முந்தையத் தொடர்களில் சொன்னபடி, அடிப்படைவாதிகள் கிளப்பிவிடும் அறிவியலுக்கு புறம்பான விடயங்களில் மக்கள் விட்டில் பூச்சிகளாக மயங்கி விழுந்துவிடக் கூடாது என்ற அக்கறையில் எழுத ஆரம்பித்த தொடரே “காவிகளின் மாட்டரசியல்”. இன்றைக்கு நமக்கு கிடைக்கும் வசதி வாய்ப்புகள் திடீரென வானத்திலிருந்து கொட்டிவிடவில்லை, எந்த கடவுளும், மந்திரவாதியும் ஜீ பூம்பா போட்டு உருவாக்கியதில்லை. மனித இனத்தின் ஆண்டாண்டு கால உழைப்பினால், முயற்சியினால் கிடைத்தவைகளை நாம் இன்று அனுபவிக்கிறோம். அறிவியலோடு சார்ந்த வாழ்க்கைதான் மனிதனுக்கு வளர்ச்சியைத் தரும், அறிவியலுக்கு மீறிய வாழ்க்கை முறை அழிவையே தரும். உட்கார்ந்த இடத்திலிருந்து உலகத்தில் என்ன நடக்கிறது என்பதை அறிந்து கொள்ள முடியும் இந்த காலகட்டத்தை அடைய மனித இனம் பெரும்பாடுபட்டு இருக்கிறது.

jersey cowபரிணாம வளர்ச்சியில் தோன்றிய மனித இனம் முதலில் தம்மை தற்காத்துக் கொள்ள பல்லாயிரம் ஆண்டுகளை செலவிட்டது. கூட்டம் கூட்டமாக நடந்தே, வழியில் துணைகளை, சொந்தங்களை இழந்தும் மீறியும் உலகை வலம் வந்து தமக்கான இடங்களைத் தேடி வசிப்பிடமாக்கி, நெருப்பை உருவாக்கி , உலோகத்தை கையாளக் கற்றுக் கொண்டு, சக்கரம் கண்டுபிடித்து, மேய்ச்சல் பழகி, வேளாண்மை கற்று, நீர் மேலாண்மை அறிந்து, தொழில்கள் பழகி, மின்சாரம் உருவாக்கி, தொழிற்சாலைகள் படைத்து, கணிப்பொறி கண்டறிந்து இன்று இருக்கும் நிலையை அடைந்து இருக்கிறோம். இது இன்னும் தொடர வேண்டும். மனித இனம் இன்னும் இந்த உலகம் மட்டுமில்லாமல் புதிய உலகங்களைக் கண்டறிந்து அங்கேயும் சென்று வாழும் நாட்கள் வரத்தான் போகிறது. இதற்கெல்லாம் காரணம் மனிதனின் அறிவு வளர்ச்சியும், இயற்கையிலிருந்து பாடம் கற்று அறிவியலில் செயற்கரும் செயல்களைச் செய்வதே ஆகும். இயற்கையை மீறாமல் இயற்கையோடு இயற்கையாக இயைந்த வாழ்க்கை வாழும் ஏனைய உயிரினங்கள் தோன்றிய போதிருந்த நிலையிலேயே இன்றும் உள்ளன. ஆனால் மனிதன் மட்டுமே இயற்கையை படித்து, இயற்கையின் இலக்கணத்தில் செயற்கைகளை உருவாக்கினான்.

