(புரோகிதர்களை வைத்து யாகங்களை நடத்தும் வேதகாலப் பண்பாடு இன்று அரசியல் பண்பாடாகி விட்டது. மழைக்காக தேர்தல் வெற்றிக்காக மட்டுமல்ல; அரசு விழாக்களிலும்கூட யாகங்கள் நடக்கின்றன. புரோகிதர்களின் தொழிலாக மாறியுள்ள இந்த யாகத்தின் மோசடிகளை ஆதாரங்களுடன் விளக்குகிறது இக்கட்டுரை.)

உலகத்தின் எந்த நாட்டின் வரலாற்றை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள். மதத் தலைவர்களின் கையில் அரசியல் அதிகாரம் முழுவதும் சிக்கிக் கொண்டுவிட்ட காலம் ஒன்று கட்டாயம் இருக்கும். ஐரோப்பாவில் போப்பாண்டவர் எத்தனையோ பேரை மத விரோதிகள் என்று கூறி படுகொலை செய்வித்திருக்கிறார். இந்தியாவில் இதே உரிமையைப் புரோகித வர்க்கம் பெற்றிருக்கிறது. யாத்திரை கிளம்ப வேண்டுமா, வீடுகட்ட வேண்டுமா, திருவிழா அல்லது திருமணம் நிகழ்த்த வேண்டுமா, வியாபாரம் தொடங்க வேண்டுமா, புரோகிதர் வராமல் நடக்காது.

மத விஷயங்களில் புரோகிதர்கள் இதே வேலையைத்தான் செய்து வந்திருக்கிறார்கள். இந்தியர்கள் பொதுவாகவே மதத்தில் மிகுந்த பற்றுதல் உடையவர்கள். புரோகிதத் தொழில் என்றுமே ‘பிராமணர்கள்’ கையிலேயே இருந்து வந்துள்ளது. பிராமணர்கள் இந்தத் தொழிலை மதத்தைப் பரப்புவதற்காகவோ அல்லது சமூகத்திற்கு நல்லது செய்ய வேண்டும் என்ற நோக்கோடோ மேற்கொள்ள வில்லை. இதன் மூலம் அவர்களுடைய பிழைப்பு எளிதாக நடந்து வந்தது. புரோகிதம் செய்வது பிராமணர்களின் தொழில். மனுநீதிப்படி பிராமணர் களுக்காக விதிக்கப்பட்டுள்ள ஆறு கடமைகளில் யாகங்கள் நடத்துவதும், பாடம் சொல்லித் தருவதும், தானம் பெறுவதும் வயிற்றுப் பிழைப்புக்கான சாதனங்கள் தானே? தனக்கு என்று ஒரு தொழில் ஏற்பட்டவுடனேயே மனிதனுக்கு அதோடு தன்னலமும் பிறந்து விடுகிறது. உடனே அவன் தனது தொழிலை தொழிற் கண்ணோட்டத்தோடு பார்க்கத் தொடங்கி விடுகிறான். இதன் காரணமாகத்தான் புரோகிதர்கள் சமுதாய நலனைப் பற்றிக் கவலைப்படாமல் தங்கள் சந்ததியரின், தங்கள் இனத்தவரின் நலனையே குறிக் கோளாகக் கொண்டு சுவையற்ற, பொருளே இல்லாத, புரியாத, சடங்குகளை உண்டாக்கத் தொடங்கினார்கள்.

