அணி அணியாய் குவிந்தது இளைஞர் படை

விழுப்புரம், கடலூர் மாவட்டங் களின் திராவிடர் விடுதலைக் கழகம் பார்ப்பன மதவாத எதிர்ப்பு மாநாட்டை காந்தியார் படுகொலை நாளான ஜன.30 அன்று சங்கராபுரத்தில் எழுச்சியுடன் நடத்தியது. மாநாடு தொடங்குவதற்கு முன் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலிருந்து சங்கராபுரம் கடை வீதிகள் வழியாக கழகத்தின் ஜாதி-மத வெறி எதிர்ப்புப் பேரணி, முழக்கங்களுடன் அணி வகுத்து வந்த காட்சி உணர்ச்சி மயமாக

இருந்தது. பேரணியின் தொடக்கத்தில் பறை முழக்கம் அதிர்ந்தது. தொடர்ந்து ஒலிபெருக்கி வழியாக ஜாதி மத வெறிக்கு எதிரான முழக்கங்கள்; சென்னை மாவட்டக் கழக செயலாளர் உமாபதி, கழகக் கொடியை அசைத்து பேரணியைத் தொடங்கி வைத்தார்.

நூற்றுக்கணக்கான இளைஞர்கள் அடர்த்தியாக கருஞ்சட்டை சீருடை யுடன் கம்பீரமாக அணிவகுத்து வந்தனர். ஒவவொருவர் சட்டையிலும்  முன்புறத்தில் பெரியார் படம், பின்புறத்தில் ‘நாங்கள் ஜாதியற்றவர்கள்’ என்ற முழக்கம் அச்சிடப் பட்டிருந்தது.

மனிதர்களைப் பிளக்கும் ‘ஜாதி மதம் வேண்டாம்’ என்ற முழக்கம் அடங்கிய ரிப்பனை தலையில் கட்டியிருந்தனர். பெண்களும் குழந்தைகளும் ‘ஜாதியற்றவர்கள்’ என்று பொறித்த சீருடையுடன் அணி வகுப்பில் பங்கேற்றனர். ஜாதிக் கட்சிகளின் ஊர்வலங்களையும், கலவரங்களையும் நடத்தி வருவதைப் பார்த்த பொது மக்கள், ‘ஜாதியற்றவர்கள்’ பேரணியை வியப்புடன் பார்த்தனர்.

போக்குவரத்துக்கோ, பொது மக்களுக்கோ எவ்வித இடையூறுமின்றி இலட்சியச் சொற்களை மட்டுமே முழங்கி வந்த இந்தப் பேரணிக்கு காவல்துறையும் முழு ஒத்துழைப்பை வழங்கியது. வாகனங்களை ஒழுங்குப்படுத்தி பேரணிக்கு சிறப்பாக ஒத்துழைப்பை நல்கியது. பேருந்து நிலையம் அருகே மாநாட்டு மேடை கம்பீரமாகக் காட்சி அளித்தது.

மறைந்த பெரியார் பேரொளி பட்டுக்கோட்டை சதாசிவம் நினைவு மேடை என்று பெயர் சூட்டப்பட்டு, அவரது உருவப்படம் அமைக்கப்பட்டிருந்தது. கழகக் கொடிகள் மாநாடு மேடையில் இருபுறமும் பறக்க, “காந்தி படுகொலை நாள் ஜனவரி 30; ஜாதி-மதவாத அரசியலை முறியடிப்போம்” என்ற வாசகங்கள் எழுதப்பட்டிருந்தன.

சம்பூகன் குழுவினரின் எழுச்சி இசையுடன் நிகழ்ச்சிகள் தொடங்கின.  தோழர் நாத்திகன், ஜாதி ஒழிப்புப் பாடல்களைப் பாடினார். மாவட்டக் கழகத் தோழர்கள் இசை நிகழ்ச்சியின் இடையிடையே உரையாற்றினர். விழுப்புரம் மாவட்டக் கழக அமைப்பாளர் நாவப்பிள்ளை வரவேற்புரையாற்ற, மாவட்ட செயலாளர் பெரியார் வெங்கட் தலைமை தாங்கிப் பேசினார். மாவட்ட தலைவர் வழக்கறிஞர் தமிழ்க் குமரன் உரையாற்றினார்.

