ஈரோட்டில் இந்து பார்ப்பன பயங்கரவாத எதிர்ப்பு மாநாட்டை, ஈரோடு மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம், கடந்த நவம்பர் 8ஆம் தேதி வெற்றிகரமாக நடத்தி முடித்தது. தொடர்ச்சியாக சென்னை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் டிசம்பர் முதல் தேதி சென்னையில் ‘மக்களைப் பிளவு படுத்தும் பார்ப்பன மதவாத எதிர்ப்பு’ மாநாட்டை நடத்த திட்டமிட்டு, தோழர்கள் களப்பணிகளில் இறங்கியுள்ளனர். சென்னை மேற்கு மாம்பலத்திலுள்ள சந்திரசேகர் திருமண மண்டபத்தில் காலை 10 மணிக்கு மாநாடு தொடங்குகிறது. மாலை மண்டபத்துக்கு அருகே உள்ள முத்துரங்கன் சாலையில் திறந்தவெளி மாநாடு நடைபெறுகிறது. தந்தை பெரியார் தனது இறுதி பேருரையை நிகழ்த்திய இடமும் இதுவேயாகும்.

சம்பூகன் கலைக் குழுவின் எழுச்சி இசை நிகழ்ச்சியோடு காலை 10 மணிக்கு மாநாடு தொடங்குகிறது. பார்ப்பன மதவெறி கும்பலால் சுட்டுக் கொல்லப்பட்ட தபோல்கர்-பன்சாய்-கல்புர்கி நினைவரங்கில், ‘பார்ப்பனியம் பதித்த இரத்தச் சுவடுகள்’ என்ற தலைப்பில் நடைபெறும் கருத்தரங்கில், ‘பெண்ணியத்தில்’ என்ற தலைப்பில் பேராசிரியர் சரசுவதி, ‘புராணங்களில்’ என்ற தலைப்பில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த சீனி. விடுதலை அரசு, ‘அரசியலில்’ என்ற தலைப்பில் தோழர் சுந்தரவள்ளி, ‘வரலாற்றில்’ என்ற தலைப்பில் மார்க்சிய பெரியாரிய பொதுவுடைமை கட்சித் தோழர் வாலாஜா வல்லவன் ஆகியோர் உரையாற்றுகிறார்கள். பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் நெறிப்படுத்துகிறார்.

மதிய இடைவேளைக்குப் பிறகு 2 மணிக்கு சென்னை கலைக்குழு வழங்கும் ‘இடம்’ நாடகம் நடைபெறுகிறது. 2.30 மணிக்கு பட்டிமன்றம். பட்டிமன்றத் தலைப்பு ‘மக்களை பிளவுபடுத்துவதில் மிஞ்சி நிற்பது மதவாதமா? ஜாதிய வாதமா?’ நடுவர் - கழகப் பரப்புரைச் செயலாளர் பால். பிரபாகரன். ‘மதவாதமே’ என்ற அணியில் வழக்கறிஞர் திருமூர்த்தி, ஆசிரியர் சிவகாமி ஆகியோரும், ‘ஜாதியவாதமே’ என்ற தலைப்பில் திருச்சி புதியவன், கு. அன்பு தனசேகரன் ஆகியோரும் வாதிடுகிறார்கள்.

தொடர்ந்து - திறந்தவெளி மாநாடு மாலை 6 மணியளவில், தியாகராயர் நகர் முத்துரங்கன் சாலையில் இளவரசன்-கோகுல்ராஜ் நினைவு மேடையில் மக்கள் மன்றம் வழங்கும் புரட்சிகர கலை நிகழ்ச்சிகளுடன் தொடங்குகிறது. தலைமைக் கழகச் செயலாளர் தபசி. குமரன் தலைமையில் பேராசிரியர் ஜவஹருல்லா (மனித நேய மக்கள் கட்சி), வழக்கறிஞர் அருள்மொழி (திராவிடர் கழகம்), அதியமான் (ஆதி தமிழர் பேரவை), பேராசிரியர் சுப. வீரபாண்டியன் (திராவிட இயக்க தமிழர் பேரவை) ஆகியோர் உரையாற்றுகிறார்கள். கழகத் தலைவர் கொளத்தூர் மணி நிறைவுப் பேருரையாற்றுகிறார்.

