மக்கள் எதிர்ப்பு இல்லாத, வரியற்ற நிதிநிலை அறிக்கையை தி.மு.க. ஆட்சி தாக்கல் செய்துவிட்டது. மேல்பட்டப்படிப்புக் கல்விக் கட்டணம் ரத்து, பொறியியல் கல்லூரியில் தமிழ் வழிக் கல்வி, பள்ளிக் கல்வி வளர்ச்சிக்காக கூடுதல் நிதி ஒதுக்கீடு போன்ற வரவேற்கத்தக்க அம்சங்கள், அறிக்கையில் இடம் பெற் றுள்ளன. இவ்வாண்டு மேலும்22 தமிழ்ச் சான்றோர்களின் நூல்கள் நாட்டுடைமை யாக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே 117 தமிழ்ச் சான்றோர் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டுள்ளன. இதில், 110 அறிஞர்களின் நூல்களை நாட்டுமையாக்கி யது, தி.மு.க அரசு என்று நிதிநிலை அறிக்கை கூறுகிறது. ஆக, 139 தமிழறிஞர்கள், சிந்தனையாளர்கள் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டும், பெரியார் நூல்கள் மட்டும் அப்பட்டியலில் இன்னும் இடம் பெறாமலேயே இருக்கிறது. காரணம், கி. வீரமணியை திருப்திப்படுத்துவதற்குத்தான். பெரியார் உருவாக்கிய அறக்கட்டளைகளை வைத் திருக்கும் கி. வீரமணி, பெரியாரின் முழுமையான வரலாற்று நூலைக்கூட வெளியிடவில்லை.
சாமி சிதம்பரனார் எழுதிய தமிழர் தலைவர் எனும் வரலாற்று நூல்1937 ஆம் ஆண்டு காலகட்டத்தோடு நின்று விட்டது.
‘இந்து’ ராம் போன்ற பார்ப்பனர்களே, கி.வீரமணியின் முன்னிலையிலேயே பெரியாருக்கு வரலாற்று நூல் ஆங்கிலத்தில் வெளி வராததை சுட்டிக் காட்டுகின்றனர். ஆனால், பார்ப்பனர்களே,பெரியாருக்கு ஆதரவாகப் பேசுகிறார்கள் என்று, கி. வீரமணி கூறுகிறாரே தவிர, அப்படி ஒரு வரலாற்று நூல் வெளிவராததை தனக்கு ஏற்பட்ட அவமானமாக அவர் கருதத் தயாராக இல்லை. ‘குடிஅரசு’ வழக்கை விசாரிக்கும் உயர்நீதிமன்ற நீதிபதிகளே பெரியார் நூல்கள் ஏன் அரசுடைமையாகவில்லை என்ற கேள்வியை எழுப்பியும், தமிழக அரசும் காதில் போட்டுக் கொள்ள தயாராக இல்லை.
“பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள்” இரண்டாம் பதிப்பு வெளியீட்டு விழா
பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள் - இரண்டாம் பதிப்பை 21.3.2010அன்று மாலை சென்னை அறிவாலயத்திலுள்ள கலைஞர் அரங்கத்தில் வே. ஆனைமுத்து தலைமையில் முதல்வர் கலைஞர் வெளியிட்டார்.
பெரியார் ஈ.வெ.இராமசாமி - நாகம்மை கல்வி ஆராய்ச்சி அறக்கட்டளை யின் சார்பில், 9300 பக்கங்களில் 20 தொகுதிகளாக வெளிவந்துள்ள இத் தொகுப்புகளை அறக்கட்டளையின் தலைவர் வே. ஆனைமுத்து கடும் உழைப்பால் தொகுத்துள்ளார். நிகழ்ச்சியில் கவிஞர் தமிழேந்தி, முனைவர் சோம. இராசேந்திரன், புலவர் செந்தலை கவுதமன், முனைவர் பொற்கோ, மருத்துவர் பூ. பழனியப்பன் ஆகியோர் கலைஞர் - நாத்திகராகவும், திராவிடர் இயக்கத்தின் ஒரே மூத்த தலைவராகவும் இருப்பதையும், 1974 இல் இதன் முதல் பதிப்பை முதல்வராக இருந்து வெளியிட்டதையும் நினைவு கூர்ந்து பாராட்டினர்.
திட்டக்குழு துணைத் தலைவர் மு. நாகநாதன், பெரியாரின் இடஒதுக்கீடு, பெண்ணுரிமை தொடர்பான ஆழமான சிந்தனைகளை விளக்கி, நோபல் பரிசு பெற்ற அமர்த்தியாசென்னுடன் ஒப்பிட்டுப் பெரியாரியலை விளக்கி, விரிவாகப் பேசினார். நூலை வெளியிட்ட கலைஞர், “பெரியாரியச் சிந்தனைகளுக்கு தமிழகத்தில் கிடைக்கிற ஆதரவு மேலும், மேலும் பெருகிக் கொண்டிருக்கிறது என்பதற்கு இந்தக் கூட்டமே அடையாளம். 35 ஆண்டுகளுக்கு முன்பு திருச்சியிலே, இதன் முதல் பதிப்பை வெளியிட்டபோது, இதில் பாதியளவு கூட்டம்கூட இல்லை” என்று கூறியபோது, அரங்கம் கைதட்டலில் அதிர்ந்தது. தோழர் ஆனைமுத்துவின் கடும் உழைப்பையும், முயற்சியையும் பாராட்டிய கலைஞர், பெரியார் கருத்துகளைப் பரப்பும் இயக்கங்கள் இரட்டைக் குழல் துப்பாக்கிகள் போல் செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
பெரியார், அண்ணா, காமராசர் வரலாறுகளை பாடத் திட்டத்தில் சேர்க்க வேண்டும் என்றும், இந்த பெரியார் தொகுப்புகளை,நூலகங்கள், கல்லூரிகளில் தமிழக அரசு பயன்படுத்த வேண்டும் என்றும், இரண்டு கோரிக்கைகளை தோழர் வே. ஆனைமுத்து முதல்வர் முன் வைத்தார். பெரியார் சிந்தனைகளுக்கு முன்பதிவுத் திட்டத்தின் கீழ் 2000 பேர் பதிவு செய்ததை குறிப்பிட்ட தோழர் வே. ஆனைமுத்து, இதற்காக தமது அமைப்பைச் சார்ந்த தோழர்கள் கடுமையாக உழைத்ததைப் பாராட்டினார். பெரியார் திராவிடர் கழகத் துணைத் தலைவர் ஆனூர் செகதீசன், பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் மற்றும் பெருமளவில் கழகத் தோழர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். அரங்கம் முழுதும் கூட்டம் நிரம்பி வழிந்தது.