அறிவுசார்ந்த கல்வியை மறுத்து, தொழில் சார்ந்த பயிற்சி யாளராக மட்டும் இளைஞர்களை மாற்றுவதே மோடி அரசின் கல்விக் கொள்கை! இத்தகைய கல்வி முறையைக் கண்டித்து, 1954ஆம் ஆண்டிலேயே பெரியார் எழுதிய கட்டுரை இது.

நம் நாட்டு மாணவர்கள் கல்விப் படிப்பினால் எந்தவிதமான பகுத்தறிவையும் எதையும் ஆராய்ந்து அறியும்படியான தன்மையையும் அடைய முடிவதில்லை; அவர்கள் படிக்கின்ற படிப்பினால் பிற்கால வாழ்க்கையைத் தரித்திரமின்றி நடத்த வேண்டும். அதற்காக, ஏதாவது உத்தியோகத் துறையிலோ, வேறு பணம் சம்பாதிக்கின்ற வழியிலோ பயன்பட வேண்டும் என்பதற்காகவே படிக்கிறார்கள். பெற்றோர்களும் தங்களுடைய குழந்தைக்கு அறிவு வளர வேண்டும் என்ற காரணத்திற்காகப் பள்ளிக்கு அனுப்புவதில்லை; படித்துப் பட்டம் பெற்று வந்ததும் ஜீவனத்துக்கு வேண்டிய முறையில் எங்காவது உத்யோகம் கிடைக்குமா என்ற நோக்கத்தோடேயே பெற்றோர்கள் முயற்சிக்கிறார்கள். இவர்களும் இதற்குத்தான் முயற்சிக் கிறார்கள் என்றால், மாணவர்களும் அந்த நோக்கத்தைத் தான் எதிர்பார்த்துத் தம்முடைய பள்ளிப் படிப்பைக் கற்றுப் பட்டம் பெற வேண்டும் என்ற ஒரே எண்ணம் கொண்டவர்களாக இருக்கிறார்கள்.

ஆகையால், அவர்கள் பள்ளிக்கூடங்களில் ஆசிரியர்கள் கூறுகின்ற ஒவ்வொன்றையும் அப்படியே மனப்பாடம் செய்து அதையே பிறகு அவர்கள் கேட்கும்பொழுது சொல்லுவதாலும், எழுதுவதாலும் தேர்வில் வெற்றி பெறுகிறார்கள். இந்த முறையில் ஒரு மாணவன் எவ்வித உயர்ந்த பட்டத்தை அடைந்த படிப்பாளி என்று கூறப்பட்டாலும், அவனுக்குப் போதிய பொது அறிவும், உலகியலில் தகுந்த ஞானமும் அடைந்தவனாகக் கருதப்பட மாட்டான். ஏனெனில் அம் மாணவன் தனது புத்தகத்தைப் படித்து, அதில் உண்டாகும் சந்தேகங்களையும் மற்றும் அறிவுக்குப் பொருத்த மற்றதான செய்திகளையும், தனது ஆசிரியர்களிடம், ஏன்? என்ன? எதற்கு? எப்படி? என்ற கேள்விகளைக் கேட்டுத் தெரிந்து கொள்வதில்லை. அப்படிக் கேட்டாலும் அம் மாணவன் வகுப்பில் மிகவும் அதிகப் பிரசங்கியாக நடந்து கொள்கிறான் என்பதாக ஆகிவிடும். ஆகவே, ஆசிரியர் சொல்லுவதைத்தான் கேட்க வேண்டும்; புத்தகத்தி லுள்ளதைத் தான் மனப்பாடம் செய்து திரும்பவும் ஒப்புவிக்க வேண்டும் என்பது நம் நாட்டுக் கல்வி முறை. இக்கல்வி முறையினால் மாணவர்களுக்கு அறிவு புகட்டப் படுவதால் அவர்கள் பிற்காலப் பழக்க வழக்கங்களுக்கும், நல்லொழுக்கத்திற்கும் தகுதியுடையவர்களாக ஆக மாட்டார்கள்.

ஆனால், பலர் பலவிதமாக அறிவு, ஞானம் என்பதைக் கருதுகிறார்கள். பெரும்பாலோர் ஞானம் என்பதும், அறிவு என்பதும் கடவுளைக் காண்கிறதும், மோட்சத்தை அடைவதும்தான் என்று நினைக்கிறார்கள். இந்த எண்ணம் குழந்தையிலிருந்தே நம் பிள்ளைகளுக்கு ஊட்டப்பட்டு வருவதால், மேன்மேலும் ஒரு மாணவன் தெளிவற்றவனாகவே ஆக்கப்படுகிறான்.பொதுவாகவே மாணவன் அதற்கு இடம் கொடுக்காமல் தன்னை இன்னான் என்றுணர்ந்து நம்பும் எதையும் அறிந்து கொள்ளுகின்றதும், தெரியாதவைகளைக் கேட்டுத் தெரிந்து கொள்கிறதுமான மாணவப் பருவம் என்பதை உணர வேண்டும். இவ்வித எண்ணமுள்ள மாணவன் தான் பிற்காலத்தில் எதையும் அறிந்த அறிவாளியாக விளங்க முடியும்.

நன்னடத்தை என்பது என்னவென்று பார்த்தால் ஒரு மனிதனிடம் நீங்கள் என்ன எதிர்பார்க்கிறீர்களோ, நீங்கள் மகிழ்ச்சியடையவும், திருப்தியடையவும் அவன் என்ன செய்ய வேண்டுமோ, அதே முறையில் நீங்களும் பிறரிடம் பழகும்போது அவர்களுக்கு மகிழ்ச்சியையும் திருப்தியையும் உண்டாக்கும்படியான வழியில் நடந்து கொள்வதாகும். உங்களிடம் ஒருவர் நடந்து கொள்வதிலிருந்து உங்களுக்குக் கஷ்டத்தையும், மனக் கலக்கத்தையும் அதிருப்தியையும் உண்டாக்குகிற முறைகள் எவை எவையென்று தோன்றுகிறதோ, அவையவைகளை விட்டுவிட வேண்டும். இது ஒரு சுலபமான கருத்து. இதை யாவரும் கைக்கொள்ளுவதால் நல்லறிவும், பொது அறிவும் அடைந்தவர்களாகலாம்.

இப்பழக்கங்களை மாணவப் பருவம் முதற்கொண்டே பழகினால் சுலபமாகக் கடைபிடிக்கவும் நீடித்திருக்கவும் ஏதுவாகும்.

பெரியார், ‘விடுதலை’ 12.11.1954

Pin It