விஜயேந்திரன் - குருமூர்த்தி மோதல் வலுக்கிறது ஜுனியர் விகடன் தரும் தகவல்கள்

தான் உயிருடன் இருந்தபோது, தன்னுடைய சொந்த தம்பி இராமகிருஷ்ணனையும் மடத்தின் காரியதரிசியாக இருந்த காலடி விஸ்வநாதனையும் பல்வேறு காரணங்களால் ஜெயேந்திரர் வெளியேற்றினார். இந்த இருவரும் தற்போது மீண்டும் மடத்துக்குள் கொண்டு வரப்பட்டு விட்டனர்.

பார்ப்பன அதிகார மய்யமான காஞ்சி சங்கர மடத்தின் சொத்துக்களை சுருட்டுவதில் ‘அவாள்’களுக்குள் கடும் போர் நடக்கும் செய்திகள் அம்பலமாகியுள்ளன. இது குறித்து ‘ஜூனியர் விகடன் (22.5.2019) வெளியிட்டுள்ள விரிவான கட்டுரை

ஆன்மிகம்... அரசியல்... அதிகாரம் என்று இந்திய அரசியலில் ஆதிக்கம் செலுத்தும் அளவுக்கு வல்லமை படைத்தது காஞ்சி காமகோடி பீடம். குறிப்பாக மடத்தின் பீடாதிபதி, பிரதம மந்திரிக்கே ஆலோசனை சொல்லும் அதிகாரத்தைப் பெற்றிருந்தார். இன்றைக்கு அந்த ‘பவர் சென்டர்’, பிரச்னைகளின் சென்டராக மாறியிருக்கிறது. “மத்தியிலும் மாநிலத்திலும் அரசியலில் ஆதிக்கம் செலுத்தும் சிலர், மடத்தைத் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவரும் வேலையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்கள். மடத்தின் பீடாதிபதிக்குப் பல்வேறு வழிகளில் இவர்கள் நெருக்கடி கொடுத்து, ஏகப்பட்ட காரியங்களைச் சாதித்துக்கொள்ளத் திட்டமிடுகிறார்கள்.

இதை எல்லாம் பார்த்துக்கொண்டும் எங்களால் ஒன்றும் செய்யமுடிவில்லை’’ - ஜூனியர் விகடனில் கடந்த இரு இதழ்களில் மிஸ்டர் கழுகு பகுதியில் வெளியான சங்கர மடத்தின் விவகாரம் பற்றிய செய்திகளைப் படித்துவிட்டு, நம்மைத் தொடர்பு கொண்ட மடத்தின் பாரம்பர்ய பக்தர்கள் சிலர், புலம்பியதுதான் மேற்கண்ட வரிகள். என்ன தான் நடக்கிறது காஞ்சி மடத்தில்? தீவிர விசாரணையில் இறங்கினோம்.

‘இந்து மத தர்மங்களைக் கட்டிக்காப்பதற்காக இந்தியாவின் நான்கு திசைகளிலும் ஆதிசங்கரர் மடங்களை நிறுவினார். கிழக்கே பூரியில் கோவர்தன மடம், மேற்கே துவாரகையில் காளிகா மடம், வடக்கில் பத்ரிகாஷ்ரமத்தில் ஜோதிர் மடம், தெற்கில் சிருங்கேரியில் சிருங்கேரி மடம் என நிறுவினார் ஆதிசங்கரர். தன் இறுதிக் காலத்தைத் தமிழகத்தின் காஞ்சிபுரத்தில் கழித்தபோது காஞ்சி சங்கர மடத்தை யும் நிறுவினார்; அங்கேயே முக்தி அடைந்தார் என்பது காஞ்சி மடம் குறிப்பிடும் வரலாறு.

இது போன்ற காரணங்களால், சங்கர மடங்கள் வகுப்பது தான் இந்து தர்மம்; பீடாதிபதி சொல்வது தான் இந்து தர்ம கட்டளை; அதைப் பின்பற்றுவதுதான் எங்களைப் போன்ற உண்மையான இந்துக்களின் கடமை. இதை நாங்கள் ஆணித்தரமாக நம்புகிறோம். ஆனால், அந்த நம்பிக்கையை வைத்தே இப்போது பலரும் கோடிகளைக் குவித்துவருகிறார்கள்’’ என்று முன்னுரை கொடுக்கிறார்கள் சங்கர மடத்தின் பாரம்பர்ய பக்தர்கள்.

