ஜாதியின் மூன்று தடைகள்
பொருளாதார வளர்ச்சியை அனைவருக்கும் கொண்டு செல்லக்கூடிய மாற்றத்துக்கு மூன்று அம்சங்கள் தடையாக இருக்கின்றன. ஒன்று நில உரிமைகளில் காணப்படும் ஏற்றத் தாழ்வுகள்; இது உற்பத்தியையும் பாதிக்கிறது. இரண்டாவது உயர்கல்வியை வரலாற்று ரீதியாக ஒரு பிரிவினர் மட்டும் தங்கள் ஆதிக்கத்தில் வைத்துக் கொண்டு அனைவருக்கும் கிடைத்து விடாமல் மறுத்து வருதல்; மூன்றாவது நவீன தொழில் மற்றும் அறிவியல் துறைகளில் நிகழும் ஜாதியப் பாகுபாடு; இப்போது ‘உயர் ஜாதி’ அறிவுஜீவி வர்க்கம் தங்களுக்கான ‘உறவுத் தொடர்புகளை’ வலிமையாக்கிக் கொண்டு மேற்குறிப்பிட்டத் துறைகளை தங்கள் பிடிக்குள் வைத்திருக்கிறது.
இந்தியாவில் பொருளாதாரம், வேலை வாய்ப்பு களில் வளர்ச்சியை நோக்கி முன்னேறிச் செல்வதில், ஜாதி தடையாக நிற்கிறது என்பதை விளக்கி ‘கூhந னுசயஎனையைn ஆடினநட’ புத்தகத்தை எழுதிய முனைவர் கலையரசன் ‘இந்து’ ஆங்கில நாளேட்டில் (ஜூன் 23, 2022) ஓர் ஆய்வு கட்டுரையை எழுதியுள்ளார். கடந்த 20 ஆண்டுகளாக பொருளாதார வளர்ச்சிப் போக்குகள் காணப்பட்டாலும் அது வேலை வாய்ப்புகளை உருவாக்கவில்லை என்பதால் போராட்டங்கள் வெடித்துக் கொண்டிருக்கின்றன. வேலை வாய்ப்புகளோடு அனைத்துப் பிரிவினரையும் உள்ளடக்கிய பொருளாதார கொள்கைகளை அதற்கான திட்டமிடுதலை கிழக்கு ஆசிய நாடுகளைப் போல இந்தியாவில் ஏன் உருவாக்க முடியவில்லை என்ற கேள்வியை எழுப்பும் அக்கட்டுரை, ஜாதி அரசியலோடு பிணைத்துக் கொண்டுள்ளது தான் மிக முக்கிய காரணம் என்று வலியுறுத்துகிறது.
கட்டுரையின் மய்யமான கருத்துகளின் சுருக்கம்.
1. இந்தியாவில் ஜாதிக்கும் பொருளாதாரத்துக்கும் நெருக்கமான தொடர்பு இருக்கிறது. பல ஆய்வாளர்கள் இதை கவனத்தில் கொள்வதில்லை. சமகாலஆய்வுகள், எழுத்துகளில்கூட பொருளா தார ஏற்றத் தாழ்வுகள் மற்றும் சமூகத்தில் உருவாகும் பிரச்சினைகளுக்கு ஜாதியும் ஒரு காரணமாக இருக்கிறது என்ற கருத்துகளே முன் வைக்கப்படுகின்றன. அது சரியான பார்வையல்ல. உண்மையில் பொருளாதார வளர்ச்சிப் பாதையை தீர்மானிக்கும் மய்யமான அடித்தளமாக ஜாதி தான் இருக்கிறது என்பதுதான் உண்மை.
2. பொருளாதார வல்லுனர்கள் மாறுபட்ட கருத்துகளை முன் வைக்கின்றனர். வளரும் நாடுகளின் பொருளாதார வளர்ச்சிக்கு மூலதனக் குவியலின் தேவையை வலியுறுத்துகிறார் நோபல் பரிசு பெற்ற ஆர்தர் லெவிஸ், அவருடன் இணைந்து நோபல் பரிசைப் பகிர்ந்து கொண்ட தியோடர் வில்லியம், நீதிமன்றத்தைவிட, மனித உழைப்பு மூலதனமே முக்கியமானது (Human Capital) என்கிறார். நவீன துறைகளில் மனித உழைப்பு மூலதனமே முக்கிய பங்கு வைக்க முடியும் என்று கூறும் அவர், படித்தவர்களை உழைப்பு சந்தையில் பங்கெடுக்கச் செய்ய வேண்டும். அதன் வழியாக உற்பத்தி அதிகரிக்கும் சிறு தொழிலதி பர்களாக வரும் திறன் மிக்கவர்களுக்கும் வாய்ப்புகள் உருவாகுகின்றன. கல்வி, அதன் வழியாகக் கிடைக்கும் திறன் பயிற்சி பெறும் அனுபவங்கள் கிடைக்கின்றன என்று வாதிடுகிறார்.
