65வது சுதந்திர தினத்தையொட்டி நேர்காணலுக்காக விடுதலைப் போராட்ட வீரர் என்.சங்கரய்யா அவர்களை சந்தித்தோம். 90 வயதிலும் தெளிவான வார்த்தைகளோடு, மிகுந்த நினைவாற்றலோடு நம் ஒவ்வொரு கேள்விக்கும் உற்சாகத்தோடு பதிலளித்தார். குறிப்பாக சுதந்திரப் போராட்டத்தில் மாணவர்களையும், இளைஞர்ளையும் திரட்டியதைப் பற்றி நம்மோடு பகிர்ந்து கொண்டார்.

சுதந்திரப் போராட்ட காலகட்டத்தில் மாணவர்கள் மற்றும் இளைஞர்களைத் திரட்டியதில் தங்களது அனுபவம் பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன்?

மாணவர்களை சுதந்திரப் போராட்ட காலகட்டத்தில் திரட்டியது ஒரு பெரிய வரலாறு. இதைப் பற்றி ஏற்கனவே பல நேர்காணலில் சொல்லியிருக்கிறேன். தமிழகத்தில் மாணவர் இயக்க வரலாறு என்ற புத்தகத்திலும் விரிவாக பதிவாகியுள்ளது.

1936ல் தான் அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் துவக்கப்பட்டது. இதே காலகட்டத்தில்தான் அகில இந்திய விவசாயிகள் சங்கமும் துவக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாகத்தான் சென்னையில் 1938 ஆம் ஆண்டு சென்னை மாணவர் சங்கம் துவக்கப்பட்டது. 1940ல் மதுரையில் நாங்கள் மதுரை மாணவர் சங்கம் என்ற அமைப்பை துவக்கினோம். இந்த காலகட்டத்தில் நான் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் படித்து வந்தேன். பல்வேறு போராட்டம் மற்றும் கைது போன்றவைகளால் இறுதியாண்டில் கல்லூரிப் படிப்பை முடிக்காமலேயே வெளியேறினேன். 1941ல் மதுரையில் மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டதற்காக மிகப்பெரிய ஆர்ப்பாட்டங்கள், பல கல்லூரிகளில் வேலை நிறுத்தம் போன்றவை நடைபெற்றன. அதேபோல் மாணவர்களின் பெரும்பாலான போராட்டங்கள் பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்த்துதான் நடைபெற்றது. ஏகாதிபத்தியத்திற்கு எதிரான இயக்கங்கள் எல்லாம் கல்லூரி வாயில்களில் இருந்துதான் துவங்கும். பிரம்மாண்டமான பேரணிகள் கல்லூரி வாயில்களில் தான் புறப்படும். We are not job hunters, we are freedom hunters என்ற முழக்கங்கள் எல்லா திசைகளிலும் எழுந்த வண்ணம் இந்த பேரணிகள் நடைபெறும். இதுபோன்ற போராட்டங்கள் காரணமாக 1941 பிப்ரவரி மாதம் பாதுகாப்பு கைதிகளாக நாங்கள் 10 பேர் கைது செய்யப்பட்டோம். முதலில் வேலூர் சிறையிலும், பிறகு ராஜமுந்திரி சிறையிலும் அடைக்கப்பட் டோம்.

நான் வேலூர் சிறையில் இருந்தபோது காமராஜர், ஏ.கே. கோபாலன், பட்டாபி சீத்தா ராமையா, சஞ்சீவி ரெட்டி போன்ற தலைவர்களும் அங்கு கைது செய்யப்பட்டு இருந்தனர். மேலும் தமிழகம், கேரளா, ஆந்திர மாநிலங்களை சேர்ந்த 200 க்கும் மேற்பட்ட கம்யூனிஸ்டுகளும் அங்கு கைது செய்து வைக்கப்பட்டிருந்தனர்.

இந்த சிறைவாசத்தின் போதுதான் சிறையில் கைதிகளின் பல்வேறு பிரச்னைகளை முன்வைத்து தோழர். ஏ.கே. கோபாலன் தலைமையில் 19 நாள் உண்ணாவிரதம் மேற்கொள்ளப்பட்டது. இப்போராட்டம் வெற்றியடைந்தது. அரசு எங்கள் கோரிக்கைகளை ஏற்று சில உடன்படிக்கையை மேற்கொண்டது.

இந்தப் போராட்டத்தின் மூலம் கிடைத்த பலன்கள் அதன்பிறகு கைது செய்யப்பட்ட கைதிகளுக்கெல்லாம் நன்மை செய்தது. குறிப்பாக வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் 1942ல் கைது செய்யப்பட்ட காங்கிரஸ் காரர்கள் பலன் பெற்றனர்.

