பாரதம் (இந்தியா) ரிஷிகளாலும், சனாதன தர்மத்தாலும் உருவாக்கப்பட்டது என்று அரசியல் சட்டத்திற்கு எதிராக பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து, 29.10.2022 அன்று சன் நியூஸ் “கேள்விக் களம்” நிகழ்வில் கலந்து கொண்டு கழகத் தலைவர் கொளத்தூர் மணி முன் வைத்த கருத்துகள்.

 தமிழ்நாட்டின் ஆளுநர், அரசியல் சட்டத்திற்கு எதிராக, தமிழ்நாடு அரசின் கொள்கைகளுக்கு எதிராக அரசியலை பேசுபவராகத்தான் தொடர்ந்து இருந்து வருகிறார். அவர் தமிழ்நாட்டுக் கருத்தியலுக்கு எதிரான மும்மொழிக் கொள்கை, தேசிய கல்விக் கொள்கை ஆகியவற்றை தமிழ்நாடு ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் பேசி வருகிறார். ‘சனாதன தர்மம்’ என்பதை மீண்டும் மீண்டும் ஓங்கி ஒலிப்பவராகத் தான் ஆளுநர் இருக்கிறார். இப்போது அந்த உரையிலும் சனாதன தர்மத்தைப் பற்றி பேசியிருக்கிறார்.

சனாதன தர்மம் என்பது, ‘வேதங்களையும், ஸ்ருதிகளையும், ஸ்மிருதிகளையும் அடிப்படியாகக் கொண்டு அமைக்கப்பட்டது’ என்பதை ‘சனாதன தர்மா’ என்ற நூலே விளக்குகிறது. இது காசி பல்கலைக் கழகத்தில் எழுதப்பட்ட நூல்.

ஆளுநர் தற்போது புதிதாக ஒன்றை கூறியிருக்கிறார். “பாரதத்தை ரிஷிகளும், சனாதன தர்மங்களும் தான் உருவாக்கின” என்று பேசியிருக்கிறார். சனாதன தர்மம் என்பது ஆரிய வர்த்தத்தைத் தான் பேசுகிறது; விந்தியத்திற்கும், இமயமலைக்கும் இடையே உள்ள ஆரிய வர்த்தத்தைப் பற்றித் தான் பேசுகிறது. ஆனால் இவர் புதிதாக ‘பாரதம் முழுவதை பற்றியும் சனாதன தர்மம் பேசுகிறது’ என்கிறார். பாரதம் இப்படி ஒன்றாக இருந்ததற்கான ஆதாரம் எதில் உள்ளது? எந்தவொரு செய்தியும் ஆதாரப்பூர்வமாக கூறுவதில்லை. இந்தியா விடுதலை அடைந்தது என்று கூறப்பட்ட போது கூட 500 சமஸ்தானங்கள் தனித்து தான் இருந்தன. அவர்கள் விரும்பினால் இந்தியாவோடு இணையலாம் அல்லது பாகிஸ்தானோடு இணையலாம் இல்லையென்றால் தனித்து இருக்கலாம் என்று தான் அப்போது பேசப்பட்டது. இது தான் உண்மை.

ஆனால், இவர் ஏதோ மிக நீண்ட காலத்திற்கு முன்பே உருவாக்கிவிட்டார்கள் அதை தர்மம் தான் ஆட்சி செய்தது, அரசர்கள் ஆளவில்லை என்கிறார். இது பொய்யான செய்தி.

