அகநானூற்றுத் தொகுப்பிலுள்ள ஒரு பாடலை (71) இயற்றிய புலவர் பெயர் ‘அந்தியிளங்கீரனார்’ என அமைந்துள்ளது. இளங்கீரனார் என்பது அவருடைய இயற்பெயராக இருந்திருக்கக்கூடும். முன்னொட்டாக ‘அந்தி’ எனும் சொல் இடப்பெற்றிருக்க வேண்டும். இந்த அந்தி எனும் சொல், இன்றைய (கிராமத்து) பேச்சு வழக்கில் ‘அந்தி வேளை’, ‘அந்திப் பொழுது’, ‘அந்தி நேரம்’ என ‘வேளை’, ‘பொழுது’, ‘நேரம்’ என்பனவற்றைச் சுட்டி வழங்குகின்றன. ‘அந்திமழை அழுதாலும் விடாது’ என்ற சொல் வழக்கும் இங்கு உண்டு.

அந்தி வரும் நேரம்...; அந்தி மழை பொழிகிறது...; அந்தி நேரத் தென்றல் காற்று...; அந்தி மயங்குற நேரத்துல...; அந்தியில வானம்... என்று ‘அந்தி’ எனும் சொல்லை முதலாகக் கொண்ட பல தமிழ்த் திரைப்படப் பாடல்கள் உண்டு. இந்தத் திரைப்படப் பாடல்களிலும் மேற்சுட்டிய கிராமத்துப் பேச்சு வழக்கிலும் வழங்கு கின்ற ‘அந்தி’ எனும் சொல் ‘மாலை’ப் பொழுதைக் குறிப்பதாக வழங்குவது தெரிகின்றது.

புறநானூற்றுப் பாடலொன்றில் வரும் ‘காலை அந்தியும் மாலை அந்தியும்’ (புறம். 34) எனும் பாடலடி, மேல்சுட்டிய தொடர்களையெல்லாம் கேள்விக்கு உட்படுத்துகின்றன. நாம் அனைவரும் நன்கறிந்த கீழ்வரும் புறநானூற்றுப் பாடலில் அந்தப் பாடலடி பயின்றுவருகின்றது.

‘ஆன் முலை அறுத்த அறனிலோர்க்கும்

மாண் இழை மகளிர் கருச் சிதைத்தோர்க்கும்

பார்ப்பார் தப்பிய கொடுமையோர்க்கும்

வருவாய் மருங்கில் கழுவாயும் உள’ என

நிலம் புடை பெயர்வது ஆயினும் ஒருவன்

செய்தி கொன்றார்க்கு உய்தி இல்என்

அறம் பாடின்றே - ஆயிழை கணவ!

‘காலை அந்தியும், மாலை அந்தியும்

புறவுக் கரு அன்ன புன் புல வரகின்

பால் பெய் புன்கம் தேனொடு மயக்கி,

குறு முயற் கொழுஞ் சூடு கிழித்த ஒக்கலொடு,

இரத்தி நீடிய அகன் தலை மன்றத்து,

கரப்பு இல் உள்ளமொடு வேண்டுமொழி பயிற்றி,

அமலைக் கொழுஞ் சோறு ஆர்ந்த பாணர்க்கு

அகலாச் செல்வம் முழுவதும் செய்தோன்,

எம் கோன் வளவன் வாழ்க!’என்று, நின்

பீடு கெழு நோன் தாள் பாடேன் ஆயின்,

படுபு அறியலனே, பல் கதிர்ச் செல்வன்;

யானோ தஞ்சம்; பெரும! இவ் வுலகத்து,

சான்றோர் செய்த நன்று உண்டாயின்,

இமயத்து ஈண்டி, இன் குரல் பயிற்றி,

கொண்டல் மாமழை பொழிந்த

நுண் பல் துளியினும் வாழிய, பலவே!     (புறம். 34)

‘இயன்மொழி’ எனும் புறப்பாட்டுத் துறையில் அமைந்த இந்தப் பாடலைச் சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவனை ‘ஆலத்தூர் கிழார்’ எனும் புலவர் பாடிய வாழ்த்தியல் பாடலாகும்.

மன்னன் வளவனின் இயல்பை வியந்து பாராட்டும் இப்பாடலின் பொருள் “ஆயிழையின் கணவ! பசுவின் பால் மடியினை அறுத்தும், மங்கல மகளிர் கருவினைச் சிதைத்தும், அறிவு தந்த ஆசானையே பழித்துக் கொடுமை செய்தவர்க்கும் அவர்கள் பிழை செய்த மையால் உண்டான தீவினையைப் போக்கக்கூடிய வழிகள் உண்டு. ஆனால், ‘உலகமே தலைகீழாகப் போனாலும் ஒருவர் நன்றியைச் சிதைத்தவர்க்குத் தீவினையிலிருந்து மீள்வதற்கு வழியே கிடையாது’ என்று அறநூல்கள் கூறுகின்றன.