என்னோடு கைது செய்யப்பட்ட மற்றவர்கள் விடுதலை செய்யப்பட்ட பிறகு நான் விடுதலை செய்யப்படாமல் ஒன்னரை மாதம் கூடுதலாக சிறையிலேயே இருந்தேன். நான் மட்டும் ராஜமுந்திரி சிறையில் இருந்ததை கவனித்த காமராஜர் பிரிட்டிஷ் அரசுக்கு என்னை வேலூர் சிறையில் மாற்றி கம்யூனிஸ்ட் கைதிகளோடு வைக்குமாறு கடிதம் எழுதினார். அதில் எனக்கும் ஒரு நகலை அனுப்பியிருந்தார்.

நான் வேலூர் சிறைக்கு மாற்றப்பட்ட பிறகு ஜூன் மாதம் ஐ.மாயாண்டி பாரதி, எம்.ஆர் வெங்கட்ராமன், என். சீனிவாசன் ஆகியோரோடு நானும் விடுதலை செய்யப்பட்டேன். எங்களுக்கு மதுரையில் சிறப்பான வரவேற்பு வழங்கப்பட்டது.

ஜூலை மாதம் தென் இந்திய மாணவர் கூடுகை நடைபெற்றது. இதில் தமிழ்நாடு, கேரளா மற்றும் ஆந்திராவை சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டனர். இதன் தொடர்ச்சியாக தமிழ்நாடு மாணவர் சங்கம் துவக்கப்பட்டது. இதில் பி. சுந்தரையா, எம்.ஆர். வெங்கட்ராமன், பார்வதி கிருஷ்ணன் மற்றும் மோகன் குமாரமங்கலம் போன்ற தலைவர்கள் கலந்து கொண்டனர். இதில்தான் தமிழ்நாடு மாணவர் சங்கத்தின் முதல் செயலாளராக நான் தேர்ந்தெடுக்கப்பட்டேன்.

பிரிட்டிஷ் அரசின் அடக்குமுறைக்கு எதிராகவும், காங்கிரசின் சில தவறான நிலைபாட்டை கண்டித்தும், ஒரு தேசிய அரசு வேண்டும் என்ற கோரிக்கையோடும் தான் மாணவர்களின் போராட்டம் அமைந்தது. இந்தப் போராட்டத்தின் ஒரு பகுதியாக 1942ல் நெல்லையில் பிரம்மாண்டமான ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது. இதில் குறிப்பாக புனித சேவியர் கல்லூரி, ஜான் மற்றும் இந்து கல்லூரி மாணவர்கள் கூடுதலாக கலந்து கொண்டனர். இப்போராட்டத்தில் நானும், சீனிவாசன் என்ற தோழரும் சென்றோம். இதில் பிரிட்டிஷ் காவல்துறை கண்மூடித்தனமாக லத்தி சார்ஜ் செய்து மாணவர்களை தாக்கியது. நான் மீண்டும் கைது செய்யப்பட்டேன். முதலில் வேலூர் சிறையிலும் பிறகு கண்னூர் சிறையிலும் அடைக்கப்பட்டேன்.

கண்னூர் சிறையில் இருக்கும் போதுதான் கையூர் தோழர்கள் அங்கு தூக்கிலிடப்பட்டனர். அன்றைய தினம் நாங்களெல்லாம் உண்ணாவிரதம் மேற்கொண்டோம். சில போராட்டங்களையும் உள்ளே நடத்தினோம்.

1938 காலகட்டத்தில் தோழர்கள். முத்தையா, உமாநாத், பாலதண்டாயுதம் போன்றோர் அண்ணாமலை பல்கலைக் கழத்தில் தீவிரமாக மாணவர் இயக்கத்தில் பணியாற்றி வந்தனர். மாணவர் இயக்கங்கள் தீவிரமான போராட்டங்களை நடத்திக்கொண்டிருந்த அதேவேளையில், பல்வேறு மாணவர்களை இணைக்கும் வகையில் பரிமேல் அழகர், தமிழ் கழகம், கல்லூரி விவாத மேடை, விளையாட்டு போட்டிகள், முதியோர் கல்வி போன்றவைகளை நடத்தினோம். மதுரை டவுண் ஹாலில் நடந்த ஒரு கூட்டத்தில் காமராஜர் வந்து பேசியுள்ளார்.

1944--45 ல் திருச்சியில் தமிழ்நாடு மாணவர் சங்கத்தின் இரண்டாவது மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டைத்தான் ச.வி என்ற பிரபலமான எழுத்தாளர் ஆனந்த விகடனில் என்று நினைக்கிறேன் அதில் ஜிந்தாபாத் மாநாடு என்றே இம்மாநாட்டை பற்றி ஒரு கட்டுரை எழுதினார். இம்மாநாட்டில் சுந்தரம் என்ற தோழர் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். நான் இதே காலத்தில் மதுரை ஜில்லாவினுடைய கம்யூனிஸ்ட் கட்சி செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டேன்.

நீங்கள் எப்படி சுதந்திரப் போராட்டத்தில், இடதுசாரி கொள்கையோடு அறிமுகம் ஆனீர்கள்?

