ஆகஸ்ட் 29 அன்று, அமெரிக்காவை தாக்கிய சூறாவளி ‘காத்ரினா' லூசியானா, மிசிசிப்பி, அலபாமா ஆகிய மூன்று மாநிலங்களில் கடும் அழிம்புகளை நிகழ்த்தியது. லூசியானாவில் இருக்கும் நியூ ஆர்லியன்ஸ் நகரம், மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. அங்கிருக்கிற மக்கள் இச்சூறாவளியை ‘சுனாமி' என்றே சொல்கிறார்கள். பல ஆயிரம் மக்களின் உயிர்ச்சேதத்தையும், பல கோடி மதிப்புள்ள பொருள் சேதத்தையும் உண்டாக்கிய இந்தச் சூறாவளியால் பெரும் பாதிப்புக்கு உள்ளானவர்கள் அங்கிருக்கும் கருப்பர்களும், ஏழைகளும்தான். நியூ ஆர்லியன்சில் இரு பங்கு மக்கள் கருப்பர்கள். நகரின் கால் பாகம் வறுமையில் உழல்கிறது. சூறாவளியால் நகருக்குள் நுழைந்த தண்ணீர், தாழ்வான பகுதிகளிலெல்லாம் நுழைந்தது. இந்தத் தாழ்வான பகுதிகள் அனைத்திலும் வசித்தது கருப்பர்களே.

Black woman with her child
இந்தச் சூறாவளிக்குப் பிறகு நடந்தேறிய சம்பவங்கள், அமெரிக்காவை அசிங்கமான நாடாக உலக மக்கள் மனங்களிலே நிறுத்திவிட்டது. நிவாரணப் பணிகள் எதுவும் உடனடியாய் மேற்கொள்ளப்படவில்லை. மைதானங்களிலும், உயர் கட்டடங்களிலும் தஞ்சம் புகுந்த மக்களை கவனிக்க ஆளில்லை. கொள்ளை, பாலியல் வன்முறைகள் தலைவிரித்தாடின. சில நாட்களுக்குப் பிறகு அங்கே அனுப்பப்பட்ட ராணுவம், வணிக வளாகங்களைப் பாதுகாத்தது.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருக்கும் கருப்பர்களும், ஏழைகளும் அமெரிக்க அரசியல் ரீதியாக முக்கியமற்றவர்கள். அவர்களில் பலபேருக்கும் வாக்களிக்க வாய்ப்புகள் கிடையாது. அப்படியே அவர்கள் வாக்களித்தாலும் அவை புஷ் கட்சிக்கு சேராது என்பதால் புஷ், துணை அதிபர் மற்றும் வேறு சில அமைச்சர்களும் பாராமுகமாக இருந்துவிட்டனர். இதைவிட மனிதத் தன்மை அற்ற செயல் வேறெதுவும் இருக்க முடியாது. கருப்பின மேயர்களின் தேசியத் தலைவர் ரூஸ்வெல்ட் டார்ன், ‘உதவிக் கேட்டு கதறிய கருப்பின மேயர்களின் பட்டியல் என்னிடம் உள்ளது. அவர்களின் கதறலுக்குப் பதில் சொல்ல யாரும் இல்லை. அவர்களின் நகரங்கள் கைவிடப்பட்டன' என்று கூறியிருக்கிறார். நிறவெறியுடன் ஒரு வல்லரசு நடந்து கொண்டு, உலகின் எல்லா நாடுகளிலும் வெட்கமின்றி மூக்கை நுழைக்கிறது; மனித உரிமைகளைப் பற்றியும் பேசுகிறது.

பேரழிவு, போர், கலவரம், பஞ்சம்... எல்லாவற்றிலும் எங்கும், எப்போதும் ஒடுக்கப்பட்ட மக்களே பாதிக்கப்படுகின்றனர் என்பதற்கு இது மேலும் ஒரு சான்று. இங்கே ‘சுனாமி' வந்தபோதும் இப்படித்தான் நடந்தது. தலித்துகளும் பாதிக்கப்பட்டனர். உயிர்ச் சேதம், பொருட்சேதம், வேலை இழப்பும் தலித் மக்களிடையே பரவலாக இருந்தன. இதை முறையாகப் பதிவு செய்யவோ, நிவாரணம் வழங்கவோ அரசு முன்வரவில்லை. உதவ வந்த தொண்டு நிறுவனங்களும் ‘தலித்துக்குச் செய்யாதே' என்ற நெருக்கடியைப் பிறரிடமிருந்து எதிர்கொள்கின்றன.

