கருத்துகள் ஒடுக்கப்பட்ட, நசுக்கப்பட்ட ஒவ்வொரு மனிதன் கருத்தாகும். சாதியப் படிநிலை இருக்கும் வரை ஏற்றத்தாழ்வுகள் இருக்கும் வரை, இக்கருத்து வலுவானதாக இருக்கும். இது தொடரும் வரை பலவிதமான கருத்துகள், பலவிதமான பார்வையில் வளர்ந்து கொண்டேயிருக்கும். அம்பேத்கரின் கருத்து ஒட்டுமொத்த தலித் சமூகத்தின் எழுத்தாகவும், வெளியீடாகவும் இருக்கின்றது. அம்பேத்கருடைய சிந்தனையின் தாக்கத்தால் தலித் இலக்கியம் வெளியாகிக் கொண்டேயிருக்கின்றது. கவிதைத் தொகுப்புகள், நாவல்கள், விமர்சனங்கள் ஒன்றன்பின் ஒன்றாகக் கூடிக்கொண்டே போகின்றதே தவிர எதுவும் கழித்துக் கட்டப்படவில்லை. பாதை நெடுகிலும் பல கருத்துகள், எழுத்துகள் காலப்போக்கில் வந்து கொண்டேயிருக்கும். அம்பேத்கரின் கருத்துகள் என்றைக்குமே முடிவு பெறாது.

இத்தகைய மாற்றம் எப்படி தலித் இலக்கியத்தைப் பாதித்துள்ளது?

Ambedkar தலித் இலக்கியத்தை தலித்துகள்தான் உருவாக்கினார்கள் என்பது உண்மை. ஆனால், அதை ஆதரித்து வளர்ச்சியை நோக்கித் தள்ளியவர்கள் வர்ணாசிரமத்தினர். ஒரு காலத்தில் வர்ணாசிரமத்தினர் தலித் இலக்கியங்களை அச்சிட்டு வெளியிட மறுத்தனர். ஆனால் தலித்துகள் தாங்களாகவே எழுதி, சொந்த அச்சகங்களையும், வெளியீட்டகங்களையும் ஏற்படுத்தி, தங்களுக்கான இதழ்கள், பத்திரிகைகளை வெளியிட்டுத் தங்களின் அடையாளத்தை மீட்டுருவாக்கிய நிகழ்வு, வர்ணாசிரமத்தினன் கவனத்தை திசை திருப்பியது. நாம் அவர்களுடன் இணைந்த ஒரு பகுதியினராக இருக்கும்போது, ஆதிக்கச் சாதியினர் நம்மைக் கண்டுகொள்வதில்லை. இது, இந்தியாவில் உள்ள ஒரு வித்தியாசமான குணாம்சம். அவர்களை விட்டு வெளியே வந்த பிறகுதான் நம்மைப் பற்றி ஊன்றிக் கவனிக்கிறார்கள். இன்றைக்கு தலித் இலக்கியம் தனக்கென்று ஒரு தனி அடையாளத்தை உருவாக்கியுள்ளது. தலித் அல்லாத விமர்சகர்களும், வெளியீட்டாளர்களும், வாசகர்களும் தற்போது தலித் அடையாளத்தை ஏற்பதில் முன்னணி வகித்து வருகிறார்கள். தலித் இலக்கியத்தைக் கொண்டு வருவதிலும் தன்முனைப்புக் காட்டி வருகிறார்கள். ஏனென்றால் பாரம்பரியத்தில் வர்ணாசிரம இலக்கியம் உண்மையற்றதாகவும், கற்பனையானதாகவுமே இருந்தது. புராண காலத்திலிருந்து இன்று வரை அவர்களுக்குப் படிக்கக் கிடைத்ததெல்லாம் வெறும் கற்பனைகளும், புதிர்களும்தான். ஒரு பாமர மனிதனின் உண்மையான முகம் இலக்கியத்தில் வெளிப்பட்டதில்லை. தலித் இலக்கிய எழுச்சிக்குப் பிறகு தலித்துகளின் துயரம், போராட்டம், உரிமைகளைக் கொண்ட ஒரு புது மனிதரை வாசகர்கள் சந்திக்கிறார்கள். எனவேதான் எல்லோரும் இதை ஆதரித்து ஏற்றார்கள். முற்போக்குச் சிந்தனை கொண்ட வர்ணாசிரமவாதிகளின் ஆதரவால் தலித் இலக்கியம் இன்னும் வளர்ந்தது. அவர்கள் மட்டும் தலித் இலக்கியத்தை ஏற்காமல் இருந்திருந்தால், இந்த அளவுக்கு தலித் இலக்கியம் வளர்ந்திருக்க முடியாது.

நீங்கள் தலித் என்கிற ஒரு மனிதரைப் பற்றிப் பேசுகிறீர்கள். நான் சொல்வது 40 ஆண்டுகளுக்கு முன்பு தலித் மக்கள் எப்படி இருந்தார்களோ, அதே போலத்தானே இன்றைக்கும் இருக்கிறார்கள். அப்புறம் எப்படி இதை மாற்றம் என்று சொல்கிறீர்கள்?

நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. 40 ஆண்டுகளுக்கு முன்பு தலித்துகள் தங்கள் கிராமத்திற்கு எதிராகப் போராட முடியாமல் இருந்தார்கள். அன்றைய சமூக அமைப்புக்கு கட்டுப்பட்டுக் கிடந்தார்கள். ஆனால், இன்றைக்கு தலித்துகள் கிராமங்களில் இருந்தாலும்கூட, தங்கள் பிரச்சனைகளுக்காக நடைபெறும் போராட்டங்களுக்காக குரல் கொடுக்கின்றார்கள். அநீதிக்கு எதிராகப் போராளிகளிடம் ஓர் இயக்க குணம் உருவாகியுள்ளது. பிரச்சனை அன்றும் இருந்தது, இன்றைக்கும் இருக்கின்றது. அநீதிக்கு எதிராக அன்றைக்குப் போராட முடியவில்லை. ஆனால், இன்றைக்கு அநீதி நடக்கிறது என்பதை உணர்வதோடு மட்டுமல்லாமல் அதற்கெதிராகப் போராடவும் தயாராகி வருகிறார்கள். தங்கள் மீதான அடக்குறைகளை நன்கு உணர்ந்திருக்கின்றார்கள்.

