பார்ப்பனியத்தின் வெற்றிக்குப் பிறகு, அக்கருத்தாடல்களே தமிழைச் சுற்றிச் சுற்றி வளைத்துப் போட்டன. அதனைக் கடந்த உலகளாவிய பரந்த பார்வைக்கும், சமத்துவ வெளிப்பாட்டிற்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. மொழியின் தத்துவ அடிப்படையான, அபூர்வமானதும் மேலானதுமான பவுத்த சாராம்சங்கள், சமஸ்கிருத உள்வாங்கலால் திரிபுகளாகி துருத்திக் கொண்டு நின்றது. தற்குடிகளின் பவுத்த அனுபவம், மானுடத்தின் வலிதீர்க்கும் செயலாடல்களும் பார்ப்பனியம் கவ்விய தமிழுக்கு அந்நியமானது. தமிழின் முப்பரிமாணங்களான இயல், இசை, நாடகம், பார்ப்பனியச் சமூக அமைப்பின் இயக்கப் பரிசோதனைக்குள் சிக்கியது.

பார்ப்பனியத்தின் ஆக்கிரமிப்புக்கு முந்தைய தமிழின் மொழி முதல் வாதங்களான அறவியல், அறிவியல் சிதைக்கப்பட்டன. வெகுமக்களுக்கும் மொழிக்குமான உறவு, பார்ப்பனியத்தினுள் கொண்டுவிடும் ஒருவழிப்பாதை ஆனது. அதனைக் கடந்தோ, மறுத்துவிட்டோ தமிழின் இயல்பான பாதையில் செல்ல முயன்றவர்கள் ‘சமூக விலக்கம்' செய்யப்பட்ட தற்குடிகளாக இருந்தனர். தமிழியல் பார்ப்பனியமாக நிர்மாணிக்கப்பட்டபோது, தமிழின் மூல வார்ப்புகள் மூளியாகி விட்டன. வேதாந்தத்தில் பின்னப்பட்ட வந்தேறிகளின், வந்தேறி அடிவருடிகளின் எதிர்மறைச் சரக்காகி, சாதிப்படிநிலையில் தங்களை உயர்த்திக் கொண்டோர் பாவிக்கும் மொழியே நன்மொழி என நடைமுறைப்படுத்தப்பட்டது. சொந்த மொழியைப் பார்ப்பனியத்திற்குப் பறிகொடுத்து, வீழ்த்தப்பட்டோரின் மிச்சமொழி ‘பறை மொழி' ஆனது.

‘பறைத் தமிழ்' என்பது சாதிய வக்கிரத்தோடு ஒதுக்கி வைக்கப்பட்ட பெயர்தான் என்றாலும், உண்மையும் அதுதான். தீண்டாமைக் கொடுமையாலும், ஆயிரங்காலக் கல்வி மறுப்பாலும், சமூகத்தின் மய்ய நீரோட்டத்திலிருந்து தொடர்ந்து விலக்கி, ஒடுக்கி வைக்கப்பட்ட நிலையில், தாழ்த்தப்பட்ட தமிழின மக்களிடம் மட்டுமே தமிழ் தன் சாரத்தை இழந்துவிடாமல் மூலத்தன்மையோடு உயிர்ப்பித்துக் கொண்டது. அவர்கள் மட்டுமே அறுவெறுப்பு கொள்ளும் படியான எவ்விதக் கலப்படமில்லாமலும், பார்ப்பன வேத மதக்கறை படியாமலும், சாக்கிய பவுத்த தமிழரின் வேர்த்தன்மையை இழக்காமலும் தமிழை இயக்கி வந்தவர்கள் ஆனார்கள். அதன் காரணமாகவே, தாழ்த்தப்பட்ட தமிழர்கள் தமிழைப் பற்றுவது என்பதே தமிழைப் பாவிப்பது என்பது ஆனது.

