ஜி.எஸ்.டி. குறித்து கேள்வி எழுப்பியதால் வெறிச்செயல்

திருப்பூர் : திராவிடர் விடுதலைக் கழகத்தின் திருப்பூர் மாவட்ட அமைப்பாளரான தோழர் சங்கீதா ஆத்துப்பாளையம் பகுதியில் துணிக்கடை ஒன்றை நடத்தி வருகிறார். கழக நிகழ்வுகளிலும், ஆர்ப்பாட்டங்களிலும் குடும்பத்தோடு பங்கேற்பவர் தோழர் சங்கீதா.

கடந்த ஏப்ரல் 12ஆம் தேதி அன்று திருப்பூர் மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் ஏ.பி.முருகானந்தத்திற்கு ஆதரவாக பாஜகவினர் ஆத்துப்பாளையம் பகுதியில் வாக்கு சேகரிக்க வந்திருந்தனர். அப்போது அங்கு துணிக்கடை நடத்தி வந்த சங்கீதாவிடம் பாஜகவினர் வாக்கு சேகரிக்க சென்ற போது நாப்கின், அரிசி, பெட்ரோல், டீசல் மற்றும் காஸ் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் அனைத்திற்கும் ஒன்றிய அரசு ஜிஎஸ்டி விதித்தது குறித்து சங்கீதா கேள்வி எழுப்பினார்.

இதனைப் பொறுத்துக் கொள்ள முடியாத பாஜகவினர் சங்கீதாவின் கடைக்குள் வந்து “நீ யார் கேள்வி கேட்க?” என்று கேட்டு தகாத வார்த்தைகளில் பேசி கடுமையாக தாக்கினார்கள். அப்போது ‘‘நான் கேள்விதானே கேட்கிறேன். பதில் சொல்ல முடியவில்லை என்றால் தாக்குவீர்களா?’’ என கேட்டார். ஆனால் பாஜவினர் சங்கீதாவை தொடர்ந்து தகாத வார்த்தைகளால் திட்டி அடித்தனர்.dvk cadre thiruppurஇது தொடர்பான காணொளி இணையத்தில் வைரலானது. இந்த சம்பவம் குறித்து சங்கீதா 15 வேலம்பாளையம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில், போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்நிலையில் பாஜக மாவட்ட செயற்குழு உறுப்பினரான சின்னசாமி மீது 2 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த நிலையில் சின்னசாமி தற்போது தலைமறைவாகி உள்ளார்.

இந்த சம்பவத்திற்கு தமிழ்நாட்டில் பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனத்தை தெரிவித்துக் வருகின்றனர். இது தொடர்பாக உரிய நடவடிக்கையை மேற்கொண்டு பாதிக்கப்பட்ட சங்கீதாவுக்கு உரிய நீதியைப் பெற்றுத்தர வேண்டுமென சமூகவலைத்தளங்களில் பலரும் பதிவிட்டு வருகின்றனர்.

பாஜகவினர் தாக்குதல் குறித்து சங்கீதா கூறியதாவது:

எங்களது பகுதியில் பாஜகவினர் பிரசாரத்திற்கு வந்தனர். அப்போது பெண்களுக்கான பாதுகாப்பை பாஜ ஆட்சியில்தான் வழங்கி உள்ளோம் என தெரிவித்தனர். அப்போது நான் பெண்கள் பயன்படுத்தும் நாப்கின் அதற்கு கூட அதிக அளவு ஜிஎஸ்டி விதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்களுக்கும் அதிக அளவு விதிக்கப்பட்ட ஜிஎஸ்டியால் பெண்கள் பலரும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள் என தெரிவித்தேன். எனது அருகில் இருந்தவர்கள் அரிசி விலை உயர்வு உள்ளிட்ட விலை உயர்த்தப்பட்ட பொருட்கள் குறித்து தெரிவித்தனர். அங்கேயே சிலர் அவர்களுக்குள் பேசிக் கொண்டிருந்தனர். நான் கடைக்கு வந்துவிட்டேன். கடைக்குள் புகுந்த 10 பேர் என்னை தாக்கினார்கள். எனது செல்போனையும் பிடுங்கி வீசினர். சின்னச்சாமி என்பவர் என்னை தாக்கினார். மிகவும் மோசமான வார்த்தைகளால் என்னை திட்டினார். பெண்கள் பாதுகாப்பு குறித்து இவர்கள் பேசுகிறார்கள். கேள்வி கேட்ட என்னை கடுமையாக தாக்குகிறார்கள், எனவே எனக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும். என்னை தாக்கிய பாஜ நிர்வாகிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கூறினார்.