எந்த நோய் ஏற்பட்டாலும் மருத்துவர் வழி சொல்வதில்லையா? எப்படிப்பட்ட வழக்கானாலும் வெற்றி பெற்றுத் தருவதாக வழக்கறிஞர்கள் கூறுவ தில்லையா? அதேபோல, “எப்படிப்பட்ட விருப்பங் களையும் எங்களால் நிறைவேற்றித்தர முடியும்?” என்று புரோகிதர்கள் கூறத் தொடங்கினார்கள். மோட்சத் திற்கு அனுப்பவும் புண்ணியம் சம்பாதித்துத் தரவும் தான் அவர்களால் முடியும் என்பதில்லை. அவர்களால் பெண்களை வசப்படுத்த முடியும், எதிரிகளை அழிக்க முடியும், குழந்தையில்லாதவர்களுக்கு குழந்தை தர முடியும், போரிலே வெற்றி வாங்கித் தர முடியும், இன்னும் இதைப் போலப் பல. வாணிபத்தில் இலாபம் சம்பாதிக்க, வழக்கிலே வெற்றி பெற, தேர்வுகளில் மதிப்பெண்கள் பெற, பூசைகள் நடத்திவிட்டு வருபவர்களை நாம் பார்ப்பதில்லையா? ‘பாரஸகர கிருஹ்ய சூத்திரம்’ என்ற நூலில் வீட்டிலிருந்து வேலைக்காரன் ஓடிப் போய்விட்டால் அவனை எப்படி வசப்படுத்துவது என்பதற்குக்கூட வழி சொல்லப்பட்டிருக்கிறது! “உயிருள்ள மிருகம் ஒன்றின் கொம்புகளை நம்முடைய மூத்திரத்தால் நனைத்து, அந்த வேலைக்காரன் தூங்கிக் கொண்டிருக்கும் பொழுது அம்மிருகம் அவ்வேலைக்காரனை மூன்று முறை சுற்றி வரும்படியாகச் செய்ய வேண்டும்” என்கிறது அந்நூல்!

‘பிராமணர்கள்’ உயர்ந்த விதம்

மத நூல்களை இயற்றும்பொழுது ‘பிராமணர்கள்’ தாங்கள் மிகவும் உயர்ந்தவர்கள் என்பதையும், தாங்கள் மிகவும் இன்றியமையாதவர்கள் என்பதையும் பல்வேறு இடங்களில் வற்புறுத்தியிருக் கிறார்கள். மதச் சடங்குகள் மிகவும் நுணுக்கங்கள் வாய்ந்தவை என்றும், மற்ற இனத்தினர் அதில் தலையிடக் கூடாது என்றும், மற்றவர்களை எண்ணச் செய்யத்தான் இவர்கள் இப்படி எழுதி வந்தார்கள். அப்படி யாராவது துணிந்து முன்வந்தால் சமூகத்தின் பெயரால், சாத்திரத்தின் கட்டளைகளைக் கூறி அவர்களைத் தடுத்து நிறுத்த அவர்கள் முயன்று வந்தார்கள். அரசர்கள் கட்டாயமாகப் புரோகிதர்களை வைத்துக் கொண்டுதான் யாகங்களை நடத்த வேண்டும் என்று பிராமண நூல்களில் கூறப்பட்டுள்ளது “புரோகிதன் இல்லாமல் அரசன் தரும் உணவை தேவர்கள் புசிப்பதில்லை. எனவே யாகங்கள் செய்யும்பொழுது அரசர்கள் புரோகிதர்களைத் தங்கள் முன் வைத்துக் கொண்டிருக்க வேண்டும். அப்பொழுது தான் தேவர்கள் அந்த உணவைப் புசிப்பார்கள்” என்கிறது ‘ஆத்ரேய பிராமணம்’ ‘8-24) என்கிற நூல். ‘சதபத பிராமணம்’ என்கிற நூலில் புரோகிதனை ‘மனிதருள் தேவன்’ என்று குறிப்பிட்டுள்ளார்கள்.

“தேவர்கள் இரு வகையினர். (தேவலோக) தேவர்கள் முதல்வகை. புரோகிதம் சொல்பவர்களும், மந்திரம் ஓதுபவர்களுமான பிராமணர்கள் இரண்டா வது வகையினர். இவர்கள் ‘மனுஷ்ய தேவதைகள்’. சதபத பிராமணம் (2-216-6) இந்த மனுஷ்ய தேவதைகளை மகிழ்விப்பது எப்படி என்ற வழிகள் ‘கோபத பிராமணம்’ என்ற நூலில் கூறப்பட்டுள்ளன.