இன்றைக்கு, ஏறத்தாழ 150 ஆண்டுகளுக்கு முன்புவரை எல்லா ஆதிக்கச் சாதியினரும் புராண இதிகாசக் கதையளப்புகளை தமிழ் வயப்படுத்தி வெளியிட்டுக் கொண்டிருந்த நிலையில், தற்குடியினரில் எண்ணற்ற கவிஞர்கள், புலவர்கள், எழுத்தாளர்கள், பேச்சாளர்கள், சட்டவதானங்கள், தசவதானங்கள், சமூக அரசியல் தலைவர்கள் நிரம்பியே இருந்தனர். சட்டவதானம் தஞ்சை வைரக் கண் அழகப்ப வேலாயுதப் புலவர் (1830 - 1892) தன் முதலில் நாடக நூல்களை எழுதியவர்களில் இரண்டாமவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்துத்துவத்தின் இதழ்களான ‘இந்து மத பிரகாசிகை' - 1883, ‘வைதீக சித்தாந்த தீபிகை- 1884, ‘பிரம்ம வித்யா' - 1886, ‘அமிர்தவசினி' - 1872, ‘ஞானபோதினி' - 1897, ‘உபநிஷார்த்த தீபிகை' - 1898, ‘உபநிஷத்து வித்யா' - 1898 போன்றவை எல்லாம் பார்ப்பனிய மத சாதிகளின் வளர்ச்சியைப் பற்றியும், பெண்ணடிமைத்தனத்தையும் மட்டுமே வலியுறுத்திய காலத்திற்கு முன்பே தற்குடியான ஆதி திராவிடர்கள் வெளியிட்ட நூல்களும், இதழ்களும் பார்ப்பனியச் சமூக ஒழிப்பை நோக்கியே நகர்ந்தன.

புலவர் பா.அ.அ. ராசேந்திரம் பிள்ளை என்ற ஆதிதிராவிடப் பெரியார், பார்ப்பனியக் கருத்தாடல்களுக்கு எதிர்வினையாக ‘உலகம் ஒரு நீதிக்கதை' - 1868, ‘ராணி எஸ்தர்' - 1870, ‘இன்பமும் துன்பமும்' - 1875, ‘உழைப்பே செல்வத்தினும் பெரிது' - 1884, ‘இளமையில் கல்' - 1889, ‘ஈசாரேபகா திருமணம்' - 1895 போன்ற சமூக நீதி படைப்புகளை வெளியிட்டார். புலவர் பா.அ.அ. ராசேந்திரம் பிள்ளையைப் போன்றே, பூஞ்சோலை முத்து வீர நாவலர் என்ற ஆதி திராவிடர் அறிஞர், ஒரு நூற்றாண்டுக்கு முன்பே ‘மகாவிகட தூதன்' வாயிலாக பார்ப்பனியச் சமூக அமைப்பைப் பகடியோடு தோலுரிக்கும் விதத்தில் பகுத்தறிவு சமத்துவக் கருத்துகளை வெளியிட்டார்.

இதே காலகட்டத்தில் பல ஆதிதிராவிடப் படைப்பாளிகள், தங்கள் இதழ்களின் மூலம் தற்குடிகளோடு சங்கமம் ஆகியிருந்தார்கள். ‘சூரியோதயம்' - 1869, ‘பஞ்சமன்' - 1871, ‘சுகிர்தவசனி' - 1877, ‘திராவிடமித்திரன்' 1885, ‘திராவிட பாண்டியன்' - 1885, ‘மகாவிகடதூதன்' - 1886, ‘பறையன்' - 1893, ‘விகடதூதன்' - 1897, ‘இல்லற ஒழுக்கம்' - 1899, ‘மதராஸ் டெம்ப்ரன்ஸ் ஹெரால்ட்' - 1899, ‘பூலோக வியாசன்' - 1900 போன்ற இதழ்கள், ஒரு நூற்றாண்டுக்கு முன்பே சமூக விடுதலைக்கான அறிவையும் வியூகத்தையும் எடுத்து வைத்தன.