இந்த சம்பவம் தொடர்பாக திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், அதிமுக, தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர், டி.ஆர்.பி.ராஜா ஆகியோர் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.

திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் சுப்பராயன், திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினரும், திருப்பூர் மத்திய மாவட்டச் செயலாளருமான செல்வராஜ், திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார், 15 வேலம்பாளையம் பகுதி திமுக செயலாளர் இராமதாசு, விவசாய சங்க பொறுப்பாளர் இரத்தினசாமி, 10வது வார்டு மாமன்ற உறுப்பினர் பாலு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நகரச் செயலாளர் நந்தகோபால், கண்ணகி, இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயற்குழு உறுப்பினர் ரவி, செல்வராஜ், சேகர், தந்தை பெரியார் திராவிடர் கழக ஒருங்கிணைப்பாளர் அங்க குமார், மாநகரத் தலைவர் முத்து குமார் மாவட்டச் செயலாளர் இரமேசு பாபு, கார்த்திக், நவீன மனிதர்கள் குழு தலைவர் பாரதி சுப்பராயன், செயலாளர் சுரேசு, அமைப்புச் செயலாளர் அருண், துணைச் செயலாளர் லெனின், செந்தில், பிரகாசு, திராவிடர் கழக வழக்கறிஞர் பாண்டியன், சென்னியப்பன், திருப்பூர் மாவட்டத் தலைவர் யாழ்.ஆறுச்சாமி, காட்டாறு குழு தாமரைக் கண்ணன், திராவிட இயக்கத் தமிழர் பேரவை, விடுதலை சிறுத்தைகள் கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி, மக்கள் அதிகாரம், ஆதிதமிழர் பேரவை, புரட்சிகர இளைஞர் முன்னணி உள்ளிட்ட தோழமை இயக்கத்தினர் நேரில் சந்தித்து நலம் விசாரித்து அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தனர்.

டி.ஆர்.பி.ராஜா கண்டனம்

இது தொடர்பாக அமைச்சர் டிஆர்பி ராஜா வெளியிட்டுள்ள கண்டன பதிவில், “முதலில் கோவையில் பாஜக வன்முறை. அடுத்து திருப்பூரில் கோழைத்தனமாக தன்னந்தனியாக நின்ற ஒரு இளம் பெண் மீது கொலைவெறித் தாக்குதல்! கோவையில் பாஜகவுக்கு தோல்வி நிச்சயம் என்றதும் வன்முறை வெறியாட்டம் ஆட துவங்கியுள்ளது பாஜக. திருப்பூரிலும் ஒரு பெண்மணி ஜி.எஸ்.டி அநியாயங்கள் குறித்து துணிவாகவும் நேர்மையாகவும் கேட்டதற்கு பா.ஜ.க.வின் 5 தடியர்கள் சேர்ந்து அந்த இளம் பெண்ணை தாக்கியுள்ளனர். பொதுமக்களின் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கும் இந்த அடாவடி அராஜகக் கூட்டம் அமைதியான கோவை - திருப்பூருக்கும் தமிழ்நாட்டுக்கும் தேவையா? சிந்தியுங்கள்,”இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கோவையில் திமுகவினர் மீது தாக்குதல்!

