திராவிட இயக்கத் தமிழர் பேரவை சார்பாக, “யார் எதிரிகள்” என்ற தலைப்பில் 31.07.2022 அன்று சென்னை அம்பத்தூர் தாய்த் தமிழ் பள்ளியில் நடைபெற்ற பயிலரங்கில், ஆர்.எஸ்.எஸ் முன்னோடி பார்ப்பனர்களான திலகர், சாவர்க்கர், விஜயராகவாச்சாரியார் ஆகியோரின் பார்ப்பனிய சனாதன வரலாறுகளை விளக்கி கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஆற்றிய உரை:
“யார் எதிரி?” என்பது தான் நிகழ்வின் தலைப்பு என்றார்கள். யார் எதிரி என்று சரியாக தீர்மானிக்காத இயக்கங்கள் தான் திசை மாறிச் சென்று கொண்டிருக்கின்றன. சில இயக்கங்கள் உண்மையான எதிரிகளை அதாவது பகை முரண்களை விட்டு விட்டு நட்பு முரண்களை எதிர்ப்பதை தமிழ் தேசியத்தின் பெயரால் நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். நாம் நமது எதிரிகளை அடையாளம் கண்டு கொள்ளத் தான் இந்த தலைப்பு. அவர்கள் சரியாக வகைப் படுத்தி இருக்கிறார்கள். Bunch of Thoughts (ஞான கங்கை) என்ற நூலில் கோல்வாக்கர் தெளிவாக மூன்று எதிரிகளை வகைப்படுத்தியுள்ளார்.
1) இஸ்லாமியர்கள், 2) கிறிஸ்தவர்கள், 3) கம்யூனிஸ்டுகள். தற்போது மோடி ஆட்சிக்கு வந்த பின்னர், 2014இல் “உலக இந்துக்கள் மாநாடு” என்று ஒரு மாநாட்டை கூட்டி னார்கள். இந்த மாநாட்டை ‘அசோக் சிங்கால்’ இருந்து நடத்தி வைத்தார். அந்த மாநாட்டில் புதிதாக இரண்டு எதிரிகளை சேர்த்துக் கொண் டார்கள். அதில் முதலில் மார்க்ஸிஸ்ட், அடுத்தது மிஷனரிஸ், மெக்கா லேயிஸ்ட், மெட்டீரியலிஸ்ட், முஸ்லிம்ஸ் என்று எதிரிகளை அய்ந்து வகைப்படுத்தினார்கள். இதை அவர்கள் அய்ந்து ‘M’ என்று குறிப் பிட்டார்கள். நான்காவதாக வைத்திருந்தாலும் ‘மெட்டீரியலிஸ்ட்’களைத் (நாத்திகர்கள்) தான் மிக மோசமான எதிரிகள் என்று குறிப்பிட் டார்கள். இறுதியாக வைத்திருந்தாலும் ஆபத்தான எதிரிகள் என்று ‘முஸ்லிம்கள்’ அய் வைத்திருந்தார்கள்.
அறிவியல் அறிவு என்பது அவர்களின் மதத்தை, வர்ணாஸ்ரமத்தை கேள்வி கேட்க வைக்கிறது, எனவே ‘மெக்காலே’ கல்வி கற்றவர்களே எதிரிகள் என்று பேச ஆரம்பித்து விட்டார்கள். “மெக்காலே மீது இவர்களுக்கு ஏன் இவ்வளவு வெறுப்பு என்றால், இந்த நாட்டில் இருக்கும் ஒட்டுமொத்த இலக்கி யங்களை தொகுத்து பார்த்தாலும், அய்ரோப்பிய நாட்டு தொடக்கப் பள்ளி மாணவனின் அலமாரியில் உள்ள நூல்கள் கொடுக்கும் அறிவியலைக் கூட கொடுப்ப தில்லை” என்று அவர் எழுதியிருக்கிறார்.
அவர் சமஸ்கிருதம், பாரசீகம் என்ற இரண்டு மொழிகளை குறிப்பிடுகிறார். அடுத்ததாக புராணங்களை விமர்சிக்கிறார். சமத்துவம் என்பதையே அவர்கள் முழுமையாக வெறுக் கிறார்கள். கிறிஸ்துவமோ, இஸ்லாமோ சமத்துவத்தை பேசியது. ஆனால் பெரியார் பேசிய சமத்துவம் வேறு, நீதிக் கட்சி கொடியையே திராவிடர் கழக கொடியாக வைத்துக் கொள்ளலாமே என்று கேட்ட போது, “அதில் தராசு சமமாக இருக்கிறது, இங்கு சமமாக தராசு இருக்க கூடாது. வஞ்சிக்கப் பட்டவன் தட்டில் தான் எடை அதிகமாக இருக்க வேண்டும்” என்று பெரியார் பேசினார்.