மானுடத்தின் எதிர்மறையான பார்ப்பனியத்தை எதிர்த்து நிற்பதில் ஆதிதிராவிடர்களுக்கென்று ஓர் பாரம்பரியம் தொடர்ந்து வந்தது. அவர்கள் நூல்களை வெளியிடுவதிலும், இதழ்களை நடத்துவதிலும், சாதி இந்துக்களை எதிர்த்து அறிக்கைகள், மறுப்புரைகள் வெளியிடுவதிலும், இயக்கத்தைக் கட்டமைப்பதிலும் தொல்தமிழர் மரபைத் தக்க வைத்துக் கொண்டேயிருந்தார்கள். இதில் அறிவாசான் அயோத்திதாசர் (1845 - 1914), இம்மண்ணின் மைந்தர்கள் பார்ப்பனியத்தால் இழந்த சுயமுகத்தை மீட்டெடுத்து - வர்களை பிறவிப் பவுத்தர்களாகவும், தமிழராகவும், தமிழாகவும் நிலைநிறுத்தியவர்களில் முதலானவர் ஆவார்.

அயோத்திதாசரின் அடிச்சுவட்டில் தடம் பதித்து, தொல் தமிழரின் மொழியையும் மார்க்கத்தையும் நிலைநாட்ட, தன் வாழ்வை ஈந்தவர்தான் அய்யாக்கண்ணு புலவர். இவர், அன்றைய வடஆர்க்காடு மாவட்டத்தில் அரக்கோணம் வட்டம் இச்சிபுத்தூர் கிராமத்தில், தொல் தமிழர்களின் வம்சா வழியில் வந்த நாராயணசாமி - அலர்மேல் நங்கை இணையருக்கு 8.10.1875 அன்று பிறந்தார். இச்சிபுத்தூரில் வித்துவானாக இருந்த விஜயப்ப (ரெட்டியார்) அவர்களிடம் கல்வி பயின்று, விடலைப் பருவத்திலேயே சிலமந்தை எனும் ஊரில் ஆசிரியராகப் பணியாற்றினார். தன் ஆசிரியர் பணியை, மனிதர்களுக்குள் ஏற்கனவே இருக்கும் பூரணத்துவத்தை வெளிக் கொண்டுவரும் ஆயுதமாகப் பயன்படுத்தினார். கல்வி பயில்வதைக் கடமையாகவும் உரிமையாகவும் கொள்ள வலியுறுத்தினார்.

தானும், தன் சமூகம் அறிவும் ஆக்கமும் கொண்டது என்று சுரணைப்பட்ட அய்யாக்கண்ணு புலவர், நடைமுறை ஆதிக்கச் சமூக அமைப்பு, சாதியப் பிழையின் மேல் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. அதைப் புரிந்து கொள்ள முடியாதபடி, மக்கள் மத மவுடிகத்தால் விலங்கிடப்பட்டிருக்கிறார்கள் என்ற தெளிவைப் பெற்றவராய், சமூக உறவில் சமச்சீர்மை நிலவும் ஏக்கத்திலேயே வளர்ந்து வந்தார்.

தாழ்த்தப்பட்ட தம்மானுடர்களின் எதிர்கால வாழ்வைப் பற்றிய அலசலுக்கும், தேடலுக்கும் உண்மையைக் கண்டுணரும் வேட்கைக்கும் தன்னை செலவிட்டுக் கொள்கிற இலக்கியவாதியான அவர், தன் சமூகம் சார்ந்த மனிதர்கள் விரிப்பில் திளைத்த கோலார் தங்க வயலுக்கு வந்து சேர்ந்தார். தன் குடும்ப வாழ்க்கையையும், சமூக வாழ்க்கையையும் நடத்த வல்ல பொருத்தப்பாடு கோலார் தங்க வயலில் இருந்ததால், 24.5.1900 அன்று, தங்கச் சுரங்க ஒப்பந்தக்காரர்களிடம் எழுத்தர் மற்றும் கணக்கர் பணியை மேற்கொண்டார்.

தொல் தமிழர் தாமிழந்த மார்க்க அடையாளத்தைத் தேடுவது கண்டறிந்து, அதை மறுஉறுதி செய்வதென அயோத்திதாசர் எடுத்த முடிவின் கூட்டுச் செயல்பாட்டிற்காக, அயோத்திதாசரால் தங்க வயலுக்கு அனுப்பி வைக்கப்பட்ட பவுத்த வித்தகர் எம். ராகவரின் பவுத்த கருத்துப் பொழிவில் ஈர்க்கப்பட்டு, தம் துணைவியார் அம்மாய் அம்மாளுடன் இணை சேர்ந்து, அய்ரிஷ் பிக்கு யு. விசுத்தா அவர்களிடம் பஞ்சசீல உபதேசம் பெற்று, மானுடப் பேரொளி புத்தரின் அற வழியில் அய்க்கியமானார்.