அர்ஜுன் டாங்ளேயின் ஆங்கிலத் தொகுப்பான "நஞ்சுள்ள ரொட்டி'யில் வருகின்ற பெரும்பாலான கதைகளும், நிகழ்வுகளும், தன் வரலாறும் கிராமங்களின் வாழ்க்கையைப் பற்றியது. சிறுவயதில் பேசப்படும் பல நினைவுக் கதைகளில் எழுத்தாளர்கள் தாங்கள் எப்படி பலவீனமாக ஒன்றும் செய்ய முடியாமல் இருந்தார்கள் என்பதை விவாதிக்கின்றார்கள். மிக மோசமாக நடத்தப்பட்டும் அதற்கெதிராக ஒன்றும் செய்ய முடியாமல் இருந்தார்கள். டாங்ளேயின் "நஞ்சுள்ள ரொட்டி' இன்றைக்குப் பல்கலைக் கழகங்களில் இலக்கியப் பாடமாக்கப்பட்டுள்ளது. டொராண்டோவில் உள்ள யார்க் பல்கலைக் கழகத்தில் நான்கூட பாடமாக நடத்தியுள்ளேன். அப்படி இருக்கும்போது இத்தொகுப்பில் கூறப்பட்டுள்ள தலித்துகளின் வாழ்வும், நினைவுகளும் இன்றைக்கு சரியில்லை என்பீர்களா? அல்லது அப்படி ஒன்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது இல்லை என்பீர்களா?

அப்படியல்ல. தலித்துகளின் உள்ளத்திலும், மனதிலும்தான் இந்த மாற்றம் வந்துள்ளது. சமூக அமைப்பு முறையில் அல்ல. கிராமங்களும் அதைச் சுற்றியிருக்கின்ற சேரிகளும், காலனி வீடுகளும் அப்படியேதான் இருக்கின்றன. தலித்துகள் ஒரு சொட்டு தண்ணீருக்காக இன்றும் போராடிக் கொண்டிருக்கின்றார்கள். ஒவ்வொரு பிரச்சனைக்கும் போராட்டங்கள் நடக்கின்றன. முன்பெல்லாம் போராட்டம் தீண்டத்தகாதவன் என்பதை மய்யமாகக் கொண்டிருந்தது. ஆனால், இன்று அதற்கு அரசியல் சாயம் பூசப்பட்டுள்ளது. இன்று இரண்டு எதிரிகள் மோதுகின்றனர். முன்பு ஒரு கிராமம் ஒரு தனி மனிதரைத் தாக்கியது. "பிறப்பறியாதவன் பெரிய மாற்ற அலையைக் கொண்டு வருகிறான். அவனை அடக்கிவிட்டால் எல்லோரும் அடங்கி விடுவார்கள்.' ஆனால் இன்று ஒரு தனி மனிதன் அழிக்கப்படுவதில்லை. சேரிகளே எரிக்கப்படுகின்றன. ஒரு சமூகமே படுகொலை செய்யப்படுகின்றது. இதன் அர்த்தம் என்னவென்றால், புரட்சிக்கனல் ஒரு தனிமனிதன் உள்ளத்தில் இருந்து பீறிட்டெழுந்தது. ஆனால், இன்று ஒரு சமூகமே பற்றி எரிகின்றது. வர்ணாசிரமத்தாருக்கும், தலித்துகளுக்கும் இடையே நடக்கும் மாபெரும் போர் இது.

சரி. அப்படியானால் எழுத்தில் என்ன பாதிப்பு ஏற்பட்டுள்ளது?

மாபெரும் போர் எழுத்தின் மேல் நிச்சயம் ஒரு பாதிப்பை ஏற்படுத்தும். 40 ஆண்டுகளுக்கு முன்பு எழுதத் தொடங்கியவர்களின் வர்க்கம், இன்று முடிவுக்கு வந்து கொண்டிருக்கின்றது. அவர்கள் இப்போது எழுதுவதில்லை. அந்தக் காலத்து மக்களின் இலக்கியம் மிகப் பழைய நினைவுகளையும், காலத்தையும், வரலாற்றுச் சூழலையும் கொண்டிருந்தது. இன்றைய தலித் இலக்கியம் நிகழ்காலத்தையும், எதிர்காலத்தையும் பற்றி சிந்திக்க வேண்டும். ஆனால், தலித் எழுத்தாளர்கள் இன்று நடக்கும் அநீதிகளைப் பற்றி சிந்திப்பதில்லை. காரணம், இனிமேல் நிகழப்போவது என்ன என்று தெரியாமல் இருக்கிறார்கள். இது குறித்து சிந்திக்க தொலைநோக்குப் பார்வையுடைய தலித் உருவாக வேண்டும். கடந்த கால வரலாற்றை எந்தப் பாமர மனிதனும் எழுதலாம். “நான் பிறந்தேன், வர்ணாசிரமத்தினர் தாக்கினார்கள், நான் பிச்சைக்காரனானேன்'' என்று எழுதுவதில் கெட்டிக்காரத்தனம் இருப்பதாகத் தெரியவில்லை. அப்படி எழுதுவது பெரிய இலக்கியம் அல்ல. இது வேறொரு வகையான அனுபவப் பதிவாக இருப்பதால் வாசகர்கள் விரும்பிப் படிக்கின்றனர். ஆனால், ஓர் இலக்கியம் என்பது தொலைநோக்குடையதாக இருக்க வேண்டும் என்றால், பாமர மக்களை முன்நோக்கி அழைத்துச் சொல்லக் கூடியதாக இருக்க வேண்டும். இன்றையச் சூழலில் தங்களின் நிலை என்ன என்று உணரச் செய்ய வேண்டும். இந்த செயல்பாடு நடக்காவிட்டால், தலித் இலக்கியம் தேக்க நிலையை அடையும். அதற்காக நான் பெரிதும் கவலைப்படுகிறேன்.

நீங்கள் ஏன் அப்படி நினைக்கிறீர்கள்?