“தீயிலே அளிக்கப்படும் ஆஹூதிகளை (பொருள்களை)ச் சாப்பிடாத தேவர்கள் பிராமணர்கள். தீ மூலமாக அளிக்கப்படுபவைகளை ஏற்றுக் கொள்ளும் தேவர்கள் ஆஹூதிகளால் மகிழ்விக்கப்படுகிறார்கள். மனித உருவில் உள்ள தேவர்கள் - பிராமண புரோகிதர்கள் தட்சிணையால் மகிழ்விக்கப்படுகிறார்கள். அவர்கள் தாம் மகிழ்ச்சி யடைவதோடு தங்கள் எஜமானர்களுக்கும் ஆகாரமும், ஆற்றலும் அளிக்கிறார்கள்.” (மேற்படி நூல் 2-1-6)

தட்சிணை பெறுவது ஒன்றுதான் புரோகிதத் தொழிலின் அடிப்படையாக இருந்து வந்துள்ளது. தட்சிணைக்குப் பேராசைப்பட்டுத்தான் புரோகிதர்கள் மூடநம்பிக்கைகளையும், வெளிப் பகட்டுகளையும் வளர்த்தார்கள். மத நூல்களில் தட்சிணை மிகவும் கண்டிப்பான முறையில் குறிப்பிடப்பட்டுள்ளது. நாம் சம்பளம், கூலி ஆகிவற்றைத் தீர்மானிப்பதில்லையா, அதே போலத்தான் தட்சிணையையும் நிச்சயித்து வந்திருக்கிறார்கள்.

தட்சிணை என்பது வெறும் உழைப்புக் கூலியாக மட்டும் இருந்திருந்தால் அதனை மற்றவர்கள் அடித்துக் கொண்டு போய்விடுவார்களே என்பதற்காக அதைத் தானம் என்றும், சடங்கின் பகுதி என்றும் புண்ணியச் செயல் என்றும் கூறி வந்திருக்கிறார்கள்.

தட்சிணையில்லாமல் யாகம் வெற்றி பெறாது என்றும், தட்சிணை யாகத்தின் துணை போன்ற தென்றும் முதலிலேயே எஜமானரின் உள்ளத்தில் கருத்துக்கள் ஊன்றப்பட்டுவிடுகின்றன. மகாபாரதத் தில் தட்சிணையில்லாத யாகம் உயிரற்ற சடலத்தோடு ஒப்பிடப்பட்டுள்ளது. “ஏழை பிணத்துக்கு ஒப்பானவன், அரசனில்லையானால் நாடு அழிந்து விடும். பிராமணனில்லாவிடில் சிரார்த்தம் நாசமாகிவிடும். தட்சிணையில்லையானால் யாகமே உயிரற்றதாகிவிடும்” என்று அதில் கூறப்பட்டுள்ளது.

‘சதபத பிராமணம்’ என்ற நூலில் தங்கத்தைத் தான் தட்சிணையாகத் தர வேண்டும் என்று கூறப்பட் டுள்ளது. அதற்கான காரணமும் தரப்பட்டுள்ளது. “தட்சிணை யாகத் தீயுடன் சம்பந்தப்பட்டது. எனவே அதுவும் யாகத் தீயைப் போலவே ஒளி பெற்ற பொரு ளாகத்தான் இருக்க வேண்டும்” என்கிறது அந்நூல்.

‘காத்யாயன ஸ்ரோத சூத்ரம்’ என்ற நூலில் வெள்ளியைத் தட்சிணையாகத் தருவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இப்படித் தந்தால் ஆண்டு முடிவிற்குள்ளாகவே எஜமானரின் வீட்டில் யாராவது இறந்து விடுவார்கள் என்றும் பயமுறுத்தப்பட் டிருக்கிறது. இதனுடைய கருத்தும் தங்கத்தையே தட்சிணையாகத் தரவேண்டும் என்பதுதான்!

‘ஆத்ரேய பிராமணம்’ என்ற நூலில் தட்சிணை யாகத்தின் எருது போன்றது என்று குறிப்பிடப்பட் டுள்ளது. அதாவது எப்படி எருதில்லாமல் வண்டி ஓடாதோ அதேபோல தட்சிணையில்லாமல் யாகமும் முன்னேறாதாம்!

