பொம்பளை பொம்பளையா இருக்கணும்’, ‘பொம்பளை மாதிரியா நடந்துக்குற?’, ‘பொம்பளைன்னா என்னனு தெரியுமா உனக்கு?’ - இப்படிப் பெண் என்கிற சொல்லே ஒரு குறியீடாகப் பிரயோகிக்கப்படுகிறது. எப்போதெல்லாம் ஒரு பெண் ‘பெண்’ணாக நடந்து கொள்ளும்படி நிர்பந்திக்கப்படுகிறார்? நிமிர்ந்த நன்னடை, நேர்கொண்ட பார்வை, யார்க்கும் அஞ்சாத நெறிகளைப் பெண்கள் வென்றெடுக்கும்போதெல்லாம் அது அவர்களுக்கான பண்புகள் அல்ல எனச் சுட்டிக்காட்டப்படுகிறது. ஆனால், ஆண்களிடம் இத்தகைய பண்புகள் காணப்படும்போதெல்லாம் அவர்கள் போற்றிப் புகழப்படுகிறார்கள்.

எப்படிச் செய்துகாட்டுவது?

நம் சமூகச் சூழலில் மட்டுமல்ல; உலகம் முழுவதும் இதே நிலைமைதான் என்பதை நிரூபித்திருக்கிறது ஓர் அமெரிக்க விளம்பரப் படம். பிரபல அமெரிக்க நிறுவனமான பி அண்டு ஜி (P&G) தங்களுடைய தயாரிப்பான ‘ஆல்வேஸ்’ (ALWAYS) சானிட்டரி நாப்கின்னை விளம்பரப்படுத்த ஆவணப்பட பாணியில் குறும்படம் ஒன்றைத் தயாரித்திருக்கிறது. ‘டூ திங்க்ஸ் லைக் எ கேர்ள்’ (Do Things Like A Girl) என்கிற இந்தப் படத்தில் சில விளம்பர மாடலிங் பெண்கள், சிறுமிகள், சிறுவர்கள், ஆண்கள் அழைக்கப்படு கிறார்கள். எல்லோரிடமும் “பெண்ணைப் போலச் செய்துகாட்டு எனச் சொன்னால் அதற்கு என்ன அர்த்தம்?” என்கிற கேள்வியை அடிப்படையாக வைத்துப் பெண்ணைப் போல ஓடு, பெண்ணைப் போலச் சண்டையிடு, பெண்ணைப் போல ஒரு பொருளைத் தூக்கி எறி எனச் சொல்லப்படுகிறது.

திணிக்கப்படும் ‘பெண்மை’

இந்தச் செயல்களை இளம் பெண்கள் வலுவில்லாமல், நளினமாக, சொல்லப் போனால் பலவீனமாகச் செய்து காட்டு கிறார்கள். படப்பிடிப்பில் பங்குபெறும் ஓர் ஆணும் சிறுவனும்கூட முகத்தில் கேலியும் கிண்டலுமாகப் பெண்களைப் போல இந்தக் காரியங்களை நடித்துக் காட்டு கிறார்கள். ஆனால், பத்து வயதுக்கு உட்பட்ட சிறுமிகளிடம் “பெண்ணைப் போல ஆடு- ஓடு-சண்டையிடு” எனச் சொன்னதும் தங்களுக்குள் இருக்கும் அத்தனை ஆற்றலையும் திரட்டி, குழந்தை களுக்கே உரிய சுறுசுறுப்போடு அச்ச மின்றி கம்பீரமாகச் செய்து காட்டு கிறார்கள்.

இதில் கவனிக்க வேண்டியது இந்த விளம்பரப் படத்தில் நடிக்க வந்த சிறுவனோடும் சிறுமிகளோடும் படத்தின் பெண் இயக்குநர் நடத்தும் உரையாடல். “பெண்ணைப் போல ஓடு எனச் சொன்னதும் நீ என்ன நினைத்தாய்?” எனக் கேட்டதும், “உன்னால் முடிந்தவரை வேகமாக ஓடு என்கிறீர்கள் என நினைத்தேன்” என்கிறார் ஒரு சிறுமி.

“இப்போது நடித்துக் காட்டும்போது உன்னுடைய அக்காவை அவமதித்தாய் அல்லவா?” என பெண்ணைப் போல நடித்துக்காட்டிய சிறுவனிடம் கேட்டதும், “ஆமாம் சிறுமிகளை அவமதித் தேன்…ஆனால் என் அக்காவை அல்ல” என பதிலளிக்கிறான். ஆக, வளரிளம் பருவம்வரை பெண் குழந்தைகள் இயல்பாக நினைத்ததைத் தனித்துவத் தோடு செய்கிறார்கள். ஆனால், பருவமடையும்போது பெண்ணின் தன்னம்பிக்கை, உடல் பலம், மன பலம் கேள்விக்குள்ளாக்கப்படுகின்றன.

அதைத் தொடர்ந்து பெண்மை என்பது மென்மை, பலவீனம், பயம், நாணம் என அடுக்கடுக்காகப் பல விஷயங்கள் செயற்கையாகத் திணிக்கப்படுகின்றன. ஒரு கட்டத்தில் தாழ்வுமனப்பான்மை உண்டாக்கப்படுகிறது. இத்தகைய கற்பிதங்களைத் தகர்த்தெறிந்து, ‘பெண்ணைப் போல’ என்றதும் ‘நானாக நான் இருப்பேன்’ என உரக்கச் சொல் லுங்கள் என்கிறது இந்த விளம்பரப்படம்.

Pin It