 மேற்கொண்டு பேசியவர்கள், “ஜெயேந்திரர் மறைவுக்கு முன்பே, மடத்தில் விரும்பத்தகாத சில நிகழ்வுகள் நடந்தன. குறிப்பாக, ஜெயேந்திரரின் இறுதிக் காலகட்டங்களில் அவரை முற்றிலும் ஓரம் கட்டும் வேலைகளை மடத்தில் இருந்த சிலரே தந்திரமாகச் செய்தனர். ஜெயேந்திரர் யாரையும் சந்தித்து விடக்கூடாது என்பதில் அவர்கள் உறுதியாக இருந்தார்கள்.

அதனால், வி.ஐ.பி-க்கள் பலரும் மடத்துக்கு வந்தபோதுகூட பால பெரியவரான விஜயேந்திரரை மட்டுமே சந்திக்க வைத்தனர். அந்த மன உளைச்சலே ஜெயேந்திரரின் உடல்நிலையை மேலும் மோசமாக்கியது. 2018ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஜெயேந்திரர் மறைவுக்குப் பிறகு, அடுத்த பீடாதிபதியாகப் பொறுப்பேற்றார் விஜயேந்திரர். அதற்குப் பிறகு பல மாற்றங்கள் மடத்துக்குள் அரங்கேறத் தொடங்கின.

கட்டளையிடும் அரசியல் சக்திகள்

வெளியிலிருக்கும் சில அரசியல் சக்திகளிடமிருந்து பீடாதிபதிக்குக் கட்டளைகள் வருகின்றன. அதைப் பின்பற்றித்தான் அவரும் நடக்கிறார். மடத்தின் ஒட்டு மொத்த நிர்வாகமும் அந்த அரசியல் சக்திகளின் கைகளில்தான் இருக்கிறது. அவர்கள் மடத்தின் சொத்துகளை கபளீகரம் செய்து கொண்டிருக்கின்றனர். மடத்துக்கு ஒரு இலட்சம் கோடி ரூபாய் அளவுக்கான அசையும் மற்றும் அசையா சொத்துகளும் நான்காயிரம் கோடி ரூபாய் பணமும் உள்ளது. இந்த ஆஸ்தியை குறிவைத்துதான் இவ்வளவு அரசியலும் நடக்கின்றன. மடத்துக்கு வெளியே ஒரு டீம், மடத்துக்குள்ளே ஒரு டீம் என்று இரண்டு குழுக்கள் கைகோத்து சில காரியங்களை கச்சிதமாக அரங்கேற்றி வருகிறது” என்றவர்கள், அது பற்றியும் பகிர்ந்து கொண்டார்கள்.

“ஜெயேந்திரர் உயிருடன் இருந்தபோது, பத்மாவதி மருத்துவக் கல்லூரி, கிரேட் ஈஸ்டர்ன் மருத்துவக் கல்லூரி, குண்டூர் மருத்துவக் கல்லூரி, உத்திராடம் திருநாள் (எஸ்.யூ.டி) மருத்துவக் கல்லூரி ஆகிய நான்கு கல்லூரிகள் வாங்கப்பட்டன. இது போன்று பல வகைகளில், ஜெயேந்திரர் காலத்தில் மடத்தின் சொத்துகள் பல மடங்காக உயர்ந்தன. தற்போது, அதில் மூன்று மருத்துவக் கல்லூரிகள் முக்கியப் புள்ளிகளுக்கு விற்கப்பட்டுவிட்டன.

