மதவெறியர்களால் குறிவைக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட வழக்குகளில் தடயவியல் ஆய்வுக்கான அறிக்கையை ஸ்காட்லாந்து யார்ட் காவல்துறையினரிடமிருந்து 8 வாரங்களுக்குள்ளாக பெற்று நீதிமன்றத்தில் அளித்திட வேண்டும் என்று மத்தியப் புலனாய்வுக் குழுவினருக்கு மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2013ஆம் ஆண்டு ஆகஸ்ட் 20 அன்று புனே நகரில் நடைப் பயிற்சியின் போது மூடநம்பிக்கைகளுக்கு எதிரான அமைப்பின் நிறுவனரும் பகுத்தறிவாளருமாகிய நரேந்திர தபோல்கர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இக்கொலை  வழக்கில் மகாராட்டிர மாநிலத்தின் காவல்துறை முறையாக செயல்பட்டு புலனாய்வு விசாரணை செய்து குற்றவாளிகளைக் கண்டறியவில்லை எனக் கூறி, 2014ஆம் ஆண்டில் மத்திய புலனாய்வுக் குழுவின் விசாரணைக்கு மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

தபோல்கர் சுடப்பட்டதைப்போலவே, மகாராட்டிர மாநிலத்தில் மும்பை மாநகரில் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களில் ஒருவரும், பகுத்தறிவாளருமான கோவிந்த் பன்சாரே 2015ஆம் ஆண்டு பிப்ரவரி 16 அன்று நடைப் பயிற்சியின்போது சுடப்பட்டார். அதன் பின்னர் மருத்துவமனையில் 20.2.2015 அன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அதேபோன்றே கருநாடக மாநிலத்தில் 30.8.2015 அன்று ஹம்பி பல்கலைக் கழகத்தின் மேனாள் துணைவேந்தரும், பேராசிரியரும் பகுத்தறிவாளருமாகிய எம்.எம்.கல்புர்கி, கருநாடக மாநிலத்தில் மைசூரு தார்வார்ட் பகுதியில் கல்யாண் நகர் குடியிருப்பில் தட்டப்பட்ட தம் வீட்டின் கதவத் திறந்தபோது சுடப்பட்டு உயிரிழந்தார். கருநாடக உளவுப் பிரிவின் விசாரணையைத் தொடர்ந்து, கருநாடக அரசு மத்திய புலனாய்வுக் குழுவிடம் இவ்வழக்கை விசாரணைக்கு ஒப்படைத்தது. இவ்வழக்குகளில் தடயங்கள் குறித்து ஆய்வக அறிக்கையை ஸ்காட்லாந்து யார்ட் காவல்துறையினரிடமிருந்து பெற்று அளித்திட எட்டு வாரங்கள் கெடு விதித்து, தடயவியல் அறிக்கையினை நீதிமன்றத்தில் அளிக்குமாறு மும்பை உயர்நீதிமன்றம் மத்திய புலனாய்வுத் துறைக்கு உத்தரவிட்டுள்ளது.

இநத ஆண்டு ஜூன் மாதத்தில் மத்திய புலனாய்வுத் துறையினரால் இவ் வழக்குகளில் தொடர்பு உள்ளவராக இந்து ஜனஜக்ருதி சமிதி உறுப்பினரான விரேந்திரசிங் தாவடே கைது செய்யப்பட்டார். மேலும் சனாதன் சன்ஸ்தா அமைப்புக்கு இக்கொலை வழக்குகளில் தொடர்பு உள்ளதும் அம்பலமானது.

விரேந்திரசிங் தாவடே கைதைத் தொடர்ந்து மத்திய புலனாய்வுத் துறையினரின் விசாரணையில் தபோல்கர் கொலை வழக்கில் தொடர்புள்ளவராக அகோல்கர் இந்தியாவிலிருந்து வெளியேறி வெளி நாட்டில் பதுங்கியிருக்கிறார். அவரும் தேடப்பட்டு வருகிறார்.

உ2013ஆம் ஆண்டு நடைபெற்ற படுகொலை உள்ளிட்ட பகுத்தறிவாளர்கள் மீதான கொலை வழக்குகளில் தொடர்புள்ளவர்கள் குறித்த புலனாய்வு விசாரணைகள் மிகவும் தொய்வுடன் நடந்து வருகின்றன என்றும், வழக்கு விசாரணைகளை துரிதப்படுத்தி, குற்றவாளிகள் மீதான நடவடிக்கைகளை எடுத்திட வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளனர்.

இந்நிலையிலேயே மும்பை உயர்நீதிமன்றம் மத்திய புலனாய்வுக் குழுவுக்கு தடய அறிக்கையை அளிக்குமாறு எட்டு வாரங்கள் கெடு விதித்துள்ளது.

Pin It