பாஜகவை வீழ்த்த வழிகாட்டும் ‘தமிழ்நாடு’

வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தை வலியுறுத்தி பெரியார் காங்கிரஸ் கட்சியை விட்டு வெளியேறி ஒரு நூற்றாண்டு ஆகிறது. அதன்பிறகு பெரியார் சுயமரியாதை இயக்கம் கண்டது முதல் இப்போது வரை தமிழ்நாடு அடைந்திருக்கிற சமூக வளர்ச்சி, பொருளாதார வளர்ச்சி, கட்டமைப்பு வளர்ச்சி என அனைத்துக்குமே மையப்புள்ளி இடஒதுக்கீடுதான். அதனால்தான் இந்தியாவின் மற்றெந்த மாநிலங்களையும் விட இடஒதுக்கீடு, சமூக நீதி சிந்தனைகளில் இன்றளவிலும் தமிழ்நாடுதான் முன்னோடியாக இருக்கிறது. நீட், புதிய கல்விக்கொள்கை போன்ற பாஜகவின் சூழ்ச்சிகரமான திட்டங்களை உடனுக்குடன் எதிர்த்த ஒரே மாநிலம் தமிழ்நாடுதான். மதவாத வெறுப்புணர்வை உள்வாங்காத மாநிலம் தமிழ்நாடு. ஒட்டுமொத்தத்தில் சமூகநீதி களத்துக்கான சிந்தனைப் போக்கைக் கட்டமைக்கும் மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது.

தமிழ்நாட்டின் இந்த ‘திராவிட மாடல்’ சிந்தனைப்போக்குதான் பாஜகவுக்கு பெரும் நெருக்கடியாகவும், சவாலாகவும் இருந்து கொண்டிருக்கிறது. எனவே பாஜகவை வீழ்த்த இந்த சிந்தனைப்போக்கு கையிலெடுக்க தேவை ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் இருக்கிறது. இதை காங்கிரஸ் கட்சி நன்கு உணர்ந்திருக்கிறது என்பதை வெளிக்காட்டும் ஆவணமாக, அக்கட்சியின் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குறுதிகள் அமைந்திருக்கின்றன. 5 தலைப்புகளில் 25 வாக்குறுதிகளை அளித்துள்ளது காங்கிரஸ் கட்சி. இளைஞர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள், பெண்கள், சமூக நீதியை அடிப்படையாகக் கொண்டு இவ்வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளன.

மாநில சுயாட்சி உரிமைகள், மாநிலங்களின் நிதி உரிமைகள், கல்வி உரிமைகளை பாதுகாப்பதற்கான வாக்குறுதிகளும் அளிக்கப்பட்டுள்ளன. அதிலும் மிகக் குறிப்பாக, மக்களின் உணவு- உடை- காதல் திருமணம் போன்ற தனிப்பட்ட உரிமைகளில் எக்காரணம் கொண்டும் அரசு தலையிடாது என்ற வெளிப்படையான அறிவிப்பும், கடந்த 10 ஆண்டுகால பாஜக ஆட்சியால் வெறுப்புப் பேச்சு, மதமோதல்கள், வெறுப்பு குற்றங்களை முடிவுக்குக் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என்ற வாக்குறுதியும் இன்றைய சூழலில் இந்தியாவுக்கு மிக அவசியமான வாக்குறுதிகள். திராவிட இயக்கப் பார்வையில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த வாக்குறுதிகளை வரவேற்பதோடு, மக்களிடத்திலும் கொண்டு செல்வோம்.