‘காத்ரினா' சூறாவளி பாதிப்புகளைப் பற்றி பெர்டோ ரிகான் என்ற கவிஞர் சொல்லியிருக்கும் கருத்தை எல்லாவற்றுக்கும் பொருத்தமுடையதாக இங்கே சொல்லலாம்: ‘ஏழையாக இருப்பது அபாயகரமானது. கருப்பராக இருப்பது அபாயகரமானது.'

‘காத்ரினா' தொடர்பான ஒரு நகைச்சுவை: அமெரிக்க வானிலை ஆய்வாளர் ஸ்காட் ஸ்டீவன்ஸ், ‘காத்ரினா' ஒரு சதி என்கிறார். ரஷ்யாவின் மின் காந்த அலையை உருவாக்கும் ஜெனரேட்டர் கொண்டு, ஜப்பான் பழிதீர்த்துக் கொள்ள உருவாக்கிய செயற்கையான சூறாவளி இது என்பது அவர் கண்டுபிடிப்பு! வெள்ளைத் தோலர்களுக்கு ஆய்வு மனோபாவம் அதிகம். அவர்களின் ஆய்வுத் திறமை பற்றி முன்பு எப்போதோ கேட்ட ஒருவரின் உரை நினைவுக்கு வருகிறது.

காலை நேரத்தில் ஒரு கிராமத்துக்குள் நுழைந்த வெள்ளையனொருவன், ஒரு மாடி வீட்டின் அருகில் போனதும் நின்று விட்டான். மாடி அறையின் சுவரில் சாணி அப்பியிருக்கிறது. உடனே அவன் புகைப்படங்கள் சிலவற்றை எடுத்துக் கொண்டு, சில குறிப்புகளையும் எழுதிக் கொண்டான். அவன் ஒரு முடிவுக்கு வந்து விட்டிருந்தான். மாடிப்படி வழியாக ஏறிப்போய், மாடி அறை சுவரின் மேல் பின்னங்கால்கள் இரண்டையும் தூக்கி வைத்துக் கொண்டு ஒரு மாடு சாணி போட்டிருக்கும்! ஹவ் இன்ட்ரஸ்டிங்! அந்தப் பக்கம் வந்த ஒரு மாட்டுக்கார சிறுவனிடம் வெள்ளையன், மாடிச் சுவரில் அப்படியிருந்த சாணியைக் காட்டி, தன் ஆச்சர்யத்தை வெளிப்படுத்தினான். சிறுவன் தெருவிலிருந்த சாணியை எடுத்து உருண்டையாக்கி வீசி அடித்தான். அது, மாடிச் சுவரில் பழைய சாணிக்குப் பக்கத்தில் போய் விழுந்தது. சிரித்துக் கொண்டே ஓடினான் சிறுவன்.

திருவண்ணாமலை ஆரணி, வந்தவாசி, செய்யாறு ஆகிய நகரங்களிலும் அதையொட்டிய பகுதிகளிலும் சமீபகாலமாக தலித் மக்கள் தாக்கப்படுவது அதிகரித்து வருகிறது. சூலை, ஆகஸ்ட், செப்டம்பர் ஆகிய இம்மூன்று மாதங்களிலேயே பல்வேறு வன்கொடுமைத் தாக்குதல்கள் தலித் மக்களின் மீது நடந்துள்ளன.

Dalith girl கடந்த மாதம் 16 ஆம் தேதியன்று செய்யாற்றில், அம்பேத்கர் நகரைச் சேர்ந்த பிச்சாண்டி அடித்துக் கொல்லப்பட்டுள்ளார். ஆரணியை அடுத்துள்ள வடுசாத்து கிராம தலித் மக்களுக்கு குடிநீர் வசதி கேட்டு, ஒன்றிய அலுவலகம் முன்பு விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் முற்றுகைப் போராட்டம் நடந்திருக்கிறது. போராட்டம் முடிந்து திரும்பி வருகையில், ஊராட்சித் தலைவர் வெங்கடேசன் தலித் மக்களைத் தாக்கியுள்ளார். இதற்கும் ஒரு போராட்டத்தை ஆரணி காவல் நிலையம் எதிரில் நடத்தியிருக்கின்றனர் தலித் மக்கள்.