கோவை மாவட்டம் சிங்காநல்லுர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆவாரம்பாளைம் 28ஆவது வார்டு பகுதியில் தேர்தல் நடத்தை விதிகளை மீறி 11.04.2024 அன்று இரவு 10.40 மணியளவில் பாஜகவினர் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். இதனைத் தட்டிக்கேட்ட திமுகவினரை பாஜகவினர் கடுமையாக அடித்து உதைத்து தாக்கியுள்ளனர். இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக பாஜகவைச் சார்ந்த ஆனந்தகுமார், மாசாணி உள்ளிட்டோர் மீது 294 பி, 323, 147 உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

நெல்லையில் அரசுப் பேருந்து ஓட்டுநர் மீது தாக்குதல்

நெல்லையில் அரசு பேருந்தின் முன்பக்க கண்ணாடியில் பாஜக ஆதரவு ஸ்டிக்கரை ஒட்ட முயன்றுள்ளார் பாஜக நிர்வாகியான மருதுபாண்டி. அரசு பேருந்தில் ஸ்டிக்கர் ஒட்டக்கூடாது எனக் கூறி, ஓட்டுநர் சுப்பிரமணியன் தடுக்க முயன்றுள்ளார். இதனால் ஆத்திரமடைந்து அரசு பேருந்து ஓட்டுநர் சுப்பிரமணியன் தலையில் பாட்டிலால் ஆவேசமாக தாக்கியுள்ளார் பாஜக பிரமுகர் மருதுபாண்டி. படுகாயமடைந்த சுப்பிரமணியன் அளித்த புகாரில், பாஜகவைச் சேர்ந்த மருதுபாண்டி கைது செய்யப்பட்டுள்ளார்.

பாலியல் புகாரில் கைதான பாஜக நிர்வாகி!

பாஜக திண்டுக்கல் மேற்கு மாவட்ட முன்னாள் செயலாளரான மகுடீஸ்வரன், பழநி அருகே உள்ள சாமிநாதபுரத்தில் காலை உணவுத் திட்டப் பொறுப் பாளருக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளார். சம்மந்தபட்ட பெண் காவல்துறையில் புகார் அளித்த நிலையில், மகுடீஸ்வரன் தலைமறைவானார். இந்நிலையில் கர்நாடகாவில் பதுங்கியிருந்த அவரை ஏப்ரல் 10-ஆம் தேதி காவல்துறையினர் கைது செய்தனர்.

நாகையில் குடிசைகளை கொளுத்திய பாஜக!

நாகையில் பாஜக வேட்பாளர் ரமேஷை வரவேற்பதற்காக கோட்டாட்சியர் அலுவலகத்தின் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் பாஜகவினர்கள் பட்டாசு எடுத்துச் சென்றனர். இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் அருகே குடிசைகள் இருப்பதால் பட்டாசு வெடிக்க வேண்டாம் என்று கேட்டுள்ளனர். ஆனால் அதை பொருட்படுத்தாமல் பாஜகவினர் வேண்டுமென்றே பட்டாசு வெடித்துள்ளனர். தீப்பொறி குடிசை வீடுகளில் பட்டு பக்கிரிசாமி, சுப்பிரமணியன் என்ற இருவரின் வீடுகள் முற்றிலுமாக எரிந்தன. 2 குடும்பங்களின் ஒட்டுமொத்த வாழ்வாதாரத்தையும் சீரழித்த பாஜகவினரைக் கண்டித்து அப்பகுதி மக்கள் மறியலில் ஈடுபட்டனர்.

திருவள்ளூர் பாஜக வேட்பாளரின் பின்னணி!

திருவள்ளூர் (தனி) தொகுதியின் பாஜக வேட்பாளராக பொன்.பால கணபதி என்பவர் அறிவிக்கப்பட்டுள்ளார். அதே கட்சியை சேர்ந்த சசிகலா புஷ்பாவிடம், இவர் பொது இடத்தில் நடந்து கொண்ட அநாகரீக காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி இருந்தன. இதுகுறித்து சசிகலா புஷ்பாவின் கணவர் ராமசாமி காவல்துறையில் புகார் ஒன்றையும் கொடுத்திருந்தார். ‘நாரி சக்தி’ என்று மேடைகளில் அம்மன் வேடங்களில் பெண்களை நிற்க வைத்து நரேந்திர மோடி நடித்துக் கொண்டிருக்கிறார். ஆனால் அவருடைய கட்சியில் பாலியல் சீண்டலுக்கு உள்ளாகும் பெண்களுக்கே நீதி கிடைப்பதில்லை. மாறாக, அத்தகைய நபர்களை அங்கீகரித்து வேட்பாளராகவும் அறிவித்திருக்கிறார்கள்.

Pin It