சென்னைக் கார்ப்பொரேஷனில் சென்ற 7-9-32 தேதியில் நடந்த கூட்டத்தில் சென்னைக்கு விஜயஞ் செய்யும் கும்பகோணம் சங்கராச்சாரியாருக்கு ஒரு உபசாரப் பத்திரம் வாசித்தளிப்பதாகத் தீர்மானித்திருப்பதைக் கண்டு ஆச்சரியப்படுகிறோம்.

கார்ப்பொரேஷன் சபையானது நகரத்தின் சுகாதார நிலையைக் காப்பாற்றுவதற்கும், நகர ஜனங்களின் nக்ஷமத்தைக் கவனிப்பதற்கும் ஏற்பட்டதென்பதை எவரும் அறிவார்கள். இவைகளின் பொருட்டு நகர மக்களிடம் வரி வசூலித்து அப்பணத்தை நகர மக்களின் nக்ஷமத்திற்காகச் செலவு செய்து வருகிறது. ஒரு நகரத்திற்கு, தேச நன்மைக்காக அதாவது அரசியல் அபிவிருத்திக்காகவும் சமுதாய முன்னேற்றத்திற்காகவும் பாடுபடக் கூடிய தலைவர்கள் விஜயஞ் செய்வார்களாயின், அவர்களுக்கு அந்த நகர சபை உபசாரஞ் செய்வது எங்கும் வழக்கமாக இருந்து வருகிறது. இப்படிச் செய்வது அந்தத் தலைவர்களை ஊக்கப் படுத்துவதற்கும் அவர்களுடைய உழைப்பைப் பாராட்டுவதற்கும் அறிகுறியாகும். ஜனங்களின் நன்மைக்காக உழைக்கும் உண்மையான அரசியல் வாதிகளுக்கும் சமுதாய சீர்திருத்த வாதிகளுக்கும் நகர மக்கள் சிறிது உபசாரத்திற்காகச் செலவு செய்வது எந்த வகையிலும் தவறாகாது.

ஆனால், உலக நன்மையைச் சிறிதும் கருதாமல் தம்முடைய ஜாதி நன்மையை மட்டும் கருதுகின்றவர்களும் “மற்ற மதங்கள் யாவும் அழிய வேண்டும், தம்முடைய மதம் மட்டிலும் ஓங்க வேண்டும் என்று நினைக்கின்றவர்களும், மற்ற மக்களெல்லாம் “சூத்திரர்கள்” “இழிந்தவர்கள்” “சண்டாளர்கள்” “அந்நிய மதத்தினர்கள்” அனைவரும் “மிலேச்சர்கள்” ஆகையால் அவர்களுடன் பழகுதலும் பேசுதலும் பாவம், அப்படிச் செய்தால் அதற்காகப் பிராயச்சித்தஞ் செய்து கொள்ள வேண்டும்” என்று கருதுகின்ற வர்களும் ஆகிய குறுகிய மனப்பான்மையுடைய கூட்டத்தார்க்கெல்லாம் பொது ஜனங்களின் வரிப் பணத்திலிருந்து நடைபெறும் ஸ்தாபனம் உபசாரம் பண்ணுவதென்றால் அது எந்த விதத்தில் நியாயமுடையதென்று கேட்கின்றோம்.periyar and maniammai dk cadresஉதாரணமாகச் சென்னைக் கார்ப்பொரேஷனை எடுத்துக் கொள்ளுவோம். அதற்கு வரி கொடுப்பவர்களில் கிறிஸ்தவர்கள் இருக்கிறார்கள்; முஸ்லீம்கள் இருக்கிறார்கள்; ஜைனர்கள் இருக்கிறார்கள்; புத்தர்கள் இருக்கிறார்கள்; பார்சிகள் இருக்கிறார்கள்; சைவர்கள் இருக்கிறார்கள்; வைணவர்கள் இருக்கிறார்கள். இவ்வாறு பல திறப்பட்ட மதத்தினர்கள் இருக்கிறார்கள்.