இப்போராட்டம் முடிந்து திரும்பும் போது, விடுதலைச் சிறுத்தைகள் மாவட்டத் துணைத் தலைவர் பாஸ்கரன், அனித்ரா அறக்கட்டளை சட்ட ஆலோசகர் ருகன், பன்னீர் செல்வம், நாராயணசாமி, கந்தன் ஆகியோரை வெங்கடேசன் தலைமையிலான சாதிவெறிக் கும்பல் தாக்கியுள்ளது. தமக்கு வேண்டிய வசதிகளை செய்துதரக்கோரி தலித்துகள் போராடினாலும் ஆர்ப்பாட்டம் செய்தாலும், அதை சனநாயக ரீதியில் சந்திக்கத் திராணியற்று சாதிவெறியர்களால் இத்தகு தாக்குதல்கள் தொடுக்கப்படுகின்றன. சட்டம், காவல் துறையும்கூட, சாதிய சட்டங்களுக்கே உட்பட்டு நடந்து கொள்வது இன்னும்கூட தொடர்கிறது.

நீங்கள் பெரும் பணக்காரராய் ஆக வேண்டுமென்றால், வெளிநாட்டுக்குப் போகவோ, குடியுரிமை பெறவோ வேண்டுமென்றால், நீங்களே உங்களைப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திக் கொள்ள வேண்டும். இதுதான் இப்போது பாகிஸ்தானிய பெண்களிடையே நடக்கிறது'' என்று சொல்லி அதிர்ச்சியடைய வைத்திருக்கிறார் பாகிஸ்தான் அதிபர் முஷாரப். பாகிஸ்தானில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மிகச் சாதாரணமானவை. அங்கே கவுரவக் கொலைகள் என்ற பெயரில் பெண்கள் பெருவாரியாகக் கொல்லப்படுகின்றனர்.

Woman சில ஆண்டுகளுக்கு முன்பு முக்தாரன் பீபி என்பவர், கூட்டாக வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்பட்டார். பீபியின் சகோதரன் வேறு பிரிவு பெண்ணை காதல் திருமணம் செய்து கொண்டதால், அந்த ஊர் பழங்குடி பஞ்சாயத்து, அப்பெண்ணை பலபேர் வன்புணர்ச்சி செய்யும்படி தண்டனை அளித்தது. சாஜியா காலித், சானியா நாஸ் எனப் பல பெண்கள் தொடர்ந்து பாலியல் வல்லுறவுக்கு ஆளாயினர். காவல் துறையினராலும், அரசு அதிகாரிகளாலும் இத்தகு கொடுமைகள் நிகழ்த்தப்பட்டன. இதன் மூலம் தம் நாட்டுக்கு ஏற்பட்ட களங்கத்தைத் துடைக்க, அய்.நா. கூட்டத்துக்குச் சென்றபோது, முஷாரப் ஒரு கருத்தரங்கைக் கூட்டியிருந்தார். இக்கூட்டத்தில் பெண்ணுரிமை ஆர்வலர்களால் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவரால் பதில் சொல்ல முடியவில்லை.

கோபத்துடன் கத்தத் தொடங்கினார்: ‘‘நான் சண்டை போடுகிறவன். எனவே, உங்களிடம் விட்டுக் கொடுக்க மாட்டேன். நீங்கள் கத்தினால், நானும் கத்துவேன்.'' முஷாரப் இப்படி மட்டமாக நடந்து கொண்டது பெண்ணியவாதிகளுக்குப் பெரும் அதிர்ச்சி. பல பேரால் பாலியல் வன்கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்ட முக்தாரன் பீபி, தனக்கு உலகமெங்கிலுமிருந்து சேர்ந்த பல லட்சம் ரூபாய்களைக் கொண்டு பள்ளியையும், அவசர உதவி சேவையையும், பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க ஓர் இயக்கத்தையும் தொடங்கியிருக்கிறார். தடைகளிலிருந்து மீண்டெழும் பெண்களின் இந்த மாதிரியான நடவடிக்கைகள், முஷாரப் போன்ற ஆணாதிக்கச் சிந்தனையுடைய, மதப் பழமைவாதிகளுக்குப் பிடிக்கவில்லை.

