உச்சநீதிமன்றத்தின் முக்கிய தீர்ப்பு

கடவுள் - மதம் குறித்து கருத்துகளை தெரிவிப்பதே சட்டவிரோதம் என்று கூப்பாடு போடும் ‘இந்துத்துவ’ சக்திகளுக்கு கடிவாளம் போடும் முக்கிய தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கியிருக்கிறது.

மதத்தைப் புண்படுத்தும் பேச்சு, செயல்பாடுகள் தண்டனைக்குரிய குற்றமாக சட்டத்தில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்திய தண்டனைச் சட்டத்தில் 295(ஏ) பிரிவை மதவாதிகள் பாதுகாப்பு அரணாக முறை கேடாகப் பயன்படுத்துகிறார்கள். மகாபாரதத்தை நடிகர் கமலஹாசன் விமர்சித்தார் என்பதற்காக மத உணர்வை புண்படுத்திவிட்டதாக நீதிமன்றம் போகிறார்கள். பெண்கள் அடிமைச் சின்னமான தாலியை அகற்றும் நிகழ்ச்சி நடந்தால் மத உணர்வை புண்படுத்துவதாக வழக்கு தொடருகிறார்கள். மதத்தை, கடவுளை, அறிவியல் சமூகக் கண்ணோட்டத்தில் விமர்சனம் செய்யும் கருத்துரிமையையே இந்த சட்டப் பிரிவைப் பயன்படுத்தி பறிக்கிறார்கள். எம்.எஸ். தோனி என்ற கிரிக்கெட் விளையாட்டு வீரரை ‘மகாவிஷ்ணு’வாக சித்தரித்து, ஒரு வர்த்தக பத்திரிகை 2013இல் அட்டைப்படம் போட்டிருந்தது. இந்து மதத்தைப் புண்படுத்தி விட்டதாக தோனி மீது ஆந்திர மாநிலம் அனந்தப்பூரில் கிரிமினல் வழக்கு பதிவு செய்யப் பட்டது. இதை எதிர்த்து தோனி, உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் கடந்த ஏப்.2 ஆம் தேதி கிரிமினல் நடவடிக்கையை நீக்கம் செய்து முக்கிய தீர்ப்பை வழங்கியிருக்கிறது. நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ஏ.எம். கான்வில்கர், எம்.எம். சந்தான கவுடா ஆகியோர் அடங்கிய அமர்வு-295(ஏ) சட்டப் பிரிவு வரையறைக்கு உட்பட்டது. கண்மூடித்தனமாக இந்த சட்டத்தை முறைகேடாகப் பயன்படுத்த முடியாது என்று தீர்ப்பளித்துள்ளனர். “மத உணர்வை புண்படுத்தி விட்டார்கள்” என்று எல்லாவற்றுக்கும் ‘புண்படுத்துதலை’ பயன்படுத்திவிட முடியாது. ஒரு கருத்தாக, விமர்சனமாக உள்நோக்கம் இல்லாமல் வெளிப்படுத்தும் கருத்துகளுக்கு இந்த சட்டப் பிரிவைப் பயன்படுத்த முடியாது. (“lnsults to religion offered unwillingly or carelessly or without any deliberate or malicous intention to outrage the religious feelings of that class do not come with the section”)

“திட்டமிட்ட உள்நோக்கத்தோடு ஒரு மத வகுப்பாரை ஆத்திரப்படுத்தி அவமதிக்க வேண்டும் என்ற நோக்கத்துக்காகவே வெளிப்படுத்தும் கருத்துகள்தான் ‘மத உணர்வைப் புண்படுத்தும்’ என்ற பிரிவுக்குள் கொண்டு வர முடியும்”

- என்று நீதிபதிகள் தீர்ப்பு அளித்துள்ளனர். சமூக வலைதளங்களில் ‘புண்படுத்தும்’ கருத்துகளைத் தடை செய்யும் தகவல் தொடர்பு சட்டப் பிரிவை (66ஏ) ஏற்கனவே உச்சநீதிமன்றம் முழுமையாக நீக்கி அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது. இதைத் தொடர்ந்து இப்போது ‘295ஏ’ பிரிவுக்கும் கடிவாளம் போட்டிருக்கிறது.

ஏற்கனவே 1957ஆம் ஆண்டே உச்சநீதிமன்றம் இதே கருத்தை இந்த சட்டப் பிரிவு தொடர்பாக தெளிவுபடுத்திய பிறகும் சட்டப் பிரிவை முறை கேடாகப் பயன்படுத்தும் வழக்குகள் வந்து கொண்டே இருந்தன. “மதம் - மதம் சார்ந்த நம்பிக்கைகளுக்கு எதிரான எல்லா கருத்துகளையும் இந்த சட்டப்பிரிவுக்கு எதிரானது என்று கூறவே முடியாது” என்று 1957இல் உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு தெளிவுபடுத்தியது.

2014ஆம் ஆண்டு திரைப்பட நடிகர் சல்மான்கான் மீது ஒரு வழக்கு வந்தது. அவர் நடத்தும் தொண்டு நிறுவனம் நடத்திய ஆடை அலங்கார அணி வகுப்பில் பங்கேற்ற ஒருவர் அணிந்திருந்த ‘டி’ சட்டையில் அரபு சொற்கள் எழுதப்பட்டிருந்ததால் இஸ்லாமிய மத உணர்வைப் புண்படுத்திவிட்டதாக சல்மான்கான் மீது வழக்கு தொடரப்பட்டது. 2016இல் பல இந்தி திரைப்பட நடிகர்கள் இதே போன்ற வழக்குகளை சந்தித்தனர். தமிழ் நாட்டிலும் பெரியார் இயக்கத்தினர் மீது மத உணர்வுகளை புண்படுத்துவதாக மதவெறி சக்திகள் போராட்டங் களையும் நடத்துவது வாடிக்கையாகிவிட்டது.

இப்போது உச்சநீதிமன்றம் எல்லாவற்றுக்கும் ‘கடிவாளம்’ போட்டுள்ளது.

Pin It