ஜாதிகளிலோ ஆதிதிராவிடர்கள், ஆங்கிலேயர்கள், பார்ப்பனர்கள், அல்லாதார்கள் முதலிய இந்தியாவில் எவ்வளவு ஜாதிகள் உண்டோ அவ்வளவு ஜாதியினர்களும் சென்னை நகரில் வாழுகின்றார்கள். இவ்வளவு மதத்தினரிடமிருந்தும், ஜாதியினரிடமிருந்தும் வாங்கப்படும் வரிப் பணத்தினால்தான் கார்ப்பொரேஷன் நடைபெற்று வருகிறது என்பது யாருக்கும் தெரியாத விஷயம் அல்ல.

இந்தக் கார்ப்பொரேஷனால் இப்பொழுது உபசாரப்பத்திரம் வாசித்துக் கொடுக்க வேண்டுமென்று தீர்மானிக்கப்பட்டிருக்கும் சங்கராச்சாரியாரைப் பற்றி நமது வாசகர்களுக்குத் தெரியாததல்ல. அவர் பிராமணர்களின் ஆதிக்கத்தையும், பிராமணீயத்தையும் வளர்க்க உதவி செய்பவர் சந்நியாசி வேடம் பூண்டவராயிருந்தாலும், யானை, குதிரை, ஒட்டை முதலிய மிருக வர்க்கங்களுடனும், ஆள் மாகாணங்களுடனும் உலக குரு என்று பெயர் வைத்துக் கொண்டு ஊர் ஊராகச் சுற்றுபவர். சுற்றுப் பிரயாணம் பண்ணும் போது, ஆங்காங்கே உள்ள பிராமணரல்லாத பணக்காரர்களிடம், பாத காணிக்கை என்னும் பெயருடன் ஆயிரக்கணக்காகப் பொருள் பறிக் கின்றவர். ஏமாந்து பொருளைக் கொடுக்கும் பார்ப்பனரல்லாதார்களிடம் மேற்படி சங்கராச்சாரியார் நேரே பேசுவது கூட பாவம் என்று நினைத்து பக்கத்தில் ஒரு பிராமணரை வைத்துக் கொண்டு அவரிடம் பேசுவது போல பாவித்துக் கொண்டு பணம் கொடுத்த பார்ப்பனரல்லாதாரிடம் பேசுபவர்; பார்ப்பனரல்லாதாரிடம் பறிக்கும் பொருளைப் பிராமண போஜனம் என்னும் பெயரால் பார்ப்பனர்களுக்கே வயிறு வெடிக்கும்படி விருந்து செய்பவர்; பார்ப்பனரல்லாதார்க்கு அவர்கள் சாப்பிட்ட சாப்பாட்டின் மீதத்தைப் போட் டால் கூட அதனால் தமக்குத் தோஷம் வந்து விடும் என்று நினைப்பவர்; சுருங்கக் கூறினால் பார்ப்பன ஆதிக்கத்தை நிலைநிறுத்தி கடவுள், வேதம், புராணம் என்பவைகளின் பேரால் பார்ப்பனரல்லாதார்களை அடிமைப் படுத்துவதற்கு வருணாச்சிரம தருமப் பிரசாரம் பண்ணுபவர்தான் சங்கராச் சாரியார் என்று சொல்லுவதில் எள்ளளவும் ஐயமில்லை.

இத்தகைய ஒரு சிறு கூட்டத்தைச் சேர்ந்த ஒருவருக்கு உலக மக்க ளுக்கு கெடுதியை உண்டாக்கும் மதப்பிரசாரமும் வருணாச்சிரம தருமப் பிரசாரமும் செய்து வரும் ஒருவருக்கு, சகல மதத்தினர்க்கும், சகல ஜாதி யினர்க்கும் பொதுவான ஒரு சபை உபசாரம் செய்வதென்றால் அது பொது ஜன அபிப்பிராயத்திற்கு இசைந்ததாகுமா என்றுதான் கேட்கின்றோம்.