இந்தப் பார்வையால்தான் இங்கு சானியா மிர்சாவின் உடைக்கும் ‘பத்வா' விதிக்கப்படுகிறது. இது, இசுலாம் பார்வையெனில், ‘அறிவு ஜீவி' ‘சோ'வின் ‘முற்போக்குப் பார்வை' என்ன சொல்கிறது என்று பார்க்கலாம். ‘டென்னிஸ் ஆடுகிறவர்களின் ஆடைகள் குறைந்து கொண்டே போவது கவலையளிக்கிறது. இதற்கென ஒரு உடைவிதியை உருவாக்க வேண்டியது அவசியம்' என்கிறார். அடிப்படைவாதிகள் எப்போதும் ஒரே அடிப்படையில்தான் பேசுகிறார்கள்.

திருவண்ணாமலை அரசு இசைப் பள்ளியின் தலைமையாசிரியை சிவகலை, தலித் மாணவர்களிடம் சாதிய உணர்வுடன் நடந்து கொள்வதால், அவர்மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதியப்பட்டுள்ளது. அரசு தரும் இசைக்கருவிகளைக் கேட்டதற்கு, தலித் மாணவர்களை சாதிப் பெயரைச் சொல்லித் திட்டியிருக்கிறார் அவர்.

தமிழகம் முழுவதும் இப்படி அவ்வப்போது வன்கொடுமைக் குற்றங்கள் நடக்கும் பகுதிகளை அரசு கண்டறிந்து, அவற்றை சமூகப் பதற்றம் மிக்க பகுதிகளாகக் கருதி கவனம் செலுத்த வேண்டும். தலித் இயக்கங்களும், தோழமை அமைப்புகளும் இப்பகுதிகளை நோக்கி தம் போராட்டச் செயல்பாடுகளை நகர்த்த வேண்டும். அப்போதுதான் சாதிய இறுக்கம் உடையும்.                                                                                                                                                                                                                                                                                                    சென்னையில் நடந்து முடிந்த பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு கூட்டத்தில், எல்.கே. அத்வானி ஆற்றிய நிறைவுரையைப் படித்தபோது, அதன் இரட்டை வேடத்தை தெளிவாக உணர முடிந்தது. பாரதிய ஜனதா கட்சி, எப்போதுமே ‘இரட்டை நா'வுடன்தான் பேசி வந்திருக்கிறது. வெகுசன அரசியல் எனும் தனது ஒரு நாவால் போலி சனநாயகம் பேசும்; இந்துத்துவ வெறியெனும் இன்னொரு நாவால் விஷம் கக்கும்.

அத்வானி, பாகிஸ்தான் சென்றபோது, நம்மூர் திரைப்படக் கதாநாயகர்களுக்கு இணையான ‘ஸ்டன்டு'களை அடித்து ‘பிலிம்' காட்டினார். திடீரென ஜின்னாவைப் பாராட்டினார். தன்னை ஒரு மதச்சார்பற்றவராகக் காட்டிக் கொண்டார். மதச்சார்பின்மை என்பது, பா.ஜ.க.வைப் பொறுத்தவரை ஒரு கெட்ட வார்த்தை! இப்படி தம் கட்சி அகராதியின்படி நிறைய கெட்ட வார்த்தைகளைப் பேசவே, ஆர்.எஸ்.எஸ். இலிருந்து அவருக்கு எதிராகக் கடுமையான கண்டனக் குரல்கள் எழுந்தன. இங்குள்ள அரசியல் நோக்கர்களும், பா.ஜ.க. மீது பெருமதிப்பு கொண்ட ஆதரவாளர்களும் பயந்தே போனார்கள். மக்களுக்கும் குழப்பம். பா.ஜ.க.வுக்கும், ஆர்.எஸ்.எஸ்.க்கும் இடையில் பெரும் பிளவு ஏற்பட்டுவிட்டது என்று எல்லோரும் நம்பத் தொடங்கினார்கள். ஆனால், அப்படி எதுவும் இல்லை என்ற உண்மையை அத்வானி மிக உறுதியாக இந்த மாநாட்டு உரையில் சொல்லியிருக்கிறார்.