அப்படி நினைப்பதற்குக் காரணம் உண்டு. தலித் இயக்கங்களில் இதுவரை தலித்துகள்தான் போராளிகளாகவும், உறுப்பினர்களாகவும் இருந்தார்கள். உருப்படியான வேலைகளைத் தொடங்கினார்கள். இயக்கத்தில் இருந்த தலைவர்கள், வரலாற்றில் தலித்துகளின் பிரச்சனைகள் எப்படி இருந்தன என்பதை விளக்கிக் கொண்டே இருந்தார்கள். அவர்களுடைய பேச்சில் வேகம் இருந்தது. மநுஸ்மிருதியை கடுமையாக விமர்சித்தார்கள். மகான்களின் காலம் என்று சொல்லப்படுகின்ற மகாபாரதம் அல்லது பகவான் ராமச்சந்திரன் காலத்தைய சமூக அமைப்பைச் சாடினார்கள். இதையேதான் தற்போதைய அநீதிகளுக்கும் விளக்கமாக இன்னும் சொல்லப்பட்டு வருகின்றன. “ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் நம் மீது சுமத்தப்பட்ட கொடுமைகளை சந்தித்து வருகின்றோம்'' என்று சொல்லிக் கொண்டிருப்பது என்றைக்குதான் முடிவு பெறும்? இன்னும் எத்தனை நாளுக்குத்தான் இதையே சொல்லிக் கொண்டிருக்க முடியும்? இன்றைக்கு சமகாலத்தில் உலகத்தில் நடைபெறுகின்ற பிரச்சனைகளோடு, மக்கள் இயக்கங்களோடு நம்முடைய பிரச்சனைகள், அநீதியான செயல்கள் விளக்கப்பட்டிந்தால் நாம் இன்னும் இந்த நிலைக்கு வந்திருக்க மாட்டோம். அதற்குக் காரணம் நம்முடைய இயக்கத் தலைவர்கள், போராளிகள் ஆகியோரின் சிந்தனைகளும், கருத்துகளும், விளக்கங்களும் ஒரு குறுகிய கண்ணோட்டம் உடையதாகப் பார்க்கிறேன்.

ஏனென்றால், தலித்துகளுக்கு எதிராக வன்கொடுமைகள் நிகழ்ந்தால், ஒரு தலித்தின் கண் பிடுங்கப்பட்டால், சேரிகள் எரிக்கப்பட்டால் மட்டுமே இவர்கள் போராடுகிறார்கள். காஷ்மீரில் தொடர்ந்து கொண்டிருக்கும் வன்முறைகளைப் பற்றியோ அல்லது ஹர்சத் மேத்தாவின் ஊழலைப் பற்றியோ அல்லது பஞ்சாபில் நடந்து கொண்டிருக்கின்ற பிரச்சனைகளைப் பற்றியோ இவர்கள் கவலைப்படுவதில்லை, அதைக் குறித்துச் சிந்திப்பதும் இல்லை. உலகமயமாக்கல் நம்மை நெருக்கி வருகின்றது. அது நமது இலக்கியத்தையும், இயக்கத்தையும், சமூகத்தையும் எவ்வாறு பாதிக்கின்றது என்பதைப் பற்றி சிந்திப்பதில்லை. இன்றைய கல்விமுறையால் எவ்வாறு பின் தள்ளப்பட்டு வருகின்றோம்; பொதுத் துறை நிறுவனங்களிலும், வேலைவாய்ப்புகளிலும் எப்படி சூட்சுமமாக ஏமாற்றப்பட்டு வருகிறோம் என்பதை அலசி ஆராய்வதில்லை. இவ்வாறு நாம் செயல்படாமல், சிந்திக்காமல் இருப்பதற்குக் காரணம் நம்முடைய குறுகிய சிந்தனைதான் நம்மை இந்த அளவுக்கு கொண்டு வந்திருப்பதாக நினைக்கிறேன்.

அது இருக்கட்டும். எப்படி இந்த குறுகிய சிந்தனை எழுந்ததாகப் பார்க்கிறீர்கள்?

நான் இளைஞனாக இருந்தபோது என் சிந்தனை கூர்மைப்பட்டது. சிந்தனை வளர்ச்சியும் தேவைப்பட்டது. நம்முடைய பிரச்சனைகளை எதிர்கொண்டு போராடும்போது கவனச் சிதறல் இல்லை. ஒரு தேவதையையே என் முன் கொண்டு வந்து நிறுத்தினாலும், என் சமூகத்துப் பெண்கள் பட்ட வேதனைகளும், அநீதிகளின் கொடுமைகளும்தான் என் கண்முன் வருகின்றன. தலித் பெண்கள் மீதான அநீதிகள் அதிகரித்தன. துன்பங்களால், வேதனைகளால் நம்மைப் பெற்ற பெற்றோர்களும் நசுக்கப்பட்டார்கள். அந்த நேரத்தில் நம் மீதான துன்பங்கள் அனைத்தும் புராணங்களாலும், இந்து மதக் கருத்துகளாலும் வந்தது என நினைத்தோம். எனவே, இந்து அடித்தளத்தைத் தகர்க்க வேண்டுமெனத் திட்டமிட்டோம். அன்றைக்கு நமது தேவை பல்லாயிரம் ஆண்டுகளாகப் புனிதம் எனப் போற்றி வந்த இந்து பாரம்பரியத்தைத் தீட்டாக்கி, அதன் புதிர்களைக் கண்டித்து, இந்து மதம் நம்முடைய பாரம்பரிய மதம் அல்ல என்று முழக்கமிடுவது அன்றைய வேலையாக இருந்தது. அந்தக் காலகட்டத்தில் அப்படி ஒரு முயற்சி தேவைப்பட்டது. அதைச் செய்தோம். அதே நேரத்தில் எதிர்காலத்தையும் தொலைநோக்கோடு பார்க்க வேண்டிய ஒரு அவசியம் இருந்தது. ஆனால், அது திட்டமிட்டபடி நடக்கவில்லை.

இன்னொரு காரணம், தலித் இயக்க வளர்ச்சியில் பங்கேற்ற முற்போக்குச் சிந்தனையாளர்கள், இப்போது தலித் இயக்கங்களில் இல்லை. ஆரம்பக் கட்டத்தில் தலித் இயக்கம் தொடங்கிய எல்லா போராட்டங்களிலும் அவர்கள் பங்கேற்றார்கள். தலித் பிரச்சனைகளில் ஈடுபட்டு வேலை செய்தார்கள். ஏனென்றால், தலித் பிரச்சனைகளில் அன்று ஈடுபட அதிக தலித்துகள் இல்லை. ஆனால், தலித் பிரச்சனைகளால் ஈடுபட்டு வேலை செய்ய நிறைய தலைவர்களும், போராளிகளும் இருக்கின்றார்கள். தலித்துகள் மட்டுமே தங்கள் சொந்தப் போராட்டங்களை முன் நின்று நடத்துகின்றார்கள். இதில் பங்கேற்க முற்போக்குவாதிகளை அவர்கள் அழைப்பதில்லை. இதைச் செய்வதற்கு நிறைய தலித் அமைப்புகள் வந்து விட்டன.