காலைப் பொழுதிலும் மாலைப் பொழுதிலும் புறாக்கருப் போன்ற புன்செய் வரகினைப் பால்கலந்து சமைத்துத் தேனுடன் கலந்தும், கொழுத்த முயலின் சூடான இறைச்சியைச் சேர்த்தும் தின்பர் என் சுற்றத்தார். அவரோடு, இலவமரம் ஓங்கி வளர்ந்துள்ள பரந்த மன்றத்தில், மறைக்காத உள்ளத்துடன் உள்ளம் விரும்பும் மொழிகளைப் பேசிப்பேசிப் பெருந்திரளாகிய கொழுத்த சோற்றினை உண்டு மகிழ்வர் என்போன்ற பாணர்கள். இவர்களுக்கு அழியாத செல்வமெல்லாவற்றையும் கிடைக்குமாறு செய்தவன் எங்கள் கோமானாகிய வளவன் நீயே யன்றோ!. ‘வாழ்க’ என்று உன் பெருமை மிகுந்த வலிய திருவடிகளைப் பாடாமல் இருப்பே னாயின், சூரியன் தோன்றுவதை அறிமாமல் போவேனாகுவேன்.

பெருமானே! நான் மிகவும் எளியவன்! இந்த உலகத்திலே சான்றோர் செய்த நன்மைகள் இருக்குமானால், இமயமலையில் திரண்டு, இனிய இடியோசையைச் செய்து மேகங்கள் பொழியும் நுண்ணிய மழைத் துளிகளினும் மேலாகப் பல ஆண்டுகள் நீ வாழ்வாயாக!” என்பதாகும்.

‘காலைப் பொழுதிலும் மாலைப் பொழுதிலும் புறாக் கருவைப் போன்ற புன்செய் வரகினைப் பால் கலந்து சமைத்துத் தேனுடன் கலந்தும், கொழுத்த முயலின் சூடான இறைச்சியைச் சேர்த்தும் பாணர்கள் தின்பர்’ என்பதனால் ‘அந்தி’ எனும் சொல் இங்கு மாலை நேரத்தை மட்டும் குறித்து நிற்காமல் பொதுவாக நேரத்தினைக் குறித்து நிற்பதாகப் பயின்று வந்திருப்பது தெரிகின்றது. பத்துப்பாட்டுள் ஒன்றான

பொருநராற்றுப் படையில்,

வருந்துநாய் நாவின், பெருந்தகு சீறடி

அரக்கு உருக்கன்ன செந்நிலன் ஒதுங்கலின்

பரற்பகை உழந்த நோயடு சிவணி

மரல்பழுத் தன்ன மறுகுநீர் மொக்குள்

நன்பகல் அந்தி நடைஇடை விலங்கலின்

பெடைமயில் உருவின் பெருந்தகு பாடினி

(பொருந. 42 - 47)

எனவரும் பாடலடிகளின் இடையில் வரும் ‘நன்பகல் அந்தி’ எனும் சொல்லாடலும் இன்றைய வழக்கிலுள்ள பொருள் ஒற்றைத் தன்மையில் மட்டும் அமைந் துள்ளதைக் காட்டுகின்றது.

பாடினியை வருணிக்கும் வகையில் வரும் இப்பாடலடிகள், ‘ஓடியிளைத்த நாயினது நாக்குப் போன்ற சிவந்த சிறிய அடிகளில், அரக்கு உருக்கினாற் போன்ற சிவந்த செந்நிலத்தில் நடப்பதனால் வெம்பரற் கற்கள் வருத்த, பழம் போன்று சிவந்த கொப்புளங்கள் தோன்றும் என்பதனால் உச்சி வேளையில் (நன்பகல் அந்தியில்) நடத்தலைத் தவிர்த்தாள் மயில் போலும் சாயலையுடைய கல்விப் பெருமைமிக்க பாடினி’ எனும் பொருளைத் தருகின்றன.

‘நன்பகல் அந்தி’ என்பது ‘உச்சி வேளை’ என்ற பொருளிலேயே இங்குப் பயின்று வருகின்றது. இங்கும் ‘அந்தி’ என்பது மாலை நேரத்தைக் குறிக்காமல் பொதுவாக ‘வேளை’ (நேரம்) என்பதையே குறித்து நிற்கின்றது.

