சென்னையில் சமண மதத்தைச் சார்ந்த திகம்பர சாமியார்கள், முழு நிர்வாணமாக பொது இடங்களில் நடமாட மதத்தின் பேரால் அனுமதிக்கப்பட்டுள்ளதை நாகரிக சமூகத்தால் ஏற்க முடியுமா?

இந்திய அரசியல் சட்டத்தின் 25வது பிரிவு மத சுதந்திர உரிமையை வழங்கியுள்ளது உண்மைதான். ஆனால் அந்த மதச் சுதந்திரம், பொது ஒழுங்கு, ஒழுக்க நெறிகளுக்கு கட்டுப்பட்டுத்தான் இருக்க வேண்டும் என்று அதே சட்டம் (25(1)வது பிரிவு) கூறுவதை புறக்கணித்து காவல்துறை செயல்படலாமா? மூடநம்பிக்கைக்கு எதிராக அறிவியலைப் பரப்ப பெரியார் திராவிடர் கழகம் ஏற்பாடு செய்யும் ஊர்வலங்களை ஆபாச ஊர்வலம் என்று பொய்யாகக் கூறி பார்ப்பன மதவெறி சக்திகள் தடை செய்ய கூப்பாடு போடும்போது அதற்கு செவி சாய்க்கும் காவல்துறை உண்மையான ஆபாசத்தை மதத்தின் பேரால் அனுமதிக்கலாமா? ஏன் இந்த இரட்டை வேடம்?

சமண மதம் கடவுளை ஏற்றுக் கொள்ளாத கடவுள் மறுப்பு மதம் என்பது நமக்குத் தெரியும்; ஆனால் பொது இடங்களில் பெண்களும், குழந்தைகளும் முகம் சுளிக்கும் வகையில் ஆண் சாமியார்கள் நிர்வாண ஊர்வலம் போவது பகுத்தறிவுக்கு எதிரானது அல்லவா?

தற்கொலை செய்து கொள்ளக்கூட சமண மதம் அனுமதிக்கிறது. அதற்காக, நிர்வாணத்திற்கு அனுமதிப்பது போல் இவர்கள் தற்கொலை செய்து கொள்ளவும் காவல்துறை அனுமதிக்குமா? காதலர் தினம் கொண்டாடுவதால் கலாச்சாரம் பாழாகிறது என்று கலவரத்தில் இறங்கும் பார்ப்பன இந்து முன்னணிகள் இந்த நிர்வாண ஊர்வலம் குறித்து வாய்த் திறக்காதது ஏன்? தமிழக அரசே! காவல்துறையே! நிர்வாண சாமியார்களின் ஆபாச ஊர்வலத்தை தடுத்து நிறுத்து.

மேற்கண்ட துண்டு பிரசுரம் கழக சார்பில் ஆர்ப்பாட்டத்தின்போது பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

Pin It