ஒருமுறை நான் ஆர்எஸ்எஸ் தலைமையகமான நாக்பூரில் இருந்தபோது கவுதம் அதானி அங்கு யோகா பயிற்சி செய்வதைப் பார்த்தேன். மோடி அரசு, பொதுச் சொத்துக்களை தனியாருக்கு கொடுப்பதை எதிர்த்து நாட்டு மக்கள் குரல் கொடுக்கின்றனர். அரசின் திட்டங்கள், முடிவுகள் எங்கிருந்து வருகிறது என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். அது ஆர்.எஸ்.எஸ்.லிருந்து வரும் கட்டளை.

ஒருமுறை நான் இமயமலை அடிவாரத்தில் உள்ள ஆர்எஸ்எஸ் அலுவலகத்தில் இருந்தேன். ஒரு பெண் தனது கைக்குழந்தையுடன் அந்த அலுவலகத்துக்கு வந்து அலுவலகத் தலைவருடன் பேசிக் கொண்டிருந்தார். கேரளாவைச் சேர்ந்த எனது சக ஊழியர் ஒருவர் என்னிடம் கூறினார், “அந்தப் பெண். அந்தத் தலைவரிடம் தன் குழந்தையை பாதுகாக்க வேண்டும் என்று கெஞ்சுகிறார்” என்று. “பெண் குழந்தைகளைப் பெற்றெடுத்த பட்டியலினப் பெண்களுக்கான வழக்கத்தை இம்முறை வலியுறுத்த வேண்டாம்” என்று. அந்தப் பெண், அந்த ஆர்எஸ்எஸ் தலைவரிடம் இறைஞ்சுகிறார். சரி, அந்தப் பழக்கம் என்னவென்று விசாரித்தபோது அதிர்ச்சியாக இருந்தது.

பட்டியலின சாதியைச் சேர்ந்த ஒரு பெண், பெண் குழந்தையைப் பெற்றெடுத்தால், அக்குழந்தையை ஆறு மாதங்களுக்கு முன் ‘தூய்மைப்’ படுத்த கங்கை நீரில் மூழ்க வைத்து வெளியே எடுக்க வேண்டும். அந்த பெண்மணி ஏற்கனவே நான்கு பெண் குழந்தைகளைப் பெற்றெடுத்தார். கங்கையில் மூழ்க வைத்து வெளியே எடுத்ததால் குழந்தைகள் அனைவரும் இறந்தனர். எனவே இப்போது ஐந்தாவது முறையாகவாவது சடங்கைத் தவிர்க்க அனுமதிக்குமாறு கெஞ்சுகிறார். ஆனால் சடங்குகள் செய்யப்பட வேண்டும் என்று தலைவர் வலியுறுத்தினார். காயத்ரி மந்திரத்தை உச்சரித்துக் கொண்டே அப் பெண்மணியை ஆற்றங்கரைக்கு கட்டாயப்படுத்தி அழைத்து வந்தார். அந்த ஆர்எஸ்எஸ் தலைவர் அவர்களுடன் நானும் நடந்து கொண்டிருந்தேன். தண்ணீர் மிகவும் குளிராக இருந்ததால் தண்ணீரில் மூழ்க வைத்து வெளியே எடுத்த போது குழந்தை இறந்தது. மூழ்க வைக்கும் முன்பு குழந்தை விளையாடிக் கொண்டிருந்தது, சிறு கைகளைத் தட்டிச் சிரித்துக் கொண்டிருந்தது.

ஆர்எஸ்எஸ் முகாம்களில் கலந்து கொள்ளும் போது எனது திராவிட வேர்கள் காரணமாக நான் பலமுறை துன்புறுத்தப்பட்டேன். துன்புறுத்தலில் இருந்து தப்பிக்க, நான் ஒரு பூணூலை அணிந்தேன். ஆர்எஸ்எஸ்ஸின் சமஸ்கிருதமயமாக்கல் மற்றும் வர்ணமயமாக்கல் கொள்கைக்கு இது எடுத்துக் காட்டு.

(கேரளாவில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பிலிருந்து வெளியேறி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்துள்ள சுதீஷ் மின்னி, தனது ஆர்.எஸ்.எஸ். அனுபவங்களை நூலாக எழுதியுள்ளார். ‘நரக மாளிகை’ என்று தமிழில் அந்த நூல் வெளிவந்துள்ளது. 2021 செப்.16இல் சென்னையில் நடந்த நூல் வெளியீட்டு விழாவில் அவர் ஆற்றிய உரையின் ஒரு பகுதி.)