மக்கள் தொகை கணக்கெடுப்பு அதிகாரியாக சிலர் வந்தனர். அதில் சென்னை மாகாண மக்கள் தொகை கணக்கெடுப்பு அதிகாரியாக வந்தவர் W.R.கார்னிஷ். 1871இல் எடுக்கப்பட்டது. அதில் அவர் ஒரு குறிப்பை எழுதினார்,
“இந்த நாட்டின் சிக்கல்கள் அனைத்தும் பார்ப்பனக் கண்ணாடி கொண்டு தான் பார்க்கப் படுகின்றன (Through medium of brahmin spectacles) எனவே சிக்கல்களை நம்மால் சரியாக புரிந்து கொள்ள முடிய வில்லை” என்று எழுதினார். மற்றொரு அதிகாரி, “இந்த நாட்டில் ஜாதி தான் ஒருவனுடைய வாழ்விடத்தை, உடையை, உணவை, பேசுகிற மொழியை இப்படி எல்லாவற்றையும் தீர்மானிக்கிறது” என்று 1901 மக்கள் தொகை கணக்கெடுப்பு அதிகாரி எழுதினார்.
ஏன் 1931இல் இங்கிலாந்தின் முன்னாள் பிரதமர் வின்ஸ்டன்ட் சர்ச்சில் ‘Our duty in India’ என்ற பேச்சில், “இன்றைய விடுதலைப் போராட்டம் என்பது பிரிட்டிஷார் என்ற இடத்தில் பிராமணர்களை உட்கார வைப்பது தான். இது நாட்டுக்கான விடுதலை அல்ல. (To substitute the Brahmin in the place of british) அப்படி ஒரு நிலை வந்துவிடுமேயானால் இந்த நாட்டில் தாழ்த்தப்பட்ட மக்களாக இருக்கக் கூடிய 65 மில்லியன் மக்கள் அழிந்தே போய் விடுவார்கள்” என்று அந்த பேச்சில் குறிப்பிட்டுள்ளார்.
இவற்றையெல்லாம் இணைத்துப் பார்த்தோம் என்றால் தான் நமக்கு புரியவரும். விடுதலை என்ற பெயரால் இங்கு என்ன நடந்தது என்பதைப் பார்த்தோமென்றால் இந்த ஆர்.எஸ்.எஸ் அமைப்பு என்ன செய்தது என்பது புரிய வரும்.
1858 - நவம்பர் 1 இல் தான் இந்தியாவில் அரசு என்ற ஒன்று முறையாக ஆட்சிக்கு வருகிறது. அதற்கு முன்பு வியாபார நிறுவனம் ஆட்சி நடத்திக் கொண்டிருந்தது. அப்போது தான் விக்டோரியா பிரகடனம் வருகிறது. அதில் ‘உங்கள் மதத்தில் நாங்கள் தலையிட மாட்டோம்’ என்ற உறுதி மொழியை வாங்கி யிருந்தார்கள். ஏனென்றால் அரசோடு தொடர் புடையவர்களாகவும், ஆங்கிலம் பேசுபவர் களாகவும் பார்ப்பனர்கள் தான் இருந்தார்கள்.
இஸ்லாமியர்களை, முதலில் சாவர்க்கர் மிக உயர்வாக எழுதுகிறார். சுதந்திரப் போராட்டத்தில் இஸ்லாமியர்களின் பங்களிப்பு தவிர்க்க முடியாதவை என்றும் எழுதுகிறார். இஸ்லாமிய தலைவர் இறந்ததற்கு பிரிட்டிஸ் மகிழ்ந்தது என்றும் எழுதுகிறார். 1909 வரை சாவர்க்கர் இப்படித் தான் இருந்தார். அவர் சிறைக்கு சென்ற பின்பு தான் மாறுகிறார். இஸ்லாமியர்கள் தீவிரமான பிரிட்டிஷ் வெறுப்பு கொண்டிருத்தார்கள், எந்தளவிற் கென்றால் ஆங்கிலம் கற்றுக் கொள்ள முடியாது என்று அறிவிக்கும் அளவிற்கு இஸ்லாமியர்கள் பிரிட்டிஷ் வெறுப்பு கொண்டிருந்தார்கள். ஆனால், இந்துக்கள் மிக இலாவகமாக ஆங்கிலம் கற்றுக் கொண்டு உயர் பதவிகளுக்கு சென்று விட்டார்கள். இந்தியாவில் பதவிக் காலம் முடிந்து இங்கிலாந்து சென்ற ரிப்பன் பிரபுவை வழியனுப்ப சென்றவர்கள் ஏன் இது போல் வருடந்தோறும் நாம் சந்திக்கக் கூடாது என்று முடிவெடித்து ஆண்டுதோறும் (1884) சந்தித்தது தான் “Indian National Congress” இதில் அனைத்து தரப்பினரும் இருந்தனர். மதச் சார்பற்ற பார்ப்பனர்களும் இருந்தனர்.
