திருப்பூர் கழகம் பதிலடி

திருப்பூரில் பா.ஜ.க.வினர் அரசு கல்லூரிகளின் பெயர்களை முறைகேடாக பயன்படுத்தி துண்டறிக்கைகளை அச்சிட்டு “செல்பி வித் அண்ணாமலை” என்று விளம்பரப்படுத்தி கல்லூரிகளுக்குள் அத்து மீறி நுழைய திட்டமிட்டு இருந்தார்கள்.

அண்ணாமலையைக் கூட்டி வந்து சாலைகளில் கூட்டமாக கூட காவல்துறையிடம் எந்தத் தகவலும் தெரிவிக்காமலும், அனுமதியும் பெறாமலும் சட்டம் ஒழுங்கை மதிக்காமல் நடந்து கொண்டிருக்கிறார்கள்.

பா.ஜ.க.வினர் பேசினால் பரப்புரையில் ஈடுபட்டால் என்ன பேசுவார்கள் என்பதை பொதுமக்கள் அனைவரும் நன்கு அறிவார்கள்.

குறிப்பிட்ட மதத்திற்கு எதிராக மத வெறுப்பு பிரச்சாரத்தில் ஈடுபட்டு, வன்முறையை தூண்டும் விதத்தில் பேசுவது, கலவரங்களை உருவாக்கி அதன் மூலம் குளிர் காய்வது போன்ற பொது அமைதியை குலைக்கும் வகையில் தான் இவர்களின் பேச்சுக்கள் இருக்கும்.

இச்செய்தி பரவிய உடன் திராவிடர் விடுதலை கழகத்தின் திருப்பூர் மாவட்ட தலைவர் முகில் ராசு, திருப்பூர் மாவட்ட காவல்துறை ஆணையர் அலுவலகத்தை உடனடியாக தொடர்பு கொண்டு இந் நிகழ்விற்கு கழகத்தின் கடும் கண்டனத்தை பதிவு செய்ததோடு, இந்நிகழ்ச்சியை நடத்த அனுமதித்தால் இது போலவே நாங்களும் நிகழ்ச்சி நடத்த வேண்டி வரும் என்று எச்சரிக்கையும் விடுத்தார்.

காவல்துறை அலுவலகத்தில் இப்படியான நிகழ்ச்சி எதற்கும் அனுமதி பெறப்படவில்லை, அப்படி எந்த நிகழ்ச்சியில் நடைபெறாது என்று உறுதியளித்தனர்.

மேலும் பெரியாரிய இயக்கங்கள், ஆதித்தமிழர் பேரவை, தீண்டாமை ஒழிப்பு முன்னணி, மக்கள் அதிகாரம் ஆகிய அமைப்புகள் தங்கள் கடும் கண்டனத்தை தெரிவித்து போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்தன. உடனே காவல்துறை கல்லூரிகளின் வாயிலில் குவிக்கப்பட்டன.

பல்லடம் எல்.ஆர்.ஜி மகளிர் கல்லூரி முடிந்தவுடன் வெளியே வந்த மாணவிகள் அவர்களாகவே பாஜகவினரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.

“கல்லூரி தேர்வுகள் நடைபெறும் இச்சூழலில் எங்களின் கல்விக்கு பெரிய இடையூறு செய்கிறீர்கள்” என்றும் “கல்லூரியிலிருந்து வெளி வருவதற்கே எங்களுக்கு சிரமங்களை ஏற்படுத்துகிறீர்கள்” என்றும் மாணவிகள் பாஜகவினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

மாணவிகளின் கல்வி குறித்த கவலையை துளியும் கருத்தில் கொள்ளாமல் மீண்டும் அதே இடத்தில் நின்று கொண்டு பாஜகவினர் மாணவிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

காவல்துறை உடனடியாக தலையிட்டு முறையாக அனுமதி பெறப்படாமல் நடத்தும் இந்த நிகழ்ச்சியை நிறுத்தி கலைந்து செல்லும்படி பாஜகவினரை காவல் துறை எச்சரித்தது. அதன் பிறகே பாஜகவினர் கலைந்து சென்றனர்.

திருப்பூரில் பாஜகவினரின் இந்த கீழ்த்தரமான பிரச்சாரத்தினால் மக்கள் மத்தியில் பாஜகவின் மீது கடும் அதிருப்தி உருவாகி உள்ளது.

- பரிமளராசன்

Pin It