18.11.1907 அன்று தங்க வயல் மாரிக்குப்பம் பவுத்த சங்கத் தலைவர் வள்ளல் எம்.ஒய். முருகேசம் தம்ம தாயகா அவர்களால் நிறுவப்பட்ட கவுதமா பவுத்தப் பள்ளியில் தமிழாசிரியராக அமர்த்தப்பட்டார். தமிழ்ப் பாடத்தை பள்ளி மாணவர்களுக்கு எழுச்சியோடும் புதுமையோடும், அவர்கள் தங்கள் மனித ஆற்றலை வளர்த்தெடுத்துக் கொள்கின்ற வகையில் கற்பித்தார். பவுத்த சங்கத்தின் சார்பில் இலவசமாக இளைஞர்களுக்கு தமிழ் இலக்கண இலக்கியங்களைக் கற்பித்ததோடு, பவுத்த அழகியல் என்னும் கருத்தாக்கத்தில் அவர்கள் தெளிவும் உறுதியும் பெற உழைத்தார்.

1912 ஆம் ஆண்டில் பெங்களூர் சூசையப்பர் கல்லூரி தமிழ்ப் பேராசிரியர் கி.தொ. சபாபதி நாவலரிடம் கல்வியியல் முறையில் பயின்று, தம் தமிழியத்தை வெளிப்படுத்திய புலவரானார். தமிழையும் பவுத்தத்தையும் தம் இருகண்களாகப் பாவித்த இ.நா. அய்யாக்கண்ணு புலவருக்குள் தமிழ் மொழிப் புலமையும் பவுத்த நெறிஅடர்த்தியுமே போட்டிப் போட்டுக் கொண்டு வளர்ந்தது. இப்பெருமகனாரின் தமிழ் பவுத்தச் சேவையில் உந்தப்பட்ட ஆர். எத்திராசன், சி.பி. சுப்பிரமணியம், சக்கரவர்த்தி நாயனார், பி. முருகேச உபாத்தியாயர் போன்ற கருத்தாழமிக்க சொற்பொழிவாளர்கள் தோன்றி, தங்க வயலில் பவுத்தம் தழைத்தோங்க அருந்தொண்டாற்றினர்.

Ambedkar and his wife Savitha

உயரும் மானுட அறம் பற்றிய கேள்விகளுக்கு பதிலை உள்ளடக்கும் திராணி கொண்டவராக விளங்கினார். பழுத்த பகுத்தறிவுவாதியான அவர், எல்லா மதவாதிகளின் இடக்கு மடக்கான கேள்விகளுக்கும் உரிய பதிலளித்து அவர்களைத் திக்கு முக்கு ஆடச் செய்தார். சைவ ‘தாதா' ஒருவர் புலவர் அவர்களைத் தேடிவந்து, ‘அவனின்றி ஓர் அணுவும் அசையாது' என்று தாயுமானவர் கூறி உள்ளாரே, இதன் கருத்து என்ன என்று வினவினார். உடனே புலவர், இதில் பொருள் இரட்டித்து வந்திருக்கின்றன என்றுகூறி, தாயுமானவர் திரிந்தலைந்து தேடிய பரம்பொருள் ஒரு கானல் நீர் என்றுணர்ந்து, அவனின்றி ஓர் அணுவும் அசையாது அதாவது அவனவன் செய்கையின்றி ஓர் அணுவும் அசையாது. ஒரு காரணமுமின்றி ஒரு காரியமும் நடவாது என்ற பொருள்படக் கூறியுள்ளார் என்றார்.