3. தெற்கு ஆசிய நாடுகள் வெவ்வேறு அடிப் படையில் தங்கள் பொருளாதாரக் கட்டமைப்பை வளர்த்து வருகின்றன. மக்கள் அனைவரையும் வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டு வந்துள்ளன. வெவ்வேறு கொள்கைகள் பின்பற்றப்பட்டாலும் தெற்காசிய நாடுகளில் ஒருஅடிப்படையான அம்சம் மட்டும் பொதுவாக இருக்கிறது. நில உரிமையையும் மனித உழைப்பையும் இணைத்ததால் மட்டுமே வளர்ச்சி சாத்தியமாகி யுள்ளது. இந்தியாவை பொறுத்தவரை இந்த மூன்று அம்சங்களுமே கவனத்தில் கொள்ளப்பட வில்லை. மாறாக ஜாதி பெரும் தடைச் சுவராக நிற்கிறது.
4. உலகிலேயே நில உரிமையில் மிக அதிகமான ஏற்றத் தாழ்வுகளைக் கொண்டிருக்கும் நாடு இந்தியா. பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்திலேயே அவர்கள் தங்கள் நலனுக்காக நில உரிமைகளில் ஜாதியைப் புகுத்தி விட்டனர். அனைவருக்கும் சமமாகப் பகிர்ந்தளிக்காமல் இங்கே காலம்காலமாக நிலை பெற்றுள்ள ஜாதி அடிப்படையிலேயே நில உரிமைகளையும் ஆளும் குறுநில மன்னர்கள், சிற்றரசர்களாகும் உரிமைகளும் பரம்பரை ஜாதி அடிப்படை யிலேயே பகிர்ந்தளித்ததோடு, தொழிலாளர் களாகவும் கூலிகளாகவும் ஒடுக்கப்பட்ட ஜாதியினரை வைத்திருந்தனர். அதாவது, நில உடைமை யாளர்கள் மேல் ஜாதி; உழைக்கும் மக்கள் ‘கீழ் ஜாதி’. கீழ் ஜாதியில் தள்ளப்பட்ட மக்கள் தாங்களாகவே உழைத்து வேலை செய்வதற்காக பஞ்சமி நிலங்கள் ஒதுக்கப் பட்டன. நில வருவாய்த் துறை தொடர்பான அதிகாரக் கட்டமைப்புகளுக்குள் ஜாதியக் கட்டமைப்புகள் புகுத்தப்பட்டன.
5. நாடு சுதந்திரம் பெற்ற பிறகும் நிலைமை மாற வில்லை. நில உரிமையிலிருந்து பெரும்பான்மையான தலித்துகள் விலக்கி வைக்கப்பட்டனர்.
6. பசுமைப் புரட்சி வந்த பிறகும் நவீன தொழில் நுட்பங்கள் அறிமுகமானாலும் நிலைமையில் மாற்றமில்லை. சொல்லப்போனால் இந்திய கிராமங்களில் பசுமைப் புரட்சி, நில உடைமை யாளரான மேல் ஜாதியினர், நிலமற்ற ஒடுக்கப் பட்ட ஜாதியினரை அவர்கள் கட்டுப்பாட்டில் மீண்டும் உறுதியாக நிலைநிறுத்தியது.