முற்போக்குவாதிகளும் மேம்போக்கான வேலைகளையே செய்தார்கள். அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆதிவாசிகளிடம் ஊழியம் செய்யச் சென்ற கிறித்துவ அருட்தொண்டர்கள் போலவே அவர்களும் தலித்துகளிடம் நடந்து கொண்டார்கள். கிறித்துவ அருட்தொண்டர்கள் ஆதிவாசிகளைப் பார்த்து, "நான் உங்களை உயர்த்தவே வந்தேன்' என்று சொல்வதைப் போல் அல்லாமல் "நாங்கள் உங்களோடு இணைந்து பணிசெய்ய வருகிறோம். நீங்கள்தான் எங்கள் தலைவர்கள். நாங்கள் உங்களின் போராளிகள்' என்று சொல்லியிருக்க வேண்டும். அதைச் செய்யாமல் அவர்கள் நமக்குத் தலைவர்களாக இருக்கவே ஆசைப்பட்டார்கள். அதனால் மீண்டும் நாம் அவர்களுக்கு வேலையாட்களாக இருக்க வேண்டியிருந்தது. சிறப்பாக உரையாற்றினார்கள். நாம் உட்கார்ந்து கேட்டுக் கொண்டிருந்தோம். நம்முடைய வாழ்க்கை அனுபவங்களைத்தான் பேசினார்கள், பேசட்டும். அதை ஏன் எங்களிடம் பேசுகிறார்கள்? அவர்களுடைய மக்களிடத்தில் அல்லவா பேசவேண்டும்? வர்ணாசிரம மக்களிடத்தில் அல்லவா தலித் பற்றிய விழிப்பு நிலையை உண்டாக்கியிருக்க வேண்டும். அதைச் செய்யவில்லை. எனவே, முற்போக்குவாதிகளை, பாதி வேலையைச் செய்த முற்போக்குவாதிகள் என்றுதான் கருத முடியும். மீதமுள்ள பாதி வேலையை அவர்கள் செய்யாததால், தலித் ஆதரவு நிலையைப் புரிந்துகொண்ட வர்ணாசிரமவாதிகள் முற்போக்குவாதிகளை ஓரம் கட்டினார்கள். "தலித்துகளோடு சேர்ந்து கொண்டு நம்மைக் காட்டிக் கொடுக்கின்றார்கள்' என்று விமர்சிக்கப்பட்டார்கள்.

இந்தச் சூழலில் அவர்கள் தங்கள் சொந்த மக்களை விட்டு நம் பக்கம் வந்ததால், தலித்துகள் அவர்களை வரவேற்றிருக்க வேண்டும். ஆனால், தலித்துகள் அவர்களை சந்தேகத்தோட பார்த்தார்கள். இவர்கள் நம் சமூகத்தைச் சார்ந்த மக்கள் இல்லையே, அந்த சமூகத்தைச் சார்ந்தவர்களாயிற்றே; எப்படி அவர்கள் நமக்குத் தலைவர்களாக வரமுடியும்? நம்முடைய முன்னேற்றத்துக்காக அவர்கள் ஏன் போராட வேண்டும்? நமக்காக அவர்கள் போராட வேண்டிய அவசியம் ஒன்றுமில்லையே! என்று கூறி, முற்போக்குவாதிகளைப் புறக்கணித்துவிட்டு "நாமே நமக்குத் தலைவர்களாக இருப்போம்' என்கிற முடிவை எடுத்தார்கள். ஆக, வர்ணாசிரம மக்களாலும், தலித் மக்களாலும் புறக்கணிக்கப்பட்ட முற்போக்கு வர்ணாசிரமவாதிகள் தோல்வியைச் சந்தித்தனர். முற்போக்குச் சிந்தனையின் தோல்விக்கும், இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தலை தூக்கிய பிற்போக்குச் சிந்தனையின் வளர்ச்சிக்கும் ஒரு காரணம், முற்போக்குச் சிந்தனையாளர்கள் வர்ணாசிரம மக்களிடம் தங்கள் விழிப்பு நிலையை ஏற்படுத்தாததுதான். இன்னொரு காரணம், தலித் சமூகம் முற்போக்குச் சிந்தனையாளர்களை ஏற்காதது. இதன் விளைவாக, மறுமலர்ச்சி அமைப்புகள் தலை தூக்கின. தலித் இயக்கங்களும் தங்கள் சொந்தக் காலில் நிற்கத் தயாரானார்கள்.

நான் இந்தியில் படித்த புதிய எழுத்துகள், நடுத்தர வர்க்க தலித்தைப் பற்றியது. இதில் தலித் இலக்கியம் தொடர்பான உங்கள் கருத்து ஒத்துப் போகிறதா?

தலித் இலக்கியம் என்பது பின்னுக்குத் தள்ளப்பட்ட, ஒடுக்கப்பட்ட, பலமற்ற மக்களின் அனுபவங்கள் மட்டுமல்ல. ஒரு தலித், அய்.ஏ.எஸ். அதிகாரியாக இருக்கலாம். அவருடைய அனுபவங்களும் இதில் இருக்கிறது. அண்மையில் ஒரு தலித் அய்.ஏ.எஸ் அதிகாரி தன்னுடைய "தன் வரலாற்று' நாவலை வெளியிட்டார். நாங்கள் அதை "ஒரு தலித்தின் தன் வரலாறு' என்றே பெயரிட்டோம். ஏனென்றால் ஒரு சாதாரண போராளியும், அய்.ஏ.எஸ். அதிகாரியும் இந்த சாதிய அமைப்பின் உளவியலுக்கு எதிராக நாள்தோறும் போராட வேண்டியுள்ளது. அது ஒரு போராளியின் போராட்டம்தான். ஆளுங்கட்சி அரசில் ஒரு தலித் அமைச்சராக இருந்தாலும், அதே சாதியமைப்புக்கு எதிராகப் போராட வேண்டியுள்ளது. இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் கே.ஆர். நாராயணன்கூட இதற்காகப் போராட வேண்டியிருந்தது. தலித் இலக்கியத்தின் வரையறைக்குள் ஒரு பாமர தலித்தின் போராட்டத்தையும் அல்லது இந்த நாட்டின் குடியரசுத் தலைவரின் சாதிக்கெதிரானப் போராட்டத்தையும் நாம் பார்க்க வேண்டும்.

