மற்ற எல்லாவற்றையும் பின்னர் பேசிக் கொள்ளலாம். முதலில் படம் எப்படி ? அதைப் பார்ப்போம்.

கதையில் புதுசாக ஒன்றுமே இல்லை.

19 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட பல்வேறு அறிவியல் புனைகதைகளின் சாரமாக இருந்த அறுதப்பழைய எந்திர மனிதன் கதைதான். பல்வேறு ஆங்கில,தமிழ் மற்றும் கன்னடப்படங்களில் வந்து போன கதைதான். விஞ்ஞானி உருவாக்கிய எந்திர மனிதன் அவருடைய கட்டுப்பாட்டை மீறி வில் லனாகிவிட, பின் விஞ்ஞானியால், விஞ்ஞானத் தின் உதவியோடு அதை அழிப்பதுதான் கதை. இன்று வரை வந்துள்ள தொழில்நுட்பங்களை கூடுதலாகப் பயன்படுத்தியிருக்கிறார்கள் என்பதும் தமிழ்நாட்டு எந்திரன் எனக்காட்டச் சில காட்சி களைச் சேர்த்திருக்கிறார்கள் என்பதும்தான் புதுசு..

தமிழ்நாட்டின் விலைவாசி உயர்வான நடிகர் பால் தாக்கரேயின் சமீபத்திய பக்தர் - ரஜனிகாந்த் கதாநாயகன். முன்னாள் உலக அழகி- 8 கோடி சம்பளக்காரர் (அவரே ஒரு நேர்காணலில் சொன்ன தகவல்) - தன் இளமையின் முதுமைப் பருவத்தில் தன் அப்பா வயதுக்காரருக்கு ஜோடி யாக - ஐஸ்வர்யாராய் கதாநாயகி.உலகம் கொண் டாடும் இசைக்கலைஞர் ஏ.ஆர்.ரகுமானின் இசை. தமிழ்நாட்டின் மிகப்பெரிய பணக்காரரான கலாநிதி மாறனின் தயாரிப்பு என்று எல்லாமே உச்சபட்சமான சீட்டுகளாக இறக்கி விளையாடி யுள்ள விளையாட்டு இது.

படத்தில் ரஜனிகாந்த்தின் வழக்கமான வேலைகளை எந்திர மனிதன் செய்து முடிக் கிறான். சாதாரண ரஜனி நூறு பேரைத்தானே அடித்துச் சாய்ப்பார். எந்திர ரஜனி ஆயிரம் போலீசை அடித்துத் துவம்சம் செய்கிறார். இது போன்ற படங்களில் வரும் கதாநாயகிகளின் இலக்கணம் சற்றும் பிசகாமல் உலக அழகி ஐஸ்வர்யா ஐந்தாறு பாடல்களில் வந்து பல்வேறு உலக உடைகளில் ஆடி ரஜனிக்கு முத்தங்கள் வழங்கிச் சிரிக்கிறார் - நம்மைப் பார்த்துத்தான். தாடி வளர்க்கும் விஞ்ஞானி ரஜனி சோபிக்க வில்லை. எந்திர ரஜனி யின் ஜிம்மிக்ஸ் வேலை களிலேயே இடைவேளை வரை கதையை நகட்டிக் கொண்டு போகிறார் சங்கர். முதல்வன், இந்தியன், ஜீன்ஸ் போன்ற படங்களில் சங்கர் இதைவிட சிறப்பான ஜிம்மிக்ஸ்களைச் செய்து காட்டி விட்டார். இடை வேளைக்குப் பிறகு, உள்ள கதை போதாதென்று மூன்று பாடல்களை வைத்து இழுவையாக இழுக்கிறார்.தொடர் கொட்டாவி களில் தாடை வலிக்கும்போது கிளைமேக்ஸ் காட்சிகள் வந்து விளையாட்டுக் காட்டுகிறார்கள். ரோபோ வில்ல னாக மாறிய நிமிடத்திலிருந்துதான் படத்தில் சற்று வேகமே வருகிறது. ரஜனிகாந்த்துக் கும் வேலை வருகிறது. நூற்றுக்கணக்கான ரஜனி காந்த்துகள் வந்து ரஜனி ரசிகர்களுக்குத் திகட்டத் திகட்ட ஆரவாரத்தை வாரி வழங்குவதாக பல பத்திரிகைகளிலும் வலைத்தளங்களிலும் எழுதி யிருக்கிறார்கள். பாவம் இந்த ரஜனி ரசிகர்கள்.