7. 1990களில் நிலங்களிலிருந்து கிடைக்கும் உற்பத்தி குறைந்தபோது கட்டுமான நிறுவனங்கள், நில விற்பனையாளர்கள், நில உடைமையாளர்களின் இடத்தை தங்கள் வசமாக்கிக் கொண்டனர்., குடும்ப செல்வாக்கு, பாரம்பர்யப் பெருமை மற்றும் மூலதனத்தைக் கையாளுபவர்களிடம் தான் ‘ரியல் எஸ்டேட்’ தொழில் வந்து சேர்ந்தது. இந்த நிலையில் 1990களில் கொண்டு வரப்பட்ட பொருளாதார சீர்திருத்தங்கள் பெரும்பான்மை உழைக்கும் அடித்தட்டு ஜாதியினருக்கு பயன் தராமல் போயிற்று. விவசாயத் துறையில் ‘ஏகபோகமாக’ இருந்தவர்கள் உலக மயமாக்கல் எனும் பொருளாதாரக் கொள்கையால் தங்கள் அதிகாரத்தை இழந்து உள்ளனர். அதே நேரத்தில் விவசாயத் துறையில் நல்ல வருவாய் கிடைத்தவர்கள்கூட, தங்கள் அந்தஸ்தை தொழிலதிபர் நிலைக்கு உயர்த்திக் கொள்ள முடியவில்லை. விவசாய உற்பத்தியாளர்களாகவே நீடித்தனர். (இந்தியா வின் மேற்கு மற்றும் தெற்குப் பகுதியில் வாழ்ந்த நிலவுடைமை ஜாதிகள் மட்டும் விதிவிலக்காக இருந்தனர்)
8. இதற்கு இரண்டு காரணங்கள் முக்கியமானவை. வரலாற்று ரீதியாகக் கல்வி உரிமையை மறுத்தது ஒன்று. நவீன அறிவியல் தொழில்நுட்பத் துறைகளில் ஒடுக்கப்பட்ட ஜாதியினர் நுழைந்து விடாமல் உயர்ஜாதியினர் எழுப்பியுள்ள ‘மதில் சுவர்’. மற்றொரு காரணம், அண்மையில் அரியானா மற்றும் பஞ்சாப் மாநில ‘ஜாட்’ ஜாதியினர், மகாராஷ்டிராவில் மராத்தா ஜாதியினர், குஜராத்தில் பட்டேல் ஜாதியினர், தங்கள் ஜாதிக்கு உயர் கல்வியில் இடஒதுக்கீடு கேட்டு போராடியதை இதற்குச் சான்றாகக் குறிப்பிடலாம். வழக்கமான விவசாயத் தொழிலி லிருந்து அவர்கள் தங்களை விடுவித்துக் கொள்ள விரும்புகிறார்கள்.
9. தடையில்லாத பொருளாதார வளர்ச்சிக்கு, விவசாயத் துறையில் நிகழும் உற்பத்தி மிகவும் அவசியமாகிறது. அதற்கு இந்தத் துறையில் படித்தவர்களின் பங்கேற்பு இருந்தால் மட்டுமே நவீனத்துவத்தை நோக்கி நகர முடியும். இந்தியா இரண்டிலுமே தோல்வி அடைந்து நிற்கிறது. பிரிட்டிஷ் ஆட்சி காலத்திலிருந்தே கல்வி கட்டமைப்பை பாகுபாடுகளுக்கு உள்ளாகி, சில அறிவு ஜீவி குழுக்களுக்கான ஏகபோகமாக்கப் பட்டு விட்டது. குறிப்பாக பிரிட்டிஷ் ஆட்சி காலத்திலே உயர்ஜாதியினரில் ஒரு ஜாதிக் குழு இதில் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கி விட்டது. பிரிட்டிஷாரின் நிர்வாகத்துக்கும் அவர்கள் தேவைப்பட்டார்கள்.
10. அரசியல் சட்டத்தின் முகப்புரை - கல்வியை அனைவருக்கும் பொதுவானதாக வலியுறுத்தி னாலும் அது இந்தியாவில் செயல்பாட்டுக்கு வராமல், (ஜாதியப்) பாகுபாடுகளுக்கு உட்படுத்தப் பட்டு வருவதை அரசியல் ஆய்வாளர் மெரோன் வெய்னர் சுட்டிக் காட்டுகிறார். கல்வியமைப்பில் உள்ள இந்த ஏற்றத் தாழ்வுகளும் (ஜாதிய) பாகுபாடுகளும் பொருளாதாரம் உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் வெளிப்படுகின்றன. உழைப்புக்கான ஊதியத்திலும் இது எதிரொலிக்கிறது.