எங்கள் குடும்பமே சுயமரியாதை இயக்கத்தோடு நெருங்கிய தொடர்புடைய குடும்பம். நான் ஒரளவு வளர்ந்த பிறகு சுயமரியாதை இயக்கம் மட்டும் இந்தியாவிற்கு போதுமானது அல்ல என்பதை உணர்ந்தேன். தேசத்திற்கு முதல் தேவை சுதந்திரம் தான் என்பதை பல்வேறு விவாதங்களும், பல்வேறு முற்போக்கு போர்க்குணமிக்க இயக்கங்களும் உணர்த்தியது.

முதலில் தேசிய உணர்வோடு பல்வேறு இயக்கங்களில் பங்கேற்றிருக்கிறேன். மதுரையில் ஜானகியம்மாள், குருசாமி போன்றோரின் தொடர்பு பல்வேறு விஷயங்களை கற்றுக் கொடுத்தது. கம்யூனிஸ்ட் இயக்கம் தடைசெய்யப்பட்டிருந்த காலகட்டத்தில் மதுரை காங்கிரஸ் இயக்கம் கம்யூனிச மனோபாவமுடையவர்களிடம் தான் முழுமையாக இருந்தது. தனிநபர் சத்தியாகிரகத்தை காந்தி முன்னிலைப் படுத்தினார். அதே வேளையில் கம்யூனிஸ்ட்டுகள் மக்கள் இயக்கத்தை முதன்மைப்படுத்தி வந்தனர். மதுரையில் தனிநபர் சத்தியாகிரகம் நடந்து முடிந்தவுடன் அந்த மேடையை கம்யூனிஸ்ட்டுகள் முழுமையாக தங்கள் வசம் கொண்டு வந்து விடுவார்கள். சுதந்திரத்திற்காக கூட்டு செயல்பாடு என்ற அடிப்படையில் தான் காங்கிரசும், கம்யூனிஸ்ட்டுகளும் செயல்பட்டனர்.

சிறை வாசம் பற்றி?

6 முறை கைது செய்யப்பட்டேன். 8 ஆண்டுகள் சிறையில் கழித்துள்ளேன். சுமார் 3 ஆண்டுகள் தலைமறைவு வாழ்க்கையில் இருந்தேன்.

இக்கால இளைஞர்கள். மாணவர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும் மிகவும் நெருங்கிய சமூக உறவு அவசியம். இன்றைய சவால்களை எதிர்கொள்ள இது மிகவும் அவசியம். மேற்குவங்கம், கேரளா, திரிபுராவைப் போல் தமிழகத்தை ஒரு இடதுசாரிகளின் தளமாக மாற்ற வேண்டும். மாணவர் இயக்கத்திலும், வாலிபர் இயக்கத்திலும் சேர்க்கும் உறுப்பினர்களை அரசியல் படுத்துவது மிகவும் அவசியமான ஒன்றாகும்.

இன்றைய பொருளாதார நெருக்கடி முதலாளித்துவக் கொள்கை எந்த அளவிற்கு தோற்றுப்போயுள்ளது என்பதை கண்முன்னே காண்பிக்கிறது. சோசலிசமே மனித சமூகத்திற்கான ஒரே மாற்று என்பதை இவை நிருபிக்கிறது. நில சீர்திருத்தத்திற்காகவும், பொதுத் துறையை பாதுகாப்பதற்காகவும், தொழிலாளர்களின் உரிமைக்காகவும், பெண்கள் மற்றும் சமூகத்தில் பின்தங்கிய நிலையில் உள்ளவர்களுடைய நலன்களுக்காகவும், எல்லோருக்கும் வேலை கிடைக்கவும் நமது போராட்டம் மேலும் விரிவான தளத்தில் எடுத்துச் செல்லப்பட வேண்டும். இவற்றிற்காக லட்சக்கணக்கில் மாணவர்களையும், வாலிபர்களையும் நாம் திரட்ட வேண்டும்.

இந்தியாவிற்கான சுயேட்சையான அயலுறவுக் கொள்கையின் அவசியத்தையும், அமெரிக்காவுடன் இந்தியாவின் நெருங்கிய உறவுகளுக்கு எதிராகவும் குரல்கொடுக்க வேண்டும். இந்தியா, சீனா, ரஷ்யா நட்புறவை வலியுறுத்த வேண்டியுள்ளது.

இலங்கை தமிழ் மக்களுக்கு ஆதரவாகவும், தமிழ்மொழியை ஆட்சி மொழியாகவும், நிர்வாக மொழியாகவும் மாற்ற குரல்கொடுக்க வேண்டும்.

இப்படிப்பட்ட நம் கோரிக்கைகளை மாணவர்கள் மத்தியிலும், வாலிபர்கள் மத்தியிலும் எடுத்துச்செல்ல வேண்டும்.

Pin It