அது என்ன ‘சனாதனம்’? வர்ணாஸ்ரம தர்மத்தின் மற்றொரு பெயர் தான் அது! மனு சாஸ்திரம், இறந்து போன மூத்த சங்கராச்சாரி, இந்துக்களின் புனித நூல்கள் எல்லாம் இதைத் தான் கூறுகின்றன.
பிறப்பால் ஒருவன் ‘பிராமணன்’ - அவனுக்கு அடிமை, பெரும்பான்மை உழைக்கும் மக்களான சூத்திரர்கள், பஞ்சமர்கள் மற்றும் பெண்கள். இது பிரம்மாவே கூறியது என்று மனுதர்மம் கூறுகிறது.
அந்த சனாதனம், இப்போது பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ்., இந்து முன்னணி என்று அதிகார பலத்துடன் தமிழர்களாகிய நம்மீது படை எடுத்து வருகிறது.
மொழி, இன அடையாளங்களை ஒழிக்க, மாநிலங்களையே இல்லாது ஆக்க நடக்கும் முயற்சி - சனாதனம்.
நீட் தேர்வைத் திணிப்பது - சனாதனம்.
காசியை தலைநகராக்கி, மனுதர்மத்தை அரசியல் சட்டமாக்கி இஸ்லாமிய, கிறிஸ்துவ மக்களின் வாக்குரிமையைப் பறிப்போம் என்று சாமியார்கள் கூட்டம் வாரணாசியில் கூடி இந்துராஷ்டிரத்துக்கு புதிய அரசியல் சட்டத்தை அறிவித்திருக்கிறதே - அது சனாதனம்.
தமிழ்நாட்டிடமிருந்து ஒரு ரூபாயை வாங்கி 35 காசுகளை மட்டுமே திருப்பித் தருகிறதே ஒன்றிய ஆட்சி - அது சனாதனம்.
அனைத்து இந்துக்களும் சமம் ஆக முடியாது; ‘பிராமணர்’ கட்டுப்பாட்டிலுள்ள கோயிலில் பிற ஜாதி இந்துக்கள் அர்ச்சகராக முடியாது என்று நீதிமன்றத்தில் இப்போதும் படி ஏறுகிறார்களே - அது சனாதனம்.
கார்ப்பரேட்டுகளுக்கு 5 இலட்சம் கோடி வரிச் சலுகை; அதே நேரத்தில் விளிம்பு நிலை எளிய இந்துக்களுக்கு பெட்ரோல், டீசல், கேஸ் விலையை ஏற்றிக் கொண்டிருக்கிறார்களே - அது சனாதனம்.
ஸ்வயம் சேவக்குகளாக ஆர்.எஸ்.எஸ் - இல் பெண்கள் உறுப்பினர் ஆக முடியாது என்று இன்று வரை தடை போட்டிருக்கிறார்களே - அது சனாதனம்.
சரிபாதியாக இருக்கும் இந்துப் பெண்கள் தெய்வ பக்தி இருந்தாலும் கோயில் அர்ச்சகராக, சடங்குகளில் பங்கேற்க, முடியாதவர்களாக தடைபோட்டு வைத்திருக்கிறார்களே - அது சனாதனம்.
மாட்டுக் கறி சாப்பிடாதே; மதம் மாறினால் சிறை; இஸ்லாமியருக்கு குடியுரிமை மறுப்பு; நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் மறுப்பு - இவை எல்லாமுமே சனாதனம்.
தேர்ந்தெடுக்கப்படும் ஆட்சியைக் கவிழ்த்து, குதிரை பேரம் பேசித் தங்களது ஆட்சியாக மாற்றுவது, ஆளுநர்களை அரசியல் முறைகேடுகளுக்குப் பயன்படுத்துவது - சனாதனம்.
ஜாதி கட்டாயம் வேண்டும் என்பதோடு, ஜாதி ஒழிப்பு பற்றி கள்ள மவுனம் சாதிப்பது - சனாதனம்.
‘பிராமணன்’ என்றால் ஒழுக்கமானவன்; குஜராத்தில் கூட்டுப் பாலியல் செய்தாலும் 14 பேரைக் கொலை செய்தாலும், "பிராமணன் ஒழுக்கமானவன்" - முன்கூட்டியே சிறையிலிந்து விடுதலை செய்வோம் என்கிறார்களே - அது சனாதனம்.
பணமதிப்பு இழப்பு - ஜி.எஸ்.டி. வரி விதிப்பு - காஷ்மீர் தனி உரிமை அழிப்பு - விவசாயிகளுக்குத் துரோகம்; மின்சார உரிமையை மாநிலங்களிலிருந்து பறித்தல்; - அமுலாக்கத் துறை - சி.பி.அய். அமைப்புகளைப் பழி வாங்கப் பயன்படுத்துதல் - ‘சனாதனம்’.
பெரியார் சிலையை உடைப்பது; வன்முறையாளர்களை, கிரிமினல் குற்றவாளிகளை கட்சி உறுப்பினர்களாக்கி 'இந்துத்துவா' படம் காட்டும் மோசடி வித்தை - சனாதனம்.
ஏற்றத்தாழ்வுகளை நியாயப்படுத்தும் வர்ணாஸ்ரமமே - சனாதனம்.
பெரியார் மண்ணில் சனாதனத்தை வீழ்த்த உறுதியேற்போம்! பார்ப்பனிய பாசிசத்திலிருந்து மக்களைப் பாதுகாக்க சூளுரைப்போம்! வாரீர்!
- திராவிடர் விடுதலைக் கழகம் வெளியிட்ட துண்டறிக்கை