11. உயர் கல்வியில் இடஒதுக்கீடு வரும் வரை அதிகாரம் நிறைந்த உயர் மட்டப் பதவிகள் ‘அறிவு ஜீவி’களின் ஆதிக்கப் பிடிக்குள் தான் இருந்தன. இதன் காரணமாகவே இந்தியா மென்பொருள் சேவைத் துறையில் மட்டும் (Software Service) உலக அளவில் வளர முடிகிறது. மாறாக, சீனா மற்றும் ஆசிய நாடுகள் சேவைத் துறையைக் கடந்து தயாரிப்பு மற்றும் உற்பத்தித் துறையில் முன்னேறி நிற்பதற்குக் காரணம், அடிப்படைக் கல்வியிலும், படிப்படியாக உயர் கல்வியிலும் அந்த நாடுகள் காட்டிய அக்கறையும் முதலீடுகளும் தான். இப்போதும் சீனா மற்றும் ஆசிய நாடுகளில் சிறு சிறு பொருள்களின் தயாரிப்புகளில் வளர்ந்து நிற்கின்றன. அதனால் கூடுதல் வேலை வாய்ப்புகளைப் பெற்று வருகின்றன. இந்தியா இதற்கு நேர்மாறாக உயர் தொழில் நுட்பம் நிறைந்த வேலைகளை உருவாக்கு வதில் பெரும் கவனம் செலுத்தி வருகிறது. இந்தியாவைப் பின்னுக்குத் தள்ளி விட்டு சீனா வேகமாக வளர்ந்து நிற்பதற்குக் காரணம், மனித வள உழைப்பு ஆற்றலை தயாரிப்புகளுக்குப் பயன்படுத்தியது தான். பரம்பரைத் தொழிலான விவசாயத்துக்கு முழுக்குப் போட்டுவிட்டு சீனாவில் கிராமப்புற தொழில் முனைவோர் ஏராளமான அளவில் உருவாகி விட்டனர். காரணம், மனித வள ஆற்றலை முதலீடாக்கியதுதான். மாறாக, கிராமப்புற இந்தியாவில் இத்தகைய தொழில் முனைவோர், மிகச் சிறிய எண்ணிக்கையில்கூட இல்லாமல் போய் விட்டனர். ஏஷேங் ஹுவான் (Yasheng Huang) என்ற சீனப் பொருளாதார வல்லுனர் வெளியிட்ட கருத்து இது. (கிராமப் புறங்களில் வேர் பிடித்து நிற்கும் ஜாதியே கிராமப்புற உழைக்கும் மக்கள் உழைப்பு சக்தியை தொழில் முதலீட்டாக்கி அவர்களை தொழில் முனைவோராக உருவாக விடாது தடுத்து வருகிறது. -ஆர்)
12. ஜாதி உருவாக்கி வைத்துள்ள சமூக இணைப்பு, வணிகம் அதற்கான ஜாதிப் பிரிவுகளின் ஆதிக்கத்தில் தொடர்வது விவசாயத்தில் வருவாய் வந்தாலும் தொழில் துறையில் ஈடுபடாமல் தடுப்பது, எல்லாவற்றுக்கும் அடித்தளமாக இயங்குவது, ஜாதி தான்! இதில் தென் மாநிலங்கள் மட்டும் ஓரளவு மாறுபட்டிருப்பதற்குக் காரணம் வணிகத்துக்கான ‘வைசிய’ ஜாதி இங்கே இல்லை. (வடக்கே மட்டும் தான் இருக்கிறது)
மாறாக, தெற்கு ஆசிய நாடுகளில் நில உடைமை யாளர்களாக இருந்த விவசாயிகள், நகர்ப்புற தொழிலதிபர்களாக மாற முடிந்தது. அதற்குத் தடையில்லை. இந்தியாவில் பொருளாதாரத்தில் ஜாதியின் குறுக்கீடுகளே பொருளாதார வளர்ச்சிப் பாதையைத் தடுத்து சமூக மாற்றத்தை முடக்குகின்றன. இதில் ஜாதியின் பங்களிப்பைக் குறைத்து மதிப்பிட முடியாது. தீவிரமான ‘தீர்மானிக்கும் சக்தியாக’ அது இயங்கிக் கொண்டிருப்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும். (Caste is not a residual variable but is an active agent which stifles economic transformation)
- முனைவர் கலையரசன், பிரவுன் பல்கலைக்கழகத்தில் தெற்காசிய நாடுகளின் ஆய்வுப் பிரிவில் - ஆய்வாளர்
தமிழில் : விடுதலை இராசேந்திரன்