அப்படி மனிதன் கண்டறிந்த செயற்கைகளில் மிக முக்கியமானது வேளாண்மை. இயற்கையாக காடுகளில் விளைந்த பழங்கள், காய்கறிகள், தானியங்களை உண்ட மனித இனம், நாளடைவில் மக்கள் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க, கிடைத்ததை உண்ட காலம் மாறி, உண்பதற்கு உணவை உருவாக்க வேண்டும் என்ற நிலைக்கு வந்தது. இயற்கையில் பறவைகள், விலங்குகளின் எச்சங்கள் மூலம் பரவிய விதைகளைக் கண்டறிந்து தானும் தன் பங்கிற்கு நிலத்தில் தூவி அது முளைவிட்டு துளிர்ப்பதில் ஆரம்பித்தது வேளாண்மை. ஆக மனிதனின் முதல் வேளாண்மை முயற்சியான விதை தூவலே இயற்கைக்கு மாறானதுதான். அடுத்தடுத்து அந்த விதைகள் தப்பாமல் முளைக்க அதன் மேல் மண்ணள்ளி தூவியதும், பின்னால் மண்ணைக் கிளறி விதை விதைத்ததும், விளைந்த பயிர் நன்கு வளர தண்ணீர் விட்டதும், எருவிட்டதும், பயிர் வளர தடையாக இருந்த களைகளை நீக்கியதும் வேளாண்மையின் அடுத்தடுத்த பரிமாணங்கள். பின்னாட்களில் தேவை இன்னும் அதிகரிக்க அதிகரிக்க பயிர் உற்பத்தியை பெருக்கும் விதமாக செயற்கையாக நுண்ணூட்டங்களை தெளிக்க வேண்டி வந்தது. இப்படி படிப்படியாக வளர்ந்ததே வேளாண்மை. வளரும் மக்கள் தொகைக்கு ஏற்ப உணவுப் பொருட்களின் உற்பத்தியும் அதிகரித்தால்தான் தேவையை ஈடுகட்ட முடியும். நவீன வேளாண் முறையை விடுத்து பழைய வேளாண்மை முறைக்கு மாறினால் நாட்டின் மூன்றில் இரண்டு பேருக்கு உணவுப் பொருட்கள் கிடைக்காமல் போய்விடும். எல்லோருக்கும் உணவு கிடைக்க வேண்டும் என்பதே முக்கியம். தரமான உணவு கிடைக்க வேண்டும் என்பது எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் எல்லோருக்கும் உணவு கிடைக்க வேண்டும் என்பதும்.

வேளாண்மையைப் போலதான் கால்நடை வளர்ப்பும். காட்டில் சுற்றித் திரிந்த மாட்டினங்களை மனிதர்கள் பழக்கி வேளாண்மை மற்றும் உணவு தேவைக்காக வளர்க்க ஆரம்பித்த பின்னர் மாடுகளில் பல்லாயிரம் ஆண்டுகளாக பரிணாம மாற்றங்கள் ஏற்பட்டு பல்வேறு இனவகைகள் உருவாக ஆரம்பித்தன. காட்டு சூழலலிருந்து வளர்ப்பு சூழலுக்கு மாற்றம் பெற்ற மாட்டினங்களின் உணவும் மாறியதால் அவை தரும் பாலிலும் மரபணு ரீதியான மாற்றங்கள் ஏற்பட ஆரம்பித்தன. அத்தகைய மாற்றங்களின் விளைவில் ஒன்றுதான் A1 பால் மற்றும் A2 பால் வித்தியாசம். பாலில் உள்ள புரதச் சத்தானது 209 அமினோ அமிலங்களால் ஆனது. அந்த 209 அமினோ அமிலத்தொடரில் 67 வது இடத்தில் இருந்த ப்ரோளின் ( Proline ) என்ற அமினோ அமிலத்திற்கு பதிலாக ஹிஸ்டிடின் (histidine) என்ற அமினோ அமிலமாக மாற்றமடைந்தது. இது காலப்போக்கில் பரிணாம வளர்ச்சியில் ஏற்பட்ட சாதாரண மாற்றம். இன்னமும் பெரும்பாலான மாடுகளில் A1 மற்றும் A2 புரதம் இரண்டும் சேர்ந்தே காணப்படுகின்றன. முற்றிலுமாக A1 புரதம் மட்டுமே கொண்ட பாலைத்தரும் மாடுகளாக இன்னும் மாறிவிடவில்லை. அப்படி மாறினாலும் அந்த பாலைக் குடிக்கும் அளவிற்கு மனித மரபணுவிலும் மாற்றங்கள் ஏற்படும். இது இன்று நாளை நடக்கப் போவதில்லை, ஆயிரமாயிரம் ஆண்டுகள் ஆகலாம்.

A2 பால் தான் ஆரோக்கியமானது என்றோ A1 பால் கெடுதியானது என்றோ இன்னும் ஆய்வுப்பூர்வமாக நிருபிக்கப்படவில்லை. அறிவியல் முன்னேற்றத்தில் பெரும்பாலும் நன்மை ஏற்படுகிற அதே நேரத்தில் சில தீங்குகளும் ஏற்படும். அப்படிப்பட்ட தீங்குகளில் ஒன்றுதான் A1 vs A2 குழப்பம். அமினோ அமிலங்களில் உள்ள இந்த வித்தியாசத்தை A2 MILK COMPANY என்ற நியூசிலாந்தை சார்ந்த நிறுவனம் தன்னுடைய வியாபார உத்திக்கு பயன்படுத்தி A2 பால் உடல் நலத்திற்கு மிகவும் சரியானது என்றும் A1 பால் உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கக் கூடியது என்ற கருத்தைப் பரப்பி வியாபாரம் செய்ய ஆரம்பித்தது. ஆனால் எந்த நாட்டில் அந்த A2 MILK COMPANY உருவானதோ அந்த நியூசிலாந்து மட்டுமல்லாமல் ஆஸ்திரேலியா, ஐரோப்பிய கூட்டமைப்பின் உணவு ஆராய்ச்சி மையங்கள் இந்த வாதத்திற்கு வலுவில்லை என்றே சொல்கின்றன. A1 பாலுக்கும் A2 பாலுக்கும் உணவுச்சத்தில் அதன் விளைவுகளில் பெரிய மாற்றம் இருப்பதை இன்னும் ஆராய்ச்சி முடிவுகள் நிருபிக்கவில்லை.

