இன்றைய கேரள மாநிலத்திலுள்ள பாலக்காடு, மொழி வழி மாநிலப் பிரிவினைக்கு முன்பு சென்னை மாகாணத்தின் ஒரு பகுதி. பாலக்காட்டுக்கு அருகே உள்ள கல்பாத்தி, பார்ப்பன வைதீகத் திமிரை வெளிப்படுத்திக் கொண்டிருந்தது. கல்பாத்தி, ‘அக்ரகாரங்களில்’ குடியிருந்த தமிழ்நாட்டுப் பார்ப்பனர்கள், ஈழவர்கள் நடக்கவும், அவர்கள் ‘தேர் ரதம்’ வருவதற்கும் தடை விதித்திருந்தனர். இந்தத் தடை அரசாங்கத்தின் தடையாகவே இருந்தது என்பது இதில் குறிப்பிடப்பட வேண்டியதாகும். இந்தத் தடையைக் கண்டித்து காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான வரதராஜூலு நாயுடு - அவர் ஆசிரியராக இருந்த ‘தமிழ்நாடு’ நாளேட்டில் தலையங்கம் தீட்டினார். அப்போது சென்னை மாகாணத்தை நிர்வாகம் செய்த பிரிட்டிஷ் ஆளுநரின் ஆலோசனைக் குழுவில் உறுப்பினராக இருந்த சர். சி.பி. இராமசாமி அய்யர், இந்தத் தடையை நியாயப்படுத்தினார்.

தீண்டப்படாத சமூகத்தினரான ஈழவர்களும் அவர்களின் கோயில் தேரும் அக்ரகாரத்தில் வந்தால் கலவரம் வரும் என்றும், அதைத் தடுப்பதற்காகவே தடை போட்டுள்ளதாகவும் கூறினார். இதை எதிர்த்து அன்றைய சென்னை சட்டமன்றத்தில் நீதிக்கட்சி, சுயமரியாதை இயக்கத்துடன் தோழமை கொண்டிருந்த தாழ்த்தப்பட்டப் பிரிவைச் சார்ந்த ஆர். வீரய்யன் ஒரு தீர்மானம் கொண்டு வந்தார். (இவர் நியமன உறுப்பினர்) அந்தத் தீர்மானத்தை காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த (சுயராஜ்ய கட்சி) நரசிம்மச்சார்லு என்ற பார்ப்பனர் கடுமையாக எதிர்த்தார். “இன்று வீதிகளில் நடக்க உரிமை கொடுத்தால் நாளை கோயிலுக்குள் நுழைய உரிமை கேட்பார்கள்; பிறகு கலப்பு மணம் வேண்டும் என்பார்கள்; இதனால் கலவரம்தான் ஏற்படும்” என்று பச்சையாக பார்ப்பன நஞ்சைக் கக்கினார். வீரய்யனுக்கு ஆதரவாக பெரியாரின் சுயமரியாதை இயக்கம் களமிறங்கியது. ‘குடிஅரசு’ பத்திரிகை கண்டித்து எழுதியது.

பெரியார் காங்கிரசை விட்டு வெளியேறிய திரு.வி.க. தலைமையில் நடந்த காஞ்சிபுரம் காங்கிரஸ் மாநாட்டிலும் இது எதிரொலித்தது. கல்பாத்தி பார்ப்பனர்களின் தீண்டாமை வெறிக்கு எதிராக மாநாட்டில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. தீர்மானத்தைக் கொண்டு வந்தவர், பெரியாரின் நண்பர் இராமச்சந்திர நாயுடு. தீர்மானத்தை பெரியாரும் ம. சிங்கார வேலரும் வழி மொழிந்தனர். அப்போதும் எம்.கே. ஆச்சார்யா என்ற பார்ப்பனர் எதிர்த்தார். “தீண்டாமையை ஒழிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கூட்டத்தில் பேசுவது ஒழுங்கு ஆகாது. சனாதன தர்மத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் இத்தீர்மானத்தை ஆதரிக்கக் கூடாது” என்று பேசினார்.