அவர்கள் எப்போது யாரிடம் 100 ரஜனி வேண்டும் என்று சிணுங்கி அடம் பிடித்தார்களோ தெரிய வில்லை.அவர்கள் சார்பாக ஏதேதோ எழுதப் படுவதும் செய்யப்படுவதும் நடக்கிறது.ஆனாலும் குழந்தைகளைக் குதூகலிக்கச் செய்யும் காட்சிகள் என்று ஹாலிவுட் தொழில் கலைஞர்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட கடைசி 20 நிமிடங் களைக் குறிப்பிடலாம்.

பல இடங்களில் பின்னணி இசை கை கொடுத்தாலும் ரோபோக்கள் வரும் இடங்களி லெல்லாம் ங்ஙீ..ங்ஙீ.. என்று ஒரு சத்தம் அந்தக் காலத்துக் ‘கலை அரசி’ படத்தில் வந்தது போன்ற அதே சத்தம் வந்து இசையை ஒரு 60 ஆண்டுகள் பின்னுக்குக் கொண்டுபோய் விடுகிறது. பாடல் களில் ஒரு வார்த்தையும் புரியவில்லை. அகா..அகா.. என்று சில சத்தங்கள் மட்டுமே மனசில் நிற்கின்றன. படத்தில் பல காட்சிகள் ஜட்ஜ்மெண்ட் டே,தி அயன் மேன், ட்ரான்ஸ் பார்மர் போன்ற படங்களை நினைவுபடுத்து கின்றன. என்றாலும் இயக்குநர் சங்கரின் சொந்தக் கற்பனைக்கும் படத்தில் குறிப்பிடத்தக்க இடம் இருக்கத்தான் செய்கிறது. படம் முழுக்க அதீதங் களின் ஆக்கிரமிப்புத்தான். தர்க்கமெல்லாம் பார்க்கக் கூடாது.நாம் அவ்வளவாகக் கூறுபாடு இல்லாத பாமரன் என்பதாக நம்மைப்பற்றி ஒரு கணிப்புக்கு வந்துவிட வேண்டும்.அப்போதுதான் படத்தை முழுமையாக ரசிக்க முடியும்.படத்தின் மிகப்பெரிய வெற்றி அதுதான். ரசிகனைத் தன்னைத் தானே முட்டாள் என்று மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்ள வைத்து அதன் மீது பணம் கட்டி விளையாடுவது.நமக்கும் கொஞ்சம் அறிவு வளர்ச்சி உண்டு என்பதைப் படம் நிராகரிக்கிறது. ரஜனி ரசிகர் என்று கூட்டம் இப்படித் திட்டமிட்டு வளர்க்கப்பட்டுள்ளது - அந்தக்காலத்தில் எம்.ஜி. ஆருக்காகச் சாகவும் தயாராக ஒரு கூட்டம் வளர்க்கப்பட்டதைப்போல.காலம் காலமாக தங்கள் வியாபார நோக்கத்துக்காகத் தமிழ்த் திரை யுலகம் இப்படியான ஒரு சமூக உளவியலைக் கட்டமைத்து அதன் மீது விளையாடி வருவது குறித்த ஆழமான ஆய்வுகள் செய்யப்பட வேண்டும்.

இன்றைய நம் குழந்தைகள் ஹாரிபாட்டர் படித்து,கார்ட்டூன் நெட்ஒர்க் பார்த்து கூர்மையான மூளைகளோடுதான் வளர்ந்திருக்கிறார்கள். 90களில் ரோபோ பொம்மைகள் வைத்து விளையாடிய குழந்தைகள் அல்ல இன்றைய குழந்தைகள். ஆனால் சுஜாதாவும் சங்கரும் இக்கதையை வடிவமைத்தது 90களில் என்பதால் இப்படம் 90களின் குழந்தைகளுக்கான படமாக வந்துள்ளது. அப்போதும் ஆரம்ப 30 நிமிடம் மற்றும் கடைசி 30 நிமிடத்தை மட்டும் வைத்துயக்கொண்டு இடையில் உள்ள 2 மணி நேர அறுவையை வெட்டிப்போட்டால் ஒரு மணி நேரத்துக்கான நல்ல குழந்தைகளுக்கான கிராபிக்ஸ் படமாவது கிடைக்கும்.

