‘ஆண்டாள் முதல் சங்கராச்சாரி வரை... தமிழை மறுக்கும் வேதமரபுகள்’ என்ற தலைப்பில் ஜன.30, 2018 அன்று சென்னை இராயப்பேட்டை ஆனந்த் அரங்கில் திராவிடர் விடுதலைக் கழகம் நடத்திய கருத்தரங்கில் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் நிகழ்த்திய உரையிலிருந்து... (கடந்த வார தொடர்ச்சி)
பிரிட்டிஷ் ஆட்சியில் சமஸ்கிருதத்துக்கு மட்டும் தனியே கல்லூரி தொடங்க பார்ப்பனர்கள் மனு தந்ததையும் அதற்கு இராஜாராம் மோகன்ராய் கடும் எதிர்ப்பு தெரிவித்ததையும் குறிப்பிட்டோம்.
இது குறித்து பல ஆண்டுகாலம் விவாதங்கள் நடந்தன. கடைசியில் பிரிட்டிஷ் அரசு சமஸ்கிருதக் கல்வித் திட்டத்தைக் கைவிட்டது. இதில் உறுதியாக செயல்பட்டவர். அப்போது பிரிட்டிஷ் அமைச்சரவையில் சட்டக் குழு உறுப்பினராக இருந்த மெக்காலே தான், 1835ஆம் ஆண்டு எத்தகைய கல்வியை இந்தியாவுக்கு வழங்க வேண்டும் என்று அவர் முன் வைத்த கல்விக் குறிப்பு ஆவணம், வரலாற்று முக்கியத்துவம் கொண்டது. மெக்காலே ஆவணம் இவ்வாறு கூறியது.
“பிரிட்டிஷ் அரசு மத சகிப்புத் தன்மையைக் கடைப்பிடிப்பதோடு அனைத்து மதத்தின ரிடமும் பாகுபாடின்றி நடந்து கொள்ள வேண்டும். முக்கியமான பிரச்சினைகளில் தவறான வழிகளைப் போதிப்பதும் அற்பப் பயனை விளைவிப்பதுமான சமஸ்கிருத இலக்கியங்களைக் கற்றுக் கொடுப்பது என்பது, பகுத்தறிவுக்கும் ஒழுக்க நெறிக்கும் ஏற்புடையது அன்று. அத்தோடு அது நடுவு நிலையும் ஆகாது. சமஸ்கிருதம் வெறும் தரிசு நிலம். அதைக் கற்பதனால் அறிவு விளையாது. அதில் வானளாவிய மூட நம்பிக்கைகள் நிறைந் துள்ளன என்பதால் அந்த இலக்கியங்களைக் கற்பிக்க வேண்டும் என்று நம்மிடம் கூறு கிறார்கள். அதற்கு நாம் இசைந்தோமெனில் திரிபுபடுத்தப்பட்ட வரலாறு, தவறான வானவியல், ஏமாற்று மருத்துவம் ஆகிய வற்றையே கற்பிக்க நேரிடும். இந்த மோசடிகள் நேர்மையற்ற ஒரு மதத்தின் புனித நூல்களில் இருப்பதனால் அவை கற்பிக்கப்பட வேண்டும் என்பது மூடத்தனம். இந்தியரைக் கிறித்துவத் திற்கு மாற்ற வேண்டும் என்ற எண்ணத்தி லிருந்து நாம் விலகியே இருந்துள்ளோம். இனியும் அவ்வாறே தொடர்வோம். அதற்காக, ஒரு கழுதையைத் தொட்டு விட்டால் சுத்தி செய்வதற்கு என்ன மந்திரங்கள் கூற வேண்டும், ஓர் ஆடு கொல்லப்பட்டால் அதற்குப் பரிகாரங் களாக எந்த வேதப் பாடலைப் பாட வேண்டும் என்பதை இளைஞர்களுக்குக் கற்றுக் கொடுப்பதற்காக நாட்டின் நிதியைச் செலவிட வேண்டும் என்பதை நினைத்துக் கூட பார்க்க முடியாது.”
- என்று கூறியது மெக்கலேயின் கல்வி அறிக்கை.
பார்ப்பனர்கள், இப்போதும் மெக்காலே என்றால் வெறுப்பதற்கும், மெக்காலே கல்வி முறையை ஒழிப்போம் என்று சங்பரிவாரங்கள் சபதமேற்பதற் கும் காரணமே, வேத மரபான சமஸ்கிருதத்தைக் கடுமையாக மெக்காலே சாடினார் என்பதுதான்.