தமிழில் தலைசிறந்த திறனாய்வாளரான புலவர் இ.நா. அய்யாக்கண்ணு, திருவள்ளுவரின் கொள்கைகள் முற்றாக பவுத்த மார்க்கக் கொள்கைகளே என்றும், திருக்குறள் ஒரு சார்பு நூல் என்றும், திரிப்பிடகம் அதன் மூலநூல் என்றும், பதிவு செய்தார். திருக்குறளில் கடவுள் வாழ்த்தில் வரும் பத்துப் பாடல்களிலும் கடவுள் என்ற சொல்லே இல்லை. மீதமுள்ள 1320 பாடல்களிலும் கடவுள் என்ற சொல் ஓரிடத்திலும் காணப்படவில்லை. 132 அதிகாரத்திலுள்ள சொல்லாடல்களை வைத்தே ஒவ்வொரு அதிகாரத்திற்கும் தலைப்பு அமையப் பெற்றுள்ளது. ஆனால், கடவுள் என்ற சொல்லே இல்லாத முதல் அதிகாரத்திற்கு ‘கடவுள் வாழ்த்து' என்ற பொருந்தா தலைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. தலைவர் வணக்கம் என்பதே பொருத்தமானதாகும். ஆனால், இத்தலைப்பு திரிபுக்கு ஆட்பட்டுள்ளது என்பதை எடுத்துரைத்தார்.

இறைவாழ்த்தைக் கூறுவதாகக் காட்டப்படும் திருக்குறள், ஒருபோதும் பக்தி வழியினை போதிப்பதில்லை. அரசு முறைமையினை ஆராய்ந்த திருவள்ளுவர் அரசனையும் பாடவில்லை. மனிதரே அவர் யாத்த குறளின் நாயகர். ‘இறை' என்ற சொல் கடவுளை உணர்த்துகிறது எனப் பொருள் கொள்வதைவிட, தலைவரை உணர்த்துகிறது எனக்கொண்டு, மனிதருக்கு நாயகர் என்று எண்ணப்படுவதே பொருத்தப்பாடாகும் என்றார். ஆகவே, திருவள்ளுவர், மக்களினத்தின் தலைவரை (புத்தரை) ஆதிபகவன் வாலறிவன், மலர் மிசை ஏகினான், அய்ந்தவித்தான், அறவாழி அந்தணன் எண்குணத்தான் எனும் சொற்றொடர்களால் நம் மனக்கண் முன்நிறுத்திக் காட்டுகிறார் என்று சுட்டிக் காட்டினார்.

புலவர் அவர்கள் 1912 இல் புத்தரின் வாழ்க்கையை கவிதையாக எழுதினார். அது, தொல்குடியினரின் பாராட்டைப் பெற்றது. இந்நூலின் சில பகுதிகளைத் தேர்ந்தெடுத்து வைசாக பவுர்ணமி தினத்தன்று திருச்சி, சென்னை, கோவை வானொலி நிலையத்தினர் இசை அமைத்து ஒவ்வொரு ஆண்டும் தவறாமல் இன்றளவும் ஒலிபரப்பி வருவது குறிப்பிடத்தக்கதாகும். கர்நாடக வரலாற்றை தன் முதலில் தமிழில் வரைந்த பெருமை புலவர் அவர்களையே சாரும். இதை எளிய நடையில் மாணவர்களுக்குப் பயன்படும் வகையில் வெளியிட்டார். இவ்வரலாற்று நூலுக்கு தமிழறிஞர் கா. நமச்சிவாயம் (முதலியார்) அணிந்துரை வழங்கியுள்ளது சிறப்புக்குரியதாகும். இந்நூல் கர்நாடக மாநிலத்தில் பாடநூலாக ஆக்கப்பட்டுள்ளது. இது, அவரது வரலாற்றறிவுக்குக் கிடைத்த அங்கீகாரமாகும். அன்றைய மைசூர் சமஸ்தான மன்னர் சிறீகிருஷ்ணராஜ (உடையார்) ஆட்சியின் போது, சமஸ்தான ஆஸ்தான புலவராக ஏற்றுக் கொள்ளப்பட்டு, அய்யாக்கண்ணு புலவர் மன்னரின் ரத்தினக் கம்பளத்தைப் பரிசாகப் பெற்றார்.