நீங்கள் உங்கள் எழுத்துகளில் "யார் தலித்' என விளக்கியுள்ளீர்களா?

தலித் என்பவன் தீண்டப்படாதவன். இதுதான் சரியான விளக்கம். என் எழுத்து தீண்டப்படாதவர்களுக்காகத் தான் எழுதப்படுகின்றது. தீண்டப்படாதவர்கள் தங்கள் விடுதலைக்காகப் போராடிக் கொண்டிருக்கின்றார்கள். என் எழுத்துகள் அவர்களின் மனித உரிமைகளைப் பற்றிய விழிப்பு நிலையைக் கொடுக்கின்றன. இதுதான் எங்கள் இயக்கப் போராட்டங்களுக்கான எல்லை, சூழ்நிலை. ஆனால், இந்த நோக்கம் குறுகிய எல்லைக்குள் மட்டும் இருந்தால் அது இலக்கியத்திற்குப் பயன் அளிக்காது. தாழ்த்தப்பட்ட அனைத்து மக்களையும் இதில் சேர்க்க வேண்டும். இந்த அகண்ட சமூகத்தின் போராட்டங்களில் அனைவரும் பங்கேற்கின்ற ஒரு முழக்கத்தை நாம் பயன்படுத்த வேண்டும். அவர்கள் இயக்கக் கட்டமைப்பின் பங்காளர்களாக மாற வேண்டும். நமது எழுத்துக்கு வாசகர்கள் அவர்கள்தான். இவர்களுடைய விழிப்பு நிலையைத்தான் நாம் ஊட்டி வருகின்றோம். பங்காளருக்கான ஒரு தனி முழக்கத்தைக் கண்டுபிடிக்காவிட்டால் நாம் தனிமைப் படுத்தப்படுவோம். நமது போராட்டங்கள் சிறு, சிறு குழுக்களாக உடையும். பிரித்தாளும் வகையில் ஒவ்வொருவரும் தனித்தனியாகக் களையெடுக்கப்பட்டுத் தோற்கடிக்கப்படுவார்கள். எனவே, உரிமை மறுக்கப்பட்ட சுரண்டப்பட்ட மக்கள் எங்கு இருந்தாலும், எந்த நாடாக இருந்தாலும், எந்தச் சமூகமாக இருந்தாலும் அவர்கள் அனைவரும் புரிந்து கொள்ளக் கூடிய ஒரு மொழி நடையில் எழுத வேண்டும். அவர்கள் வர்ணா சிரமத்தாராக, வெள்ளையராக, வெள்ளையர் அல்லாதவராக இருந்தாலும் ஒடுக்கப்படும்போதும், சுரண்டப்படும்போதும் அவர்களும் நம்மில் ஒருவர்தான். இந்தக் கருத்துகளை முன்வைக்க வேண்டியது, தலித் வரையறைக்கு அவசியமானதாகும். அப்போதுதான் தலித் தோழமை உறுதிப்படும்.

உங்களுடைய கருத்துக்கு இன்னொரு பக்கம் இருக்கின்றது. அதாவது, தலித் இலக்கியம் ஒடுக்கப்பட்ட மக்களின் இலக்கியம் என்றால், தலித்துகளின் பிரச்சனை பொருளாதாரச் சுரண்டல் கொண்ட சமூகத்தின் பிரச்சனை என்றால், உங்களுடைய கருத்துக்கும், இதே நிலைப்பாட்டைக் கொண்டிருக்கின்ற மார்க்சியத்துக்கும் என்ன வேறுபாடு இருப்பதாகப் பார்க்கிறீர்கள். மார்க்சியம் பொருளாதாரச் சுரண்டல் கொண்ட சமூகத்தின் பிரச்சனைகளைத்தானே பேசுகின்றது?

மார்க்சியம் சுரண்டப்பட்ட மக்களின் பிரச்சனைகளைத்தான் பேசுகின்றது. உண்மைதான். ஆனால், இந்தியாவைப் பொறுத்தவரை, மார்க்சியம் வர்ணாசிரமத்தான் கையில்தான் உள்ளது. அதாவது பார்ப்பனர்கள் தொடங்கி வைத்த போராட்டங்கள் ஒரு முதலாளிக்கும், ஏழைக்கும் இடையில்தான். இந்திய மார்க்சிஸ்டுகள் மீதுள்ள வருந்தத்தக்க விசயம் என்னவென்றால், அவர்கள் இங்கே உள்ள சாதியப் பிரச்சனைகளைப் புரிந்து கொள்ள எந்த முயற்சியும் செய்யவில்லை. இந்தியச் சூழலில் சாதிய அமைப்புக்கும் நிலப்பிரபுத்துவ அடிமைத்தனத்துக்கும் எதிராகப் போராட வேண்டிய அவசியத்தை மார்க்சியம் ஏற்கவில்லை. பொருளாதார அமைப்புக்கு எதிராகப் போராடினோம். ஒரு ஆலையில் நடக்கும் பிரச்சனைக்காக, தலித்துகளும், வர்ணாசிரமத்தினரும் இணைந்து போராடினார்கள்; வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டார்கள். பொருளாதாரப் பிரச்சனைகளுக்காக, ஊதிய உயர்வுக்காக, ஆண்டு சம்பளத்துக்காக எல்லோரும் ஒன்றாகக் கூடி ஆலையை மூடச் செய்கின்றார்கள். ஆலைக்கு ஒன்றாகப் போராடுபவர்கள், ஆலையை விட்டு வெளியே வந்ததும் தங்கள், தங்கள் சாதிக் குடியிருப்புகளை நோக்கிச் சென்று விடுகின்றார்கள். சாதிய மோதல் நடக்கும்போது இதே தொழிலாளர்கள், ஒருவரை ஒருவர் கல்லால் அடித்துத் தாக்கிக் கொள்கிறார்கள். மார்க்சிஸ்டுகள் தொழிலாளர்களை ஆலைக்குள் ஒன்றுபடுத்தி வைத்திருக்கிறார்கள். ஆனால், அதே தொழிலாளர்கள் தாங்கள் வாழும் இடங்களில் ஒன்றுபடுத்தப்படவில்லை. தொழிலாளர்கள், ஆலையில் மட்டும் சமத்துவ எண்ணம் கொண்டவர்களாக இருந்தால் போதாது; வாழும் இடங்களிலும் சமத்துவத்துடன் வாழ வேண்டும். எப்படி நான் தலித்துகளின் பிரச்சனைகளை அதைவிடப் பெரிதான பொருளாதாரச் சுரண்டல் பிரச்சனையோடு இணைத்துப் பார்க்கிறேனோ, அதுபோல மார்க்சியவாதிகளும் என்னுடைய பிரச்சனையைப் பார்த்திருக்க வேண்டும். ஆலைக்குள் போராடியவர்கள், மக்கள் வாழும் குடியிருப்புப் பகுதிகளில் சமத்துவத்துக்காகப் போராடியிருக்க வேண்டும். ஆனால், இங்கு அப்படி நடக்கவில்லை. ஆலைக்குள்ளே போராடியவர்கள், ஆலையை விட்டு வெளியே வந்ததும் ஒருவருக்கு ஒருவர் எதிராகப் போராடிக் கொண்டிருக்கின்றார்கள்.