‘சதபத பிராமணம்’ என்ற நூலில் தட்சிணைக் கட்டணம் கொஞ்சம் குறைவாகக் குறிப்பிடப்பட் டுள்ளது. அதில் தட்சிணையாகத் தங்கத்திற்குப் பதிலாக பசு, துணி, குதிரை ஆகிவற்றைத் தரலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தப் புரோகிதர்களுக்கு மதத்திலே எள்ளள வும் நம்பிக்கையில்லை. வியாபாரிகளைப் போலவே இவர்களுக்கும் வருமானத்திலேயே குறி. யாராவது எஜமானர்கள் அழைத்தால் அவர்களுடைய இல்லங் களுக்குச் சென்று குழந்தைப் பேறு உண்டாகவும், எதிரிகள் அழியவும், வழக்குகளில் வெற்றி ஏற்படவும் யாகங்கள் நடத்திவிட்டு வந்துவிடுவார்கள். அதே நேரத்தில் தங்களுக்கு வருடக் கணக்கில் வேலை யில்லாமல் இருந்தாலும், குழந்தைகள் உண்டாகாமல் இருந்தாலும் நீதிமன்றங்களில் வழக்குகள் நடந்து கொண்டிருந்தாலும் இவர்கள் தங்களுக்காக ஒருமுறைகூட யாகம் நடத்த மாட்டார்கள். இந்த ஏமாற்று வித்தைகளில் நம்பிக்கை இருந்தால் முதலில் இவர்கள் அவற்றைத் தங்கள் இல்லங்களிலேயே சோதித்துப் பார்க்கலாமே!

புரோகிதர்களுடைய இந்த வியாபாரக் கண்ணோட்டம் இன்று நேற்றல்ல, நீண்ட காலமாகவே இருந்து வந்திருக்கிறது.

ரிக் வேதத்தில் (9-12-1) கீழ்க்கண்டவாறு கூறப்பட்டுள்ளது:

“தொழிலாளி முறிந்துபோன சாமான்களை எதிர்பார்ப்பதுபோல, மருத்துவர்கள் நோயாளிகளை எதிர்பார்ப்பதுபோல, யாகம் நடத்த யாராவது கூப்பிடமாட்டார்களா என்று புரோகிதர்கள் எதிர் பார்க்கிறார்கள்.”

எஜமானர்கள் என்றென்றும் புரோகிதர்கள் வசத்திலேயே இருக்க வேண்டும். அவர்கள் எப்பொழுதும் புரோகிதர்களைப் புகழ்ந்த வண்ணம் இருக்க வேண்டும் என்பதற்காக மத நூல்களில் அவர்கள் மிகவும் இன்றியமையாதவர்கள் என்றும் மிகுந்த சக்தி வாய்ந்தவர்கள் என்றும் குறிப்பிடப் பட்டுள்ளது.

“புரோகிதர்கள், எஜமானன் இறந்து போக வேண்டும் என்று விரும்பினால் உடனே மந்திரத்தைத் தப்பிதமாகக் கூறிவிட வேண்டும். அல்லது மந்திரத்தில் ஒரு அடியை விட்டுவிட வேண்டும். இதன் மூலம் மந்திரத்தின் தூய்மை கெட்டுவிடும். அப்படிப்பட்ட மந்திரம் உடனே எஜமானனைக் கொன்றுவிடும். எஜமானன் கண்ணிழந்து குருடனாக வேண்டுமானால் யாகத்தின்போது மைத்ரா வருண மந்திரத்தைத் தவறாக உச்சரித்து விட்டாலோ அல்லது அதில் ஒரு அடியை விட்டு விட்டாலோ போதுமானது, அது எஜமானனைக் குருடனாக்கிவிடும்.” (ஆத்ரேய பிராமணம், 3-3)

கூலியாட்களிடம் சரியாக வேலை வாங்க அதுபற்றி அறிந்த யாராவது ஒருவர் உடன் இருக்க நேர்வதுபோல, தெரிந்தவர்கள் யாரேனும் அருகில் இருந்தால்தான் இந்தப் புரோகிதர்கள் ஒழுங்காகத் தமது வேலையைச் செய்வார்கள். கல்வியறிவு உள்ள எஜமானன் முன்னிலையில் இவர்கள் சரியாக வேலை செய்வார்கள். கல்வியற்றவர்கள் கிடைத்தால் அவர்களை இந்தப் புரோகிதர்கள் எளிதாக ஏமாற்றி விடுவார்கள். இவர்களுடைய இந்த மனப்பான்மையும் புதியதல்ல, நீண்டகாலமாகவே இருந்து வந்துள்ளது.