சேரமான் பெருஞ்சோற்று உதியன் சேரலாதனை ஐம்பெரும் பூதங்களின் ஆற்றல்கள் உடையவனாய் உவமித்துப் பாராட்டி, வாழ்த்தும் வகையில் முரஞ்சியூர் முடிநாகராயர் பாடிய புறநானூற்றுப் பாடலொன்றில் பயின்று வரும் ‘அந்தி அந்தணர்’ என்ற சொல்லாடல் நம் சிந்தனையைப் புதுவிதமாகக் கிளப்புகின்றது. அச்சொல் பயின்றுவரும் பாடலடிகள் இவ்வாறு வருகின்றன:

... .... .... .... ... .... அடுக்கத்து,

சிறு தலை நவ்விப் பெருங் கண் மாப் பிணை,

அந்தி அந்தணர் அருங்கடன் இறுக்கும்

முத் தீ விளக்கின், துஞ்சும்

பொற் கோட்டு இமயமும் பொதியமும் போன்றே!

(புறம். 2: 20 - 25)

“பக்க மலையிலே சிறிய தலைகளையுடைய குட்டி களுடன், பெரிய கண்களையுடைய மான் பிணைகள், அந்திக் காலத்து, செய்தற்கரிய கடனாகிய ஆவுதிகளைச் செய்யும் அந்தணர்களின் முத்தீயாகிய விளக்கொளியில் துயிலும், அவ்வாறு அம்மான்கள் துயிலுதற்கு இடமான, பொற்சிகரங்களையுடைய நிலைத்த இமய மலையும் பொதிய மலையும் போன்று நீ வாழ்வாயாக!” என்று இப்பாடடிகளுக்குப் பழைய உரை பொருள் தருகின்றது. அகநானூற்றில் வரும் ‘அந்திக் கோவலர்’ என்ற சொல்லாடலும் இங்கு எண்ணத்தக்கதாய் உள்ளது.

போர் கருதித் தலைவியைப் பிரிந்து சென்ற தலைமகன், தன் தேர்ப்பாகனிடம், பகைவர் நம்மைப் பணியப் போர் நின்றதால் பிரிவுத் துன்பம் தீரத் தேரை விரைந்து செலுத்துக என்று கூறும் அமைப்பில், மதுரை அறுவைவாணிகன் இளவேட்டனார் எனும் புலவர் பாடிய ஒரு அகநானூற்றுப் பாடலில் அந்தச் சொல் லாட்சி வருகின்றது. அப்பாடலடிகள்

... .... ..... ..... .... மாலை

அந்திக் கோவலர் அம்பணை இமிழ்இசை

அரமிய வியலகத்து இயம்பும்

நிரைநிலை ஞாயில் நெடுமதில் ஊரே

(அகம்.124: 13 -16)

என வருகின்றன. இங்கு வரும் ‘அந்திக் கோவலர்’ என்பதும் ‘அந்தி அந்தணர்’ என்பதற்கு இணையாக வைத்தெண்ணக்கூடியதாக உள்ளது. இந்தப் பாடலின் முழுப்பொருளையும் நோக்கினால் மட்டுமே ‘அந்திக் கோவலர்’ என்பதற்குரிய பொருளைப் புரிந்துகொள்ள வாய்ப்பேற்படும். அப்பாடலின் பொருள்

‘பகைவர், அணிகளையெல்லாம் கொண்டுவந்து அவற்றை யானைகளோடு திரையாகக் கொடுத்து வணங்கிப் பணிமொழி கூறிச் சென்று அருள்க என வேண்டி நிற்பர். நம் அரனும் பாரமிகுதியால் புவியினை வருத்துதல் செய்து திரண்ட சேனையுடன் இன்றே தம் ஊர்க்குத் திரும்புதல் பெரிதும் உண்மையாகும். இனி, மாடங்களால் மாண்புற்ற நமது மாளிகையில் பெருமை அமைந்த படுக்கையின்கண்ணுள்ள, வெறுப்பற்ற கொள்கை யினையுடைய நம் காதலி இன்பம் பெறுதலும், நமக்குப் பாசறையில் ஏற்பட்ட வருத்தங்கள் தீர்தலும் உறுதியாகும்.