அப்படியானால் மார்க்சிஸ்டுகள், ஆலையிலும் மக்கள் குடியிருப்புப் பகுதிகளிலும் போராடியிருந்தால், நாம் கூறுகின்ற மார்க்சியத்துக்கும், அம்பேத்கரியத்துக்கும் பெரிய அளவில் வேறுபாடு வந்திருக்காது என்கிறீர்களா?

நிச்சயம் வந்திருக்காது. இன்னொன்று, ஏன் வேறுபாடு இருக்க வேண்டும்? இன்றைக்கும்கூட மார்க்சியத்தை நாம் எதிரிகளின் கொள்கையாகப் பார்ப்பதில்லை. அம்பேத்கரியத்தைப் போல, மார்க்சியம் சமூக ஏற்றத்தாழ்வை எதிர்த்துப் போராடுகின்றது. மார்க்சியம் நம்டைய தோழமைப் பாசறையின் சிந்தனைதான். கறுப்பர்கள் மீது வெள்ளையர்கள் நிகழ்த்துகின்ற இனவெறிப் பாகுபாட்டையும் மார்க்சியம் எதிர்க்கின்றது. உலகம் முழுவதிலும் ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராகப் போராடுகின்ற கொள்கைகள் எதுவாக இருந்தாலும் அது அம்பேத்கரின் சிந்தனைதான். அது ஆலைக்குள் வெளிப்படும்போது மார்க்சியமாகவும், வெள்ளை இனப் பாகுபாட்டுக்கு எதிராகப் போராடும்போது, கறுப்பர் புரட்சியாகவும் பொருள்படும். இதற்கான விளக்கங்கள் வேண்டுமானால் மாறுபடலாம். அதன் உள்ளீடு அனைத்தும் ஒன்றுதான். உலகில் அடிமை எங்கேயாவது இருந்தால், அவர் நம்மில் ஒருவர் என்கிற உணர்வு மேலோங்கி எழ வேண்டும். இங்குதான் என்னுடைய பொறுப்பும், பங்களிப்பும் வெளிப்படுகின்றது. இதுதான் தலித் எழுத்தாளர்களுடைய, தலித் இலக்கியத்தினுடைய முழக்கமாகவும் இருக்கின்றது.

நீங்கள் தலித் கவிதைத் தொகுப்பு ஒன்றை எழுதியிருக்கிறீர்களே! அவை எப்போது எழுதப்பட்டன?

அது ரொம்பவும் பழசு. 20 ஆண்டுகளுக்கு முன்பு எழுதினேன். ஆனால், அதில் உள்ள தலித் காதல் கவிதைகள் நடுத்தர வர்க்கத்தின் காதல் கவிதைகளைவிட வேறுபட்டது. ஏனென்றால், தலித் எழுத்தாளர்களின் காதல் கவிதைகள் தனித்தன்மை வாய்ந்தவை என்பதற்காக அப்படிச் சொல்கிறேன்.

இன்னும் சற்று விரிவாகச் சொல்லுங்கள்.

என்னுடைய கவிதைகளில் இரண்டு விதமான காதலியைப் பார்க்கலாம். ஒரு காதலி தலித் பெண். அவள் தன் காதலுடன் கூடவே தோள் கொடுத்து நிற்கின்ற பெண் போராளி. தேவை ஏற்படும் என்றால் அவனுடன் களத்தில் சாகவும் தயாரானவள். அவளுடைய முகம் நிலாவைப் போன்றதல்ல; அவளுடைய கன்னங்கள் சொக்க வைக்கும் சொர்க்கம் அல்ல. அவளைப் போலவே அவளின் காதலும் மிக எளிமையானது. நன்றாக உழைப்பாள். அவள் ஒரு தொழிலாளி. நன்றாகப் போராடுவாள். போராட்டங்கள் வரும்போது அவனுக்கு உற்சாகத்துடன் தெம்பு கொடுப்பாள். இது ஒரு வகை. இன்னொரு கவிதையில் வேறு விதமான காதலி. அவள் தலித்தை காதலிப்பாள். அவனுடைய சாதி என்ன என்று தெரிந்ததும் அவனை உதறிவிடுவாள். இவள் ஒரு வர்ணாசிரமக் காதலி. இப்படியாக, தலித் இளைஞர்கள் இரண்டு விதமான காதலைச் சந்திக்கிறார்கள். முதல் காதலில் தங்கள் சொந்த சமூகத்துப் பெண்களிடம் சமத்துவ அடிப்படையில் ஏற்பட்ட ஓர் உண்மையான காதல். இரண்டாவது காதல், வர்ணாசிரமப் பெண்களிடம் காணப்படும் பண்பு வெளிப்படுத்தும் காதல். அவன் யாரெனத் தெரிந்ததும் "நீ ஒரு தீண்டத்தகாதவன், நான் உன்னை விட்டுப் பிரிந்து விடுகிறேன்' என்கிறாள். தலித் பெண்கள் காணுகின்ற காதல் முற்போக்கானது. அதில் ஊடலும், பிரிவும் இல்லை. ஆனால், வர்ணாசிரமப் பெண்களின் காதல், உறவுகளை முறிக்கின்றது. இவற்றைப் பார்க்கும்போது, வர்ணாசிரமப் பெண்களிடம் இருக்கின்ற கசப்பான உணர்வுகளை அறிய முடிகின்றது.

பெண்களும் காதல் கவிதைகள் எழுதுகின்றார்களே...

