இராக்கில் அமெரிக்க இராணுவம் மேற்கொண்ட கமுக்க நடவடிக்கைகளை உலகறியச் செய்தது அமெரிக்காவின் பகை நாடுகளோ இராக்கிய அரசியல் ஆற்றல்களோ அல்ல.
அந்தக் கமுக்க நடவடிக்கைகளின் காணொலியையே வெளியிட்டவர் விக்கிலீக்ஸ் அமைப்பை நிறுவிய ஜூலியன் அசாஞ்ச். பிற நாட்டுத் தலைவர்கள் பற்றிய அமெரிக்க அரசின் கமுக்க மதிப்பீடுகளை அமெரிக்க அரசுக்கும் அதன் தூதகங்களுக்கும் இடையிலான மின்னஞ்சலைப் பிரித்துத் திறந்து உலகறியச் செய்தவர் அசாஞ்ச்.
தூதரகங்கள் அனுப்பிய ஆயிரக்கணக்கான கமுக்கச் செய்திகளை அவர் அம்பலமாக்கினார். அவர் அம்பலமாக்கிய செய்திகளில் ஒன்று இலங்கைத் தீவின் சிங்கள அரசுக்கு ஆதரவாக இந்திய அரசின் கமுக்கச் செயல்பாடுகள் பற்றியதாகும்.
அமெரிக்காவுக்கு மட்டுமின்றி மேலை நாடுகள் பலவற்றுக்கும் விக்கிலீக்ஸ் சிம்மசொப்பனம் ஆயிற்று. அரசு இரகசியங்கள் எல்லாம் இப்படி அம்பலத்துக்கு வந்தால் என்னாவது? என்று துடித்துப் போயின. மறுபுறம் விக்கிலீக்ஸ் செய்த பணியால் மக்களுக்குப் பல உண்மைகள் தெரிய வந்தன. உண்மையான குடியாட்சிய ஆற்றல்கள் இந்தப் பணியை மதித்துப் போற்றின.
விக்கிலீக்சும் ஜூலியன் அசாஞ்சும் பல்வேறு அரசுகளின் கடுங்கோபத்துக்கு ஆளாயினர்.
குடிமக்களுக்குத் தனிமையுரிமை உண்டென்பதையே மறுதலிக்கும் இந்த அரசுகள் தமக்கு மட்டும் கமுக்கங்களைக் காத்துக் கொள்ளும் தனிசிறப்புரிமை இருப்பதாகக் கருதிக் கொள்கின்றன. குடியாட்சியத்தின் இன்றியமையாக் கூறாகிய வெளிப்படைத் தன்மையை இவை கடைப்பிடிப்பத்தில்லை.
தலைமையமைச்சர் ஆனாலும் குடியரசுத் தலைவர் ஆனாலும் அமைச்சர் ஆனாலும் நீதியர் ஆனாலும் படைத் தலைவர் ஆனாலும் அரசமைப்புச் சட்டம் காப்போம் என்று மட்டும் ஆணையிட்டு உறுதியேற்பதில்லை. அவர்கள் அரசு இரகசியங்களைக் காப்பதாகவும் ஆணையிட்டு உறுதியேற்கின்றார்கள்.
இதற்காகவே அதிகாரவழி இரகசியங்கள் சட்டம் (Official Secrets Act) போன்ற சட்ட ஏற்பாடுகளும் உள்ளன. யாரிடமிருந்து இரகசியங்களைக் காக்க வேண்டுமாம்! அவர்கள் யார் பெயரால் அதிகாரம் செலுத்துகின்றார்களோ அந்த மக்களிடமிருந்துதான்! இதற்குப் பெயர் குடியாட்சியம்!
மக்களின் வரிப் பணத்தைக் கோடி கோடியாய் செலவிட்டு அரசுகள் போர்க் கருவிகள் வாங்கிக் குவிக்கின்றன. இவ்வகையில் செய்யப்படும் பேரங்கள் இராணுவ இரகசியங்கள் என்று மக்களிடமிருந்து மறைக்கப்படுகின்றன. இப்படித்தான் ரபேல் போர் வானூர்திகள் தொடர்பான பேரத்தை வெளிப்படுத்த முடியாது என இந்திய அரசு உச்ச நீதிமன்றத்திலேயே நிலையெடுத்தது.