மற்றது

எந்திரன் படம் வெளியிடப்பட்ட விதமும் அதற்காக சன் நெட் ஒர்க்கின் 23 சேனல்களும் ஓவர்டைம் போட்டுச் செய்த களேபரங்களும்தான் நியாய உணர்வுள்ள ஒவ்வொரு தமிழனையும் ஆத்திரப்பட வைத்துள்ளது. வியாபார தர்மம் என்று முதலாளித்துவம் ரொம்ப காலமாக நமக்குச் சொல்லிக்கொண்டிருக்கிற ஒன்றைக்கூடக் கலாநிதி மாறன் மதிக்கவில்லை. இப்படத் தயாரிப்புக்காக 162 கோடி பணம் முதலீடு செய்திருப்பதாகப் பத்திரிகைகள் கூறுகின்றன.முதல் 18 நாட்களின் வசூல் மட்டுமே 320 கோடியைத்தாண்டி விட்ட தாகக் கூறப்படுகிறது.அதில் தமிழக மக்களின் பங்கு மட்டுமே 200 கோடியைத் தாண்டியுள்ளது. இந்தக் கோடிகளைக் கறக்க என்ன வேண்டு மானாலும் செய்வேன் என்று எந்த எல்லைக்கும் சென்றார் கலாநிதிமாறன். ரஜனிகாந்த் மீது அன்பு கொண்ட ரசிக மனநிலை அவ்வப்போது கொஞ்சம் எல்லை மீறி பால்குடம் எடுப்பதும் கட்-அவுட் டுக்குப் பால் ஊற்றுவதும் சில இடங்களில் எப்போதாவது நடப்பதுண்டு.ஆனால் அதையே தன் 23 சேனல்களின் மூலம் மீண்டும் மீண்டும் காட்டி ரசிகர்களை ‘உசுப்பேத்தி’ ரசிக மன நிலையை பைத்திய மனநிலைக்கு வழிநடத்திச் சென்றார் கலாநிதிமாறன். சன் நியூஸ் செய்தியிலும் கூட எந்திரக்கூத்துதான் ஒளிபரப்பப்பட்டது.

ட்ரைலர் ரிலீஸ் கூடப் பெரிய அளவுக்குப் பைத்திய மனநிலையை உருவாக்கப் பயன்படுத்தப் பட்டது.முன்பதிவு செய்யப்படுவதும் பெரிய திருவிழா போலச் செய்யப்பட்டது. ஒரே நேரத்தில் உலகெங்கும் 2253 தியேட்டர்களில் திரையிடப் பட்டது - சென்னையில் மட்டும் 35 தியேட்டர் களில். தமிழ்நாட்டில் 555 இடங்களிலும் ஆந்திரா வில் 525 இடங்களிலும் கேரளாவில் 128 இடங் களிலும் கர்நாடகத்தில் 45 இடங்களிலும் வட இந்தியாவில் 700 இடங்களிலும் அமெரிக்கா, ஐரோப்பா கண்டங்களிலும் என மொத்தம் 2253 இடங்களில் திரையிடப்பட்டது..அதிகாலை

4 மணிக்கு முதல் காட்சி திரையிட்ட திரையரங்கு கள் உண்டு. முன்பதிவிலேயே 150 கோடி வசூல் முடிந்து விட்டது.ஒரு டிக்கட் 1000 ரூபாய்க்கு மேல் விற்கப்பட்டது.இதற்கெல்லாம் அரசு அனுமதித் துள்ளது. இதில் விற்பனை வரி ஏய்ப்பதன் மூலம் அரசுக்கு எத்தனை கோடி நட்டம் என்பதை கண்டிக்கவில்லை. பத்து நாள் கழித்து தஞ்சாவூர் போன்ற பல நகரத் திரையரங்குகள் ‘குறைக்கப் பட்ட கட்டணத்தில்’ எந்திரன் என்று போஸ்டர் அடித்து விளம்பரம் செய்தார்கள். வேற வேலை வெட்டியெல்லாம் போட்டு விட்டு தமிழ் மக்கள் எல்லோரும் பணத்தைக் கொண்டுவந்து கலாநிதி மாறனுக்குக் கொட்டிவிட்டுப் போனால்தான் ஆச்சு என்கிற அளவுக்கு மக்களின் நிகழ்ச்சி நிரலை மீடியாத் திமிரின் மூலம் மாற்றியமைத்தார்கள். இதுதான் நாம் கவலைப்பட வேண்டிய ஒன்று.