முக்கிய வாக்குறுதிகள்:

  • ஏழைப் பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம்
  • நீட், CUET தேர்வுகள் கட்டாயம் இல்லை. மாணவர் சேர்க்கையை மாநில அரசுகளே கடைபிடிக்கலாம்.
  • 12-ஆம் வகுப்பு வரை கட்டாயக் கல்வி
  • குறைந்தபட்ச ஆதார விலைக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம்
  • மத்திய அரசுப் பணிகளில் காலியாக உள்ள 30 லட்சம் இடங்கள் நிரப்பப்படும்.
  • சாதிவாரி கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படும்.
  • அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் ஒப்பந்த பணி முறை நீக்கப்படும்.
  • அங்கன்வாடி ஊழியர்கள் இரட்டிப்பாக்கப்படும். கூடுதலாக 14 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும்
  • மனித கழிவுகளை மனிதரே அள்ளும் நடைமுறை ஒழிக்கப்படும்.
  • 2025 முதல் ஒன்றிய அரசுப் பணிகளில் 50% பெண்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும்
  • SC,ST,OBC பிரிவினருக்கான காலிப் பணியிடங்கள் ஓராண்டுக்குள் நிரப்பப்படும்.
  • SC, ST, OBC மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை இரட்டிப்பாக்கப்படும்.
  • பட்டியலின மாணவர்கள் மீதான துன்புறுத்தல்களைத் தடுக்க ‘ரோஹித் வெமுலா சட்டம்’ இயற்றப்படும்.
  • தனியார் கல்வி நிறுவனங்களில் பட்டியலினத்தவர் பழங்குடியினருக்கு இட ஒதுக்கீடு வழங்க தனிச் சட்டம்.
  • அரசு தேர்வுகள் விண்ணப்பக் கட்டணம் ரத்து செய்யப்படும்.
  • முதியவர்கள், விதவைப் பெண்கள் மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதியம் ரூ.1000 உயர்த்தப்படும்.
  • 21 வயதுக்கு கீழே உள்ள விளையாட்டு வீரர்களுக்கு மாதம் ரூ.10,000 ஊக்கத்தொகை.
  • மூத்த குடிமக்கள் பாதுகாப்பு சட்டத்தில் உள்ள குறைகளை களையும் வகையில் மறு ஆய்வு.
  • அனைத்து மொழிகளிலும் பிரெய்லி மற்றும் சமிக்ஞை அங்கீகரிக்கப்படும்.
  • அனைத்து மாவட்டங்களிலும் தலா ஒரு அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை ஏற்படுத்தப்படும்.
  • டிப்ளமோ முடித்த இளைஞர்களுக்கு பொதுத் துறையில் தொழில் பழகுநர் பயிற்சி.
  • பழகுநர் பயிற்சி மேற்கொள்ள இளைஞர்களுக்கு ஆண்டுக்கு ரூ. 1 லட்சம் உதவித் தொகை.
  • புதுச்சேரி, காஷ்மீருக்கு மாநில அங்கீகாரம்.
  • ரயில்களில் மூத்த குடிமக்களுக்கான கட்டண சலுகை மீண்டும் வழங்கப்படும்.
  • உயர்கல்வி செல்லும் மாணவர்களுக்கு ரூ.7.5 லட்சம் வரை கல்விக்கடன் வழங்கப்படும்.
  • மார்ச் 2024 வரை பெறப்பட்ட அனைத்து கல்விக்கடன்களும் ரத்து செய்யப்படும் .
  • பாஜக கொண்டுவந்த ஜி.எஸ்.டி. சட்டம் ரத்து செய்யப்படும். வணிகர்களுக்கு ஏற்ற புதிய ஜி.எஸ்.டி. (2.0) கொண்டுவரப்படும்.
  • மீனவர்களுக்கு டீசல் மானியம் வழங்கும் திட்டம் மீண்டும் செயல்படுத்தப்படும்.
  • 100 நாள் வேலை ஊதியம் ரூ.400-ஆக உயர்த்தப்படும். நகர்ப்புறங்களிலும் விரிவுபடுத்தப்படும்.
  • ரூ.25 லட்சம் மதிப்புள்ள காப்பீட்டு திட்டம் செயல்படுத்தப்படும்.
  • தேசிய கல்விக் கொள்கையை மாநில அரசுகளுடன் ஆலோசித்து திருத்தி அமைக்கப்படும்.