(எனவே, பாகனே) நீயும் மின்னல் ஓடினாற் போன்ற ஒளியினையுடைய பொன்னாற் செய்த கலனை முதலியவற்றால் பொலிவு பெற்று, கொய்யப்பெற்ற பிடரி மயிரினையும், வார் பிடித்துச் செலுத்துவோரின் கைக்கு இதமான ஓட்டத்தையும் உடைய குதிரையைத் தேரிலே பூட்டி, வளம் மிக்க மழை பெய்தமையால் மலர்ந்த முல்லைப்பூவில் மொய்த்திருக்கும் வண்டுகள் ஓடுமாறு தேரினை ஓட்டுக. அந்திக் காலத்தே இடையரது அழகிய குழலின் ஒலிக்கும் ஓசை நிலா முற்றமாய அகன்றவிடத்தே வந்து ஒலிக்கும், வரிசையாக நிற்கும் ஞாயிலையுடைய நீண்ட மதில் சூழ்ந்த ஊரின்கண் மாலைப் பொழுதில் சென்றடையுறுமாறு குதிரையினை விரைந்து செலுத்துவாயாக’ என அமைந் துள்ளது.

மன்னன் ஓய்மான் நல்லியாதனைப் புறத்திணை நன்னாகனார் பாடியுள்ள புறநானூற்றுத் தொகுப்பி லுள்ள கீழ்வரும் இந்தப் பாடலில் ‘சிவந்துவாங்கு அந்தி’ என்றொரு சொல்லாட்சி வருகின்றது.

விசும்பு நீத்தம் இறந்த ஞாயிற்றுப்

பசுங்கதிர் மழுகிய சிவந்துவாங்கு அந்தி

சிறுநனி பிறந்த பின்றை, செறிபிணிச்

சிதாஅர் வள்பின்என் தடாரி தழீஇ,

பாணர் ஆரும் அளவை, யான்தன்

யாணர் நல்மனைக் கூட்டுமுதல் நின்றனென்!

(புறம். 376: 1- 6)

இங்கு வரும் அந்தி எனும் சொல் மேற்கண்டன வற்றிலிருந்து முற்றிலும் வேறுபட்ட பொருளில் பயின்று வந்திருக்கின்றது. இப்பாடலடிகளின் பொருள் ‘வானத்தி லிருந்து சூரியன் கடந்து சென்று பசிய கதிர்களின் ஒளி குறைந்து, செம்மை படர்ந்து, மேற்குத் திசையின்கண் வளைந்து தோன்ற மாலைப் பொழுதும் கழிந்த பின்னர் செறிந்த வார்களால் பிணிக்கப்பட்ட தடாரிப் பறையை ஒருபுறம் தழுவிக் கொண்டு பாணர்கள் உணவு உண்ணும் வேளையில், யான் அத்தலைவனின் புதுமை மாறாத பெருமையின்கண் நின்று பாடினேன்’ என்பதாகும்.

சங்கப் பாடல்களில் வரும் காலை அந்தி, நன்பகல் அந்தி, மாலை அந்தி என்பன ‘காலை வேளை’, ‘நன்பகல் வேளை’, ‘மாலை வேளை’ என்பதனைக் குறிக்கின்றன; மாலை நேரத்தை மட்டும் குறித்து நிற்கவில்லை என்பது தெரிகின்றதுஇதனால் அந்தி என்பது இன்றைக்கு நாம் அறிந்திருக்கும் மாலை நேரத்தை மட்டும் குறித்து நிற்கவில்லை என்பது தெரிகின்றது. சென்னைப் பல்கலைக்கழகப் பேரகராதியில் ‘அந்தி’ என்பதற்குக் காலை, மாலை, முற்பகல், செவ்வானம் ஆகிய பொருள் களைத் தந்திருப்பதும் இங்கு எண்ணுதற்குரியது.

துணைநின்ற நூல்கள் 

1.         பதிப்பாசியர் குழு. 1982 (மறுஅச்சு). Tamil Lexicon (தொகுதி -1) சென்னை: சென்னைப் பல்கலைக்கழகம்.

2.         பரிமணம், அ.ம. & பாலசுப்பிரமணியன், கு. வெ. (ப.ஆ.); செயபால், இரா. (உ.ஆ.). 2011 (4ஆம் பதிப்பு). சங்க இலக்கியம் அகநானூறு (தொகுதி -1, 2) சென்னை: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்.

3.         பரிமணம், அ.ம. & பாலசுப்பிரமணியன், கு. வெ. (ப. ஆ.); 2011 (4ஆம் பதிப்பு). சங்க இலக்கியம் புறநானூறு (தொகுதி1, 2) சென்னை: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்.

4.         சாமிநாதையர், உ. வே. (ப.ஆ.) 1986 (நிழற்படப் பதிப்பு) பத்துப்பாட்டு மூலமும் நச்சினார்க்கினியர் உரையும், தஞ்சாவூர்: தமிழ்ப் பல்கலைக்கழகம்.

Pin It