“எவ்வாறு பாபிகள், கொள்ளைக்காரர்கள் அல்லது திருடர்கள் காட்டிலே பணக்காரர்களைப் பிடித்துக் குழியில் தள்ளி விடுகிறார்களோ அதேபோல யாக விதிகளைச் சரிவர உணராது அதை நடத்தும் எஜமானனை இவர்கள் (பாபக்) குழியில் தள்ளிவிட்டுச் சென்று விடுவார்கள். “எனக்கே யாகத்தின் விதிமுறைகள் தெரியும். எனவேதான் அவற்றை அறிந்த புரோகிதர்களைக் கொண்டே, நான் யாகங்களை செய்விக்கிறேன். அதனால்தான் எனக்கு வெற்றி கிடைக்கிறது” என்று பரீட்சித்துவின் குமாரர் ஜனமே ஜயன் கூறுவதும் இதனால்தான். (ஆத்ரேய பிராமணம்: 8-11)

அடிமையாக்குதல்

“பாவம், இந்த எஜமானர்களின் நிலைமை எவ்வளவு பரிதாபகரமானது! யாகங்கள் நிகழ்த்தா விட்டால் நன்மை விளையாது என்ற எண்ணத்தைப் பரப்பினவர்களே இந்தப் புரோகிதர்களோ அல்லது இவர்களுடைய முன்னோர்களோதான். பல ஆண்டுகள் உழைத்தாலன்றி கற்றுக் கொள்ள முடியாதவாறு இதன் விதிமுறைகளை இவர்கள் மிகவும் கடுமையாக்கி வைத்துவிட்டார்கள். அப்படி யாராவது அதனைக் கற்றுக் கொண்டாலும் அவர்கள் பிராமணர்களின் மூலமாகத்தான் அவற்றை நிகழ்த்த முடியும். எஜமானர்களைக் கடவுளிடம் அனுப்புதல், அவர்களுக்குச் சொர்க்கத்தைக் காட்டுவது, அவர்களுக்கு உணவும் செல்வமும் பெற்றுத் தருவது போன்றவைகளுக்குத் தாங்களே குத்தகை எடுத்து வைத்துள்ளவர்கள் போன்று இந்தப் புரோகிதர்கள் விளங்கி வந்தார்கள். கல்வியறிவு உள்ள எஜமானர்கள் வீடுகளில் இந்தப் புரோகிதர்கள் சரிவர கடமையைச் செய்துவிட்டு வருவார்கள். மற்ற இடங்களில் ஏதாவது குழப்பம் ஏற்பட்டாலும் இந்தப் புரோகிதர்கள் பொறுப்பை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். ஏனெனில் சாத்திரப்படி தண்டனை எஜமானனுக்குத் தானே கிடைக்க வேண்டும்! இவர்கள் தட்சிணை பெற்றுக் கொண்டு செல்வதோடு சரி.

‘பாணினீய சிக்ஷா’ என்ற நூலில் புரோகிதரின் கவனக்குறைவால் எஜமானனுக்கு எப்படி ஆபத்து ஏற்படுகிறது என்பதை விளக்க ஒரு சுலோகம் இருக்கிறது:

“மந்திரத்தின் உச்சரிப்பில் ஒரு சிறிது பிழையிருந்தாலும் அது தன் பயனை இழந்து விடும். அத்துடன் அதனுடைய பொருளும் சரிவர வெளிப் படாது. இடி விழுந்தால் திடீர் மரணம் ஏற்படுவது போன்று குற்றமுள்ள மந்திரத்தால் எஜமானன் அழிந்து விடுவான். இந்திரனின் எதிரி அழிந்ததே இந்த உச்சரிப்புப் பிழையின் காரணமாகத்தான்.”