  • அனைத்து கடலோர பகுதிகளிலும் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் செயல்படுத்தப்படும்.
  • முப்படை வீரர்களை தேர்வு செய்யும் அக்னிபாத் திட்டம் ரத்து செய்யப்படும்.
  • எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் கட்சி தாவினால் தானே பதவி இழக்கும் வகையில் சட்டத் திருத்தம்.
  • ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் கொண்டு வரப்படாது .
  • அனைத்து விசாரணை அமைப்புகளும் நாடாளுமன்றம் அல்லது சட்டமன்றங்களின் நேரடி கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படும்.
  • பா.ஜ.க. ஆட்சியின் அனைத்து மக்கள் விரோத சட்டங்களிலும் திருத்தம் செய்யப்படும்.
  • பணமதிப்பழிப்பு, ரபேல் ஒப்பந்தம், பெகாசஸ் முறைகேடு தொடர்பாக விசாரணை.
  • பா.ஜ.க. ஆட்சியில் வெளிநாடுகளுக்கு குற்றவாளிகள் தப்பிச்சென்றது குறித்து விசாரணை நடத்தப்படும்.
  • பா.ஜ.க.வுக்கு மாறியதால் ஊழல் வழக்குகளில் இருந்து விடுவிக்கப்பட்டவர்கள் மீதான வழக்கு மீண்டும் விசாரிக்கப்படும்.
  • தேர்தல் பத்திர முறைகேடு, பி.எம். கேர்ஸ், ராணுவ ஒப்பந்த ஊழல் குறித்து விசாரணை நடத்தப்படும்.
  • LGBTQIA நலச் சங்கங்கள் அடையாளம் காணப்பட்டு, அங்கீகரிக்கப்படுவதற்கான சட்டம் இயற்றப்படும்.
  • LGBT சமூகத்தினரின் திருமணத்தை அங்கீகரிக்கும் வகையில் சட்டம் கொண்டுவரப்படும்.
  • பொதுப்பட்டியலில் உள்ள பல துறைகளை மாநிலப் பட்டியலுக்கு மாற்றுவது குறித்து ஆய்வு செய்யப்படும்.
  • செஸ் வரி வசூலில் மாநிலங்களை ஏமாற்றும் பாஜகவின் சட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்.
  • மீனவர்களுக்காக கூட்டுறவு வங்கிகள் அமைக்கப்படும், மீன் பிடி துறைமுகங்கள் மேம்படுத்தப்படும்.
  • தனிநபர் வருமான வரி ஒரே விதமாக நிலையாக இருக்கும் வகையில் சட்டம் கொண்டுவரப்படும்.
  • வேளாண் இடு பொருட்களின் மீது ஜிஎஸ்டி வரி விதிக்கப்படாது.
  • பெண்களுக்கான ஊதியத்தில் பாகுபாடு காட்டப்படுவதை தவிர்க்க ‘ஒரே வேலை, ஒரே ஊதியம்’ திட்டம்.
  • பணியில் இருக்கும்போது தூய்மை பணியாளர்கள் உயிரிழந்தால் ரூ.30 லட்சம் வழங்கப்படும்.
  • விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை விற்பதற்காக நேரடி சந்தைகள் அமைக்கப்படும்.
  • திருமணம், வாரிசுரிமை, தத்தெடுத்தலில் ஆண்கள், பெண்களுக்கு இடையேயான பாகுபாடுகள் களையப்படும்.
  • ஊடக சுதந்திரத்தை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும்.
  • மக்களின் உணவு, உடை, காதல் திருமணம் மற்றும் இந்தியாவின் எந்தப் பகுதியிலும் பயணம் செய்து வசிப்பது போன்ற தனிப்பட்ட சுதந்திரத்தில் தலையிடமாட்டோம்.
  • ஒவ்வொரு மாவட்டத்திலும் வேளாண் கல்லூரி, கால்நடை கல்லூரி, மருத்துவ கல்லூரி அமைக்கப்படும்.
  • நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் அம்பேத்கர் நூலகங்கள் அமைக்கப்படும்.
  • வெறுப்புப் பேச்சு, மதமோதல்கள், வெறுப்பு குற்றங்களை முடிவுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும்.

விடுதலை இராசேந்திரன்

Pin It