பார்ப்பனருக்கு மட்டுமே படிக்கும் உரிமை வேண்டும். அவர்களுக்கு மட்டுமே சமஸ்கிருதக் கல்லூரிகளை உருவாக்க வேண்டும் என்று பிரிட்டிஷ் ஆட்சிக்கு மனுப்போட்ட கும்பல்தான் தேசபக்தி பற்றியும் ஏதோ தங்களை தமிழின் காவலர்கள் போலவும் வாய்கிழிய பேசிக் கொண்டிருக்கிறது.
மெக்காலே கொண்டு வந்த கல்வித் திட்டம் தான். பார்ப்பனர்கள் மட்டுமே படிக்கும் தகுதி பெற்றவர்கள் என்ற இறுமாப்பை அடித்து நொறுக்கி, பார்ப்பனரல்லதாருக்கான கல்வி உரிமைகளுக்கு கதவு திறந்தது.
வேதத்துக்கு அதிகாரம் படைத்தவர்கள் பார்ப்பனர்கள்தான் என்று சீனியர் சங்கராச்சாரி சந்திரசேகரேந்திர சரசுவதி திட்டவட்டமாகக் கூறுகிறார்: “வேதம் அதிலே அதிகாரம் பெற்றவர் களிடத்தில் மட்டும் பேசிற்று. இன்னின்ன சுலோகங் களை நீங்கள் மறைவாகப் போற்றி வாருங்கள் என்று (அதற்குரிய) அதிகாரிகளுக்கு சொல்லிற்று” - என்கிறார் சங்கராச்சாரி.
வேதம் ஏன் இருக்க வேண்டும் என்பதற்கு சங்கராச்சாரி காரணம் கூறுகிறார், பாருங்கள்:
“வேதம் ஏன் இருக்க வேண்டும் என்றால், முதலில் அந்த ‘மந்திர சப்தம்’ அதிலுள்ள ‘யக் ஞாதி’ கர்மாக்கள் உபயோகத்தில் இருந்து கொண்டிருந் தாலே, சகலருக்கும் ஷேமம்! இதனால், மழை தனதான்ய சுபிட்சம் உண்டாவதோடு ஜனங்களில் எண்ணங்களும் உத்தமமானதாக ஆகும். இரண்டா வது உலகம் முழுவதுமான மதம் வைதீகமே இருந்திருக்கிறது என்பதும், சகல தேசத்தவரும் தெரிந்து, இதனாலே ஒரு ஒற்றுமை, சாந்தி ஏற்பட வேண்டுமானால், நம் தேசத்தில் வேதத்துக்கு என்றே வாழ்க்கையை அர்ப்பணிக்கும் ஒரு கூட்டம் இருந்து கொண்டே இருக்க வேண்டும்” - என்றார், சங்கராச்சாரி.
அவர் என்ன கூற வருகிறார், பாருங்கள்!
- 1. வேதம் மட்டுமே அனைவருக்கும் நன்மையை உருவாக்கும்.
- 2. அந்த மந்திர ஒலி உலகத்தில் கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும்.
- 3. மழை பெய்ய, உணவுப் பொருள் உற்பத்திப் பெருகச் செய்ய வைக்கும் சக்தி வேதத்துக்கு உண்டு.
- 4. மக்களிடம் நல்ல எண்ணம் வேதத்தால் மட்டுமே வரும்.
- 5. இந்த வைதீக மதம் - ஏதோ, இந்த நாட்டுக்குரியது மட்டுமல்ல; உலகம் முழுவதற்குமான மதமே இதுவாகத்தான் இருந்திருக்கிறது.
- 6. சகல நாட்டினருக்கும் அமைதி ஒற்றுமையை ஏற்படுத்தியது வேதம்
- என்று பட்டியலிட்டு, கடைசியாக வைக்கிறார் ‘ஆப்பு’. இவ்வளவு சுபிட்சமும் கிடைக்க நமது நாட்டில் வேதத்துக்கு என்றே வாழ்க்கையை அர்ப்பணிக்க ஒரு கூட்டம் இருந்து கொண்டே இருக்க வேண்டும். அதாவது புரோகிதத்தையே தொழிலாகக் கொண்டே ஒரு தனிக் கூட்டமான ‘பிராமணன்’ இருந்தால்தான் மழை வரும், உணவு உற்பத்தி பெருகும், சகல தேசத்தவருக்கும் அமைதி கிடைக்கும்; உலகமே வாழும். பார்ப்பனர்கள் சமூகத்தில் எவ்வளவு உயரத்தில் தன்னை நிலை நிறுத்தியிருக்கிறார்கள், பார்த்தீர்களா?
