இலக்கியம் என்பது காலக் கண்ணாடி என்ற கருத்தாடல் ஓர் எல்லைக்குட்பட்ட உண்மை. சங்க இலக்கியப் பாடல்கள் தமக்குள் பல்வகைப்பட்ட சமூகங்களைப் பொதிந்து வைத்துள்ளதாக உள்ளது. பல்துறை நோக்கோடு அணுகும்போது அவற்றை மீட்டுருவாக்கம் செய்ய முடியும். அந்த வகையில் பண்டைத் தமிழரின் வாழ்வியல் சூழலை எடுத்துக் காட்டும் விதமாக ‘சங்க இலக்கியமும் பண்பாட்டுச் சூழலியமும்’ என்னும் நூல் அமைந்துள்ளது.

இருளில் பயந்து, மழையில் நனைந்து, வெயிலில் காய்ந்து, வேட்டையாடி வாழ்ந்த மனிதனின் பயம் கலந்த வழிபாடே ஆவி வழிபாடாக, குலக்குறி வழிபாடாக உருமாற்றம் பெற்றதை மார்க்சிய நெறி நின்று ஆ.தனஞ்செயன் விளக்கியுள்ளார்.

இயற்கையோடு இணைந்து தன் தேவைகளை நிறைவு செய்து கொண்டு வாழ்ந்த சமூகம், தான் சார்ந்திருந்த சூழ்நிலை மண்டலத்தை எவ்வாறு கையாண்டது என்பது குறித்து விவரிக்கும்போது குலம், அது சார்ந்த நம்பிக்கை, அடையாளம், அதன் வழி உற்பத்திப் பொருள், வாழ்க்கை நிலை என்ப வற்றைப் பெற்று நிலைகொண்டிருந்தது. அந் நிலைமையில் இயற்கை உலகும் சமூக உலகும் பிரிக்க முடியாத இணைத் தொடர்பு உடையதாக இருப்பதைப் புன்னை மரத்தை சகோதரியாக உறவு முறை கொண்டாடும் பாடலைச் சுட்டி ஆ.தனஞ்செயன் தெளிவுபடுத்துகிறார்.

தொல்காப்பியத்தின் ஆதாரத் தன்மை கேள்விக்கு அப்பாற்பட்டது என்னும் ஒருவித தொனியோடு ஒருவகைப் புனிதப் பார்வை இயல்பாகவோ, மிகை அழுத்தத்துடனோ வெளிப்படுவது வழக்கம், இந்த முன்விளக்கத்தோடு தமிழரின் வழிபாட்டு மரபில் தெய்வங்கள் குறித்த செய்திகளைத் தொல்காப்பியர் வழிநின்று விளக்குகிறார்.

சேயோன், மாயோன், வேந்தன், வருணன் என்னும் நால்வகைத் தெய்வங்களும் பிற்கால வைதீகத் தாக்கம் பெற்றவை என்பது குறித்தும், திரிந்த நிலப் பகுதியான பாலைக்குத் தெய்வமாகச் சுட்டப்பட்ட கொற்றவை வாழும் தெய்வ மரபாக அமைந்தது குறித்தும் நீண்ட விளக்கம் தருகிறார். இதில் உரையாசிரியர்கள் வலிந்து பொருள் கொண்டது பற்றியும், அதற்கான காரணத்தையும் விளக்கிக் காட்டுகிறார். மேலும் இறைக்கோட்பாடு குறித்த அறிவியல் படிநிலை விளக்கமாக ஆசிரியர் முன் வைக்கும் உதாரணங்கள் நோக்கத்தக்கதாக உள்ளது. இறை, தெய்வம் என்னும் சொற்கள் இலக்கியங்களில் எப்பொருளில் எடுத்தாளப்பட்டுள்ளன என்பதை விளக்குமிடத்து “சங்க காலத்திய சமுதாயத்தில் முழு முதல் தெய்வம் எதனையும் கடவுள் என்னும் சொல் தனித்துக் குறிப்பிடவில்லை. இறைவன் என்னும் சொல்லும் பல பொருட்களில் குறிக்கப் பட்டுள்ளன” ஆ.தனஞ்செயன் கூறுவதை ஆழ்ந்து நோக்க வேண்டும்.

தொல்லியலின் வகைப்பாடுகள் குறித்த விளக்க மாகவும் அதன் தேவைகளை உணர்த்தும்விதமாகவும் தொல்லியலும் பண்பாட்டு நிலவியலும் என்னும் கட்டுரை அமைந்துள்ளது. கிடைக்கும் தொல் பொருள்களின் எச்சங்களும் சங்க இலக்கியத்தில் காணப்படும் எழுத்துவழித் தரவுகளும் ஒப்பிட்டு நோக்கி ஒரு சமூகத்தை / மக்கள் வாழ்வியலை மீட்டுருவாக்க முடியும். அந்த வகையில் பூம்புகார் நகரத்தை நம் கண்முன்னே அறிமுகப்படுத்தி விளக்கிச் செல்கிறார் ஆசிரியர்.