மகாபாரதத்தில் இந்த இந்திரனின் எதிரியைப் பற்றிய கதை கீழ்க்கண்டவாறு தரப்பட்டுள்ளது:

“இந்திரனுக்கு ஒரு கொடும் பகைவன் இருந்தான். அவன் பெயர் விருத்திராசுரன் என்பது. இந்திரன் அவனைக் கொல்வதற்கு வழிதேடிக் கொண்டிருந்தான். விருத்திராசுரனோ தானே போரில் வெற்றி பெற புரோகிதர்களைக் கொண்டு யாகம் செய்வித்துக் கொண்டிருந்தான். யாக மந்திரத்தில் ‘இந்திரனைக் கொல்லப் போகின்றவர்களே’ என்ற சொற்களை புரோகிதர் தவறாகவே உச்சரித்து வந்ததால் அது ‘இந்திரனால் கொல்லப்படப் போகின்றவர்களே’ என்றே பொருள் தந்து கொண்டிருந்தது. இதன் விளைவாக விருத்திராசுரன் கொல்லப்ப்டடான்.”

புரோகிதர்கள் மந்திரத்தைத் தவறாக உச்சரித்தால் மிகப் பெருங் கேடுகள் விளையும் என்ற அச்சத்தைப் பரப்பவே இப்படிப்பட்ட கதைகள் பரப்பப்பட்டு வந்துள்ளன. ஆனால் இதன் மூலம் புரோகிதர்களுக்கு எவ்வகையிலும் தீங்கு விளையும் என்று எண்ணவே இடமில்லை. ஏனெனில் இவ்விதப் பிழைகளினால் புரோகிதர்களுக்கு எவ்வகையிலேனும் தீங்கு விளையும் என்று சட்டம் இருந்தால்தானே அவர்கள் அஞ்சியிருப்பார்கள்? தங்கள் எஜமானர் களுக்கு எவ்விதத் தீங்கும் ஏற்படக் கூடாது என்பதற்காக இவர்கள் எச்சரிக்கையோடு இருந்திருப் பார்கள் என்று எதிர்பார்த்திருக்க முடியாது. ஏனெனில் யாகத்தில் வெட்டப்பட்ட மிருகங்களைப் பங்கு போட்டுக் கொள்ளும்போதே சச்சரவிட்டு வந்த இவர்களிடம் அதனை எப்படி எதிர்பார்க்க முடியும்? இவர்கள் இப்படி சச்சரவிட்டு வந்தால்தான் ஒவ்வொருவருக்கு இவ்வளவு என்று ‘ரிஜிஸ்டர்’ செய்து வைக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது. ‘ஆஷ் வாலாபன் க்ஷத்ர சூத்ரம்’ இதனைக் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறது:

“யாகத்தில் கொல்லப்பட்ட மிருகங்களை எவ்விதம் பங்கு போட்டுக் கொள்ள வேண்டும் என்பதை இங்கே நாம் குறிப்பிடுகிறோம். நாக்கு உள்பட தாடைகள் இரண்டும் யாகத்தைத் தொடக்கி வைக்கிற புரோகிதனுக்குச் சொந்தம். கழுகு போன்ற வடிவமுடைய ஈரல் வேதபாராயணம் செய்யும் புரோகிதனுக்குச் சொந்தம். மிருகத்தின் இந்த பாகம் தேவபாகம் எனப்படும்.”

புரோகிதர்கள் இதனைத் தங்களது பரம்பரைத் தொழிலாக ஆக்கிக் கொண்டுவிட்டதோடு சிறுசிறு தவறுகளுக்கெல்லாம் பிராயச் சித்தம் செய்யும் முறையை ஏற்படுத்தி எஜமானர்களின் சொத்தைக் கறந்துவரவும் வழி செய்து கொண்டார்கள். புரோகிதர்களினால் திருத்த முடியாத தவறுகளே இல்லை என்ற நிலைமை ஏற்படுத்தப்பட்டவிட்டது. தலைமீதோ அல்லது கால்மீதோ பல்லி விழுந்து விட்டால் உடனே போய் மந்திரித்துக் கொண்டு வரவேண்டும். அதற்காக தட்சிணை செலுத்தி விட்டு வரவேண்டும் என்பன போன்ற விதிகள் ஏற்படுத்தப்பட்டன.