சங்கராச்சாரி கூற்றுப்படியே கேட்கிறோம்; ‘வேதம் படிக்காமல்’ உலகம் முழுதும் அதிகார மய்யங்களில் உயர்பதவிகளில் உட்கார்ந்துக் கொண் டிருக்கும் பார்ப்பனர்கள், ‘வேதத்துக்கு’ துரோகம் செய்துவிட்டு ஓடியவர்கள்தானே? ‘பிராமணன்’ கடல் தாண்டக்கூடாது என்கிறது வேதம். பார்ப் பனர்கள் மதித்தார்களா? வட்டமேஜை மாநாட்டுக்கு இந்தியாவிலிருந்து பிரதிநிதியாக பங்கேற்கச் சென்ற மதன்மோகன் மாளவியா என்ற வைதீகப் பார்ப்பனர், ‘கடல் தாண்டிய பாவ’த்துக்காக பரிகாரம் தேட தன்னுடன் கங்கை நீரையும், புண்ணிய மண்ணையும் உடன் எடுத்துப் போய் இலண்டனில் தோஷப் பரிகாரம் செய்தார். அதனாலே ‘மண்ணுருண்டை மாளவியா’ என்று அழைக்கப்பட்டார். ‘இந்து தர்மத்தை’ இந்து மதத்தை மட்டும் புண்படுத்து கிறார்கள் என்று கூப்பாடு போடும் ‘பரிவாரங்கள்’, முன்னணிகள், ‘இந்து’ வைதிக தர்மத்தை அவமதித்து, அமெரிக்காவுக்கும் கனடாவுக்கும், ஆஸ்திரேலியா வுக்கும் பறக்கும் பார்ப்பனர்களை ஏன் கண்டிக்க வில்லை?
‘மனு தர்மப்படி’ பார்ப்பான் ஓட்டல் நடத்துவதே பாவம். ஆனால் ஓட்டல் நடத்தாமலா இருக்கிறார்கள்? அது மட்டுமா? கணவனை இழந்த பெண்களை உயிரோடு அதே நெருப்பில் போட்டு எரித்ததுதான் ‘வேத மரபு’. இப்போது சட்டப்படி அது குற்றம். இதற்கான தடைச் சட்டம் வந்தபோது அதையும் பார்ப்பனர்கள் எதிர்த்தார்கள்.
இராஜாராம் மோகன்ராய்க்கு முன்பே 1799லேயே ‘செரம்பூர் கிறிஸ்தவ சேவை’ இயக்கம் சதிக்கு எதிரான பிரச்சாரத்தைத் தொடங்கியது, 15 ஆண்டுகள் பார்ப்பனர்கள் சதியைத் தடை செய்யக் கூடாது என்றும், இந்து மதத்துக்கு எதிராக கிறிஸ்துவ சதி என்றும் எதிர்ப்பு தெரிவித்து தடைச் சட்டம் வராமல் தடுத்தார்கள். 1829இல் தான் வைஸ்ராயாக இருந்த வில்லியம் பென்டிங், சதியைத் தடை செய்து சட்டம் கொண்டு வந்தார். வேத மரபு, அவ்வளவு கொடுமையானது.
தஞ்சாவூரிலே ஒரு சம்பவம் நடந்தது. மராட்டியப் பார்ப்பனக் குடும்பத்தைச் சார்ந்த ஒருவர் இறந்த தீயில் அவரது மனைவியை உயிருடன் தீயில் தள்ளப் பார்ப்பனர்கள் முயன்றபோது அந்தப் பெண் உயிருக்கு அபயம் தேடி அலறினாள். அவள் பெயர் கோகிலா. சிதையிலே பார்ப்பனர்கள் கட்டாயப் படுத்தித் தள்ளி தீயிடப்படும் நேரத்தில் அந்த வழியே வந்த - அலறல் சத்தம் கேட்ட ஆங்கிலேய படைத் தளபதி கேப்டன் லிட்டில்ஸ்டன் என்பவர், ஓடிப் போய் பார்ப்பனர்களை மிரட்டி அந்தப் பெண்ணை உயிருடன் மீட்டு, தன்னுடன் அழைத்துச் சென்றார். தனக்கு உயிரை மீட்டுத் தந்த அந்த படைத் தளபதியையே கோகிலா காதலித்து திருமணம் செய்து கிறிஸ்துவ மதம் மாறி, கிளாரிந்தா என்று பெயர் மாற்றிக் கொண்டு வாழ்ந்தார். ஆங்கிலேய தளபதியும், தனது காதல் கணவருமான லிட்டில்ஸ்டன் மரணத்திற்குப் பிறகு கணவர் விருப்பப்படி, கிறிஸ்தவ சீர்திருத்தச் சபையை நெல்லையில் தொடங்கினார்.