ஆக முழுதும் நிருபிக்காத இந்த மாயையை நம்பி மக்கள் தங்கள் பணத்தை இழப்பதை தடுக்க வேண்டும். பொதுவாக, பாலுக்கு கொடுக்கும் விலையை விட இரண்டு மடங்குக்கும் அதிகமான விலையைக் கொடுத்து இந்த A2 பாலை வாங்கி தங்கள் பணத்தை இழக்க வேண்டிய அவசியமில்லை. மனிதகுலம் தொடக்க காலத்தில் உண்ட உணவுகளுக்கும் தற்போது உண்ணும் உணவுகளுக்கும் அடிப்படையில் பெரிய வித்தியாசம் உண்டு. சமைக்காத இறைச்சிகளையும் பச்சைக் காய்கறிகளையும் உண்ட மனிதர்கள் இன்று பல்வேறு வகையான சமைத்த உருமாற்றம் செய்யப்பட்ட உணவுகளை உண்கிறோம். இந்த மாற்றத்தை எப்படி நம் உடலும் செரிமான மண்டலமும் ஏற்றுக் கொண்டனவோ அது போலதான் குடிக்கும் பாலில் ஏற்பட்ட மாற்றத்தையும் மனித உடல் ஏற்றுக் கொண்டது. இந்த மாற்றம் ஓரிரவில் ஏற்பட்டதில்லை. ஆண்டாண்டு கால பரிணாம வளர்ச்சியில் நம் உடல் அமைப்பில் ஏற்பட்ட மாற்றம் இது, பரிணாம வளர்ச்சியின் கொடை இது. ஆக உண்ணும் உணவுப் பொருட்களில் பெரிய அளவில் தேவையற்ற பொருட்கள் இல்லாதவரை உடம்பும் செரிமான மண்டலமும் அதனை ஏற்றுக் கொள்ளும். சிறு சிறு பிரச்சனைகளை நம் உடம்பே சரி செய்து கொள்ளும். அதற்கான தகவமைப்பை நம் உடம்பு படிப்படியாக பெற்றுக்கொள்ளும். ஆகவே உணவை எந்த வடிவத்தில் எடுத்துக் கொண்டாலும் உடல் அதை கிரகித்துக் கொள்ளும். கிரகிக்கும் நேரம் வேண்டுமானால் வேறுபட்டதாக இருக்கலாம். உடல் நலம் மிக முக்கியம்தான் அதே நேரத்தில் உடல் நலத்தின் பெயரால் ஏமாறாமல் இருப்பது அதைவிட முக்கியம்.

ஆர் எஸ் எஸ் உள்ளிட்ட அடிப்படைவாதிகளின் சாஸ்திர சம்பிராதயப்படி பசு மாடு கடவுளுக்கு நிகரானது. பசு மாட்டைத் தவிர மற்ற மாட்டு வகைகளை அவர்கள் ஏற்றுக் கொள்வதேயில்லை. பசுவை முன்னிறுத்தி இவர்கள் செய்யும் கலவரங்கள் மிக கொடுமையானவை. உலகில் அதிகமாக பசுமாட்டுப் பாலை குடிப்பவர்கள் அமெரிக்கர்கள் அதே அளவுக்கு பசு இறைச்சியை உண்பவர்களும் அமெரிக்கர்கள் தான். அனால் இறைச்சி உண்ணாத மக்கள் இறைச்சி உண்ணும் மக்களை ஒடுக்கிப் பார்க்க நினைப்பது இங்கே மட்டும்தான். இறைச்சி உண்பதும் உண்ணாததும் அவரவர் தனிப்பட்ட உரிமை. அவற்றில் தலையிட எந்த தனிப்பட்டவருக்கோ அரசுக்கோ உரிமையில்லை. ஆகவே காவிகளின் மாட்டரசியலை புரிந்து கொண்டு மக்கள் ஒற்றுமையாக இருந்து அவர்களின் மாட்டரசியலை வென்றெடுக்க வேண்டும்.      

(முற்றும்)

- கோ

 

Pin It