பெண்களும் நிறைய காதல் கவிதைகள் எழுதி இருக்கின்றார்கள். அவர்களின் கவிதையிலும் காதலன் சமத்துவப் பார்வை கொண்ட ஒரு போராளியாக வெளிப்படுகிறான். தலித் காதல் கவிதைகள் காதலனையும், காதலியையும் வெறுமனே உடலின்பப் பொம்மைகளாகக் காட்டுவதில்லை. காதலர்கள் இருவரும் இயக்கப் போராளிகள். இருவருமே களத்தில் போராடக் கூடியவர்கள். அந்தப்புரத்திலும், கடற்கரையிலும் காற்றுக்கு உலாவும் காதலர்களின் கவிதை வரிகள் அவர்களுடையதல்ல. "என்னோடு வா! நீயும் அமைப்பைக் கட்டியெழுப்பு. நான் உன்னோடு இருக்கிறேன். வா! நீயும் அமைப்பைக் கட்டியெழுப்பு. நான் உன்னோடு இருக்கிறேன். வா! நாம் இணைந்து போராடுவோம்' என அழைப்பு விடுக்கின்றது. அவர்கள் உட்கார்ந்து பேசினால் சமூகத்தில் நடக்கும் அநீதிகளையும், அடக்குறைகளையும் பற்றிப் பேசுகிறார்கள். இதுதான் தலித் காதல் கவிதையின் சிறப்பு.

இன்னும் இரண்டு முக்கிய கேள்விகள். ஒன்று, பல்கலைக் கழகப் பேராசியர் ஒருவர் தன்னுடைய கட்டுரை ஒன்றில் சில விவாதங்களை முன்வைக்கிறார். அதாவது, தலித்துகள் தங்களுடைய சொந்த வாழ்க்கை அனுபவங்களை எழுதும்போது கற்பனையுடன்கூடிய காதல் காவியமாக எழுதுகிறார்கள். அதில் சாதி இல்லாதிருந்த ஒரு காலச் சூழல் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது, தலித்துகள் மீது யாரும் ஆதிக்கம் செலுத்தாத ஒரு காலம் இருந்ததாகக் குறிப்பிடுகிறார். அது இப்போதுள்ள சமுதாயத்தைக் காட்டிலும் மாறுபட்ட ஒரு சமுதாயமாக இருந்துள்ளது. தலித் அல்லாத வர்ணாசிரம எழுத்தாளர்கள்தான் தலித்துகளின் வாழ்க்கையைப் பற்றி இப்படி எழுதியுள்ளார்கள். இதை ஒரு தலித் எழுத்தாளன் எழுத்தோடு ஒப்பிட்டு எழுதுகின்றார். இவர் முன்வைக்கின்ற தலித் எழுத்தாளர், தன்னுடைய பாரம்பரியத்தை இழந்ததற்காக வருத்தப்பட்டாலும், கடந்த காலத்தில் வாழ விரும்பவில்லை. இப்போதுள்ள புதிய சமுதாயத்தில் வாழ விரும்புகிறார். இதற்காக செய்ய வேண்டிய சமரசங்களைப் பற்றி பேசுகிறார். தலித் எழுத்து சமரசம் செய்யும் தன்மை உடையது என்று சொல்கிறார்கள். அப்படியானால், பழமையைப் பற்றி சிந்திப்பது கற்பனை வளத்தில் உழல்வதற்குச் சமமா? அல்லது நவீனத்துவத்தைப் பற்றி சிந்திப்பது, சமூக அமைப்புடன் சமரசம் செய்வதாகுமா?

எனக்குப் புரியவில்லை. இதில் எங்கு சமரசம் வருகின்றது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக தலித்துகள் அடிமைகளாக நடத்தப்பட்டார்கள். இன்னும் ஆயிரம் ஆண்டுகள் அடிமைகளாக வாழ்ந்தாலும் அல்லது தனியாகப் பிரிந்து வாழ்ந்தாலும், அவர்கள் சமரசம் செய்யாமல் வாழ்ந்தார்கள் என்று சொல்வது தவறு. உண்மையில் அவர்கள் திரும்பத் திரும்பப் போராடிக் கொண்டிருக்கின்றார்கள். இது வரையிலும் இருசாரருக்கும் நடந்த சண்டை வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அது தனியாகப் பிரிவதற்கான சண்டை. இப்போது நடக்கும் சண்டை ஒன்று சேர்வதற்கானது. ஒரு புதிய சமுதாயத்தைக் கட்டி எழுப்புவதற்கான சண்டை. புதிய சமுதாயத்தைக் கட்டி எழுப்பும் சண்டையில் எப்படி சமரசம் வர முடியும்? இதுதான் தலித் இயக்கங்களின் உண்மையான குறிக்கோள். நாங்கள் தனித்து வாழ விரும்பியிருந்தால் போராட்டத்திற்கே இடமில்லை. ஒரு புதிய சமூகத்தை உருவாக்கும் சண்டையில் சமரசம் வர முடியாது. ஆதிக்க சாதிக்காரர்களோடு நாங்கள் வாழ வேண்டும். அதனால்தான் அவர்களுடன் போராடுகின்றோம். அவர்களுடன் சேர்ந்து வாழ விருப்பம் இல்லை என்கிற முடிவு எடுத்து விட்டால், சண்டைக்கே இடம் இல்லை. போராட்டம் என்பது எல்லோரையும் உள்ளடக்கியது. தலித்துகளும், வர்ணாசிரமத்தினரும் ஒரு புதிய சமூக அமைப்பைக் கட்டுவதில் நாம் முனைப்புடன் ஈடுபட வேண்டும். அப்படி ஈடுபடும்போது, இரு சாரரும் புதியவர்களாக இருப்பார்கள். இதுவரை நடந்து கொண்டிருக்கின்ற போராட்டம் இதற்கானது.

அண்மையில் சில இந்தி சிறுகதைகளைப் படித்தேன். இப்போது பலர் அய்.ஏ.எஸ். அதிகாகளாகி விட்டதாலும், கொஞ்சம் முன்னேறிய சமூகமாக மாறிவிட்டதாலும், தலித்துகள் எந்த மாதிரியான பிரச்சனைகளை சந்திக்கிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்ள முயன்று வருகிறார்கள். இந்த மாதிரி நிறைய கதைகள் இல்லை. ஒரு சில கதைகள்தான் இருக்கின்றன. இருப்பினும் அதில் கூறப்பட்டுள்ள கதைகளின் சூழல், தீண்டாமை நிறைந்ததாக இருக்கின்றது. ஆனால் இன்றைய சூழல் மாறிவருவதாக நீங்கள் சொல்கிறீர்கள். எப்படி?