காவிரிப்பூம்பட்டினத்தின் காட்சியமைப்பு வருணிக்கப்படும் சூழல் அம்மக்களின் குடியிருப்பு, கடலாடுதல், மதுவருந்திக்களித்திருத்தல், சமய வழி பாட்டுச் செயற்பாடுகள், விளையாட்டில் ஈடுபடுதல் (ப.113) என்பனவற்றைக் காட்சிப்படுத்தும் உருத்திரங் கண்ணாரின் செயல்பாட்டைக் குறிப்பிட்டு, சம காலத்தில் பரதவர் குடியிருப்பு, அங்கு நிலவும் சூழல் எத்தன்மையதாக உள்ளது என்பதை ஆசிரியர் ஒப்பிட்டுக் கூறுவது சிறப்பாக உள்ளது.

எழுத்திலக்கியம் பல நிலைகளில் நாட்டார் இலக்கியத்திற்குக் கடன்பட்டுள்ளது (ப.153). நாட்டுப் புறப்பாடல்களில், வாய்மொழிப் பாடல்களில் நிகழ்வுகளைத் தனக்குள் பொதிந்து வைத்திருக்கும் தன்மையை அது உணர்த்தும் தகவல்வழி அறிய முடியும். இதுவே எழுத்து மரபில் கவிதையாகப் பரிணமித்தது. வாய்மொழி மரபுக்கும் எழுத்து மரபுக்கும் இடையே ஒரு தொடர்பு இருந்துள்ளது எனக் கூறும் ஆசிரியர், புறநானூற்றில் கதைக் குறிப்புகள் அடங்கிய பாடல்களைச் சுட்டி விளக்கம் தருகிறார். நாட்டார் வழக்காற்றில் வழங்கும் கதைகளுக்கும், இலக்கியத் தரவுகள் வழங்கும் கதைகளுக்கும் உள்ள சில முரண்பாடுகள், ஒப்புமைகள் ஆகியவை சிறப்பாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன.

‘பழமரபுக்கதை என்பது அடிப்படையில் ஒரு வரலாற்றுத் தன்மை உடைய வழக்காறாகும்’ என்னும் மேற்கோளைச் சுட்டி, அதன் வழி பழமரபுக் கதை களின் இயல்புகளை விளக்குவது நோக்கத்தக்கது. பிற்காலத்தில் பழமரபுக் கதைகளோடு மீவியற் கூறுகள் இணைத்து வழங்கப்பட்டன என்பதைக் குறிப்பிட்டு, (புறம்.143ல்) புறாவைத் துரத்தியது பருந்துதான் என்ற போதும் வைதிக, சிவ புராணங்கள் வேடனே புறாவைத் துரத்தினான் என்று மாறு பாட்டு கூறிய நிலையை விளக்குகிறார். மேலும் அபிதான சிந்தாமணி விளக்கத்தில் புனைந்துரைக்கப் பட்ட விளக்கம் அளிக்கப்பட்டுள்ளதையும் எடுத்துக் காட்டும் நிலையும் நோக்கத்தக்கது. இதன்வழி பழமரபுக் கதைகளின் அரசியலாக்கம் குறித்து அறிய வாய்ப்பு உள்ளது.

சமூகத்தில் தனக்கான இருப்பை நிலைப்படுத்த பழமரபுக் கதைகளுக்கு ஒருவித புராணத் தன்மை சமய நிறுவனங்களால் கற்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையை ஆராயும் போது எந்தக் காலச் சூழலில் மாற்றம் பெற்றது என்பதை அறிய வழிகோலும் விதமாக ஒரு கட்டுரை அமைந்துள்ளது.

சடங்குகள், வழிபாடுகள் குறித்த ஆய்வுகளை மேற்கொள்ள இந்நூலில் உள்ள கட்டுரைகள் துணை புரிவதாக அமைந்துள்ளன. இதன்வழி சங்க இலக்கியத்தை அணுகும்போது அக்கால மக்களின் வாழ்க்கை நிலையைப் பலவகைத் தரவுகளோடு ஒப்பிட்டு, இனக்குழு மக்களின் நடத்தைகள் எவ்வாறு மாறி வழிவழியாக ஒரு நவீன நிலையை அடைந் துள்ளன என்பதையும், எதன் அடிப்படையில் அத்தகைய மாற்றங்கள் அடைந்துள்ளன என்பதையும் முழுமையாகப் புரிந்துகொள்வதற்கு இந்நூல் துணைபுரிகிறது.

Pin It