தோழர் க. இராமர் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினார். அறிவியல் மன்ற அமைப்பாளர் ஆசிரியர் சிவகாமி, கழக வழக்கறிஞர்கள் துரை. அருண், திருமூர்த்தி, கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன், ஆதித் தமிழர் பேரவை பொதுச் செயலாளர் நாகராஜன், மனிதநேய மக்கள் கட்சி பொதுச் செயலாளர் அப்துல்சமது, கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஆகியோர் உரையாற்றினர்.

அப்துல் சமது தனது உரையில், வரலாறு நெடுகப் பார்ப்பனர்கள் திணித்த சமூகக் கொடுமைகளையும் அடக்குமுறைகளையும் பெரியாரின் மனித நேயத்தை யும் உணர்ச்சியுடன் எடுத்துரைத்தார். பார்ப்பன எதிர்ப்பாளர்கள் வரலாற்றில் படுகொலைகளை சந்தித்தாலும், பெரியாரிடம் மட்டும் பார்ப்பனர்களால் நெருங்க முடியாததை எடுத்துக் காட்டினார்.

பார்ப்பன எதிர்ப்புக்கான மேடை என்றால் அதில் பங்கேற்பதே தனது வாழ்நாளின் கடமையாகக கருதி செயல்பட்டு வருவதாகக் கூறிய அப்துல் சமது, ஏனைய மாநிலங்களைவிட தமிழ்நாட்டில் இஸ்லாமியர்கள் பாதுகாப்புடன் இருப்பதற்குக் காரணம் பெரியார் நடத்திய இயக்கம்தான் என்று பெருமையுடன் சுட்டிக்காட்டினார். காந்தியாருக்கும் பெரியாருக்கும் உள்ள வரலாற்றுத் தொடர்புகளையும், வர்ணாஸ்ரமத்தை ஆதரித்த காந்தியார் வாழ்வின் இறுதிப் பகுதியில் உண்மைகளை உணரத் தொடங்கியதையும் விடுதலை இராசேந்திரன் எடுத்துக் காட்டிப் பேசினார்.

பா.ஜ.க. மதவாத ஆட்சி, தனது பார்ப்பன மதவாத திணிப்புகளை நிறைவேற்றுவதற்கு அதிகாரத்தைப் பயன்படுத்தி வருவதை பல்வேறு நிகழ்வுகளை சுட்டிக்காட்டி கழகத் தலைவர் கொளத்தூர் மணி விளக்கினார்.

பெருந்திரளாக மக்கள் கூடியிருந்தனர். மாநாட்டில் போடப்பட்ட இருக்கை கள் நிரம்பி வழிந்ததோடு, இருபுறங்களிலும் பொது மக்கள் நின்று கொண்டு கருத்துகளை இறுதி வரை கேட்டனர். சென்னை மாவட்டக் கழகத் தோழர்கள் 60 பேர், தனிப் பேருந்தில் மாநாட்டுக்கு வந்ததோடு, மாநாட்டுப் பணிகளிலும் முனைப்போடு பங்கேற்

றனர். புதுவை  பெரியார் முன்னணி அமைப்பைச் சார்ந்த தோழர்கள் தீனா தலைமையிலும், கடலூர் மாவட்டக் கழகத் தோழர்கள் பாரதிதாசன் தலைமையிலும் மாநாட்டில் பங்கேற்றனர்.

மாநாட்டையொட்டி சங்கராபுரத்திலும் அதன் சுற்றுப்பகுதிகளிலும் 120 இடங்களில் தோழர்கள் சுவரெழுத்துகளை எழுதியதோடு மாநாட்டின் நோக்கத்தை விளக்கிடும் துண்டறிக்கைகளை சங்கராபுரம் சுற்றுப்புறப் பகுதிகளில் கடை கடையாக வழங்கி, மாநாட்டுக்கு நிதி திரட்டினர். இது மிகச் சிறந்த கெள்கைப் பரப்புரையாக அமைந்தது.

இளநீர் குமார் நன்கொடை : கழக ஆதரவாளர் சென்னை இளநீர் குமார் மாநாட்டுக்கு ரூ.50,000 நன்கொடை வழங்கினார்.

விழுப்புரம் மாவட்டத்திலேயே மிகவும் பின்தங்கிய பகுதியான சங்கராபுரத்தில், பல நூறு இளைஞர்கள் பெரியார் கொள்கையை ஏற்று, ஜாதி ஒழிப்புக்காக களமிறங்கியிருப்பது இப்பகுதியில் பெரும் எழுச்சியை ஏற்படுத்தியிருப்பதோடு, கழகத் தோழர்களிடம் புத்தெழுச்சியை உருவாக்கியுள்ளது.

Pin It