தொடர்ச்சியாக இரண்டு ஆண்டுகால எதிர்ப்புகளுக்குப் பிறகு 1927இல் அரசு பணிந்தது. திருநெல்வேலியில் நடந்த மாவட்ட சுயமரியாதை மாநாட்டில் (28.11.1927) இது குறித்து பெரியாரே ஒரு தீர்மானத்தை முன்மொழிந்தார். அந்தத் தீர்மானம் இப்படி கூறியது. “கல்பாத்தியில் பார்ப்பன வீதியில் வெகுகாலமாய் தாழ்த்தப்பட்டவர்கள் நடக்கக் கூடாது என்று பார்ப்பனர்கள் செய்து வந்த கொடுமை நீங்கி எல்லா மக்களும் அவ்வீதி வழி நடக்கத் தகுந்த வெற்றி கிடைத்தமைக்கு இம்மாநாடு சந்தோஷத்தை அறிவிக்கிறதுடன், அதுவே நமது சுயமரியாதை இயக்கத்துக்கு ஒரு வெற்றிக் குறியெனக் கருதுகிறது” என்று அத்தீர்மானம் கூறியது.

இந்த வரலாற்றுத் தகவல்களை இப்போது நினைவுகூர்வதற்குக் காரணம் உண்டு. “கல்பாத்தி அக்ரகாரங்கள் அழிந்து கொண்டிருக் கின்றன” என்று ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ நாளேடு (நவ.16, 2015) ஒரு செய்திக் கட்டுரை வெளியிட்டிருக்கிறது. கல்பாத்தி ஆற்றுக்கரையில் இருந்த 96 அக்கிரகாரங்களில் வேதங்களும், பஜனைகளும், கர்நாடக இசையும் கேட்டு வந்தன என்றும், அமைதியாக சுற்றுச்சூழல் பாதிப்புகளே இல்லாத அந்த அக்ரகாரத்தின் வீடுகள், பாழடைந்து கிடக்கின்றன” என்றும் கவலையுடன் கண்ணீர் வடிக்கிறது அந்த செய்தி.

கேரள ஆட்சி, இந்த கல்பாத்தி அக்ரகாரப் பகுதியை, ‘முதன்மையான பழமைச் சிறப்புள்ள கிராமம்’ என்று சில ஆண்டுகள் முன் அறிவித்ததாம். “அழகான சமூக வாழ்க்கை நிறைந்த இந்த அக்ரகாரத்தின் பழமையை பாதுகாக்க வேண்டும்” என்று, ‘கட்டிடக்கலை - சுற்றுச்சூழல் - குடி யிருப்பு பாதுகாப்பு மய்யம்’ என்ற கேரள அரசு நிறுவனம் சுட்டிக்காட்டி யிருப்பதை கேரள ‘பிராமண சபா’ தலைவர் கரிப்புழா ராமன் என்ற பார்ப்பனர் எடுத்துக்காட்டி, அக்ரகாரத்தின் பழம் பெருமையை பாதுகாக்கவில்லை என்று கேரள அரசை கடுமையாக சாடியிருக்கிறார்.

1960ஆம் ஆண்டு கேரளாவில் கொண்டு வரப்பட்ட நில சீர்திருத்தச் சட்டம், இந்த அக்ரகாரத்து பார்ப்பனர்களுக்கு வந்து கொண்டிருந்த வருமானத்தை தடுத்து விட்டதாம். நோச்சூர் கணேஷ் சர்மா எனும் பார்ப்பனர், இந்த அக்ரகாரங்கள் பற்றி ஒரு ஆராய்ச்சியே நடத்தி ஆய்வறிக்கை தயாரித்திருக்கிறாராம். இப்போதும் வெளிநாடுகளில் வசதியாக வாழ்ந்து கொண்டிருக்கும் அடுத்தடுத்த பார்ப்பன தலைமுறையினர், ஒவ்வொரு ஆண்டும் கல்பாத்திக்கு வந்து கோயில் விழாக்களில் பங்கேற்றுவிட்டு திரும்புகிறார்களாம். உலகின் எந்த மூலைக்குச் சென்றாலும் பார்ப்பனர்கள் தங்கள் வர்ணாஸ்ரமத் திமிரையும் கூடவே தூக்கிக் கொண்டு போகிறார்கள்.

தீண்டாமை வெறியை காலம் காலமாக பின்பற்றிய ‘அக்ரகாரங்களை’ இப்போது பெருமைக்குரிய நினைவுச் சின்னங்களாக பார்ப்பனர்கள் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.

இப்போதெல்லாம் பார்ப்பனர்கள் மாறிவிட்டார்கள் என்பதெல்லாம் வடிகட்டிய பொய் என்பதற்கு இதுவும் ஒரு சான்று. 

Pin It