ராகவர், எம்.ஒய். முருகேசம், சி. குருசாமி, ஏ.பி. பெரியசாமிப் புலவர், ஜி. அப்பாதுரையார் ஆகியோருக்குத் தோள் கொடுத்து பவுத்தத்தை வளர்த்தெடுத்த புலவர் அவர்கள், தென் ஆப்ரிக்காவில் குடியேறியவர்களில் பெரும்பாலோர் தம் உறவினர்கள் என்பதை கருத்திற் கொண்டு, 1920 இல் நேட்டால் டர்பன் பவுத்த சங்கம் தோன்றுவதற்கு, அயோத்திதாசரின் புதல்வர் ராசாராம் அவர்களுக்கு ஆதாரபலமாக விளங்கினார். ஏ.பி. பெரியசாமிப் புலவரை நேட்டாலுக்கு அனுப்பி வைத்து, அவர் தலைமையில் பவுத்த சங்க விழா நடக்க தம் உறவினர்களைக் கொண்டு ஏற்பாடு செய்தார்.

Aiyyakannu புலவர் அவர்கள் இசைத்தமிழை அன்றைய தமிழ்ப் புலத்தில் பவுத்த மானுட ஓர்மையுடன் உள்வாங்கி வெளிப்படுத்தும் ஒரு பெரும் புலமையாளராகத் திகழ்ந்தார். அவரின் கல்விசார் முயற்சிகளின் ஒரு கிளையாக பவுத்த இசை சபா நிறுவப்பட்டது. அதில் பவுத்தமார்க்கத்தின் இரண்டாம் நிலைத் தலைவர்களாக வாய்த்த ஓ.எம். பாபு, எம்.பி. நயினார்பாளையம் ஆகியோர் பிரபல பாடகர்களாகவும், பாட்டு கற்பிப்பவர்களாகவும் ஆகினர். புலவரால் இயற்றப்பட்டு, இந்த இரு தலைவர்மார்களாலும் பாடப்பட்ட கவிப்பாட்டுகள் ஒவ்வொரு பவுத்த கூட்டங்களிலும் சொற்பொழிவுகளிலும் தவறாமல் வரவேற்கப்படும் ஒரு கூடுதல் நிகழ்ச்சி ஆகியது.

1914 மே 6 புதன் கிழமை அன்று, புகழ் பெற்ற ‘தமிழன்' ஏடு தன் ஏழாண்டுகால வாழ்வில் முதன் முறையாக வெளிவரத்தவறியது. அடுத்தடுத்த புதன்களிலும் அப்படியே. இறுதியாக, சூன் 17 புதன் அன்று அது வெளிவந்த போது அதில் ஒரு வரி மாறியிருந்தது. பதிப்பாசிரியர்: க.அ. பட்டாபிராமன். அந்த இதழின் கருப்புக்கரை கட்டிய பக்கங்கள், பண்டிதர் அயோத்திதாசர் மே 5 அதிகாலை ராயப்பேட்டையிலுள்ள அவரது இல்லத்தில் வைத்து காலமான துயர செய்தியை அறிவித்தன. அயோத்திதாசருக்குப் பிறகு அவரது புதல்வர் ‘தமிழனை' வெளியிடுவதில் மிகுந்த சிரமத்தோடு ஆர்வம் காட்டி வந்தார். ‘தமிழன்' தொடர்ச்சியற்று வந்த நிலையில், வள்ளல் ஒய்.எம். முருகேசம் அவர்களின் பின்புலத்துடன் ‘தமிழன்' வெளிவந்த காலத்தில் புலவர் அவர்கள் (1930 - 32) ‘தமிழனுக்கு' ஆசிரியராக இருந்தார்.

பவுத்தத்தின் வீச்சை அளவெடுக்கும் செய்தி விவரண இலக்கியம் படைத்த புலவர், பவுத்த சாராம்சத்தின் ஒவ்வொரு அங்குலத்தையும் விரிவாய்ச் சித்தரிக்கவே தமிழைக் கருவியாக்கினார். ‘பகவத்தியான சோடச மாலிகா', ‘பகவத் கோத்திர பண்மணிமாலை', ‘திருப்பாசுரக் கொத்து', ‘புத்த சரித்திரப்பா' (உரைநடை) போன்ற நூல்கள், அவர் தமிழறிவுக்கும் பவுத்த அறிவுக்கும் சான்று பகர்வனவாகும். பவுத்த இலக்கிய வரலாற்றில் இவரது படைப்புகள் ஒளிமிகு இயலாகும்; ஒரு முக்கிய பரிணாமமாகும்.

