அண்மையில் நடைபெற்ற இருவேறு நிகழ்வுகள், தமிழ்நாட்டில் மதத்தை மையமாக வைத்து எப்படியாவது அரசியல் செய்துவிட வேண்டும் என்ற முனைப்புடன் மதவாத சக்திகள் இயங்கி வருவதை வெளிப்படுத்துகின்றன.

கடந்த 17.05.2022 அன்று, சிதம்பரம் நடராசர் கோயிலில் சிற்றம்பல மேடை ஏறி, பக்தர்கள் வழிபாடு செய்யலாம் என்ற ஆணையை வெளியிட்டுள்ளது தமிழ்நாடு அரசு. இப்படி ஓர் ஆணையை அரசு ஏன் வெளியிட வேண்டும்?

நடராசர் கோயிலில் சிற்றம்பல மேடையில் ஏறி மக்கள் வழிபாடு செய்வது நடைமுறையில் இருந்த ஒன்றுதான். ஆனால், கொரோனா பெருந்தொற்று காரணமாக சமூக இடைவெளியுடன் வழிபாடு செய்ய சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. எனவே சிற்றம்பல மேடை ஏறி வழிபாடு செய்வது நிறுத்தி வைக்கப்பட்டது.

தொற்று குறைந்த நிலையில், வழக்கமான வழிபாட்டு முறைகள் பின்பற்றப்பட்டன. எனினும் சிற்றம்பல மேடை ஏறி மக்கள் வழிபடுவதை நடராசர் கோயிலின் தீட்சிதர்கள் அனுமதிக்கவில்லை. கடந்த பிப்ரவரி மாதம், ஜெயசீலா என்ற பெண் சிற்றம்பல மேடை ஏற முயன்றபோது, அவர் தீட்சிதர்களால் தடுக்கப்பட்டு வெளியே தள்ளப்பட்டார். இதனையடுத்து, சிற்றம்பல மேடை ஏறி யாரும் வழிபடக் கூடாது என்று தீட்சிதர்கள் தீர்மானம் நிறைவேற்றினர்.

இந்நிகழ்வைத் தொடர்ந்தே, தமிழ்நாடு அரசு தொன்றுதொட்டு நடைமுறையில் இருந்து வந்த பழக்க வழக்கத்தின்படியும், பக்தர்களின் கோரிக்கையைக் கருத்தில் கொண்டும் சிற்றம்பல மேடை ஏறி வழிபடுவதற்கான ஆணையைப் பிறப்பித்தது.

அரசின் ஆணையை அடுத்து, 23.05.2022 அன்று மக்கள் சிற்றம்பல மேடையில் ஏறி வழிபாடு நடத்தினர். தங்கள் அதிகாரம் செல்லுபடியாகாததைக் கண்டு பொறுப்பார்களா தீட்சிதர்கள்? தமிழ்நாடு அரசின் இந்த நடவடிக்கையைக் கண்டித்து, பிரதமருக்கும், குடியரசுத் தலைவருக்கும் கடிதம் எழுதியுள்ளனர், தில்லைக் கோயிலில் தமிழில் பாட அனுமதிக்காத இந்தத் தீட்சிதர்கள்.

அறநிலையத் துறை ஏன் அரசின் கையில் இருக்க வேண்டும் என்பதை, அரசு கோயிலை விட்டு வெளியேற வேண்டும் என்று பேசித் திரியும் அறிவு ஜீவிகள் இப்போதேனும் உணர்வார்களா தெரியவில்லை. சிதம்பரம் கோயில் மறுபடியும் அரசின் கட்டுப்பாட்டிற்கு வந்தால் மட்டுமே இத்தகைய நிகழ்வுகள் நடைபெறாது தடுக்க முடியும்.

2018 ஆம் ஆண்டு திராவிட இயக்கத் தமிழர் பேரவை நடத்திய சமூக நீதி மாநாட்டின் முதல் தீர்மானமே அறநிலையத்துறை பாதுகாக்கப்பட வேண்டும் என்பதும், தில்லைக் கோயில் மீட்டெடுக்கப்பட வேண்டும் என்பதும்தான். அத்தீர்மானம் பின்வருமாறு:

