பெண்ணுரிமை பேசிக் கொண்டிருக்கிறான்
பாரதி
பின்புலத்தில்
புடவையை தோளைச்சுற்றி
இறுக்கிக் கொள்கிறாள் செல்லம்மா.

o

நீ இருந்தும்
தயக்கமின்றி
யாரிடமோ சொன்ன ரகசியங்களை
உன் நண்பர்களிடமிருந்து தெரிந்து கொண்டபின்
உன்னுடனான பொழுதுகளில்
வார்த்தைகள் அற்றுப் போகிறேன்.

o

என்னைப்பற்றி நிறைய
சொல்லி இருப்பதாய் சொன்னான்
நண்பனின் நண்பன்.
என்னிடம் எதுவும் சொல்லவில்லையே.
என்னவாய் இருக்கும்?

o

தவறான திருப்பத்தில் வந்து
முறைத்து சென்றவனை
புத்தாண்டில் இறுக்கி அணைத்து
வாழ்த்து சொன்னதாய் ஞாபகம்.

o

இறந்து போனவனுக்காய்
எல்லோரும் மெளனமாய் நின்றனர்.
ஒரு குழந்தை மட்டும்தான்
வாய்விட்டு அழுதது

- லதாமகன்

Pin It