உச்சநீதிமன்றம் அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடம் எவருக்கு உரிமை உடையது என்பது குறித்து தீர்ப்பை வழங்க இருக்கிறது. தீர்ப்பு வருவதால் நாட்டில் சட்டம் ஒழுங்குப் பிரச்சினை உருவாகாமல் தடுப்பதற்கு முன்னேற்பாடுகள் நடக்கின்றன. தமிழக முதல்வரை அழைத்தும் ஆளுநர் பேசி இருக்கிறார்.

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் தீர்ப்புக்குப் பிறகு கொண்டாட்டங்கள் எதையும் நடத்த வேண்டாம் என்று சங்பரிவாரங்களுக்கு அறிவுறுத்தியிருக்கிறார். ஆர்.எஸ்.எஸ். தலைவர் நடத்திய இந்தக் கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமீத்ஷா உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள் பலரும் பங்கேற்றுள்ளனர்.

அயோத்திப் பிரச்சினையைப் பொறுத்தவரை அதன் கடந்தகால வரலாறுகள் ஓர் உண்மையை உணர்த்துகின்றன. நீதி - சட்டம் என்ற அமைப்புகளை முடக்கி ‘கும்பல் வன்முறைகளே’ தீர்மான சக்திகளாக செயல்பட்டிருக்கின்றன.

1949ஆம் ஆண்டு நள்ளிரவில் பாபர் மசூதி வளாகத்தில் அத்துமீறி நுழைந்து, இராமன், சீதை பொம்மைகளை மசூதிக்குள் போட்டு மசூதி சுவரில் இராமன் உருவத்தை படமாக வரைந்தார்கள். அப்போதே அத்துமீறி நுழைந்த குற்றத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இராமன் தானாக தனது பிறந்த இடத்தில் சுயம்புவாக தோன்றினான் என்று பரப்பிய கற்பனைக் கதையும் சட்ட மீறல்களும்தான் இறுதியில் ஏற்கப்பட்டன. வெற்றி பெற்றது கும்பல் வன்முறை.

அதைத் தொடர்ந்து மசூதியில் பிரச்சினைக்குரிய இடம் மூடப்பட்டது. அதை இந்துக்களின் வழிபாட்டுக்குத் திறந்து விட வேண்டும் என்று தொடர்ந்து விசுவ இந்து பரிஷத், கலவரங்கள் நடத்தியது. அதற்குப் பணிந்து 1989ஆம் ஆண்டு பூட்டப்பட்ட பகுதி திறந்து விடப்பட்டது. இப்போதும் சட்டம் பதுங்கியது. கும்பல் வன்முறையே வெற்றி பெற்றது. 

1992 டிசம்பரில் ‘கரசேவை’ செய்யப் போவதாக பா.ஜ.க. தலைவர் கூறினார்கள். உ.பி. முதல்வராக இருந்த கல்யாண் சிங், நீதிமன்றத்தில் மசூதிக்கு எந்த சேதமும் ஏற்படாமல், கரசேவை நடக்கும் என்று உறுதி அளித்தார். உறுதி மொழிகள் காற்றில் பறந்தன. அத்வானி முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்போடு, ‘கும்பல் வன்முறை’ தான் வெற்றி பெற்றது. மசூதி தரைமட்டமாக்கப்பட்டது. மசூதியை இடித்தவர்கள் மீது தொடரப்பட்ட வழக்கு 27 வருடங்களாக ஆமை வேகத்தில் நகர்கிறது. ஒருவர்கூட கைது செய்யப்படவில்லை. ஆனால் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் இராமன் கோயில் கட்டுவதற்கான நில உரிமை வழக்கை உச்சநீதிமன்றம் தீவிரமாக விசாரணை நடத்தியது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் நவம்பர் 17ஆம் தேதி ஓய்வு பெறப் போவதால் அதற்குள் வழக்கு விசாரணையை முடிக்க வேண்டும் என்று ‘கெடு’ நிர்ணயித்துக் கொண்டார்கள்.

விசாரணையின் 37ஆவது நாளில் இஸ்லாமியர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ராஜீவ் தவன் நீதிபதிகளிடம் ஒரு சந்தேகத்தை எழுப்பினார். “நீதிமன்றம் அடுக்கடுக்கான கேள்விகளை இஸ்லாமியர் தரப்பினரிடம் மட்டும் கேட்டுக் கொண்டே இருக்கிறது. நாங்களும் விளக்கம் தருகிறோம். ஆனால் எதிர்தரப்பில் நீதிமன்றம் இப்படி கேள்விகளை எழுப்புவதில்லையே?” என்று கேட்டார். உடனே எதிர் தரப்பு வழக்கறிஞர் குறுக்கிட்டு, “இப்படிப்பட்ட கேள்விகள் அவசியமற்றவை” என்று கூறினார். 

இப்போது தீர்ப்பு வரப் போகிறது. இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக தீர்ப்பு வந்தாலும், அங்கே மீண்டும் மசூதியை கட்ட விடுவார்களா அல்லது கும்பல் வன்முறையில் தடுத்து நிறுத்துவார்களா? என்ற கேள்வியும் எழுந்து நிற்கிறது. ‘பெரும்பான்மை இந்துக்கள்’ என்ற போலியான ‘மெஜாரிட்டி வாத’த்தை முன் வைத்து ‘கும்பல் கலாச்சாரமே’ இதுவரை வெற்றி பெற்று வந்திருப்பதுபோல இப்போதும் நடக்குமா? 

சட்டமும் நீதியும் அதன் கடமையை செயல்படுத்துமா? பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Pin It