மாநாட்டின் நோக்கத்தை விளக்கி சென்னை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் விடுத்துள்ள அறிக்கை:

‘திராவிடர் விடுதலைக் கழகம்’ ஒரு பெரியார் இயக்கம். நாங்கள் இந்து பார்ப்பனிய அடிமைப் பண்பாட்டை மறுத்து, சுயமரியாதை நெறியை வாழ்வியலாக ஏற்றுக் கொண்டவர்கள். பார்ப்பன மதமே இந்துமதம் என்ற உண்மையை மக்களிடம் பரப்பி வருகிறவர்கள்! ஆனால்... பார்ப்பனர்களால் இந்துக்கள் என்று அடையாளப்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட வெகு மக்களின் உரிமைகளுக்கும் சுயமரியாதைக்கும் களத்தில் போராடுகிறவர்கள்;

தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட அனைவருமே ‘இந்துக்கள்’தான் என்று உரிமை கோரும் பார்ப்பனர்கள்தான் காலம் காலமாக இந்த மக்களுக்கான உரிமைகளை மறுப்பவர்கள் என்பதை மறந்து விடாதீர்கள். இப்போதும் இவர்களுக்கான இடஒதுக்கீடு உரிமைகளை ஒழிக்கத் துடிப்பவர்கள் பார்ப்பனர்கள்தான்.

(இந்து) ஒடுக்கப்பட்ட மக்களின் மாட்டிறைச்சி உணவுக்கு தடை போடுவதும் இவர்கள்தான். ‘இந்து’ சமூகத்துக்குள் - அன்றாடம் நடக்கும் ஜாதி வெறி கொலைகளைக் கவுரவக் கொலை என்று பெருமை பேசுவதும் இவர்கள்தான். அதிகாரங்களைக் கைப்பற்றி - அரசு நிறுவனங்களை பார்ப்பன மயமாக்கி வருவதும் இவர்கள்தான்! வேத-சமஸ்கிருத சடங்கு களை - இந்த மொழியே தெரியாத (இந்து) மக்களிடம் திணித்துக் கொண்டிருப்பதும் இவர்கள்தான்!

இவர்கள் இந்துக்களின் காவலர்களாம்! இந்த மக்களின் உரிமைகளுக்காக போராடும் பெரியார் இயக்கம் இந்துக்களின் எதிரியாம்! ‘இந்து’ சமூகத்தில் ஜாதியமைப்பையும், ஜாதிய வன்முறைகளை யும் நியாயப்படுத்தும் பாசிச தத்துவமே பார்ப்பனியம். அவர்களே இந்து வெகு மக்களின் உண்மையான எதிரிகள் என்பதை உணர்த்தவே இந்த மாநாடு.

தங்களின் மேலாதிக்கத்தை நிலைநாட்டிக் கொள்ள - நயவஞ்சகமாக பெரியார் இயக்கங்களையும் - சிறுபான்மையினரையும் - இடதுசாரி இயக்கங்களையும் எதிரிகளாக ‘மடைமாற்றம்’ செய்யும் பார்ப்பன சூழ்ச்சிகளை அம்பலப்படுத்தவே இம் மாநாடு.

“இந்து ஒற்றுமை” என்ற பார்ப்பன சூழ்ச்சி வலைக்குள் ஒடுக்கப்பட்ட மக்கள் விட்டில் பூச்சிகளாக விழுந்து விடக்கூடாது என்பதை எச்சரிக்கவே இந்த மாநாடு! அனைத்து பெரியார் இயக்கங்களும் இணைந்து நிற்கும் மாநாடு! கருத்துக்களை செவிமடுக்க சூழ்ந்து நிற்கும் ஆபத்துக்களை முறியடிக்க - உரத்து சிந்திப்போம்! வாரீர்!

Pin It