அன்றியும், சென்னைக் கார்ப்பொரேஷனில் இது சம்பந்தமான விவாதம் நடந்தபோது சில அங்கத்தினர்கள் எழுப்பிய இரண்டொரு சந்தேகங்களும் கவனிக்கக் கூடியதாகும். அதாவது ஒரு அங்கத்தினர்- “எலெக்ட்ரிக் லிப்டில் ஏறி கவுன்சிலர் அறைக்கு வந்து நம்முடன் கலந்து கொண்டு உபசாரப்பத்திரம் பெற திரு. சங்கராச்சாரியார் ஒரு சமயம் விரும்ப மாட்டார் என நினைக்கிறேன்”என்று கூறினார். இது உண்மையேயாகும். ரயில்வண்டி, மோட்டார்கார், ஆகாய விமானம் முதலிய வாகன வசதிகள் ஏராளமாக இருக்கின்ற இக்காலத்திலும், பல்லக்கின் மேல் ஏறிக் கொண்டு மனிதர்களை சுமக்கச் செய்யும் பெரியார்கள், “எலெக்ட்ரிக் லிப்டி”ன் மேல் அடி வைப்பதற்கு துணிவார் என்பது சந்தேகந்தான். அப்படியேறுவது அவர் களுடைய மத சம்பிரதாயத்திற்கும், பழக்க வழக்கத்திற்கும், “தெய்வீகத்” தன்மைக்கும் விரோதமாக இருந்தாலும் இருக்கலாம். ஆகவே அவர் எப்படி கார்ப்பொரேஷன் சபைக்குள் புகுவார் என்பதில் சந்தேகம் உண்டாவது இயல்பு என்பதை நாமும் ஒப்புக் கொள்ளுகிறோம்.

மற்றொரு அங்கத்தினர் “இந்துக்களல்லாத மற்ற அங்கத்தினருடன் கை குலுக்கித் தீட்டுப்பட்டுக் கொள்ள சங்கராச்சாரியார் சம்மதிப்பாரா? என்பதை அறிய விரும்புகிறேன்” என்று ஒரு சந்தேகத்தை எழுப்பினார். அந்த அங்கத்தினர், அந்நிய மதத்தைச் சேர்ந்தவராதலால் சங்கராச்சாரியாரின் உண்மை நிலையறியாமல் இவ்வாறு கேட்டார் என்றே நாம் நினைக்கிறோம். பிராமணர்களைத் தவிர மற்ற இந்துக்களை யெல்லாம், “சூத்திரர்கள்” அதாவது அடிமைப் பட்டவர்கள், விலைக்கு வாங்கப்பட்டவர்கள், வேசி மக்கள் சண்டையில் ஜெயித்துப் பிடித்துக் கொண்டு வரப்பட்டவர்கள் என்று கருதி அவர்களைப் பார்க்கக் கூடச் சம்மதிக்காதவர் என்பதைத் தெரிந்திருந்தால் அவ்வங்கத்தினர் இச்சந்தேகத்தை எழுப்பியிருக்க மாட்டார். ஆதலால் சங்கராச்சாரியார் பிராமணரல்லாத இந்துக்களையே தொட்டுக் கொள்ளாத போது மற்ற மதத்தினரை எப்படித் தொட்டுக் கொள்ளுவார் என்று கேட்கிறோம்.

அன்றியும், “கடவுள்” என்பவரின் முகத்திற் பிறந்ததாகக் கூறிக் கொண்டிருக்கும் கூட்டத்தாரின் தலைவராகிய சங்கராச்சாரியாருக்குக் கார்ப்பொரேஷன் உபசாரப் பத்திரம் வாசித்துக் கொடுப்பதாகத் தீர்மானித்திருப் பதில் பல சங்கடங்கள் நேர இடமிருக்கின்றன என்பதை எடுத்துக் காட்ட விரும்புகின்றோம்.

முதலில் வேத சம்பிரதாயப்படி நடந்து கொள்ளுகின்ற ஒருவர், “மிலேச்சர்” என்று சங்கராச்சாரியாரால் கருதப்படுகின்ற ஆங்கிலேயர்களின் சம்பிரதாயப்படி அமைந்துள்ள ஒரு சபைக்குள் பிரவேசிக்கலாமா? அச் சபையின் உபசரிப்பை ஏற்றுக் கொள்ளலாமா? என்னும் கேள்விகள் எழ இடமிருக்கின்றன. ஒருக்கால் இவைகளுக்கு ஏதாவது சமாதானம் சொல்லிக் கொண்டு உபசாரத்தை ஏற்றுக் கொள்ளச் சம்மதித்தால், அப்பொழுது சங்கராச்சாரியார் சபைக்குள் வரும்பொழுது, அங்குள்ள பிராமணரல்லாத அங்கத்தினர்கள், முஸ்லீம் அங்கத்தினர்கள், கிறிஸ்தவ அங்கத்தினர்கள், ஆதிதிராவிட அங்கத்தினர்கள் இவர்களெல்லாம் சபையில் இருக்கலாமா? இவர்கள் இருக்கின்ற ஒரு கூட்டத்தின் நடுவில் சங்கராச்சாரியார் செல்லலாமா? அப்படி செல்லுவது அவருடைய வேத சாஸ்திரங்களுக்கும் ஏற்குமா? என்னும் கேள்விகளும் எழுகின்றன.

