இது, குற்றவாளிகளின் காலம். ஆம், கொலைக் குற்றம் சுமத்தப்பட்ட சங்கராச்சாரி, தன்னுடைய வழக்கை தமிழ்நாட்டில் விசாரிக்கக் கூடாது; வேறொரு மாநிலத்தில் விசாரிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் கோரிக்கை வைக்க, நீதிமன்றம் உடனே வழக்கைப் புதுவைக்கு மாற்றியுள்ளது. தன் மீதான வழக்கு எங்கு விசாரிக்கப்பட வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் அதிகாரத்தை ‘கிரிமினல்' குற்றவாளிக்கு வழங்கி, தவறான முன்னுதாரணத்தை நீதிபதி லகோத்தி தலைமையிலான ‘பெஞ்ச்' ஏற்படுத்தியுள்ளது. அண்மையில், இடஒதுக்கீடுக்கு எதிராகவும் இவர்தான் தீர்ப்பளித்தார். இவர், இடஒதுக்கீடுக்கு எதிராகத் தீர்ப்பளித்ததற்கான காரணம், தற்பொழுது அம்பலமாகியுள்ளது.

அடுத்து, கொலைக்குற்றம் சுமத்தப்பட்டு, அதற்குரிய சிறைத் தண்டனையையும் அனுபவித்து, வரலாற்றில் முதுகுளத்தூர் உள்ளிட்ட பல சாதிக்கலவரங்களுக்குக் காரணமான முத்துராமலிங்கத் (தேவருக்கு) ஒவ்வொரு ஆண்டும் ‘குருபூசை' ஏறக்குறைய அரசு விழாவாகவே நடைபெற்று வருகிறது. 1996 - 2000 வரை ‘குருபூசை' நடைபெறும்போதெல்லாம் சாதிக் கலவரங்களும் நடைபெற்றன. தென்மாவட்டங்களில் சாதிக்கலவரங்கள் உருவாகக் கூடும் என்று பத்திரிகைகள் எச்சரித்து வருகின்றன. இருப்பினும், அ.தி.மு.க. அரசு ஒரு சாதி சார்புடன் நடந்து கொள்வது, வன்மையான கண்டனத்திற்குரியது.

இன்றைக்கு இந்த ‘குருபூசை'யில் போட்டிப் போட்டுக் கொண்டு பங்கேற்பதை, எல்லா கட்சிகளும் பெருமையாகவும் வழக்கமாகவும் கொண்டுள்ளன. ஆனால், சாதிவெறியை எதிர்த்து வெகுண்டெழுந்த இம்மானுவேல் சேகரன், இன்றளவும் தீண்டத்தகாதவராகவே கருதப்படுகிறார். ‘தாழ்த்தப்பட்டோருக்காகவும் முத்துராமலிங்கம் உழைத்ததாக', தற்பொழுது திட்டமிட்டப் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப் படுகின்றன. இது, உண்மையானால், அவரது வழித்தோன்றல்கள், தலித்துகளுக்கென சட்டரீதியாக அளிக்கப்பட்ட தலைவர் பதவியை, சட்டத்திற்குப் புறம்பாக எதிர்ப்பது ஏன்? அரசு மற்றும் பிற கட்சிகளின் சாதியப்போக்கே பாப்பாபட்டியில் ஜனநாயகம் மலரத் தடையாக இருக்கின்றன.

இந்திய அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கிய டாக்டர் அம்பேத்கர் சிலைக்கு சிறைவைத்து அவமதிக்கும் தமிழக அரசு, முத்துராமலிங்கம் சிலைக்கு மரியாதை அளிக்கிறது. நாடாளுமன்றத்திலும் அவருக்குச் சிலை! ஆனால், சாதியை ஒழிக்கப் போராடிய தந்தை பெரியாருக்கு நாடாளுமன்றத்தில் சிலை இல்லை. திராவிடக் கட்சிகளின் சாதி அரசியலுக்குப் பெரியாரையே அவர்கள் பலியாக்கத் துணிந்துவிட்டனர். இதைவிட வெட்கக் கேடு வேறென்ன? அனைத்து மக்களின் முன்னேற்றத்திற்காகவும் போராடிய அம்பேத்கர், சாதித் தலைவராகச் சுருக்கப்படுவதும், சாதி வெறியரான முத்துராமலிங்கம், பிற சாதியினருக்காகவும் பாடுபட்டவராகப் போற்றப்படுவதும் அயோக்கியத்தனம் இல்லையா?

ஜாதி ஒருபோதும் மக்களை முன்னேற்றாது. அது அடக்குமுறைகளை மட்டுமே கட்டவிழ்த்துவிடும். சாதியால் வாய்ப்புகள் மறுக்கப்பட்ட மக்கள், தங்கள் உரிமைகளைப் பெற பிற்படுத்தப்பட்டோராக, தாழ்த்தப்பட்டோராக அணிவகுப்பதையும், தங்களுக்கான உரிமைகளைக் கோருவதையும் நாம் வரவேற்கிறோம்; அதன் மூலம் ஆட்சி அதிகாரத்தில் பங்கு கோருவதையும் ஆதரிக்கிறோம். ஆனால், இன்று நடந்து கொண்டிருப்பது என்ன? ஒட்டுமொத்த ஆட்சி அதிகாரத்தையும் ஆக்கிரமித்திருக்கும் பார்ப்பனர்களை, இவர்கள் எதிர்ப்பதில்லை. தனக்குக் கீழ் இருக்கும் சாதிகளின் இடஒதுக்கீடை எதிர்த்தல்லவா சாதிச் சங்கங்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றன?

"சாதிப் பெயரைச் சொல்லி திட்டுபவர்களுக்கு முன்ஜாமீன் கிடையாது. விசாரணையின்போதே கைது செய்யலாம்'' என்ற வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் பிரிவுகளை ரத்து செய்ய முடியாது என்று அண்மையில் (17.6.2005) சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஆனால், இன்றைக்கு மிக வெளிப்படையாகவே தேவர் சாதியைச் சார்ந்த நடிகர்கள் கூட்டம் போட்டு, தங்கள் சாதிப் பெருமைகளைப் பேசுகிறோம் என்ற பெயரில், தேர்தல் நேரத்தில் கலவரங்களுக்கு வழிவகுக்கின்றனர். இது, அனைவராலும் கண்டிக்கப்பட வேண்டும். வன்முறைக்கு வித்திடும் இதுபோன்ற கூட்டங்கள் தடை செய்யப்பட வேண்டும்.

ஒருபுறம், சாதி ஒழிப்பை முன்னிறுத்தி தலித் இயக்கங்கள், சமூக நீதி அமைப்புகள், இடதுசாரி, தமிழ்த் தேசிய, முற்போக்கு இயக்கங்கள் இயங்கி வருகின்றன. மறுபுறம், ஆழமாக சாதி அரசியல் வேரூன்றப்படுகிறது; தேர்தல் நேரத்தில் அது கொழுந்துவிட்டு எரியும். அதற்கு அரசியல்வாதிகளும் ஊடகங்களும் அரண்சேர்க்கின்றன. ‘இந்துத்துவ தொழிற்சாலைகள்' அரசு அங்கீகாரத்துடன் சாதியை பலப்படுத்த ஆயுதங்களை கூர் தீட்டுகின்றன, கோயில் போன்ற சாதி உற்பத்திக் கேந்திரங்கள் அதற்குத் துணை நிற்கின்றன. சாதியை முற்றாக மறுப்பவர்களின் குரல் மட்டும் காற்றில் கரைந்து கொண்டிருக்கிறது. 
Pin It