விபத்தில் மூளைச் சாவு அடைந்தவர்களின் உறுப்புகள் மருத்துவமனைக்கு கொடையாக வழங்குப்படுவதில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. இந்த வளர்ச்சியை ஊக்குவிக்கும் நோக்கத்தோடு இறந்து போன கொடையாளிகளுக்கு தங்கள் உடலை இறப்புக்கு முன் மருத்துவமனைகளுக்கு கொடையாக வழங்குகிறவர்களுக்கு அரசு சார்பில் இறுதி மரியாதை செலுத்தப்படும் என்று தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். இது பாராட்டுக்கும் வரவேற்புக்கும் உரிய முற்போக்கு சிந்தனையாகும்.

சனாதனம் என்ற பார்ப்பனியம் இறப்புக்கு பிறகு ஒரு உலகம் இருக்கிறது என்று கூறி ஊழ்வினை, கர்மவினை என்று பெயர்கள் சூட்டி சனாதன கொள்கைகளோடு அதை இணைத்து வைத்தது. வடநாடுகளில் இந்த நம்பிக்கை ஆழமாக ஊடுவிருவி நிற்கிறது. ஆனால் தமிழ்நாடு ஓரளவு பகுத்தறிவு நெறியோடு பண்படுத்தப்பட்ட மாநிலமாக பெரியார் இயக்கம் நடத்திய கருத்துப் புரட்சியால் மாற்றப்பட்டிருப்பதால் தமிழ்நாட்டில் இதற்கு கூடுதல் ஆதரவு இருக்கிறது. பக்தியிலும் சடங்குகளிலும் தீவிரமாக இயங்கும் மக்கள் கூட தங்கள் வாழ்க்கையில் இருந்து அவற்றைப் பிரித்து பார்ப்பது தான் தமிழ்நாட்டின் தனித்துவம்.

மரணத்துக்குப் பிறகு ஆன்மா மட்டும் உடலில் இருந்து பிரிந்து போய்விடும் என்றும் அது அழியாது என்றும் அந்த ஆன்மா பூமியில் நல் ஒழுக்கத்துடன் வாழ்ந்தவர்களுக்கு சொர்கத்துக்கும், தீய ஒழுக்கத்துடன் வாழ்ந்தவர்களை நரகத்துக்கும் கொண்டுபோய் சேர்க்கும் என்றும் பார்ப்பனியம் கர்ம வினை தத்துவத்தை சூழ்ச்சிகரமாக திணித்து மக்களை நம்ப வைத்தது. பகவத் கீதையில் கிருஷ்ணனும் இதையே கூறுகிறான். மானுட உடலுக்கு மரணமில்லை, அது ஆன்மாவாகி மறுபடியும் பூமியில் பிறக்கும், எனவே தர்மத்தின் எதிரிகளை கொலை செய்வது பாவமல்ல என்று போர்க் களத்தில் அறிவுரைக் கூறுகிறான். இந்த கீதையை சனாதன வாழ்க்கை முறை என்கிறார்கள் பார்ப்பனர்கள். உறுப்புக் கொடை இந்த ஆன்மா கர்மவினை மறு ஜென்மம் என்ற தத்துவங்களையே அடித்து நொறுக்குகிறது. மரணம் கடவுளின் அழைப்பு அல்ல, அறிவியலால் கடவுளின் மரண அழைப்பை தடுத்து நிறுத்தி நீண்டகாலம் வாழச் செய்ய முடியும் என்பதை மருத்துவ அறிவியல் நிருபித்திருக்கிறது. மருத்துவ விஞ்ஞானம் வளரும் போது மனிதனின் சராசரி வயதும் உயர்ந்து வருவதை கவனித்தால் இந்த உண்மை புரியும். எனவே தான் பெரியார் தனது கூட்டங்களில் கடவுள் மறுப்போடு, ஆன்மா மறு ஜென்ம மறுப்பையும் இணைத்துக்கொண்டார்.

“லோக குரு” என்றழைக்கப்பட்ட சங்கராச்சாரிகள் கூட கடவுள் அழைப்பை ஏற்று மரணத்தை தழுவ தயாராக இல்லை மாறாக மருத்துவ மனைகளுக்கே சிகிச்சைகளுக்கு சென்றார்கள், இதைவிட சனாதன ஒழிப்பு வேறு உண்டா?