சொல்லப்போனால், வேதத்தில் ‘சதி’ என்ற மனைவியை உயிருடன் எரிக்கும் எந்த கருத்தும் இல்லாத நேரத்தில் வேதத்தையே பார்ப்பனர்கள் நயவஞ்சகமாக திருத்தினார்கள். வேத மரபு மனித விரோதமானது, கொடூரமானது என்பதற்கு இதுவும் ஒரு சான்று. வேதத்தை எப்படி திருத்தினார்கள்?
ரிக் வேதத்தின் 10ஆவது அத்தியாயம் 18ஆவது பிரிவில் 8ஆவது உட்பிரிவு இப்படி கூறுகிறது:
“பெண்ணே எழு; இறந்துவிட்ட ஒருவருடன் ஏன் படுத்துக் கொண்டிருக்கிறாய்? உயிர் வாழ்ந்து கொண்டிருப்பவர்களின் உலகத்துக்கு வந்து, உன்னை திருமணம் செய்து கொள்ள விரும்பும், ஒரு ஆண் மகனின் மனைவியாக இரு” என்பதுதான் சுலோகத்தின் கருத்து. கணவன் இறந்த பிறகு, அந்தப் பெண் ‘வர்ணத்துக்கு’ வெளியே திருமணம் செய்து கொள்ளும் நிலை பரவி, வர்ணக் கலப்புகள் நடந்தன. அதைத் தடுக்கவே ‘பிராமணர்கள்’ கணவன் சிதையோடு மனைவியை உயிருடன் எரிக்க சதித் திட்டம் தீட்டி, அதற்காக வேதத்தையும் திருத்தினார்கள். இதைச் செய்தவர்கள் வங்காள புரோகிதப் பார்ப்பனர்கள், ரிக் வேதத்தில் 10ஆவது அத்தியாயத்தில், கணவர் இறந்த பிறகு பெண்கள் மயானத்துக்குச் செல்வது பற்றி குறிப்பிடுகிறது: “விதவையாகி விட்டதால் எந்தத் துன்பமும் இந்தப் பெண்களுக்கு வராமல் இருக்கட்டும்” என்ற அந்த ரிக் வேத சுலோகத்தில் ‘அக்ரே’ என்று ஒரு சொல் இருந்தது. அதைப் பார்ப்பன புரோகிதர்கள், ‘அக்னே’ என்று திருத்தி, உடன்கட்டை ஏறுவதற்கான சூத்திரமாக்கிவிட்டார்கள். இந்த தில்லுமுல்லுவை பார்ப்பனர்களால் நேசிக்கப்பட்டு, வேதங்களை விதந்தோதிய மாக்ஸ்முல்லர் என்ற ஜெர்மானியரே அம்பலப்படுத்தியிருக்கிறார்.
இந்து மதம் அங்கீகரிக்கும் வேத மரபுப்படி ஒரு சன்னியாச, பணத்தைக் கையால்கூட தொடக் கூடாது; கால்நடையாகவே பயணம் செய்ய வேண்டும் என்று சன்னியாசிகளுக்கான
சன்யா ஸ்மிருதி கூறுகிறது.
