கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

குடியுரிமைச் சட்டத் திருத்தத்தால் இந்தியர்களுக்கு பாதிப்பு இல்லை; எதிர்க் கட்சிகள் வதந்திகளைக் கிளப்புகின்றன என்று பா.ஜ.க.வினர் எதிர்ப் பிரச்சாரம் செய்கிறார்கள்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் இதே குரலில் பேசுகிறார்.

இப்போது கொண்டு வரப்பட்ட குடியுரிமைச் சட்டத் திருத்தம் இஸ்லாமியர்களிடம் அச்சத்தை உருவாக்கியிருக்கிறது. தாங்கள் எதிர்காலத்தில் இரண்டாம் தர குடிமக்களாக்கப் படுவோம் என்று நியாயமாகவே உணருகிறார்கள்.

காரணம் இந்தச் சட்டத் திருத்தம் பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் நாடுகளிலிருந்து இந்தியாவுக்கு வரும் இஸ்லாமியர்களுக்கு மட்டும் குடியுரிமை வழங்கப்பட மாட்டாது என்று கூறுகிறது.

இப்படி மத அடிப்படையில் குடிமக்களை தனிமைப் படுத்துவது, அரசியல் சட்டத் துக்கும் மதச் சார்பின்மைக்கும் எதிரானது. எனவே ஒதுக்கப்பட்ட இஸ்லாமியர்களுக்கும் குடியுரிமை வழங்கப்படும் என்று, ஒரு அவசரச் சட்டம் பிறப்பித்தாலே போதும். இதை மோடி அரசு செய்வதற்கு எந்த சட்டரீதியான தடையும் இல்லை. இஸ்லாமியர்களுக்கு மட்டுமல்ல; மத நம்பிக்கையற்ற நாத்திகர்களுக்கும் குடியுரிமையை மறுக்கிறது, இந்த சட்டத் திருத்தம். நாத்திகராக இருக்கும் உரிமையை எந்த சட்டத்தாலும் பறித்து விட முடியாது. எனவே நாத்திகர்களுக்கும் குடியுரிமை உண்டு என்று சட்டத் திருத்தத்தை மாற்றியமைக்க வேண்டும்.

அதேபோல் ஈழத்திலிருந்து 30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தில் வாழும் ஏதிலிகளுக்கும் குடியுரிமையை மறுக்கிறது இந்தத் திருத்தச் சட்டம். குடியுரிமை சட்டத்தில் 2004 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட ஒரு திருத்தம் உரிய ஆவணங்கள் இல்லாமல் ‘சட்ட விரோதமாக ஊடுருவியவர்களுக்கு குடியுரிமை வழங்கக் கூடாது’ என்று கூறுகிறது.

இப்போது ‘சட்ட விரோதமாக’ என்ற சொற்றொடரை நீக்கினாலே ஈழத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க முடியும்.

இந்தத் திருத்தங்களை செய்ய முன்வராமல் வெற்று வாக்குறுதிகளை அள்ளி வீசிக் கொண்டிருக்கும் மோடி ஆட்சியை மக்கள் ஒருபோதும் நம்ப மாட்டார்கள்.

இந்தியாவை இந்துராஷ்டிரமாக்குவதற்காக இஸ்லாமியரை சட்ட ரீதியாக தனிமைப் படுத்தும் முதல் முயற்சி தான் இந்த சட்டத் திருத்தம். இது ஆர்.எஸ்.எஸ். செயல் திட்டம். எனவே தான் நாடு முழுதும் எதிர்ப்பு தீவிரமாகி வருகிறது என்பதை மோடி ஆட்சி உணர வேண்டும்.

‘இந்து’ ஆங்கில நாளேடு (டிச. 23) தனது தலையங்கத்திலும் இதைச் சுட்டிக் காட்டியிருக்கிறது.