அயோத்தியில் இராமர் கோயிலை இடித்து விட்டு பாபர் அந்த இடத்தில் மசூதி கட்டினாரா?

இல்லை என்கிறது உச்ச நீதிமன்றம்.

பாபர் மசூதிக்குள் 1949ஆம் ஆண்டு குழந்தை இராமர் சிலையைக் கொண்டுபோய் வைத்தது சரியா? சட்டப்படி சரியில்லை என்கிறது உச்ச நீதிமன்றம்.

babri masjid1992 திசம்பர் 6ஆம் நாள் பாஜக தலைவர் அத்வானி தலைமையிலான கரசேவகர்கள் பட்டப் பகலில் பாபர் மசூதியை இடித்துத் தரை மட்டமாக்கியது சரியா? இல்லை, அது சட்டப்புறம்பான செயல் என்கிறது உச்ச நீதிமன்றம்!

சென்ற நவம்பர் 9ஆம் நாள் இந்திய உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதியர் கொண்ட அரசமைப்புச் சட்ட ஆயம் பாபர் மசூதி வழக்கில் அளித்துள்ள தீர்ப்பு மேற்கண்ட உண்மைகளையெல்லாம் சொல்லி விட்டு இறுதியில் பாபர் மசூதி இடம் பெற்றிருந்த 2.77 ஏக்கர் நிலம் குழந்தை இராமருக்கே சொந்தம் என்று முடிவு செய்கிறது. அங்கு அரசே இராமர் கோயில் கட்டிக் கொடுக்க ஆணையிடுகிறது. ஏனென்றால் அது இந்துக்களின் நம்பிக்கையாம்! அப்படியானால் முசுலிம்களின் நம்பிக்கை? அவர்கள் மசூதி கட்டிக் கொள்ளத் தனியாக ஐந்து ஏக்கர் நிலம் கொடுக்க வேண்டுமாம்!

இது சட்டப்படியான தீர்ப்புதானா? இந்த நாடு மதச் சார்பற்ற நாடுதானா? இது நீதிமன்றமா? இந்துத்துவ ஆர்.எஸ்.எஸ் கட்டப் பஞ்சாயத்தா? பாபர் மசூதியை இடித்தது குற்றம் என்று சொல்லி விட்டு அந்தக் குற்றவாளிகளுக்கு ஆதரவாகவும், ஒரு குற்றமும் செய்யாத முஸ்லிம்களைத் தண்டிக்கும் வகையிலும் தீர்ப்பு வழங்க ஒரு நீதிமன்றம் தேவையா?

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பில் நீதி நியாயம் இல்லை என்று பல முன்னாள் நீதிபதிகளும் சட்ட அறிஞர்களும் கருத்துக் கூறியுள்ளனர்.

இந்தத் தீர்ப்பு சிறுபான்மையினரை வஞ்சித்துள்ள தீர்ப்பு மட்டுமல்ல. சமயச் சார்பின்மையிலும் சட்டத்தின் ஆட்சியிலும் நம்பிக்கை வைத்துள்ள அனைவருக்கும் அதிர்ச்சியளித்துள்ள தீர்ப்புமாகும்.

இந்தத் தீர்ப்பைச் சட்டப்படி மீளாய்வு செய்து நீதி வழங்கக் குரல் கொடுப்போம், வாரீர்!

- தியாகு

Pin It