இந்திய ஒன்றியத்தில் ஆளுநர்கள் என்பதே, அந்தந்த மாநிலங்களில் அரசியல்   சட்டத்திற்கு இணக்கமான செயல்பாடுகள் நடக்கிறதா அல்லது முரணான செயல்பாடுகள் நடக்கிறதா? அரசியல் சட்டத்தை மீறி செயல்படுகிறார்களா? என்பதை பார்த்து அதை சரி செய்வதற்கு அல்லது உதவுவதற்கு அல்லது அதை ஒன்றிய அரசிற்கு அறிவிப்பவராக இருப்பது மட்டும் தான் ஆளுநரின் பணி. ஆனால், ஆர்.என்.ரவி எப்போதுமே அரசியல் கருத்துக்களை தொடர்ச்சியாக பேசுபவராகத்தான் இருக்கிறார். சனாதன தர்மம் என்பது நால் வர்ணத்தைப் பேசுகிறது. அந்த தர்மம் தான் பாரதத்தையே உருவாக்கியது என்கிறார். இது எவ்வளவு நகைப்புக்குரிய செயல். இது மட்டுமல்லாமல் காசி - இராமேஸ்வரத்திற்கும் தொடர்பு இருப்பதாக சிலப்பதிகாரம் கூறுகிறது என்றெல்லாம் பேசுகிறார். இவற்றையெல்லாம் கேட்கிறபோது வியப்பாக இருக்கிறது. ஆளுநர் முடிவுடன் தான் இருக்கிறார். தன்னை நியமித்த அரசுக்கு விசுவாசமாக இருக்க வேண்டும் என்று, அந்த அரசின் கருத்துக்களை தமிழ்நாட்டில் பரப்ப வேண்டும் என்று கருதுகிறாரே தவிர தமிழ்நாட்டில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு கூட ஒப்புதல் தருவதற்கு நேரமில்லாமல் சனாதன தர்மத்தை பரப்புவதில் அவர் முழுமையாக ஈடுபட்டிருக்கிறார். அவர் பேசியது ஆளுநர் என்ற தகுதிக்கு சரியானது அல்ல; அவர் பேசியதும் உண்மைக்கு புறம்பான செய்தி.

இந்த சனாதன தர்மம் என்பதைப் பற்றி Indianculture.gov.in என்ற இணையதள பக்கத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட புத்தகத்தில் சனாதன தர்மத்தை பற்றி, ‘In later days the religion was called the hindu religion.’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. “The sanatana dharma means eternal religion, the ancient law
and it is based on vedas and sacret books very long ages ago” என்றும் கூறுகிறார்கள். இது எதன் அடிப்படையில் இருக்கிறது என்பதையும் கூறியிருக்கிறார்கள். சமஸ்கிருத ஸ்லோகத்தை கூறிவிட்டு சொல்கிறார்கள். அதை ஆங்கிலத்தில் ‘He for the shake of all the protection assigned Separate karmas to those born of his mouth, arms, thighs and feet’ என்று 121ஆவது பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில், பிராமணர், க்ஷத்ரியர், வைசியர், சூத்திரர்களைப் படைத்ததைப் பற்றி தான் பேசுகிறார்கள். எதுவாக இருந்தாலும் மாறாதது எதுவும் இல்லை என்று மார்க்சியம் கூறுகிறது. காலத்திற்கேற்ப, சூழலுக்கேற்ப மாற்றிக் கொள்ளக் கூடியது தான் கொள்கையாக இருக்க முடியுமே தவிர அறிவியல் வளராத காலத்தில் செய்து கொண்டிருந்தவைகளை இப்போது ஏற்றுக் கொள்ள முடியாது. எனவே மாறாதது (சனாதனம்) என்று எதையும் ஏற்றுக் கொள்ள முடியாது.

இவர்கள் விமர்சிக்கும் கிறிஸ்துவ மதத்தில் ஒரு காலத்தில் கலிலியோவிற்கு தண்டனை கொடுத்தார்கள், புரூனோவை நெருப்பில் போட்டு எரித்தார்கள் “உலகம் உருண்டை” என்று கூறியதற்காக. ஆனால் தற்போது 400 ஆண்டுகள் கழித்து அதற்காக வருத்தம் தெரிவித்திருக்கிறார்கள். அறிவியல் உண்மையை கண்டுவிட்டது என்று கூறி. ஏனென்றால் பைபிளில் உலகம் உருண்டை என்று எங்குமே குறிப்பிடப்படவில்லை. ஆனால் காலத்திற்கேற்ப மாற்றி ஏற்றுக் கொண்டுவிட்டார்கள்.