திருவனந்தபுரத்தில் உள்ள எஸ்.யூ.டி. மருத்துவக் கல்லூரி மட்டும்தான், தற்போது மடத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. இதை, ஜெயேந்திரரால் நியமிக்கப் பட்ட கௌரி காமாட்சி என்ற பெண் இப்போதும் நிர்வகித்து வருகிறார். மற்ற கல்லூரிகளை விற்றது போலவே, இந்த மருத்துவக் கல்லூரியை விற்பனை செய்யும் வேலையில் வெளியிலிருக்கும் அரசியல் சக்திகள் இறங்கியுள்ளன. முதல்படியாக, அந்தப் பெண்ணை, காஞ்சி காமகோடி அறக்கட்டளையி லிருந்து நீக்கும் முயற்சிகளும் நடக்கின்றன.

‘ஜெயேந்திரர் உயிருடன் இருந்தபோது செய்யப்பட்ட பலவிதமான பணிகளுக்குப் பணம் கொடுக்கவில்லை’ என்று சொல்லி, எந்த ஆதாரமும் இல்லாமல் மடத்திடம் பணத்தைக் கறக்கும் வேலையிலும் பலர் இறங்கியுள்ளனர். கோடிக்கணக்கில் பணம் செட்டில் செய்யப்படுகிறது. வெளியிலிருந்து மடத்தை ஆதிக்கம் செய்யும் சக்திகளே, இப்படி போலியான நபர்களை செட்டப் செய்து அனுப்பி, கொள்ளையடிக்கிறார்கள்.

தான் உயிருடன் இருந்தபோது, தன்னுடைய சொந்த தம்பி இராமகிருஷ்ணனையும் மடத்தின் காரியதரிசியாக இருந்த காலடி விஸ்வநாதனையும் பல்வேறு காரணங்களால் ஜெயேந்திரர் வெளி யேற்றினார். இந்த இருவரும் தற்போது மீண்டும் மடத்துக்குள் கொண்டு வரப்பட்டு விட்டனர். அதேசமயம், ஜெயேந்திரரால் விரும்பி மடத்துக்குள் கொண்டுவரப்பட்ட ஸ்ரீராம், தாடி முத்துராமன் ஆகிய நிர்வாகிகள் கட்டாயமாக வெளியேற்றப்பட்டுள்ளனர். தற்போதைக்கு ராமகிருஷ்ணன், மேனேஜர் சுந்தரேசன், காலடி விஸ்வநாதன், விஜயேந்திரர் தம்பி ரகு, பம்மல் விஸ்வநாதன் உள்ளிட்டவர்கள்தான் சர்வ வல்லமையுடன் காஞ்சி மடத்துக்குள் அதிகாரமிக்க சக்தியாக இருக் கிறார்கள்” என்று சொன்ன வர்கள், வெளியிலிருந்து மடத்தை இயக்குபவர்கள் பற்றியும் தகவல்களைச் சொன்னார்கள்.

“தற்போது மடத்தில் நடக்கும் பல விஷயங்களில் பி.ஜே.பி கட்சியில் செல்வாக்கு பெற்ற ஆடிட்டர் குருமூர்த்திக்கும் முக்கியப் பங்கு உண்டு. சமீபத்தில் அந்த ஆடிட்டர் தலைமையில் ஒரு கூட்டம் நடந்தது. ‘மடத்தின் சொத்துகளை எப்படி நிர்வகிப்பது?’ என்று அந்தக் கூட்டத்தில் ஆலோசனை நடந்துள்ளது. இப்படி ஒரு கூட்டம் நடைபெற்றது, மடத் தின் பீடாதிபதிக்கே பல நாள்கள் கழித்துதான் தெரிய வந்துள்ளது. மடத்தின் சொத்து விவகாரம் குறித்து முடிவு எடுக்க வேண்டியவர் பீடாதிபதி தானே தவிர, ஆடிட்டர் அல்ல” என்று கோபத் துடன் சொன்னார்கள்.