இன்னொன்றும் உண்டு. இதுவரை நடிகர் களின் ஆதிக்கம் இருந்தது.இயக்குநர்களின் ஆதிக் கம் லேசாக இப்போதுதான் உருவாகத் தொடங்கி இருந்தது. எல்லாவற்றையும் அடித்துக் காலி செய்து தயாரிப்பாளரான முதலாளியின் ஆதிக்கம் முழுமையாகத் தமிழ்த்திரையுலகில் இப்படத்தின் மூலம் நிலைநாட்டப்பட்டுள்ளது.விவசாயிகள் தற்கொலை செய்யத் தூண்டப்பட்டதுபோல தமிழ்த்திரையுலகில் வட்டிக்கு வாங்கிச் சின்ன முதலீட்டில் படம் எடுத்தவரெல்லாம் இனித் தூக்குப் போட்டுத்தான் சாக வேண்டும் என்கிற அளவுக்கு தமிழ்ச் சினிமா தொழிலின் தன்மை மாற்றப்பட்டுவிட்டது.162 கோடி செலவழித்துப் படம் எடுக்கக்கூடாது என்பதல்ல நமது வாதம். என்ன கதைக்கு இந்தச் செலவு என்பதுதான் நம் கேள்வி.

ஆத்திரமடைந்த அறிவுள்ள ரசிகர் சிலர் படம் ரிலீசான அன்றைக்கே மாலையில் முழுப்படத்தையும் டோரண்ட் வலைத்தளத்தில் கிடைக்கச் செய்து விட்டனர். இலங்கையில் இரண்டாவதுநாளே திருட்டு விசிடிக்கள் வெளியாகி விட்டனவாம். திருட்டு விசிடிக்களை நாம் ஆதரிக்கவில்லை. ஆனால் இப்படத்துக்கு நடந்த கூத்துக்களால் இத்தகைய உணர்வு வந்துள்ளது என்கிறோம். இதுவும் சினிமா வளர்ச்சிக்கு ஆபத்துதான் அல்லவா?

இப்போக்குகள் கண்டு கவலை கொள்வ தற்கு மாறாக இயக்குநர் இமயம் கே.பாலச்சந்தர் உள்ளிட்ட பல திரையுலகப்பிரமுகர்கள் இப்படத் தைக் கண்மூடித்தனமாகப் பாராட்டிக் கொண் டிருப்பது மேலும் நமக்குக் கவலையையும் அச்சத்தையும் அளிப்பதாக உள்ளது.பணம் கொட் டும் எந்திரமாக மட்டுமே சினிமாவை மாற்றி விட்ட எந்திரன் பண்பாட்டுத் தளத்தில் நமக்கு முன்னே எழுந்து நிற்கும் மிகப்பெரும் சவாலாகும்.

இந்த நேரத்தில் இதே இந்தியாவில் அமீர் கான் என்றொரு நடிகர் இந்தியில் பல படங்களைத் தயாரித்து வெளியிட்டு வருவதைக் குறிப்பிட்டாக வேண்டும்.சமீபத்தில் அவர் தயாரித்துள்ள பீப்லி (லைவ்) என்கிற படம் கூட்டம் கூட்டமாகத் தற்கொலை செய்துகொண்ட இந்திய விவசாயி களின் வாழ்வை முன்வைத்துப் பேசும் படமாக வந்துள்ளது. சினிமாதான் என் வாழ்க்கை என்று தமிழ்நாட்டில் பீத்திக்கொண்டிருக்கும் பல திரைப் படக்கலைஞர்கள்/தயாரிப்பாளர்கள் அமீர்கானின் காலடி மண்ணெடுத்து நெற்றியில் பூசிக்கொள்ள வேண்டும்.

- ச.தமிழ்ச்செல்வன்

Pin It