அத்வானியின் உரை, இரண்டு பகுதிகளைக் கொண்டிருக்கிறது. முதல் பகுதி பாரதிய ஜனதாவின் தொடக்ககால வரலாற்றைச் சொல்வது. 1980 இல் அரசியல் கட்சியாகத் தொடங்கப்பட்ட அது, இன்று வெள்ளிவிழாவைக் காண்கிறது. கலாச்சார தேசியவாதம், உள்நாட்டு அயல்நாட்டு பாதுகாப்பு, சனநாயகம், நாட்டு வளர்ச்சி ஆகியவைகளில் பா.ஜ.க. கவனம் செலுத்தி வெற்றி கண்டிருப்பதாகச் சொல்கிறார். பா.ஜ.க.வின் கலாச்சார தேசியவாதம், சனநாயகம் குறித்து நமக்கெல்லாம் நன்றாகவே தெரியும். மதன்லால் குரானா, நரேந்திர மோடி, வாஜ்பாய், அத்வானி, உமாபாரதி என்று அந்த அமைப்பில் இருக்கிற பலரும் உட்கட்சி சனநாயகத்தைக் கட்டிக்காக்கிற, அனுபவிக்கிற தலைவர்கள்தான்! கட்சியின் சனநாயக நிலையே இதுவென்றால், அதன் சனநாயக சிந்தனை பற்றி நாம் கேள்வி எழுப்ப முடியுமா?

அத்வானியின் உரையில் இரண்டாம் பகுதி முழுக்க, தமக்கும் ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட ‘சங் பரிவார'ங்களுக்கும் இடையே இருக்கும் உறவைப் பற்றியதாக இருக்கிறது. ‘‘நேரத்துக்கு ஏற்றபடி, கையிலிருக்கும் பிரச்சினையின் அடிப்படையில், ஆர்.எஸ்.எஸ். தலைவர்களோடு ஆலோசனை பெற நாங்கள் தவறியதே இல்லை'' என்று ஒப்புதல் தந்தபடியே தான் அந்த உரையின் பிற்பகுதியைத் தொடங்குகிறார். உரை முழுக்க ஆர்.எஸ்.எஸ். எங்கே நம்மைத் தப்பாகப் புரிந்து கொள்ளுமோ என்ற பதைபதைப்பு! தலைவரைப் பார்த்து தொலைவிலிருந்தே தொண்டன் கைதூக்கி வணங்கியபடி வருவதைப் போல இருக்கிறது இது. இல்லையெனில் சீட்டு கிழிந்துவிடும்!

‘ஆர்.எஸ்.எஸ்.தான் இந்த அமைப்பிற்கான சித்தாந்தத்தை வழங்கியிருக்கிறது. ஆனால், காலப்போக்கில் அரசியல் ரீதியிலான எல்லா செயல்பாட்டிற்கும் ஆர்.எஸ்.எஸ். தான் பின்னணியில் இருக்கிறது என்று பிறர் நினைக்கும் சூழலை அது உருவாக்கியிருக்கிறது. இது, இரு அமைப்புகளுக்கும் நல்லதல்ல' என்கிற அத்வானி, பா.ஜ.க.வின் பல முடிவுகளுக்கு ஆர்.எஸ். எஸ். சின் ஆலோசனைகளே ஆதாரமாய் இருந்தன என்கிறார். இதுதான் இரட்டை நாவு! இந்துத்துவ சக்திகளின் ஆலோசனையின்றி தனித்து இயங்க விரும்பினால் பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ்.இன் ஆலோசனையை எதற்குக் கேட்க வேண்டும்?

நாங்கள் தனித்தே செயல்படுகிறோம் என்று ஒரு மாயையை உருவாக்க நினைக்கும் நாடகம் இது. ‘பல கட்சி அரசியலும், சனநாயகத்தன்மையும் கொண்ட சூழலில், கருத்தியல் அடிப்படையில் இயங்கும் பா.ஜ.க. போன்ற கட்சி, தனது அடிப்படை சித்தாந்த நிலையிலிருந்து விலகாமல் சமாளித்துக் கொண்டு, அதிகப்படியான மக்களை சென்றடையும்படியும் நடந்து கொள்ள வேண்டியது அவசியம்' என்கிறார் அத்வானி. இப்போது இன்னும் தெளிவாக நமக்குப் புரிந்து விடுகிறது. பா.ஜ.க.தான் ஆர்.எஸ்.எஸ். ஆர்.எஸ்.எஸ்.தான் பா.ஜ.க. வேறுமாதிரி சொன்னால் தெளித்து ஊற்றிக் கொண்டால் ரசம்; கலக்கி ஊற்றிக் கொண்டால் குழம்பு.

Pin It