கோலார் தங்கவயலில் புலவர் ஏற்படுத்திய பவுத்த எழுச்சியில், சேரி வாழ் மக்களின் வாழ்க்கையை மிகைப்படுத்தியும், கதைமுடிவில் நந்தன் தீக்குளித்து பூணூல் அணிந்த பின்னரே முக்தி கிடைப்பதாகவும் அமைக்கப்பட்ட நந்தனார் படத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் மறியல் செய்து, திரையரங்குகளை வெடிவைத்துத் தகர்க்கும் நிலை உருவாகி, 1936 இல் கே.பி. சுந்தராம்பாள் மற்றும் 1942 இல் தண்டபாணி தேசிகர் நடித்த நந்தனார் படங்கள் இன்றுவரை திரையிடப்பட முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அக்கால சூழ்நிலைமையில் புலவரின் தாக்கம் பெற்ற சாம்பியன் மைன் ஜி.டி. தங்கராஜ் அவர்கள், 1939 இல் ‘தாழ்த்தப்பட்டோர் இந்துக்கள் அல்ல' என்ற நூலை வெளியிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

புலவரால் உருவாக்கப்பட்ட கலை இலக்கியவாதிகளான மதுரகவி நா.பா. ராமானுசம், புரட்சிப்பாவலர் கே.ஜி. துரைராசன், கவிஞர் வி.மு. கணேசன் போன்றோரே பிற்காலத்தில் தமிழை நினைவூட்டுபவர்களாகத் திகழ்ந்தனர். தமிழ் பவுத்த புலவர்கள் சீத்தலைச் சாத்தனார், இளம் போதியார், நாதகுத்தனார், புத்தமித்தரர், பெருந்தேவனார் வரிசையில் இடம் பெற்று பவுத்த தமிழ்க் கடலாய் விரிந்த புலவர், பவுத்தப் புரட்சியின் ஆதாயங்களைக் கட்டிக்காத்து, அதை மக்களிடம் சேர்ப்பதில் மிகக் கவனமாக இருந்தார்.

புலவருக்கு கை கொடுத்தது அவரது அறவுணர்வும் உளத்திடமும் மட்டுமல்ல; பண்பட்ட பேச்சு, சமூகப் புரிதல், அறிவுக் கூர்மை ஆகியனவும் ஆகும். ஆழமான, அடக்கமான, மிகையற்ற அவரின் மனித இயக்கம், கோலார் தங்க வயலில் தொல் தமிழரின் விடுதலைக்குத் தொடர்ந்து பரிந்துரைக்கப்பட்டதாகவே இருந்தது. மனித குலத்தார் அனைவருக்கும் தன்னலத்திற்கு அப்பால் சமூக வாழ்க்கைக்கான பவுத்த வழி வாழ்க்கை இருக்கிறது என்பதை வாழ்ந்து காட்டிய புலவர் 26.9.1955 அன்று தன் 80 ஆவது வயதில் பஞ்ச ஸ்கந்த பிரிவினை அடைந்தார். 1930இல் கர்நாடக சரித்திரத்தை எழுதியதற்காக மன்னரிடம் கவுரவம் பெற்ற புலவரை கவுரவிப்பதற்காக, அவருக்குச் சிலை வைக்க ராபர்ட்சன்பேட்டை நகரசபை முடிவு செய்தது. ஆனால், அம்முடிவு ஏட்டளவிலேயே உள்ளது.

நாம் இந்த உலகத்தை நம் முன்னோர்களின் தோள்களில் அமர்ந்து தான் காண முடியும். ஏறத்தாழ அரை நூற்றாண்டுக் காலம் தங்கவயல் தமிழ் மக்களைத் தம் தோளில் சுமந்த இ.நா. அய்யாக்கண்ணு புலவர் அவர்களை, இன்றைய தலைமுறையினர் மனதில் வைத்திருப்பது உண்மையானால், நகராட்சியை எதிர்பாராமல் தாங்களே அவரது சிலையை நிறுவுவதுதான் உடனடி பணியாக இருக்க முடியும்.

Pin It