சனாதன தர்மத்தில் கூறியுள்ளவாறு மனிதர்கள் பிரம்மாவின் வாய், கைகள், தொடை, காலில் பிறக்கவில்லை, பெண் - ஆணிற்குத் தான் பிறந்தான், என்பதை ஏற்றுக் கொண்டிருக்க வேண்டும். ஆனால், “இல்லை இது என்றென்றும் இருப்பவை’ என்று கூறி மாற்றிக் கொள்ளாமல் இருப்பது சரியல்ல. ஒவ்வொரு மனிதருக்கும் அரசியல் சட்டம் வழங்கியுள்ள உரிமையின் படி தான் இருக்க வேண்டும். ஏதோ ஒரு காலத்துல் பேசப்பட்டதை வைத்துக் கொண்டு ‘நீங்களெல்லாம் கீழானவர்கள், நாங்களெல்லாம் உயர்ந்தவர்கள்” என்று பேசக்கூடாது.

ரிஷிகளால் உருவாக்கப்பட்டது என்கிறார் ஆளுநர். கீழ்காணும் இந்த ரிஷிகளால் உருவாக்கப் பட்டிருக்குமோ, “கலைக்கோட்டு முனிவர் - மானுக்கும், ஜம்புகர் - நரிக்கும், கவுதமர் - மாட்டுக்கும், மாண்டவியர் - தவளைக்கும், காங்கேயர் - கழுதைக்கும், கனநாதர் - கோட்டானுக்கும், சனகர் - நாயிக்கும், சுகர் - கிளிக்கும், ஜம்பவந்தர் - கரடிக்கும், அஸ்வத்தமன் - குதிரைக்கும் பிறந்தார்கள்” என்று புராணம் கூறுகிறது. இந்த ரிஷிகளை குறிப்பிடுகிறாரா? இவர்கள் தான் எங்களுக்கான சட்டங்களை உருவாக்கினார்கள், இந்தியாவை உருவாக்கினார்கள் என்று கூறுகிறாரா? சிலப்பதிகாரத்தை குறிப்பிடுகிறார். சிலப்பதிகாரத்தில், “பாட்டுப்பாடுகிற பார்ப்பனர்கள், ஊரைவிட்டு வெளியேற்றி புறச்சேரியில் வைத்திருக்கிறார்கள்” என்பதை சிலப்பதிகாரம் கூறியிருக்கிறது.

இதை ஏற்றுக் கொள்வார்களா?

சனாதன தர்மம் என்பது பழைய காலத்து நாவல். இதை ஆளுநரான ஒருவர் பேசுவதும், இதன் வழியாக அமைதியைக் குலைப்பதற்கும், தான் யார் என்பதை அடையாளப்படுத்தவும் தான் ஆளுநர் இவ்வாறு பேசி வருகிறார். தமிழ்நாடு முற்றிலும் வேறான கலாச்சாரத்தைக் கொண்டுள்ளது. அர்ச்சகர் பற்றி, “பேர் கொண்ட பாப்பான் பிரார் தன்னை அர்ச்சிக்கில், போர் கண்ட மன்னருக்கு பொல்லா வியாதியாம்; பார் கொண்ட நாட்டுக்கு பஞ்சமாம்” இதைத் தான் தமிழ்நாட்டு வேதம் கூறுகிறது. திருமூலர் சொல்வதை ஏற்றுக் கொள்வார்களா? ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒவ்வொரு பண்பாடு, தத்துவம் உள்ளது. அதை ஒட்டுமொத்தமாக கூறுகிறபோது தங்களுக்கு சார்பான, தங்களுக்கு சாதகமான, தங்களை உயர்ந்தவர்களாக காட்டும் தத்துவத்தை மட்டும் கூறுவது சரியல்ல. ஆளுநர் கண்டிக்கத்தக்கவர்.