போர் முறை இருக்கும்போது, படைத் தலைவன் எப்போதுமே குறிபார்த்தவனாக இருக்க வேண்டும். இலக்கியம் என்பது வாழ்க்கையை அப்படியே வரிக்கு வரி சொல்லிக் கொண்டு போவதல்ல. “நீங்கள் அடிமைகள். எனவே நீங்கள் உங்கள் மீதான அடிமைத்தனத்துக்கு எதிராகப் போராட வேண்டும்.'' இதுதான் முக்கியச் செய்தி. எப்படி இருந்தாலும் தலித் இலக்கியத்தின் குறிக்கோள் சாதி அமைப்புக்கு எதிராகப் போராடுவதுதான். மோனலிசா படமாக இருந்தாலும் இந்தப் பின்னணியில்தான் தீட்டப்பட வேண்டும். எந்த மூலையில் இருந்தாலும், எந்த வழியில் நின்றாலும், சாதி அமைப்புக்கு எதிராகப் போராடும் கருத்தைக் கொண்டு வரவேண்டும். அது அய்.ஏ.எஸ். அதிகாரியாக இருந்தாலும் இந்த நாட்டின் குடியரசுத் தலைவராக இருந்தாலும், நம் எழுத்துகளில் உள்ள மனிதர்களைப் பார்த்தால், அவர்களை சமூகப் பார்வையில்தான் பார்ப்போம். அதுதான் தலித் இலக்கியத்தின் முதல் குறிக்கோள். நாம் இதை மறந்தால் அது காணாமல் போய்விடும். சாதி முறை உயிரோடிருக்கும் வரை, நாம் நம்முடைய குறிக்கோளை உயிரோடு வைத்திருக்க வேண்டும். அதனால்தான் நாம் எழுத்தாளர்களாக இருக்கின்றோம். நாம் நடு நிலை வகிப்பவர்கள் அல்ல. தலித் எழுத்தாளர்கள் எது எழுதினாலும் அவர்களுக்கு ஒரு குறிக்கோள் உண்டு; கருத்து உண்டு. அதன் விளைவாக சமூகத்தைப் பற்றி எழுதும்போது சமுதாயத்தை மட்டும் காட்டுவதில்லை. அவர்களுடைய பங்களிப்பு அதில் இருக்கிறது. அது எது என்றால் சாதிய முறையை ஒழிப்பது.

இது என்னுடைய கடைசிக் கேள்வி. நீங்கள் நடுநிலையைப் பற்றி பேசினீர்கள். சில நாட்களுக்கு முன் அய்தராபாத்தில் நடந்த ஒரு கூட்டத்தில் யு.ஆர். அனந்த மூர்த்தி, நவீனத்துவத்தைப் பற்றி பேசினார். நவீன இலக்கியத்தில் எழுத்தாளர் ஒரு சாட்சிதான் என்றார். அந்த எழுத்தாளர் கொள்கைப் பிடிப்போடு இருக்க முடியாது என்றார். தலித் எழுத்துகளை நவீன இலக்கியம் என்றார். இதில் தலித் எழுத்தாளர்கள் நடுநிலை சாட்சி என நீங்கள் நினைக்கிறீர்களா?

இல்லை. இல்லை. தலித் எழுத்தாளர் நடுநிலையாக இருக்க முடியாது. என் தாய்க்கும், தங்கைக்கும் அநீதி நடக்கும்போது நான் சும்மாயிருக்க முடியாது. ஒரு வீடு பற்றி எரியும்போது நான் அமைதியாக இருக்க முடியாது. இலக்கியத்திலும் இதுதான் நடக்கிறது. தனக்கும், தன்னுடைய அனுபவத்துக்கும் தொடர்பு இல்லாதபோது, கற்பனையிலிருந்து புது அனுபவங்களை உண்டாக்கும்போது, ஒரு எழுத்தாளர் நடுநிலை வகிக்க முடியும். தலித் இலக்கியத்தில் எழுத்தாளர்கள் தங்கள் சொந்த அனுபவங்களை எழுதுகிறார்கள். இந்த இலக்கியத்தில் உள்ள எல்லாமே அவர்களுடையது. அவர்கள் நடுநிலையாக இருக்க முடியாது. நடுநிலையாக இருப்பது, தலித் இலக்கியத்துக்கும், இயக்கத்துக்கும் மிகுந்த விளைவை ஏற்படுத்தும், தலித் எழுத்தாளர்கள் நடுநிலையாக இருந்தால், அவர்கள் துன்பியல் கொண்டவர்கள். அவர்கள் ஒரு பக்கம் சாய்ந்துதான் ஆக வேண்டும். பதிவு செய்தும், எடுத்துக் கூறியும் மட்டுமே கலைப் பொறுப்பை நிறைவேற்ற முடியாது. தலித் இலக்கியம் என்பது செயல்பாடு. அவர்கள் செயல்களில் ஈடுபட வேண்டும். எழுத்தாளர்கள், போராளிகளாக இருந்தால்தான் தலித் இலக்கியம் உயிரோடு நிலைத்து நிற்கும். லட்சுமண் கெய்க்வாட் ஒரு போராளி. அதனால்தான் அவருடைய எழுத்துகளை அவ்வளவு ஆர்வமாகப் படிக்கின்றோம். ஒரு எழுத்தாளரிடம் குடிகொண்டுள்ள போராளியை விரட்டி விட்டால், அவர் தலித் எழுத்தாளராக இருக்க முடியாது. தலித் எழுத்தாளருக்கு ஒரு குறிப்பிட்ட உள்ளுணர்வு இருக்க வேண்டும். அவர் கடமை உணர்வு உடையவராக இருக்க வேண்டும். உள்ளுணர்வையும், கடமையுணர்வையும் நீக்கி விட்டால் அவர் தலித் எழுத்தாளராக இருக்க முடியாது. எனவே, ஒரு தலித் எழுத்தாளருக்கு இருக்க வேண்டிய முதல் தகுதி, அவர் இச்சமூகத்திற்கு கடமையுணர்வு உள்ளவராக இருக்க வேண்டும். இதயத்திலும், மனதிலும் தலித் உணர்வு உள்ளவராக இருக்க வேண்டும். ஆதிக்கச் சாதியினர்தான் அழியாத இலக்கியம், நடு நிலையாக இருக்க வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள். இந்தத் தவறானப் பாதையிலிருந்து நாம் நம்மைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

Pin It