அரசியல் கட்சிகளுக்குப் பணம் கிடைக்கும் வழியை வாக்காளர்களுக்குச் சொல்லத் தேவையில்லை என்று இந்திய அரசின் தலைமைச் சட்டத்தரணியே உச்ச நீதிமன்றத்தில் வாதிட்டார்.
இந்தியாவில் மட்டுமல்ல, குடியாட்சியம் உயர்ந்தோங்கி விளங்குவதாகப் பீற்றிக் கொள்ளும் மேலை நாடுகளிலும் இதே நிலைதான்!
இந்தப் பொய்மையைத் தோலுரித்த வீரர் ஜூலியன் அசாஞ்சை எல்லா அரசுகளும் சேர்ந்து விரட்டி விரட்டி வேட்டையாடத் தொடங்கின, சுவீடன் அரசு அவர் மீது பாலியல் வல்லுறவு வழக்கு தொடர்ந்தது. அமெரிக்க அரசு அவருக்கு வாழ்நாள் முழுக்கச் சிறைதான் என்னும் படியான வழக்குகளைத் தொடுத்துள்ளது.
2012ஆம் ஆண்டு இலண்டனில் ஈக்வேடார் நாட்டுத் தூதரகத்தில் அவர் தஞ்சமடைந்தார். சென்ற ஆண்டு வரை அங்கேயே தங்கியிருந்தார். ஆனால் அமெரிக்க வல்லரசின் வற்புறுத்தலால் ஈக்வேடார் அரசு அவருக்கான அடைக்கலப் பாதுகாப்பைச் சட்டப்புறம்பாக விலக்கிக் கொண்டு விட்டது.
தூதரக அதிகாரிகள் பிரித்தானிய அதிகாரிகளை அழைத்து அசாஞ்சை அவர்களிடம் ஒப்படைத்து விட்டனர். பிரித்தானிய அதிகாரிகள் அவரைக் கைவிலங்கிட்டுக் கூட்டிச் சென்றனர். ஊடக விடுமையின் மீதான இந்தக் கொடுந்தாக்கு மாந்த உரிமைகள், மாந்த கண்ணியத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்களை அதிர வைத்தது.
2018ஆம் ஆண்டு துருக்கியில் சவூதித் தூதரகத்துக்குள் ஊடகர் ஜமால் கசோகியை வரவழைத்து வெட்டிக் கொன்றது போன்ற கொடுஞ்செயல் இது. ஆனால் பிரித்தானியத் தலைமையமைச்சரும் நாடாளுமன்றமும் அசாஞ்சைத் தளைப்படுத்திய செயலை வெளிப்படையாக மகிழ்ந்து கொண்டாடியதிலிருந்து அவர்களின் கொடுநெஞ்சை அறிய முடிந்தது.
சுவீடன் அரசு அசாஞ்ச் மீதான தன் பொய் வழக்கை விலக்கிக் கொண்டு விட்டது. நமக்காக இருட்டுலகில் ஒளிபாய்ச்சிய அசாஞ்ச் இருட்சிறையில் அடைபட்டுக் கிடக்கிறார். அவரை அமெரிக்காவுக்குக் கொண்டுசெல்லும் முயற்சி தீவிரமடைந்துள்ளது. அவர் உளவியல் சித்திரவதைக்கு ஆளாக்கப்ப்ட்டு வருவதாகச் செய்திகள் வருகின்றன.
அவரை விடுதலை செய்வதற்கான உலகளாவிய இயக்கத்தில் இந்தியாவிற்கும் தமிழ்நாட்டிற்கும் பெரிய பங்கில்லை என்பது பெருங்குறை. இந்தக் குறையை மாற்றுவோம்!
ஜூலியன் அசாஞ்சை விடுதலை செய்யக் கோரும் இயக்கத்தை வீச்சுடன் முன்னெடுப்போம், வாருங்கள்!
- தியாகு