அப்படிச் சங்கராச்சாரியார் சென்றாலும் எல்லா அங்கத்தினர்களும் இருந்தாலும், அங்கத்தினர்களும் சங்கராச்சாரியார் அவர்களும் ஒருவர்க்கொருவர் எவ்வாறு அறிமுகப்படுத்திக் கொள்வது? மரியாதை செய்து கொள்ளுவது என்ற விஷயத்தில் தகராறு ஏற்பட இடமிருக்கிறது. அதாவது சங்கராச்சாரியார் சம்பிரதாயப்படி யாரும் அவரைக் கண்டவுடன் நமஸ்காரம் பண்ண வேண்டும்; அப்பொழுது சங்கராச்சாரியார் நமஸ்காரம் பண்ணிக் கொண்டவர், பிராமணராயிருந்தால் தன் கையில் ‘பிரசாதம்’ எனும் பெயரால் சாம்பல் கொடுப்பார். பிராமணரல்லாதவராயிருந்தால் மற்றொருவர் கையில் சாம்பல் கொடுக்கச் சொல்வார். இதுதான் சங்கராச்சாரியாரைக் கண்டு கொள்ளும் முறையாகும். கார்ப்போரேஷன் உபச்சாரம் செய்யும் போது இந்த முறையை அனுசரிப்பதா? இம்முறைக்குக் கார்ப்பொரேஷன் அங்கத்தினர் கள் அனைவரும் சம்மதிப்பார்களா?

அல்லது ஆங்கில சம்பிரதாயப்படி, சங்கராச்சாரியார் வந்தவுடன் தலைவர் ஒவ்வொரு அங்கத்தினரையும் அறிமுகம் செய்து வைக்க, சங்கராச் சாரியார் அவ்வங்கத்தினர்களுடன் கைகுலுக்க வேண்டும்; இம்மாதிரி செய்ய அவர் அனுமதிப்பாரா? இப்படிச் செய்தால், அவருடைய கொள்கைக்கும் மதத்திற்கும், வேத சாஸ்திரங்களுக்கும் ஏற்குமா? என்ற கேள்விகளும் எழுகின்றன.

அன்றியும், “சமஸ்கிருதம் ஒன்றுதான் தெய்வ பாஷை. தமிழ் சூத்திரபாஷை, இங்கிலீஷ் போன்ற அந்நிய தேச பாஷைகள், மிலேச்ச பாஷைகள்” என்ற கொள்கையுடைய சங்கராச்சாரியாருக்கு எந்த பாஷையில் உபசாரப் பத்திரம் வாசித்துக் கொடுக்கப் போகின்றார்கள் என்ற சந்தேகம் நமக்கு உண்டாகிறது. சங்கராச்சாரியார் கொள்கைப்படி “தெய்வ பாஷை” யாகிய சமஸ்கிருதத்தில் உபசாரப் பத்திரம் வாசிக்க கார்ப்பொரேஷன் துணியுமா? அல்லது “மிலேச்ச பாஷை” யாகிய ஆங்கிலத்தில் உபசாரப் பத்திரம் வாசித்துக் கொடுத்தால் அதை சங்கராச்சாரியார் ஏற்றுக் கொள்ளுவது அவருடைய கொள்கைக்குப் பொருத்தமா? என்ற கேள்விகளும் எழுகின்றன.

