பிறப்பின் அடிப்படையில் மட்டுமே ஒருவர் ‘இந்து’ என்று அடையாளப் படுத்தப்படுகிறார். இந்து ‘சனாதன தர்மம்’ இந்துக் கடவுள்களின் பிறப்பு, இந்து மத நூல்கள் குறித்து பெரும்பாலான இந்து மக்களுக்கு எதுவும் தெரியாது. அதன் காரணமாகத்தான் பார்ப்பனர்கள் சூழ்ச்சியாக, தங்கள் பார்ப்பனிய வேத மதத்தை இந்து மதம் என்று கூறி பார்ப்பனரல்லாத மக்களை ஏமாற்றி வருகிறார்கள். அர்ச்சகர் ஆகும் உரிமை தங்களுக்கே உண்டு என்று உச்ச நீதிமன்றம் வரை சென்று வாதாடுகிறார்ககள். ஆனால் வழிபாடு முறைகள் குறித்து புரோகிதர்களுக்கு தேர்வுகள் எதுவும் நடத்தப்படுவது இல்லை. கல்வித் தரத்தை உயர்த்த ‘நீட்’ தேர்வு 5 ஆம் வகுப்புக்கு தேர்வு; 8 ஆம் வகுப்புக்கு தேர்வு என்றெல்லாம் பேசுகிறவர்கள் அர்ச்சகர் புரோகிதர் ஆவதற்கும் ‘தகுதி’ வேண்டும். அதற்கான தேர்வு வேண்டும் என்றும் ஏன் வலியுறுத்துவது இல்லை?

அதேபோல் சமஸ்கிருதத்தில் புரோகிதப் பார்ப்பனர்கள் ஓதும் மந்திரங்களின் தமிழ் மொழிபெயர்ப்பை ஏன் மக்களிடம் எடுத்துச் சொல்லக் கூடாது? இந்தி திரைப்படம் ஓடினால் புரிந்து கொள்வதற்கு அதற்கு தமிழ் டைட்டில் போடப்படுகிறது. ஒரு ‘இந்து’ தனக்காக புரோகித பார்ப்பனர் ஓதும் மந்திரத்தைப் புரிந்து கெள்வதற்கு ஏற்பாடுகளை செய்ய வேண்டாமா? அப்படி தமிழில் மொழி பெயர்த்தால் சுயமரியாதையுள்ள எந்தத் தமிழனும் அர்ச்சனை செய்ய மாட்டான்; புரோகிதரை அழைக்க மாட்டான் என்ற அச்சம் தானே அவர்களைத் தடுக்கிறது?

கடவுளுக்கு வேத மந்திரம் ஓதும் புரோகிதர்கள் தங்கள் குடும்பத்துப் பெண்களையும் ‘பிராமணர்’களாகக் கருதி அர்ச்சனை செய்ய அனுமதிக்காதது ஏன்? சடங்குகளை வழிபாடுகளை முழுமையாக ஆண்களைவிட இந்து மதத்தில் நம்பிக்கையுள்ள பெண்கள் கண்டிப்பாகக் கடைபிடிக்கும்போது அர்ச்சகர் உரிமையை மட்டும் ஏன் மறுக்க வேண்டும்?

பார்ப்பனர்கள் வகுப்புவாதிகள், பெண்களின் உரிமைகளை மறுப்பவர்கள் என்பதற்கு இதைவிட சான்று வேண்டுமா?

- மு.சாமிநான், நாமக்கல் மாவட்டத் தலைவர், திராவிடர் விடுதலைக் கழகம்