கோகலே இருந்தார். அவர் சித்பவன் பார்ப்பனர் தான். ஆனால் பூணூலை அகற்றிவிட்ட பார்ப்பனர். இப்படி முற்போக்கு சிந்தனை கொண்டவர்கள் தான் காங்கிரசை தொடங்கினார்கள். எனவே காங்கிரசிற்கு சமுதாய மாற்றத்திற்கான சிந்தனையும் இருந்தது. தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் சமுதாய சீர்திருத்தத்திற்கான மாநாடும்இணைந்தே நடத்தப்பட்டது. இது 1895 வரை மட்டும் தான் நடந்தது. 1895 மாநாட்டில் தான், “சமூக சீர்திருத்த மாநாடு இனி நடந்தால் பந்தலை தீ வைத்து எரிப்பேன்” என்று கூறினார். அப்போது தான் சமூக சீர்திருத்த மாநாடு காங்கிரசில் நின்று போய் விட்டது. ரௌலட் சட்டமே திலகரும் அவரது நண்பருமான சபேக்கர் சகோதரர்களை வைத்து தான் கொண்டு வரப்பட்டது. ஏனென்றால் இராணுவப் பள்ளியை நடத்தினார்கள். மூஞ்சே நடத்தியது பின்னால், ஆனால் அதற்கு முன்பே இவர்கள் இராணுவப் பள்ளியை நடத்தினார்கள். இந்துக்களின் உரிமையை பாதுகாக்க ஆயுதத்தை நாம் கையில் எடுக்க வேண்டும் என்ற கொள்கை உடையவர்கள். ரவுலட் அறிக்கையில் இவற்றை காரணமாக குறிப்பிடுகிறார்கள். இப்படி ஓர் மூர்க்கத்தனமான பார்ப்பனராகத்தான் திலகர் இருந்தார். இவருக்கும் மன்னிப்புக் கடித வரலாறெல்லாம் உள்ளது.
காங்கிரசில் 1885 இலிருந்து 1914 வரை இருந்த முற்போக்காளர்களெல்லாம் முடிந்து போய் தான், இந்து பார்ப்பன மேலாதிக்கத்தை நிறுவுகிற பார்ப்பனர்களின் கையில் காங்கிரஸ் 1915 காலகட்டத்தில் சிக்குகிறது. சிறிது காலம் கழித்து மிதவாத இந்துத்துவ காந்தி வந்து விட்டார். முதலில் வந்தவர்கள் திலகரைப் போன்றவர்கள் தான் மிக மோசமான இந்துத்துவவாதிகளாக இருந்தார்கள். திலகரோட நட்பு கொண்ட கூட்டம் தான் இந்து மகா சபை யையும் தொடங்குகிறார்கள்.
1870, 75களில் தான் மதக் கலவரங்கள் என்ற ஒன்றே தொடங்குகிறது. இஸ்லாமியர் இந்துக்கள் என்ற மோதலும் அப்போது தான் தொடங்குகிறது. தொடர்ச்சியாக இந்த மோதல்கள் 1910 வரை நடைபெறுகின்றன. அதில் இரண்டு நமது மாநிலத்திலும் நடைபெற்றது. ஒன்று, சேலம் மாவட்டமாக இருந்த பாலக்கோட்டில் 1880இல் கலவரம் நடைபெறுகிறது. 1882இல் சேலம் செவ்வாய் போட்டை பகுதியில் ஒரு மசூதி இடிக்கப்படு கிறது. இதை செய்தவர் யார் என்றால் ? பெரிய தலைவராக பின்னாட்களில் சொல்லப்பட்ட சி.விஜயராகவாச்சாரியார். காங்கிரஸ் சட்டங்களை அவர் தான் எழுதினார். பெரிய வழக்கறிஞர் என்று சொல்லப்பட்டவர், அவர் தான் மசூதி இடிப்புக்கு காரணமானவர் என்று 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் கொடுக்கப் படுகிறது. இப்படி இந்தியா முழுவதும் நடைபெற்றது. 1890 வரை காங்கிரசில் 25% இஸ்லாமியர்களாக இருந்தனர். அது 1905 இல் 5% ஆக குறைந்தது. ஏனென்றால் காங்கிரஸ் தலைவர்கள் தான் இந்து மத வெறியர்களாக நடந்து கொண்டார்கள். 1906இல் “முஸ்லிம் லீக்” தொடங்கப்படுகிறது. அப்போதும் முகமது அலி ஜின்னா காங்கிரசில் தான் இருந்தார்.
(தொடரும்)
- கொளத்தூர் மணி