இறந்து போனவர்கள் மோட்சத்தில் இருக்கிறார்கள் என்றும், அவர்கள் விரும்பிய பொருட்களை வைத்து வேத மந்திர சடங்குகளை கூறினால் தர்பைப் புல் அவற்றை மோட்சத்தில் உரியவரிடம் கொண்டு போய் சேர்க்கும் என்ற அறிவியலுக்கு எதிரான பொய்யை பார்ப்பனர்கள் பரப்பினார்கள். அந்த நம்பிக்கைகள் இப்போது பொய்த்துப் போய்விட்டன.

உடல் உறுப்புக் கொடை ஜாதி பற்றிய நம்பிக்கைகளையும் தகர்த்து வருகிறது. ஒரே ஜாதிக்கு ஒரே வகை ரத்தம் ஓடுவதில்லை, குருதியில் எட்டு வகை இப்போது கண்டறியப்பட்டுள்ளது. ஒரு பிரிவுக் குறுதி அதே பிரிவுள்ள மற்றொரு உடலுக்குத்தான் பொருந்துமே தவிர ஒரே ஜாதியில் உள்ளவருக்கு மட்டும் பொருந்தாது. ஜாதி வெறியர்கள் கூட தங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு வேறு ஜாதியினரின் உறுப்பை பொருத்த வேண்டிய நிலை ஏற்பட்டால் தயக்கமின்றி ஏற்றுக் கொள்கிறார்கள். அது போலவே பெண் ஆண் என்ற பாலின வேறுபாடும் குருதிக்கு இல்லை.

கொரானா உலகையே அச்சுறுத்திய போது சனாதனிகள், பார்ப்பனர்கள் உட்பட உலகம் முழுவதும் கொரானா தடுப்பூசி எப்போது வரப் போகிறது என்று பதட்டத்துடன் காத்திருந்தார்கள். தர்மத்தை காப்பாற்ற வருவேன் என்று கூறிய கிருஷ்ண பகவான் குறித்து அவர்கள் சிந்திக்கக் கூட தயாராக இல்லை.

வேற்று கிரகங்களிலும் சந்திராயானும் விண்வெளிக் கோள்களும் தேடித்தேடி பார்த்தும் ஒரு மனிதனைக்கூட கண்டுபிடிக்கவில்லை, வானுலக தேவர்கள் எங்கே போய் மறைந்து கொண்டார்கள் என்பதற்கு சனாதனமும், பார்ப்பனியமும் தான் பதில் சொல்ல வேண்டும்.

ஒவ்வொரு மனிதரும் தனது வாழ்நாள் நீட்டிப்பையே விரும்புகிறார்கள், காசிக்கு போய் சாமியாராகி கடவுளை அடையப் போவதாக எந்த சாமியாரும் இப்போது கூறுவது இல்லை. ஈஷா மையங்களில் உல்லாச கூத்தும் சிவ தாண்டவ ஆட்டங்களும் தான் நடக்கின்றன. பதஞ்சலி பன்னாட்டு வணிகம் நடத்திக்கொண்டிருக்கிறது. நோய் நொடியின்றி நீண்டகாலம் உயிர்வாழ மோட்சம் போகாமல் தடுக்கும் மருந்துகள் எங்களிடம் இருக்கிறது என்று விளம்பரம் செய்கிறது. இப்படி சந்தி சிரிக்கும் சனதனத்தை உதயநிதி ஸ்டாலின் சுட்டிக் காட்டினால் தலைக்கு விலை வைக்கிறார்கள். இன்று தமிழ்நாட்டில் கல்வி, மருத்துவம், பெண்ணுரிமை, தொழில் வளர்ச்சி போன்ற அடிப்படை உரிமைகளுக்காக முன்வைக்கும் ஒவ்வொரு திட்டங்களுக்குமே சனாதன எதிர்ப்பு தான். அந்த எதிர்ப்பில் மற்றொரு மகுடம் சூட்டியிருக்கிறது இந்த அரசு மரியாதை எனும் அறிவிப்பு. 

- விடுதலை இராசேந்திரன்

Pin It