இந்தச் சங்கடங்களை யெல்லாம் உத்தேசித்து, சங்கராச்சாரியார் அவர்களே “கார்ப்பொரேஷன் உபசாரத்தை ஏற்றுக் கொள்ள முடியாது” என்று தெரிவித்து விட்டால், இது ஒரு பெரிய கார்ப்பொரேஷன் சபைக்கு அவமானமல்லவா? இதுவரையிலும் கௌரவம் பொருந்திய கார்ப்பொரேஷன் உபசாரத்தை மறுத்தவர் யாரேனும் உண்டா?

ஆகையால் நாம் மேலே கூறிய விஷயங்களையெல்லாம் ஆலோ சித்துப் பார்ப்பவர்கள் கார்ப்பொரேஷன் செய்த தீர்மானம் தவறானது என்பதை உணராமலிருக்க முடியாது. இவ்வாறே மதவாதிகளுக்கும், வருணாச்சிரம தருமிகளுக்கும் கார்ப்பொரேஷன் உபசாரம் செய்யத் தீர்மானிப்பதன் நோக்கம் என்ன என்பதுதான் நமக்கு விளங்கவில்லை. எல்லா மத குருக்களுக்கும் கௌரவம் செய்ய வேண்டும் என்று கார்ப்பொரேஷன் தீர்மானிக்குமாயின், அபிப்பிராயப்படுமாயின் பிறகு அதன் உபசாரத்திற்கே கௌரவமில்லாமற் போய்விடும் என்பது நிச்சயம். சாதாரணமாகத் தெருவில் பிச்சையெடுத்துத் திரிகின்ற ஒரு பிச்சைக்காரனும் தன்னை மதகுரு என்று சொல்லிக் கொள்ளலாம். அத்தகைய மத குருமார்களுக்கும் கார்ப்பொரேஷன் உபசாரம் செய்யத் துணியுமா? என்றுதான் கேட்கின்றோம்.

அன்றியும், சங்கராச்சாரியாருக்கு உபசாரம் செய்ய வேண்டுமென்னும் தீர்மானத்தை, அவரால் “சூத்திரர்” என்று கருதப்படுகின்ற திரு. ஜி. நாராயண சாமி செட்டியார் என்னும் பிராமணரல்லாத கனவான் கொண்டு வந்ததைப் பற்றியே நாம் மிகவும் வெட்கப்படுகிறோம். இத் தீர்மானத்தை, “ஜஸ்டிஸ்” கட்சியைச் சேர்ந்த பார்ப்பனர் அல்லாத அங்கத்தினர்கள் ஆதரித்தது அதிலும் வெட்கக் கேடான காரியமாகும்.

அன்றியும் சங்கராச்சரியாருக்கு உபசாரப் பத்திரத்தைத் தயாரிக்க செட்டியார் ஏற்படுத்தியிருக்கும் கமிட்டியில், திரு. வி. சக்கரைச் செட்டியார் என்னும் கிறிஸ்துவ கனவானும், திரு. பஷீர் அகமது சையத் எனும் முஸ்லிம் கனவானும் சேர்ந்திருப்பதன் அர்த்தமும் நமக்கு விளங்கவில்லை.

இவற்றையெல்லாம் நினைக்கும் போது கார்ப்பொரேஷன் சபை நகர நன்மையை கவனிக்கும் சபை மாத்திரமா? அல்லது மதப் பிரசாரம், வருணாச்சிரம தர்மப் பிரசாரம், பார்ப்பனப் பிரசாரம் செய்யும் சபையா? என்னும் சந்தேகங்களும் உண்டாகின்றன.

இதற்கு யார் எவ்வளவுதான் சமாதானம் சொன்னாலும் கார்ப்பொரேஷன் இம்மாதிரி, வருணாச்சிரம தருமப் பிரசாரகர்களுக்கு உபசாரம் செய்வதை மேற்கொள்ளுமானால், அதையும், அதன் அங்கத்தினர்களையும் வருணாச்சிரம தருமசபை, “வருணாச்சிரம தருமப் பிரசாரகர்கள்” “பிராமணிய பக்தர்கள்” என்று பொது ஜனங்கள் காட்டும் குற்றத்தினின்றும் தப்பித்துக் கொள்ள முடியாதென்று தான் நாம் கருதுகின்றோம்.

(குடி அரசு - தலையங்கம் - 11.09.1932)

Pin It