இதுதொடர்பாக மடத்தின் பணியாளர்கள் தரப்பிலிருந்து நம்மிடம் பேசிய சிலர், “காஞ்சி மடத்துக்குச் சொந்தமாக பல நூறு கிலோ கணக் கில் தங்கம், வெள்ளி உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்கள் இருக்கின்றன. குறிப்பாக, பீடாதிபதி களுக்குப் பாதபூஜை நடைபெறும்போது தங்கக் காசுகளைப் பக்தர்கள் செலுத்துவார்கள். அந்தத் தங்கக் காசுகளைப் பாதபூஜை முடிந்தவுடனே, மடத்தில் அதிகாரம் செலுத்தும் சிலர் எடுத்துச் சென்றுவிடுவது வாடிக்கையாக இருக்கிறது.

தற்போதைய பீடாதிபதியான விஜயேந்திரரின் தம்பி ரகுமீது சில வில்லங்கப் புகார்கள் எழுந்துள்ளன. ரகு குறித்த ஒரு வில்லங்க வீடியோவை ஒரு டீம் இப்போது கையில் வைத்துக்கொண்டு ரகுவுக்கு செக் வைக்கத் திட்டமிடுகிறது. இந்த வில்லங்க விவரங்கள் எல்லாம் வெளியே இருக்கும் அதிகார மையங்களுக்குத் தெரிந்ததாலேயே, அவர்களுக்கு மடத்தில் இருப்பவர்கள் பணிந்துபோகும் நிலை ஏற்பட்டிருப் பதாகச் சொல்கிறார்கள். காஞ்சி மடத்தின் அடுத்த இளைய மடாதிபதியை விஜயேந்திரர் விரைவில் அறிவிக்க வேண்டும். அப்படி நியமிக்கப்படும் இளைய மடாதிபதி தாங்கள் கைகாட்டும் நபராக இருக்க வேண்டும் என்றும் விஜயேந்திரருக்கு நெருக்கடி கொடுக்கப்படுகிறது.

ஜெயேந்திரரின் நம்பிக்கைக்குரிய நபர்களை ஓரம் கட்டுவது போலவே, மடத்திலிருந்து ஜெயேந்திரரின் அடையாளங்களும் கொஞ்சம் கொஞ்சமாக அழிக்கப்பட்டு வருகின்றன. மடத்தி லிருக்கும் பல்வேறு கல்வெட்டுகளில் ஜெயேந்திரரின் பெயர் நீக்கப்படுகின்றன. ஜெயேந்திரர் பயன்படுத்திய வாசல் அறை அடைக்கப்பட்டு, அதை மறைக்கும் படியாக பெரிய சிம்மாசனம் அமைக்கப்பட்டுள்ளது. அதில்தான் விஜயேந்திரர் அமர வைக்கப்படுகிறார். இதுவும் மடத்தின் தர்மத்துக்கு எதிரானது.

ஒரு பீடாதிபதி, சிம்மாசனத்தில் அமரக் கூடாது என்ற விதியும் இப்போது மீறப்பட்டுள்ளது. ஜெயேந்திரரின் கடைசிக் காலத்தில் அவரை மடத்துக்கு உள்ளேயே சிறை வைத்ததுபோல் வைத்திருந்தனர். ஜெயேந் திரருக்குக் கடைசிகாலத்தில் நிகழ்ந்தது, விஜயேந் திரருக்கு இப்போதே நிகழத் தொடங்கிவிட்டது” என்று கவலை பொங்கச் சொல்கிறார்கள் அவர்கள்.

 “இப்போது தொடங்கியிருக்கும் விவகாரம் கிட்டத்தட்ட பழிதீர்ப்பதற்கான போர்” என்றே மடத்தின் வட்டாரங்களில் பேசப்படு கிறது. இது பற்றியும் பேசியவர்கள், “மடத்தின் சொத்துகளைக் குறிவைத்து நடக்கும் இன்றைய காய் நகர்த்தல்களின் பின்னணியில், பல ஆண்டுகளுக்கு முந்தைய சம்பவம் ஒன்று இருக்கிறது. அப்போது மடத்தில் ஒரு விழா நடந்தது. அப்போது விஜயேந்திரருக்கும் ஆடிட்டர் குருமூர்த்திக்கும் ஏதோ வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதையொட்டி ஜெயேந்திரர் குருமூர்த்தியிடம் கடினமான வார்த்தைகளைப் பிரயோகித்திருக்கிறார். இதில் கோபம் அடைந்த குருமூர்த்தி, ‘இனி மடத்துக்கு வரமாட்டேன்’ எனத் திரும்பி விட்டாராம். அன்று கோபத்துடன் வெளி யேறியவர் 15 ஆண்டுகளுக்கும் மேலாக மடத்தின் பக்கமே வரவில்லை. ஜெயேந்திரர் இறந்த அன்று மாலைதான் உள்ளே வந்தார்” என்றனர் மடத்துக்கு நெருக்கமானவர்கள்.