”நீதிக் கட்சி ஆட்சியில் உருவாக்கப்பட்ட இந்து சமய அறநிலையத் துறையைக் கலைப்பதற்கான பெருமுயற்சி ஒன்று, தன்னலம் மிக்க கூட்டம் ஒன்றினால் இப்போது தொடங்கப்பட்டுள்ளது. இந்துக் கோயில்களை இந்துக்களிடம் கொடுத்து விடுங்கள் என்பதாக அக்கோரிக்கை முன்வைக்கப்பட்டாலும், அதில் எள்ளளவும் உண்மையில்லை. இந்துக்கள் என்னும் பெயரில், வெறும் மூன்று விழுக்காடு மட்டுமே உள்ள ஒரு குறிப்பிட்ட சாதியினர், மொத்தக் கோயில் சொத்துக்களையும் தாங்கள் மட்டும் அபகரித்துக் கொள்வதற்கான திட்டமே இது. எனவே தங்களை இந்துக்கள் என்று எண்ணிக் கொண்டிருக்கும் கோடிக்கணக்கான வெகுமக்களின் சொத்துகளைப் பாதுகாக்கும் கடமை, கடவுள் நம்பிக்கை உடையவர்களுக்கு மட்டுமின்றிப் பகுத்தறிவாளர்களுக்கும் உள்ளது.

ஆதலால், எக்காரணம் கொண்டும் இந்து அறநிலையத் துறை கலைக்கப்படக் கூடாது என்று இம்மாநாடு வலியுறுத்துவதுடன், தில்லை நடராசர் கோயிலையும், தீட்சிதர்களிடமிருந்து மீண்டும் அரசு மீட்டெடுக்க வேண்டும்”.

மதத்தை வைத்து அரசியல் செய்யப்படும் மற்றொரு நிகழ்வும் தில்லை நடராசர் தொடர்புடையதே. நடராசரை ஆபாசமாகச் சித்தரித்ததற்காக U2 Brutus என்னும் Youtube வலைதளத்தில் காணொலி பதிவிட்ட மைனர் என்பவரக் கைது செய்ய வேண்டும் என்று சிதம்பரத்தில் சிவனடியார்கள் (?) 23.05.2022 அன்று ஆர்ப்பாட்டம் நடத்தியிருக்கிறார்கள்.

தில்லையில் ஆடுவது நடராசரா, இல்லை தீட்சிதர்களா? புரியவில்லை.

இந்துமதப் புராணங்களே ஆபாசக் கதைகளின் மொத்த உற்பத்திக் களம்தானே. பிள்ளையார் பிறந்த கதையையும், இராமன் பிறந்த கதையையும் நம் வீட்டுப் பிள்ளைகளுக்குச் சொல்லித்தர முடியுமா? எனவே எதனைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டுமோ, எதனைத் தீயிட்டுக் கொளுத்த வேண்டுமோ அதனைச் செய்யாமல், அக்கதைகளை மக்களுக்குச் சொல்பவர்களை நொந்து என்ன பயன்?

”சுயமரியாதைக்காரர்கள் புராணக் குப்பைகளைக் கிளறிக்கிளறி வெறும் ஆபாசங்களைப் பேசுகின்றார்கள், எழுதுகின்றார்கள்” என்று பேசுகின்றீர்கள். எங்கள்மீது சில சமயத்தில் வெறுப்பும் கொள்ளுகின்றீர்கள்.

ஆனால் இந்தக் கோவில்களுக்குப்போய், தேங்காய் பழம் உடைத்து வைத்து காசும் கொடுத்து இந்த உருவங்களைப் பார்க்க வந்துகொண்டிருப்பவர்கள் மனிதர்களா? என்பதைப் பற்றி நீங்கள் சிறிதுகூட சிந்திப்பதில்லை” (குடிஅரசு, 01.02.1931) என்றாரே தந்தை பெரியார். அந்த நிலைமை இன்னும் தொடர்கிறதா இல்லையா? எனவே ”மதம், சாமி, கோவில் என்றால் முட்டாள்தனம், அயோக்கியத்தனம், ஆபாசம் என்றுதான் சொல்ல வேண்டியிருக்கின்றது. வருத்தப்பட்டுப் பயனில்லை, வெட்கப்பட வேண்டும். அப்போதுதான் அறிவு, ஒழுக்கம், நாகரிகம் விளங்கும்” என்ற பெரியாரின் கொள்கையை இன்னும் வீரியத்துடன் கொண்டு செல்ல வேண்டிய தேவை இருக்கிறதா இல்லையா?

 எனவே மதத்தை முன்வைத்துத் தீவிரமாக வெறுப்பரசியல் செய்யப்பட்டு வரும் இந்நாட்களில், பெரியாரிய இயக்கங்கள் மத ஒழிப்புப் பிரச்சாரத்தைத் தீவிரப்படுத்துவதே மக்களுக்கு விழிப்புணர்வை ஊட்டும். மத அரசியல் செய்பவர்களிடமிருந்து மக்களைக் காக்கும்.

Pin It