“வாகஸ்தம் யதீம் திருஷ்ட்வா
சஜேய ஸ்நான மாசரேது”
இதன் பொருள் என்ன? எத்தனை மாற்றங்கள் உலகில் வந்தாலும் கால்நடையாகத் திரிந்துதான் உபதேசம் செய்ய வேண்டும். வாகனங்களில் பயணிப்பது மதவிரோதம்; தர்ம விரோதம். குதிரை வண்டி, மாட்டு வண்டியைப் பார்ப்பதே பாவம். அப்படிப் பார்த்தால் அந்த கணமே தலைமுழுகி, ‘ஸ்நானம்’ போட வேண்டும். அதாவது குளிக்க வேண்டும் என்கிறது ‘சந்யாச ஸ்மிருதி’. இதை சுட்டிக்காட்டியிருப்பவர் வேத விற்பன்னரான அக்னி ஹோத்ரம் இராமானுஜ தாத்தாச்சாரி. ஆனால் சங்கராச்சாரி சொகுசு காரில்தான் சுற்றுகிறார். உலகிலே விலை உயர்ந்த கார்களில்தான் ‘ஆன்மிக’ சாமியார்கள் பவனி வருகிறார்கள். ‘ஆச்சாரம் போய்விட்டது; இந்து வேத மதத்தை அவமதிக் கிறார்கள்’ என்று ‘இந்துமத காவலர்கள்’ ஓடிப் போய் வரவேற்பு தருகிறார்களே! ஏன் கேட்கவில்லை?
வேதத்தை வேத மரபுகளை பார்ப்பனர்கள் தங்கள் வசதிக்கேகற்ப மீறிக் கொள்வார்கள். ஆனால் வேதத்தைக் கேள்விக் கேட்ட ‘சூத்திரர், பஞ்சமர்’களை சாகடிப்பார்கள். “நாத்திகன் என்றால் கடவுளை மறுக்கிறவர்கள் அல்ல; வேதத்தை மறுப்பவர்கள்தான் நாத்திகர்கள்” என்கிறார் சங்கராச்சாரி. வேதத்தை மறுப்பவர்களுக்கு நோய் வந்தால் அவர்களுக்கு வைத்தியமே செய்யக் கூடாது என்கிறார், செத்துப் போன சங்கராச்சாரி. அவரது ‘தெய்வத்தின் குரல்’ நூலிலிருந்தே படிக்கிறேன், கேளுங்கள்:
“நாஸ்திகர்களுக்கு வைத்யம் பண்ணி ஆயுளை நீடிக்கப் பண்ணினால் அவன் மேலும் நாஸ்திகப் பாவத்தை விருத்தி செய்து கொள்ள இடம் தருவதாக ஆவதால் அவனுக்கு வைத்யம் பண்ணாதே என்று ‘ஆயுர்வேத சாஸ்திரத்தில் சொல்லியிருக்கிறது. ஆனபடியால் மக்கள் பணி எல்லாம், அந்த மக்களை பகவானிடம் சேர்ப்பதுதான். கருணையில்லாமல் இப்படி சொல்லியிருக்கே என்று தோன்றலாம். ஆனால் உண்மையில் இப்படிச் சொன்னதே கருணையினால்தான். வியாதியின் கஷ்டம் தெரிகிறது. கஷ்டம் என்று வரும்போதுதான் எப்படியாவது அதிலிருந்து மீள வேண்டும் என்ற தவிப்பில் கடவுள் இருப்பது நிஜமானால் என்னை அவன் காப்பாற்றட்டும். நான் அப்புறம் வேத சாஸ்திரப்படி நடக்கிறேன் என்று ஒரு நாஸ்திகன் நினைக்க முடிகிறது” என்கிறார் சங்கராச்சாரி.
சாவின் விளிம்புக்கு ஒருவரைத் தள்ளி, கழுத்தில் கத்தியை வைத்து, ஒரு திருடன் ‘போட்டிருக்கிற நகைகளைக் கழற்று’ என்று கூறுவதற்கும், சங்கராச்சாரியின் இந்த கருத்துக்கும் என்ன வேறுபாடு இருக்க முடியும்?
வேத மரபை எதிர்க்கும் உரிமை எவருக்குமே கிடையாது என்ற திமிiரையும் கொழுப்பையும் தத்துவமாகவே வைத்துக் கொண்டு, அதைப் புனிதம்; எதிர்ப்பவன் ‘இந்து மத விரோதி’ என்று ஒரு கூட்டம் இப்போதும் பேசித் திரிந்து கொண்டிருக்கிறது. இந்தக் கொடூரமான வரலாறுகளை மக்களிடம் கொண்டு போக வேண்டிய நிலையை அவர்களே நமக்கு உருவாக்கியிருக்கிறார்கள்.
ஆண்டாளுக்காக அவர் தேவதாசி மரபைச் சார்ந்தவர் என்று வைரமுத்து கூறி விட்டார் என்பதற்காக சாக்கடை மொழியில் எச்.ராஜாக்களும், ஜீயர்களும் கூச்சல் போடுவதில் அர்த்தமிருக்கிறதா? அந்தக் கதையை அடுத்து பார்ப்போம்!
(தொடரும்)