இந்த விவகாரங்கள் குறித்து காஞ்சி மடத்தின் கருத்தை அறிவதற்காக, அதன் மேலாளர் சுந்தரேசனிடம் பேசினோம். அவர் நம்மிடம், “மடத்தின் செயல்பாடுகள் சிறப்பாக இருக்கின்றன. மடத்தின் முடிவுகளில் வெளியாட்கள் யாரும் தலையிட முடியாது. மடத்தின் சொத்துகள் தொடர்பான விவகாரங்களிலும் வெளி ஆட்கள் தலையிட முடியாது. எந்தச் சொத்தையும் நாங்கள் விற்க வில்லை. குத்தகை மட்டுமே விட்டுள்ளோம்.

அதையும் சரியாக வசூல் செய்துவருகிறோம். ஆடிட்டர் குருமூர்த்தியைப் பற்றி குற்றம்சுமத்தி செய்தி பரப்பி வருகிறார்கள். குருமூர்த்தி மடத்தின் விவகாரங்களில் தலையிடுவது இல்லை. அவர் மடத்தின் பக்தர். அவ்வளவுதான். அதேபோல மடம் தொடர்பாக உங்களிடம் கூறப்பட்டிருக்கும் பல விஷயங்களும் உண்மை இல்லாதவையே. மடத்தின் சொத்துக் கணக்குகள், வரவு-செலவுகள் அனைத்தும் சரியாகவே பராமரிக்கப்படுகின்றன. கடந்த ஆண்டை விட, இந்த ஆண்டு 30 சதவிகிதம் மடத்துக்குக் கூடுதல் வருமானம் கிடைத்துள்ளது” என்று முடித்துக் கொண்டார்.

இந்த விவகாரங்கள் குறித்து ஆடிட்டர் குருமூர்த்தியிடம் பேசினோம். “காஞ்சி மடத் திலிருந்து யாராவது என்னைப் பற்றிப் புகார் சொல்லி யிருக்கிறார்களா? இதுபோன்ற பொறுப்பற்ற கேள்விகளுக்கும் வதந்திகளுக்கும் நான் எப்படி பதில் சொல்ல முடியும்? நான் அந்த மடத்தின் பக்தர். அந்த அடிப்படையில்  மூன்று மாதங்களுக்கு ஒருமுறை மடத்துக்குச் செல்வேன். அந்த மடத்தின் எந்தப் பொறுப்பிலும் நான் இல்லை. அந்த மடத்துக்குச் சொந்தமாக திருவனந்தபுரத்தில் மருத்துவக் கல்லூரி இருப்பதுகூட எனக்குத் தெரியாது. அப்புறம் எப்படி நான் அதை விற்க காய் நகர்த்த முடியும்? உறுதியாகச் சொல்கிறேன், மடத்தில் எந்தத் தலையீடும் நான் செய்யவில்லை. அது எனக்குத் தேவையும் இல்லை” என்றார் தெளிவாக.

சங்கரராமன் கொலை வழக்குச் சுழலில் சிக்கி ஏற்கெனவே மடத்தின் பெயர் சிதைந்துகிடக்கிறது. இந்நிலையில், சொத்துகளைக் குறிவைத்து மறுபடியும் மடத்தின் பெயர் டேமேஜ் ஆக ஆரம்பித்துள்ளது.  ஆன்மிக மையங்கள், அதிகார மையங்களாகவும் செயல்பட ஆரம்பித்தால், ஆபத்து தான் என்பதற்கு காஞ்சி மடமே மீண்டும் சாட்சியாகிக் கொண்டிருக்கிறது!