கண்முன் நிகழும் பாப காரியங்களோடு மட்டும் இவர்களுக்குத் திருப்தி ஏற்படவில்லை. கற்பனை யிலேயே பிறந்த பல்வேறு ஆபத்துகளுக்காகவும் சட்டங்கள் இயற்றப்பட்டன. “பிருகஸ்பதியின் தீய பார்வை பட்டுவிட்டது” அல்லது “இராகு மிகவும் கோபமாக இருக்கிறான்” என்றெல்லாம் கூறி, புரோகிதர்கள் ஜெபதபங்கள் செய்தால்தான் இவற்றினின்று தப்ப முடியும் என்ற நிலையினை இவர்கள் தோற்றுவித்துவிட்டார்கள்.

இது சம்பந்தமாக புரோகிதர்களுடைய திருவிளையாடல்களைப் பற்றிய பல கதைகள் உலவுகின்றன. ஓர் எஜமானனின் காலில் பூசணிக்காய் விழுந்து விட்டதாம். இதன் பலனை அறிவதற்காக அவர் புரோகிதரிடம் சென்றாராம். இந்த எஜமானரிடம் எருமைகள் இருந்தனவாம். புரோகி தருக்கு நீண்டகாலமாகவே இந்த எருமைகளின்மீது ஒரு கண் இருந்து வந்திருக்கிறது.அவர் ஏடுகளைப் புரட்டிப் பார்த்துவிட்டு, “காலில் பூசணி விழுந்து விட்டால், மிகவும் கெட்டது. குறைந்தது நூறு எருமை களையாவது தானம் செய்ய வேண்டும்” என்றாராம். அந்த அப்பாவி மனிதனும் ஒப்புக் கொண்டு யாகம் செய்வித்தாராம். இது தெரிந்தவுடன் இன்னொரு புரோகிதர் அங்கே வந்து “பாதே கூஷ்மாடம் பதனம், குதோ பூதம் குலக்ஷணம்?” (காலிலே பூசணி விழுந்தால் எப்படி கெட்ட அறிகுறி ஆகும்?) என்று அவரிடம் கேட்டாராம். அவரிடமிருந்து தப்பித்துக் கொள்ள முதல் புரோகிதர், “இது மகா முட்டாள் நடத்துகிற யாகம், இதற்காக தட்சிணை நூறு எருமைகள். நாமிருவரும் பாதிப் பாதியாகப் பங்கு போட்டுக் கொள்வோம், ஓ பண்டிதனே, இடையூறு செய்யாதே” என்று கூறினாராம்.

முதலில் பிராமணர்களின் தனியுடைமையாக இருந்து வந்த இந்தப் புரோகிதத் தொழில் பிறகு அவர்களது குலத் தொழிலாகவே ஆகிவிட்டது. புரோகிதன் மகன் புரோகிதனாகவே இருந்து வரத் தொடங்கினான். ஒவ்வொரு எஜமானனும் தனது புரோகிதனைவிட்டு இன்னொருவனை அமர்த்தக் கூடாது என்ற வழக்கம் ஏற்பட்டது. நல்லவனோ, பொல்லாதவனோ அவர் தன் புரோகிதனை வைத்துக் கொண்டுதான் சடங்குகளை நிகழ்த்த வேண்டும் என்ற நிலை பிறந்தது.

கவலையில்லாத வாழ்க்கை வசதி ஏற்படுத்தித் தருவதால் இன்று படிப்பற்ற தற்குறிகளெல்லாம் புரோகிதத் தொழில் நடத்தி வருகிறார்கள். உலக மக்களெல்லாம் மூடநம்பிக்கைகள் என்னும் விலங்குகளை அறுத்து எறிந்து முன்னேறி வரும் இந்த நாளில் இந்தியாவில் உள்ள அப்பாவி இந்து மக்கள் இந்தப் புரோகிதர்களின் தந்திர வலையிலிருந்து விடுபட முயற்சி செய்வார்களா?

(கட்டுரையாளர் : கங்கா சகாய் பிரேமி. பிறப்பால் ஒரு பார்ப்பன புரோகிதர் வடமொழியை ஆழ்ந்து கற்றவர்)